பக்கங்கள்

திங்கள், 9 ஜனவரி, 2017

புத்தாண்டில் ‘மனிதம்‘ கண்டோம்; மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!



2017  ஜனவரி முதல் நாள் - ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்க நாள் அல்லவா?

வழமைபோல், புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன உறவுகள், கொள்கை உறவுகள், நட்பு உறவுகள் - இப்படிப் பலரும் இரவு 12 மணிமுதலே வாழ்த்துக் கூறி, மறு வாழ்த்தினையும், நன்றியையும் பெற்றனர் - நம்மிடம்!

காலை சுமார் 11 மணியளவில் எனது கெழுதகை நண்பர் பிரபல மருத்துவர் டாக்டர் ராஜசேகரன் அவர்கள், நாங்கள் பேசி ஏற்கெனவே எடுத்த முடிவினைச் செயல்படுத்தும் வகையில், அவர்தம் காரிலேயே எங்கள் இருவருக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற போது நட்பு வட்டத்திற்குள் வந்த கொடுமுடி நண்பர், டாக்டர் மாரிமுத்து அவர்களை நாங்கள் நேரில் சென்று அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்தையும், புத்தாண்டு வாழ்த்தையும் இணைத்துக் கூறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண் டோம்.

நாங்கள் மூவரும் சென்னையில் அடுத்தடுத்த  பகுதிகளில்தான் வாழு கிறோம். நண்பர் டாக்டர் மாரிமுத்து அவர்கள், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிய மனம் பெற்று, நிர்வாகத்தில் சிறந்தோங்கி, அங்கே வரலாறு படைத்தவர்; கறை படியாத கரத்துக்குச் சொந்தக்காரர். (அப் போதெல்லாம் துணைவேந்தர் பதவிகள் ஏலப் பொருள்களாக இல்லாத காலம்).

அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் 1954-1956 ஆகிய ஆண்டுகளில் அவர் தாவரவியல் (Botony) மேல் பட்டப் படிப்பு படித்தபோது எங்களது நட்புறவு மலர்ந்தது!

பிறகு அமெரிக்கா சென்று, பல் வேறு ஆய்வுத் துறையில் மிளிர்ந்து, சிறந்தோங்கி, தாயகம் - தமிழ்நாடு திரும்பிய நிலையில்தான், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர் பொறுப்பேற்றார்!

அவர் ஓய்வு பெற்ற பின் சென் னையில் ஆய்வுகளை நடத்திய கால கட்டத்தில்தான் - மனிதர்களால் மீள முடியாது என்று அஞ்சும் கொடும் நோய் அவரைத் தாக்கியது!

அவருக்கு மிகப்பெரும் சோதனை யாகவும், வேதனையாகவும் அந்நோய் அமைந்தது; அவரை ஒவ்வொரு முறை யும் அதன் கொடுமையின் தாக்கத்திலிருந்து மீட்டவர்களில் முக்கியமான பங்காளர் நமது நண்பர் டாக்டர் ஏ.இராஜசேகரன் அவர்களே!

அதை நண்பர் மாரிமுத்து அவர்கள் மிகுந்த நன்றி உணர்வுப் பொங்க எப்போதும் குறிப்பிடத் தயங்காதவர்!

ஆனால், டாக்டர் ராஜசேகரன் அவர்கள், அதை வாழ்வில் அவருக்கு மகிழ்ச்சி தரும் இன்றியமையாக் கடமையாகக் கருதியே அவரைத் தொடர்ந்து கண்காணித்து உதவி வந்தார். அதை ஏதோ நோயாளிக்கு டாக்டர் அளிக்கும் சிகிச்சை என்ற கண்ணோட்டத்துடன் காண மறுப்பவர் ஆவார்!

பல கொடுமையான உயிர் பறிப்புக் கட்டங்களை எல்லாம் டாக்டர் மாரி முத்து தாண்டியதுபற்றியெல்லாம், நான் அடிக்கடி அவரது உடல்நலத்தை டாக்டர் இராஜசேகரன் அவர்களிடம் விசாரிப்பேன். (பொதுவாழ்வு, இடை யறாத கழகப் பணிகளால் பல நண்பர் களை உடனடியாகச் சென்று பார்த்து நலம் விசாரிக்க இயலாத சூழல் எனக்கு அமைந்துவிட்டது தவிர்க்க இய லாததாகி விட்டதே - என்ன செய்வது?) நண்பர் மாரிமுத்து இவ்வளவு நாள் பிழைத்து - புது வாழ்வு பெற்றதன் முழுக் காரணம் என்ன தெரியுமா?

மனிதநேயமும், தொண்டுள்ளமும் கொண்ட ஒரு தாய் - அவர் ஊர்க்காரர் வந்து இவருடன் (மாரிமுத்து தனி யாகவே உள்ள இல்லத்தில்) இந்த நோயால் வாடுபவரின் அத்துணை தேவைகளையும் நன்கு கவனித்து - எல்லையற்ற சகிப்புத்தன்மை,  பொறுமையுடன் அவருடன் இருந்து ‘‘தொண்டு’’ செய்துவரும் அதிசயத் தாயான ஒரு அம்மையார்தான்!

எவ்விதத்திலும் இரத்த உறவு - மனித உறவுகளில் தண்ணீரைவிட கெட்டியானது  என்பர் (ஆங்கிலப் பழமொழி கூட உண்டு). நாங்கள் கூறுவது கொள்கை உறவு அதனினும் கெட்டி - மனிதநேய அன்பால் - பண் பால் பிணைக்கப்பட்ட உறவோ, கெட்டியிலும் கெட்டி!

அவர் பெயர் ‘அம்மை அம்மா!’

இப்படிப்பட்ட  ‘அதிசயங்களையும்‘ எப்போதோ எங்கோ இந்த கணக்குப் போட்டுப் பழகும் ‘பூவுலகில்’(?) காணவே செய்கிறோம்.

அந்த அம்மாளின் பெயர் அம்மை அம்மா.

15 ஆண்டுகளாக அலுப்பு, சலிப் பின்றி மாரிமுத்துவை ஒரு செவிலித்தாயினும் மேலான தாயாக கண்காணித்து, எந்த மருந்து, எந்த ஊசி எதைக் கேட்டாலும் - படிக்காத இந்த மேதை - அவருக்குத் தந்து காப்பாற்றிடும் கருணை மழையாகப் பொழிகிறார்!

இதைவிட நாம் ‘‘முழு மனிதத்தை’’ வேறு எங்கு காண முடியும்? எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் கிராமத்துத் தாயாக வந்தவர்  - தாதியாகவே திகழ்ந்து, மேனாள் துணைவேந்தருக்கு உற்ற துணைச் செவிலியராக - காப்பாளராகப் பணியாற்றும் பான்மை கண்டு அவ ருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்தோம் அவரது பிறந்த நாளில் நானும், டாக்டர் இராஜசேகரும், வேறு சில அவரது முன்னாள் மாணவ, மாணவியருடன்!

இதையே புத்தாண்டின் பெருமை மிகு தொடக்கமாகக் கருதி மகிழ்கிறோம் - உண்மைதானே!
-விடுதலை,9.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக