பக்கங்கள்

திங்கள், 2 அக்டோபர், 2023

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (2)


5

(இது 29.4.2022இல் எழுதத் தொடங்கி, விடுபட்டத் தொடர் - இதன் மூலம், இத்தலைப்பின் 2ஆவது "வாழ்வியல் சிந்தனைகள்" கட்டுரையாக வாசக நேயர்களுக்குத் தொடருகிறது. நினை வூட்டிய வாசகர் 'விடுதலை' பாஸ்கருக்கு நன்றி - ஆசிரியர்) 

புதுவையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டின் போது, ஒதியஞ் சாலைத் திடலில் பந்தல், முதல் நாளே சென்று கலைஞர் எழுதி, நடித்த சாந்தா அல்லது பழனியப்பன் நாடகத்தைப் பார்த்ததோடு அவரே அழைத்து நாடகத் திருமணத்தில் தலைமை தாங்கியதையும், அந்த நாடக மேடையில் பட்டுக் கோட்டை அஞ்சா நெஞ்சன் தளபதி  அழகிரிசாமி அவர்கள் தாளம் போட்டு பல காட்சிகளை  ரசித்துக் கண்ட பரவசத்தையும் பசு மரத்தாணி போல் பதித்து விட்டன - இன்னமும் மனசில்!

அதற்கடுத்து புதுவையில் கழகத்திற்கு எதிராக காலிகள் தேசியப் போர்வை போர்த்திக் கொண்டு ரகளையை ஆரம்பித்தனர்.

அந்தத் திடலுக்கு சற்று அருகாமையில் கலைஞர் - நாடகத்தில் நடித்தவரை குறி வைத்து விரட்டி அடித்துக் காயப்படுத்தி சாக்கடையில் தள்ள முயன்ற கொடுமையும் அரங்கேறிய நிலை.

"வாத்தியார்" கவிஞர் கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) ஒரு ஆள் இழுக்கும்  கை ரிக்ஷாவில் ஏறி எதிர்ப்பைப் பற்றி கவலைப்படாமல் செல்லுகிறார்!

தந்தை பெரியாருக்கோ  ஏராளமாகத் திரண்டு வந்திருந்த தாய்மார்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்ற கவலை.

அன்றைய பிரெஞ்ச் - இந்திய காவல் துறையின் அலட்சியமும், மெத்தனமும் இதனை அய்யாவுக் குப் புலப்படுத்தின.

"மகளிர் முதலியோரை பாதுகாப்பாக ஊருக்கு அனுப்புங்கள் - பக்கத்தில்தான் பேருந்து நிலையம்" என தோழர் களைக் கேட்டுக் கொண்டார். பிறகு "மு.கருணாநிதி (கலைஞர்) என்ற ஒரு இயக்க இளைஞர்" அடி பட்டு சிகிச்சை பெறுகிறார் என்பதைக் கேள்விப்பட்டு அடுத்த நாள் அவரையும் பார்த்து ஆறுதல் கூறினார்.

புரட்சிக் கவிஞருக்கு உள் ளூர் அரசியலில் சில எதிரிகள் - தனிப்பட்ட பாதிப்புகள் காரண மாக இருந்ததே இந்த கலவரத் திட்டத்தின் அடிப்படை ஆகும். திராவிடர் கழகம் மீது  வெறுப்பு என்று  திட்டவட்டமாகக் கூற முடியாத நிலை.

புதுவையோடு அடிக்கடி தொடர்புடைய கடலூர்காரர்களாகிய நாங்கள் அங்கு இருப்பது வழமை. புரட்சிக் கவிஞர் வெளியூர்களுக்குப் பயணம் செய்ய கடலூர் (புதுநகர்) பேருந்து நிலையத்திற்கு வந்துதான் அங்கிருந்து பல ஊர்களுக்குச் சென்று திரும்புவார். பல நாள்களில் அவர் கடலூர் முதுநகர்  (Old Town) வருவார். அங்கேதான் கழகத் தோழர்கள் ஏராளம்.

சக்தி சீயக்காய்த் தூள் உற்பத்தி  கம்பெனி பிரபலமானது. அதில் ஒரு பெரிய கட்டடம், பல அறைகள் உண்டு.  பி.ஏ. இளங்கோ என்ற தோழர் தான் உரிமையாளர். தீவிர கொள்கையுள்ளம் கொண்ட என்னருந் தோழர். புரட்சிக் கவிஞர் அங்கே வந்து தங்கி, ஓரிரு நாள் கூட இருப்பார். அவருக்கு வேண்டிய "சகல சம்ரோக்ஷணை களையும்" தொண்டர் தோழர்களாகிய கருஞ்சட்டைக்காரர்களாகிய நாங்கள் அவர் மனமறிந்து, மனங்கோண விடாமல் செய்வோம். அவர் மகிழ்ச்சியோடு தான் விடை பெறுவார்! 

என்னை மாணவச் சிறுவன் - கழக இளைஞனாக அவர் அறிவார். பல மேடைகளில் புது வையிலும், என்னை அன்றைய புதுச்சேரி திராவிடர் கழகத் தலைவரும், பிரபல சகுந்தலா சாயப்பட்டறை தொழிற் சாலை உரிமையாளருமான தொழிலதிபர் பொன். இராமலிங்கம் அவர்கள் கழகப் பிரச்சாரத்திற்குப் பயன் படுத்தினார். அவர் காரை எடுத் துக் கொண்டு திடீரென கட லூருக்கு ஞாயிறு காலை அல்லது சனி காலை வருவார். நேரே எனது தந்தையையோ, ஆசிரியர் ஆ.திராவிட மணியையோ பார்த்து, "தம்பி வீரமணியைக் கூட்டத்திற்குஅழைத்துப் போகிறேன். பத்திரமாக நாளை காலைக்குள் அனுப்பி விடுவேன். படிப்பு பாதிக்காத வகையில் - கூட்டம் ஏற்பாடு செய்து விட்டேன் - வாத்தியாரும் பேசுகிறார். தம்பியும் (தானும் பேசினால் 'தான்' - என்னைக் குறிக்கும் புதுச்சேரி பாஷை) பேச வேண்டும்" என்று கூறி அழைத்துச் செல்வார். அவர்கள் வீட்டில் பலமான விருந்து  - கவனிப்பு எல்லாம். 

புரட்சிக் கவிஞர் குழந்தை மாதிரி பேச்சுக்குக் கை தட்டி மகிழ்வார்! யாராவது இடையில் சலசலப்புக் காட்டினால் சிங்கம் மாதிரி சீறுவார் - அந்தப் பார்வை - அவருடைய சிங்க முக கொத்து மீசை - அலங்கார 'முகபடாம்' எதிரிகளைச் சுட்டெரிக்கச் செய்வதுபோல் இருக்கும்.

'எவண்டா?' என்று ஓங்கிக் குரல் எழுப்புவார்? "இல்லங்க இல்ல நல்லா  பேசினதிற்குத்தான்  சத்தம்" என்றால் -  "அப்படியா போய் உக்கார்; பேசாதே கேள்!" - புரட்சிக் கவிஞர் பதில்.

(தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக