பக்கங்கள்

திங்கள், 2 அக்டோபர், 2023

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (3),(4)

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (3)

2

புரட்சிக் கவிஞர் மாணவர்களிடமும், இளை ஞர்களிடமும் அளவளாவுவதில் மிகுந்த ஆர்வ மும், மகிழ்ச்சியும் கொள்வார்!

புதுமையானதும் வினோதமானதுமான எதனையும் பார்த்தால், சிறு குழந்தையாகவே மாறி விடுவார்! வாயைப் பொத்திக் கொண்டு, கையை ஒருவகையாகக் காட்டி அதிசயமானதை ரசிக்கும் அவரது பார்வையும், உடல் அசைவுகளும் தனி அலாதி ரகம்!

மற்ற நேரங்களில் - மேடைகளில், கர்ஜிக்கும் சிங்கமா இப்படி சிறு குழந்தை ஒரு புது பொம்மையைப் பார்த்துப் பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைவதுபோல் மாறுகிறார் என்பதை எளிதில் எவராலும் எண்ணிப் பார்க்கவே முடியாது!

சில நேரங்களில் அவர் தனது வியப்பினை வெளியிட்டு, பாராட்டின் உச்சத்திற்கும் சென்று வெளியிடும் அந்த குழைவு நிறைந்த மகிழ்ச்சியை அருகில் இருந்து காணுவோருக்கு ஓர் அரிய அற்புதக் காட்சியேயாகும்!

"..... ஏம்ப்பா, நம்ம இராமநாதன் ஒரு புத்தகம் எழுதியிருக்கான் - என்னைப் பற்றி - என் கவிதை களைப் பற்றி! ("கவிஞரும் காதலும்") என்னம்மா எழுதியிருக்கான்! எனக்கே தெரியலே - நாம் இப்படி எழுதியிருக்கோமான்னு! அப்பப்பா சொல்... எப்படி சொல்றது! நீ படிச்சிருக்கியா? படி அதை.

இந்தப் புள்ள எழுதனதைப் படிச்சப் பிறகுதான் இப்படி நான் எழுதியிருக்கேனான்னு எனக்கே புரிஞ்சுது!"

நெஞ்சத்தின் அடியிலிருந்து பீறிட்டுக் கொண்டு வந்த பெரும் பாராட்டு எப்படிப் பொங்குகிறது பார்த்தீர்களா? 

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவனாக அப்போதே இண்டர்மீடியட் வகுப்பில் (தற்போதுள்ள 11, 12ஆம் வகுப்புக்குச் சமம் அது) சேர்ந்தேன் - அதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டப்படி தமிழ் வகுப்பு உண்டு. அதற்கு மதிப்பெண் உண்டு. புலவர் கா.வெள்ளை வரணானார், பண்டித அருணா சலம் பிள்ளை, புலவர் பூவ ராகவன் பிள்ளை (இவர் சிதம் பரத்திலிருந்து ஒரு மாட்டு வண் டியை அவரே ஓட்டிக் கொண்டு வரும் பெரும் (வைதிக) புலவர்), புலவர் சோமசுந்தரம் பிள்ளை - துறைத் தலைவர் டாக்டர் 

அ. சிதம்பரநாதனார், பண்டித லெ.பெ.கரு. இராமநாதன்  பிள்ளை, ஜி. சுப்ரமணிய பிள்ளை போன்றவர்கள் அருமையான பேராசிரியர்கள். 

அவர்களது தமிழ் வகுப்பு மிகவும் ஈர்ப்பு நிறைந்ததாக இருக்கும். பல்கலைக் கழகப் பாட நூலை - இண்டர்மீடியட் இடைநிலை வகுப்புத் தமிழுக்குரியதைத் தயாரித்து வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு விலைக்கு - வழங்கப்படும்.

அதேபோல் பிரெஞ்சு மொழிக்கும்கூட அதற்குப் பதிலாக எடுக்க விரும்புகிறவர்கள் எடுத் துக் கொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டிருந்தது.

பிரெஞ்சுப் படிக்க 2, 3 மாணவர்கள் அதிகபட்ச 5 மாணவ  - மாணவிகளே சேர்வர். வாரத்தில் இரண்டு வகுப்புகள் - இரண்டு நாள்கள் "அபெல் குளோவி" என்ற பிரெஞ்சு கற்பிக்கும் பேராசிரியர் புதுச்சேரியிலிருந்து வந்து தங்கிக் கொண்டு  (வருகைப் பேராசிரியர் போல் இருந்து) பாட வகுப்பு எடுத்து சொல்லிக் கொடுப்பார்.

புதுச்சேரிக்கு அடிக்கடி போய் அங்கே பிரெஞ்சு மொழி பேசும் "மிஸி" (சார் என்று பொருள்)களின் பேச்சைக் கேட்டு வியந்தவன் நான். சிறந்த இலக்கிய மொழி பிரெஞ்சு மொழி என்ற பெருமையும் அதற்கு உண்டு!

ஆதலால் இண்டர்மீடியட் வகுப்பில் புதிதாக பிரெஞ்சு மொழி வகுப்பில் சேர்ந்து படித்தால் என்ன? மற்றொரு உலக மொழியை நாம் கற்றிருக்கும் வாய்ப்பும் கிட்டுமே என்று கருதி யோசித்தேன்.

நாள்தோறும் கடலூரிலிருந்து 30 மைல் தொலைவு ரயிலில் சென்று வந்திடும் நிலையில், பிரெஞ்சு வகுப்பினால், வாரத்தில் இரண்டு நாள் 'லெஷர்' வகுப் பிலாத ஓய்வு. அதனால் மற்ற பாடங்களில் அதிக கவனம் செலுத்தவும் அது உதவுமே என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

என்றாலும் அது நம் தமிழ் மொழி வகுப்பை நாமே புறக்கணிப்பதுபோல ஆகாதா என்று எனது மற்றொரு கேள்வியும் மனப் போராட்டத்தை உருவாக்கி விட்டது!

மனக் குழப்பம் - மனப் போராட்டத்தை எப்படித் தீர்ப்பது - என்ன முடிவு காணுவது - என்று சிலநாள் யோசித்துக் கொண்டே தமிழ் வகுப்பிற்கு வழக்கம் போல் சென்று படித்துக் கொண்டே இருந்தேன்.

அப்போது ஒரு நாள் புரட்சிக் கவிஞர், புதுச்சேரியிலிருந்து கடலூர் வழியே வெளியூர் ரயிலுக்குச் செல்ல வந்தவர், முதுநகரில் வந்து வழக்கமாக ஒரு நாள் தங்கினார். நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று அவருக்குப் பணிவிடை செய்தோம்.

அப்போது கவிஞர் தனியே அமர்ந்து எதோ யோசனையில் இருந்தார். நான் மட்டும்தான் அவருடன் இருந்தேன். திடீரென எனக்கொரு யோசனை! பிரெஞ்சு மொழி படிக்கும் வகுப்பில் சேரும் மனக் குழப்பம் தீர கவிஞரையே ஆலோசனை, அறிவுரை கூறக் கேட்டால் என்ன என்று முடிவு செய்து அவரிடம் பேசினேன்.

என்ன சொன்னார் கவிஞர்?

(தொடரும்)

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (4)

3

புரட்சிக் கவிஞர் தான் கூறினார்: நன்கு ஆழ்ந்து கேட்டார். அதன்பிறகு "உன் முடிவு சரியானதுதான்; பிரெஞ்ச் மொழி இருக்கிறதே - அது இலக்கியத்தில் மிகுந்த மொழி மட்டுமல்ல... உலக சமாதான உடன்படிக்கைகளில் அந்த நாளில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. பிரெஞ்ச் மொழிதான் - அவரவர்கள் மொழியில் இருந்தாலும்கூட. காரணம் அந்த மொழியில் பல மாற்றப்பட முடியாததாக இருக்கும் வசதியை அது உள்ளடக்கியது; அஃறிணைப் பொருள் என்று நாம் அழைக்கும் கட்டில், மேஜை போன்றவைகள் ஒவ்வொன்றையும் ஆண் பாலா, பெண் பாலா எனப் பகுத்துப் பார்த்து பெயர் வைத்துப் புழங்கும் மொழி" என்று அதன் பெருமையை, முக்கியத்தை, அதனைக் கற்று, அறிவை பெறுவதின் தேவையை எனக்கு சில மணித்துளிகள் பாடம் எடுப்பதைப்போல் சொல்லியதோடு,

"நீ உன் வகுப்பில் சொல்லிக் கொடுக்கும் தமிழைவிட, கழகத்தினரால், நம்ம ஏடுகள், நம்ம பேச்சாளர்கள், எழுத்தாளர்களால் அறிந்து கற்கும் தமிழ் கூடுதலாக - "தூக்கலானது" (இது அவர் மொழி). எனவே நீ தமிழ் வகுப்புக்குப் போய்தான் அதனைக் கற்று வரப்போவதில்லை - அதிகம் தானே கற்றுக் கொள்ள முடியும். அதனால் நீ பிரெஞ்ச் எடுத்துப்படி - புதுச்சேரியில் இருந்து வரும் அந்த பிரெஞ்ச் வாத்தியார் அபெல் குளோவியை எனக்குத் தெரியும்; நானும் அவரைப் பார்த்துச் சொல்லுகிறேன்" என்று பிரெஞ்ச் மொழி வகுப்பில் சேர என்னை மிகவும் ஊக்கப்படுத்தி சேரச் சொன்னார்!

சிறிதும் தயக்கமின்றி நான் பிரெஞ்ச் வகுப்பில் அந்த வாரமே சேர்ந்து, பாட புத்தகங்களைப் பெற்று படிக்கத் துவங்கி விட்டேன்.

என் பிரச்சினைக்குத் தீர்வு எவ்வளவு எளிதாக, எவ்வளவு பெரிய மேதையிடமிருந்து, தமிழ்ப் பெய்த தனிப்பெரும் இமயப் புலவரிடமிருந்து கிடைத்தது என்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது!

மற்றொரு செய்தி. புரட்சிக் கவிஞருக்கு சிகெரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. பிரெஞ்ச் முப்பட்டை வண்ணம் போட்ட நேஷனல் சிக ரெட்டு தான் பிடிப்பார்; ‘நேசுனால்‘ என்ற பிரெஞ்ச் உச்சரிப்பை அவர் கூறுவார்.

கடலூர் வந்து தோழர் பி.ஏ.இளங்கோவன் சக்தி சீயக்காய் தொழிற்சாலையில் தங்கும்போது அவரிடம் பேச, பழக, விருந்தில் கலந்துகொள்ள ஒரு பெரிய “ஜமாவே‘ சேர்ந்து விடும்!

இறைச்சி உணவு, மீன், நண்டு, கோழி - இவைகள் எல்லாம்  விருந்து இலைகளில் அணி வகுத்து அடுத்தடுத்து வரும்.

அவருக்கு மது அருந்தும் பழக்கமும் உண்டு என்பதால் அதனையும் தோழர் இளங்கோ நன்றாக (உயர்வகை) ஏற்பாடு செய்து, பக்கவாத்தியங்களும் இருக்கும். என்னைப் போன்றவர்கள் கண்டும் காணாதது போல் ஒதுங்கி நின்று அல்லது உணவுப் பந்தி வரிசையில் தள்ளி அமர்ந்து உண்போம்.

எவ்வளவு அருந்தினாலும் நிலை தடுமாற்றறமோ, அதிகமான குரல் உயர்த்தியோ, சில ‘குடிமக்கள்' உளறுவதைப்போல எதையுமே அவரிடம் காணவே முடியாது. கண்டதில்லை - அமைதி, புலால் உணவை சுவைத்துச் சுவைத்து நிதானமாக, பொறுமையாகச் சாப்பிடுவார்.

ஆங்கிலத்தில் "Mindfulness" (எதைச் செய்தாலும் அதிலேயே லயித்து ஈடுபாடு கொண்டு செய்வது) - (புத்தரின் அறிவுரைகளில் இதுவே முதன்மை) மனதை முழுமையாக அதற்கே அப்போது கொடுத்ததில் - வேறு கவனச் சிதறல் இல்லாத நிலை - அப்படியே உண்ணுவார் - அளவறிந்தே எல்லாம்!

பரிமாறிய ஒரு நண்பர் - அவரை ‘நாயிடு நாயிடு' என்றே தோழர்கள் கூப்பிடுவார்கள். அவர் மதுவைக் கூடுதலாக அருந்தி விட்டு, கவிஞருக்குப் பரிமாற தட்டை எடுத்து, இலையில்  உணவு வகைகளைப் போடத் துவங்க, ‘போதும்' என்றார் மெதுவாகக் கவிஞர். அவரோ "இல்லிங்கோ - இன்னும் கொஞ்சம்" என்று இளித்தபடி தள்ளாடி மேலும் எடுத்து வைக்க முனைந்தார். 

"ஏய், போதுன்னேன், போதுன்னேன், என்ன பரிவு என் மேலே? அறைவேன், அறைவேன் தெரியுமா?" என்று எச்சில் கையோடு குரலை உயர்த்திக் கூறினார். அவர் - அத்தனை பேரும் நடுங்கிவிட்டனர் - அவரை (நாயுடுவை) மற்றவர் அழைத்துச் சென்றனர். "ஏம்பா இவன் சாதாரண நேரத்தில் இப்படி உபசரிப்பானா? அவன் மேலே தப்பில்லை; அது பேசுகிறது அய்யா!" என்று தலை யில் அடித்துக் கொண்டு சிரித்தபடியே கூறினார். 

- (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக