பக்கங்கள்

சனி, 28 ஜனவரி, 2017

ஈகையால் உயருங்கள்! இருப்பு - மகிழ்ச்சியோடும்!


இக்காலத்தில் மனிதர்களில் பலரும் ஓடிஓடிப் பொருள் சேர்க்கின்றனர், தேவைக்குப் பன்மடங்கு மேலாக சேர்த்தும் கூட அவர்களுக்கு மனநிறைவு ஏற்படுவதில்லை.
குறுக்கு வழிகளில் கோடிகளைக் குவிப்பது எப்படி என்பதே அவர்களில் பலரது வாழ்நாள் கவலையாக இருக்கிறது.
பல பெரும் பணத் திமிலர்கள் தங்களது பல்வேறு சிறுசிறு முதலீட்டுக்காரர்களையே விழுங்கி, தங்களின் பணந்தேடும் பசியினைத் தீர்த்துக்கொள்ள ஆளாய்ப் பறக்கிறார்கள்!
இவர்கள் இப்படி பணம் பன்னும் கவலையி லேயே, நாளும் நொந்தும்  வெந்தும் காட்சியா கின்றனர்! மகிழ்ச்சியைச் சற்றும் அனுபவிக்கத் தெரியாத மனிதயந்திரர்கள் அவர்கள்!
இவர்களின் வாழ்க்கை என்பது எப்போதும் திருப்தி இல்லாது ஓடிக்கொண்டேயிருக்கும் திணறும் வாழ்க்கைதான்!
போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்ற பழமொழி அவர்களுக்குத் தெரியாத ஒன்று!
இது இன்றைய நிலை; ஆனால் சங்க காலத்தில் புறநானூறு புலவர் காலத்தில் எப்படிப்பட்ட நிறைமதி உடைய அரிய வாழ்க்கைத் தத்துவத்தைப் பாடலாக்கிப் பாடம் போதித்தனர் நம் புலவர்கள்.
வியக்கத்தக்க வித்தகக் கருத்தின் வெற்றி முளைத்த வெளிச்சம் அப்பாடல்.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய அந்த அரிய செய்யுள் எப்படிப்பட்ட எளிய வாழ்க்கைத் தத்துவத்தை மிகச் சுருக்கமான அன்றாட வாழ்க்கையைக் காட்டி பாடம் எடுத்துள் ளார்!
“தென் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்;
நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்
கடுமாப் பார்க்குங் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே,
பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே,
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே
- புறநானூறு
இதன் பொருள் இதோ:
‘‘உலகமெல்லாம் ஒருவெண்குடை
நிழலில் வைத்துஅரசு செலுத்தும்      வேந்தனேயானாலும்,
தான் பயிர் செய்த ஒரு தினைப் புலவைக்
காட்டி யானைகளும், காட்டுப் பன்றிகளும்
புகுந்து அழித்துவிடாமல் இரவும் பகலும்
கண்ணுறக்கங் கொள்ளானாய் அதனைப்
பாதுகாக்கும் ஒரு கானவனே யானாலும்
எல்லாரும் ஒரு நாளைக்குக்
கொள்ளும் உணவு ஒரு நாழியே யாகும்!
அவர் உடுப்பன இரண்டு ஆடைகளே யாகும்;
இவையேயன்றிப் பிறப்பு இறப்பும் நோயுங்
கவலையும் துன்பமும் இன்பமும்
எல்லார்க்கும் உள்ளனவே ஆகும்;
ஆதலால், செல்வத்தாற் பெற்ற பயன்
ஈகை அறங்களைச் செய்தலேயாகும்!
செல்வத்தைப் பிறர்க்குக் கொடாமல்
யாமே நுகர்வேமெனில், அது கை கூடாமல்
தவறுதல் பலவாகக் காணப்படுகின்றன!
எளிய, சிக்கன வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய தந்தை பெரியார் அவரது சொத்து, பொருள் முழுவதையும், ஈகைக்கே - மக்களுக்கு விட்டுச் சென்றதில் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கோர் எல்லை உண்டா?
சொந்த பந்தம் - பார்க்காது - மக்களையே பார்த்தவர் - மனிதனையே நினை என்று கூறி, மனிதகுலத்திற்கு வாழ்க்கைப் பாடத்தை - சுய மரியாதை என்ற சுக வாழ்வைச் சொல்லிக் கொடுத்த வரை, எண்ணி எண்ணிப் பெருமை கொள்ளலாமே!
அவரை விட செல்வத்தில் பன்மடங்கு பெருக்க முடையோர்கூட - சொத்து முழுவதையும் ஈக மாக்கிட முன்வரவில்லையே!
அவரை நினைத்து, பின்பற்றி வாழ முயற்சிப் போம்!
வாசக நேயர்களுக்கு...
இந்த வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை - எழுதத் துவங்கிய நாள் தொட்டு இது ஆயிரமாவது என்று கூறி மகிழ்ச்சியூட்டுகின்றனர், ‘விடுதலை’ ஆசிரிய நிர்வாகக் குழுத் தோழர்கள்!
அப்படியா? நான் எண்ணிப் பார்த்து எழுது கிறேனே தவிர, எண்ணிக்கைப் பார்த்து எழுத வில்லை.
என்றாலும், மற்றவர்களை மகிழ வைத்த வாய்ப்பு தந்த ‘விடுதலை‘க்கும், வாசக நேயர்களுக்கும் எமது இதயமார்ந்த நன்றி - நன்றி! நன்றி!!
-விடுதலை,23.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக