புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (5)
புரட்சிக் கவிஞர் அவர்களுக்கு தந்தை பெரியார் அவர்கள்மீது அளவற்ற மதிப்பும், மரியாதையும் உண்டு. ஒரு எளிய தொண்டர் எப்படி தலைவரிடத்தில் ஒருவகை தனி மரியாதையுடன் பழகுவாரோ அது போலவே அதிகம் நெருங் காமல், அய்யாவை மிகவும் நேசித்துப் போற்றியவர்.
அவரை மிக நெருக்கமாக அறிந்தவர் கூறுவர். புரட்சிக் கவிஞர் தந்தை பெரியார் முன் மட்டும் தான் சிகரெட் பிடிக்காமல், மறைமுகமாக சென்று பிடிப்பார். அவ்வளவு அன்பும், பண்பும் கலந்த மரியாதை தலைவர் பெரியார்மீது அவருக்கு!
அதேபோல் கவிஞர்மீது - மற்ற எந்த புலவர்கள்மீதும், கவிஞர்கள்மீதும் இல்லாத - பாசமும், பற்றும் தந்தை பெரியாருக்கும் மிக அதிகம்! இதற்கு புரட்சிக் கவிஞர் பற்றி தந்தைபெரியார் எழுதியுள்ள எழுத்துக்களே தக்க சான்று பகரும். 1958இல் எனது திருமண ஏற்பாடுகளை, திருச்சியில் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் செய்தபோது நேரில் அதைக் கண்டு வியந்த அனுபவம் உண்டு.
"ஏம்பா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பி விட்டீர்களா? மறந்திடப் போறீங்க" என்றார் அய்யா.
உடனே பக்கத்திலிருந்த ஏற்பாட்டுக் குழு நண்பர்கள், "அனுப்பி விட்டோமய்யா, அது சேர்ந்திருக்கும் என்று நம்புகிறோம்" என்றனர்.
அதே நாளில் பிற்பகலில் ஒரு தந்தி தந்தை பெரியாருக்குப் புரட்சிக் கவிஞரிடமிருந்து வந்தது; "வீரமணி திருமண அழைப்பு கிடைத்தது. நான் ரயிலில் 6.12.1958 அன்றே திருச்சி வருகிறேன் - பாரதிதாசன்" என்ற ஆங்கில வாசகங்கள் கொண்ட தந்தியைப் பிரித்துப் பார்த்துப் படித்து, உடனே பக்கத்திலிருந்த உதவித் தோழர்களிடம் அய்யா, "பாரதிதாசன் முதல் நாளே புதுச்சேரியிலிருந்து ரயிலில் வருகிறாராம். அவரை முறை யாக வரவேற்று, அவருக்கு வசதியாக தங்கும் ஏற்பாடு களைச் செய்யுங்கள். செலவு பற்றி யோசிக்க வேண்டாம்" என்றார் மகிழ்ச்சியுடன்!
எல்லோருக்கும் வியப்பு. அய்யாவின் "சிக்கனத்"தின் இலக்கணம் அப்போதுதான் பலருக்கும் புரிந்திருக்கும்; யாரை எப்படி சிறப் புடன் வரவேற்று பெருமைப்படுத்த வேண்டும் என்பது தான் அவரது 'சிக்கன' தத்துவத்தின் கருத்தியல் என்பது அப்போதுதான் அந்த நண்பர்களுக்குப் புரிந்தது!
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் 'Retiring Rooms' - ஓய்வு அறைகள் வாடகைக்கு பயணி களுக்குக் கிடைக்கும் வசதி உண்டு. அந்த அறைகளும், பரிமாறப்படும் உணவுகளும் (அந்நாளில்) மிகவும் தூய்மையாய் சுவையாகவும் இருக்கும்; வெளியில் இருந்தும் நாமே அவர் விரும்பும் உணவையும்கூட ஏற்பாடு செய்து கொள்ளவும் அனுமதி உண்டு. அய்யா, அதை ஏற்பாடு செய்யும் அந்தப் பொறுப்பை இரயில் வேயில் பணியாற்றிய திருச்சி சி. ஆளவந்தார், பிச்சாண்டார் கோயில் பி.வி. இராமச்சந்திரன் போன்ற இரயில்வேத் தோழர்களிடம் ஒப்படைத் தார். சிவப்பு சால்வையுடன் திருமணத்திற்கு வந்த புரட்சிக் கவிஞர் தான் தங்கிய அறையிலேயே எழுதிய ஒரு கவிதையோடு வந்து அய்யாவையும், மற்றவர்களையும் சந்தித்து அக்கவிதையை வாசித்தார்! சிறிது நேரம் பேசினார்.
அவ் வாழ்த்துக் கவிதையின் தனிச் சிறப்பை பல ஆண்டுகளுக்குப் பின் பேராசிரியர்
ந. இராமநாதன் அய்யா அவர்கள் குற்றாலத்தில் எனக்கு விளக்கிய போதுதான் அதன் சுவை முழுவதையும் நான் நுகர்ந்தேன்! (அந்த ஒலிப் பதிவு அவரது குரலில் உள்ளது 'விடுதலை'யிலும் அது வெளிவந்ததாக நினைவு).
அதேபோல அடுத்த நாள் காலை இரயிலில் திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக புதுச்சேரி (கடலூர் வரை ரயில் - கடலூரிலிருந்து பேருந்து) திரும்பினார்.
தஞ்சையில் ரயிலில் அமர்ந்திருந்த கவிஞருக்கு காலையில் பசி வயிற்றைக் கிள்ளியது. அந்த தஞ்சை நடைமேடைப் பணியாளர் இட்டளி, தோசை, வடை இவைகளைச் சுட்டு ஒரு கண்ணாடிப் பெட்டியில் அடுக்கித் தோளில் சுமந்து அதற்குரிய சட்னி, சாம்பாருடன் ரயில் பயணிகளுக்கு விற்பனை செய்ய - கூவிக் கூவி நடக்க, எதிரில் 'நம்மவர்கள்' செல்வதைக் கண்டு, கவிஞர் எளிய அந்த தோழரின் சுவை மிக்க உணவை உண்டு பசியாற்றிக் கொண்டார்.
அதன் பிறகு (இரயில் வண்டியிலேயே என்று நினைக்கிறோம்) இதுபற்றி ஓர் அருமையான கவிதையையும் எழுதினார். பார்ப்பனரல்லாத எம் தோழர்கள் சமைத்த அவ்வுணவை 'அமிழ்து, அமிழ்து' என்று புரட்சிக் கவிஞர் எழுதிய கவிதை அவர் நடத்திய 'குயில்' ஏட்டிலும் வந்தது! (நாளை)
புரட்சிக் கவிஞரின் பசியையும், கொள்கை யையும் கோர்த்துக் கொண்ட காலை உணவு தமிழ் இலக்கியத்திற்கு ஓர் அரிய கவிதையைத் தந்து - போனஸ் மகிழ்ச்சியை எங்களுக்குத் தந்தது.
(வளரும்)
வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (6)
நேற்றைய (29.7.2022) 'வாழ்வியல் சிந்தனைகள்' பகுதியில் குறிப்பிட்டிருந்தவாறு -
தஞ்சையில் இரயில்வே நடைமேடைப் பணியாள ரிடம் உணவு உண்டு புரட்சிக்கவிஞர் படைத்த கவிதை.
தமிழன் உணவே
தமிழர்க்கு அமிழ்து!
அகவல்
சாப்பாட்டு வேளையில் தஞ்சா வூரின்
நிலையம் சேர்ந்தது நெடும்புகை வண்டி!
திரு. வீர மணியின் திருமணம் வாழ்த்தித்
திருச்சியி னின்று திரும்பும் எனக்குப்
பெரும்பசி வயிற்றைப் பிசைவதா யிற்று!
நானோ,
பார்ப்பனன் தொட்டதைத் திரும்பியும் பாரேன்
தமிழன் உணவு தாங்கி வாரானா
என்று நினைத்துக் கிடக்கையில், எதிரில்
தமிழன், ஒருவன் தலைப்பெட் டியுடன்
சுவைநீர், இட்டளி, தூய, வடை எனும்
அமிழ்தைஎன் காதில் போட்டான்! அழைத்தேன்
அரையணா விழுக்காடு வடைகள் ஆறும்,
அவ்விழுக் காடே அன்பின் இட்டளி
மூன்றும், பருப்புக் குழம்பில் முழுகத்
தாயென இட்டான்; சேயென உண்டேன்.
சுவைநீர் சுடச்சுடத் தந்தான் பருகினேன்.
இத்தனைக்கும் ஆறணா என்றான்!
அத்தனை யுண்டேன் தந்ததோ ஆறணா!
தஞ்சை வண்டிச் சரகில்ஓர் தமிழன்
மலிவு விலையில் உண்டி வழங்கினான்
என்பதில் வியப்பே இல்லை. ஆனால்,
இத்தனை சுவையினை எங்கும்நான் காண்கிலேன்,
உண்டி விற்கும் உண்மைத் தமிழரே
அண்டிய தமிழர், அமிழ்தமிழ் தமிழ்தெனச்
செப்பும் வண்ணம் செய்திறம் பெறுக!
உண்டி கொள்ளும் உண்மைத் தமிழரே,
தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து!
தமிழர் தமிழனை ஆத ரிக்க!
தஞ்சைத் தமிழன் செய்தது போல
இனிதே யாயினும், எட்டியே ஆயினும்,
வாழ்வ தாயினும் சாவ தாயினும்
தமிழன் ஆக்கிய துண்க
தமிழகம் தன்னுரி மைபெறற் பொருட்டே
எனது திருமணத்திற்கு திருச்சி வந்த புரட்சிக் கவிஞர் தீராப்பசியுடன் கொள்கையோடு கூடிய அமிழ்து உணவு உண்டு - உண்டதால் எழுந்த கவிதையும் எனக்கு மட்டுமல்ல; நாட்டிற்கும், இலக்கியத்திற்கும் கிடைத்த கூடுதல் பரிசு போலும் இது!
என்றே இன்றும் மகிழ்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக