பக்கங்கள்

வியாழன், 5 ஜனவரி, 2017

நல வாழ்வின் முழு விளக்கம் இதோ!

உலக சுகாதார அமைப்பு  (WHO - World Health Organisation) நல வாழ்வு (Health) என்பதை எப்படி விளக்கி உள்ளது தெரியுமா?

(The World Health Organisation Definition of health as ‘’a state of complete physical, mental and social well - being and not merely the absence of disease or infirmity’’)

மனிதனின் நல வாழ்வு என்பது உடல், உள்ளம் ஆகியவற்றோடு சமூக நலமும் கலந்துள்ளதுதானே ஒழிய, வெறும் நோய் இல்லாமலோ, ஊனம் இல்லாமலோ இருப்பது மட்டுமல்ல என்று கூறியுள்ளது!

இதன் தத்துவம் - உட்பொருள் நலவாழ்வு என்பது தனது நோயற்ற, ஊனமற்ற நிலையை மாத்திரம் கணக்கில் எடுக்காது, சமூகம் சார்ந்த நடப்புகளிலும் செயல்படும் ஆரோக்கியத்தை உள்ள டக்கியதாகும்!

காரணம்,வெளிப்படை;மனிதன் என்பவன் ஒரு சமூகப் பிராணி அல்லது சமூகவாழ்வின் கூட்டுறவில் பங்கேற்று பணிபுரிந்து, சமூகத்தின் கூட்டு வாழ்க்கைக்குப் பெரிதும் உதவ வேண்டியவனாகவே இருக்கிறான்; இருக்கவேண்டும்!

முதுமையை நாம் முழுமையாக விரட்டுவது இயலாத ஒன்று!

நீண்ட நாள் வாழவேண்டும் என்று விரும்பும் - வாழ்த்தும் பலரும் நாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், பழுதில்லா உடல், பக்குவமான மனம், மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லாத நகைச்சுவை உணர்வு, இவைகளுடன் அது அமைந்தால்தான் சாத்தியமாகும் என்பதை உணர்ந்தா - புரிந்தா வாழ்த்துகிறார்கள்?

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் - உண்மைதான்!

ஒரு கேள்வி - நம்மில் எத்தனைப் பேர் வாய்விட்டுச் சிரிக்கிறோம்,  அன் றாடம்?

நாம் சந்திக்கும் பலரும்கூட சிரித்த முகத்துடன் நம்மிடம் உரையாடினால், அது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் - நலவாழ்வைக் கொண்டு வந்து சேர்க்கும்.

நடைமுறையில் அப்படி உண்டா? பலருக்குத் தகுதிக்கு மீறிய ஆசை - பேராசை; பதவி, பணம், புகழ், பெருமை இவைகளைக் குவித்துவிட வேண்டும்; எந்த குறுக்கு வழியாக இருந்தாலும், கிறுக்கு முறையாக இருந்தாலும் சரி என்று கண்மண் தெரியாமல் நடந்து பிறகு ஒரே அடியாக சோதனைப் பள்ளங்களில் விழுந்து பலத்த அடி வாங்கும்போது அவர்களுக்கு தங்கள் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று காலந்தாழ்ந்தே நினைத்து, மாளாத்துயரம் - மீளாத் துன்பம், மாறா மன இறுக்கம் இவைகளோடு வாழ்கிறார்கள்!

எனவே, சமூகக் கவலையும் தனி மனிதர்களுக்குத் தேவை - இரண்டும் சரியான நேர்கோட்டில் இணைந்து சென்றால்தான் அது முழு நல வாழ்வு - ஆரோக்கியம் ஆகும்.

முதுமையைத் தவிர்க்க இயலாது; அதன் விளைவுகளை நாம் சற்று சந் தித்துப் புறந்தள்ள முடிந்த அளவுக்குப் புறந்தள்ளலாம். சமூகத்திற்குத் தொண்டு - தமிழ்த்தொண்டு, தேசத் தொண்டு செய்து, பொன்னையோ, பொருளையோ சேர்க்காது தூய தொண்டறம் நிகழ்த்திய தமிழ்ப் பெரியார் திரு.வி.க.கூட இறுதி நாளில் பார்வை இழந்த நிலையில், கவிதையாகக் கூறியதை அருகில் இருந்து டாக்டர் மு.வ. எழுதினாராம் - ‘முதுமை உளறல்’, ‘படுக்கைப் பிதற்றல்’ என்று.

அதுபோன்ற சங்கடம் தந்தை பெரியாருக்கு 95 வயதிலும் - நான்கு நாள்களுக்குமுன்கூட தன் வெண்கலக் குரலில் சிங்கம்போல், இறுதிப் பேருரை - இல்லை இல்லை, போர் உரையாக எப்படி, சென்னை தியாகராயர் நகரில் பல்லாயிரம் மக்கள்முன் தனது கொள்கைப் பயணம் புறப்பட்ட இடம் தொடங்கி அடுத்து மேற்கொள்ளவேண்டிய ஜாதி - சூத்திர - தீண்டாமை ஒழிப்பு அறப்போர் வரை பேச முடிந்தது!

எண்ணிப் பார்த்தேன் பல ஆண் டுகளாய் - விடை கிடைத்தது!

உலகசுகாதாரஅமைப்பின்வரை யறைப்படி, சமூகநலமும் சார்ந்திருந் தால், அதையே ஆரோக்கியத்தின் தேவையாக எண்ணி சமூகச் சிந்தனை - சமூகக் கவலை - சமூக அக்கறையின்மீது தந்தை பெரியார் காட்டிய அளவற்ற ஆர்வமே அவரை அவதிப்படாத உடல்நலத்துடன் முழுமையாகப் பழுத்த 95 ஆம் ஆண்டிலும் வாழச் செய்தது!

காரணம், தொண்டு செய்து பழுத்த பழமானார் அவர்; சமூகப் புரட்சிபற்றியே சதா சிந்தித்தார்; இறுதி நாள் வரை பிறவிப் போர் வீரராகக் களங்கண்டார் - இளமை உணர்வு மனதில் பொங்கியது!

(மற்றவை நாளை)

-விடுதலை,5.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக