நமது வாழ்க்கை மிகவும் எளிதாகவும், ஏற்றம் தருவதாகவும் அமைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? பகட்டு, படாடோபம் - இவற்றை ஒழித்த ஒழுக்கமான வாழ்க்கைதான் நிம்மதியான வாழ்க்கையாகும்!
பிறரைப் பார்த்து ஒப்பீட்டு வாழ்க்கை வாழ நாம் ஒரு போதும் ஆசைப்படுவது கூடாது;
நமது வருவாய்க்குட்பட்ட, அளவு அறிந்து வாழ்தல் அவசியம்.
இதற்குச் சரியான திட்டமிடல் அவசியம்.
ஒவ்வொரு மாதத்திலும் 'பட்ஜெட்'டில், இன்றி யமையாத செலவுகளுக்குப் போதிய ஒதுக்கீடு - எதிர்பாராத செலவு ஏற்படக் கூடும் என்பதால் அதற்கென ஒரு சிறு அளவு ஒதுக்கீடும் முக்கியம் தான்.
அரசாங்கம் வரவு - செலவு ('பட்ஜெட்') திட்டத்தில் செலவு முதலில்!
வரவு கண்டுபிடிப்பது, ஏற்பாடு செய்தல் பிறகே.
ஆனால் தனிமனிதரின் 'பட்ஜெட்'டில் வரவு முதலில் - அதற்கேற்ப செலவு திட்டமிடலில். இது ஓர் அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண் டிய உண்மை!
திருவள்ளுவர் சொன்ன
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை (குறள் - 478).
வரவைப் பெருக்குவதற்கு முதல் வழி என்னதென வள்ளுவர் கூறுவதுதான்!
ஓட்டைகளால் நம் செலவுகள் பெருகாமல் தடுத்தாலே கூடுதல் வரவுக்குச் சமம் அல்லவா?
அனாவசியச் செலவுகள்
ஆடம்பரச் செலவுகள்
பிறர் மெச்ச நாம் பொருள் வாங்கி 'ஷோகேஸ்' வைக்கும் அருவருப்புச் செயல்கள் மூலம் ஆகும் செலவுகளைத் தவிர்க்கலாமே!
சேமிப்பு - சிறு அளவாவது இருப்பது - எவ்வளவு நெருக்கடியிலும் பழக்க வேண்டியது முக்கியம்! முக்கியம்!
10 ரூபாய் வரவில் 1 ரூபாய் சேமிப்பு என்று ஒதுக்கி வைத்துவிட்டு அதை மறந்துவிட வேண்டும்.
கம்பெனிகளில் ரிசர்வ் பண்டு (தனி ஒதுக்கீடு நிதி) -
அதில் கை வைக்கக் கூடாது அல்லவா?
"விதை நெல்லை எடுத்து விருந்தாளிக்கு ஆடம்பர விருந்து வைப்பவன் விவேகி யாவானா?"
குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவும் நினைக்கக் கூடாது. பிறகு அதுவே "பேராசை பெரு நட்டம்". உள்ளதும் போச்சே என்ற ஓலமே மிச்சம்!
அன்றாடச் செய்தியில் அங்கம் வகிக்கும் -
சீட்டுப் போட்டு ஏமாந்தோர்!
அதிக வட்டி ஆசையில் கைப்பொருள் இழந்த பரிதாபத்திற்குரிய மூத்த குடிமக்கள்!
இரட்டிப்பு (Double Money) பணம் தருவது என்ற 'மயக்க பிஸ்கட்டுக்கு' பலி!
இப்படி எதிலும் படாமல், நேர்வழியில் சம் பாதித்துவரி ஏய்க்காமல் வரி கட்டி, சட்டப்படி பணம் இருப்பை வைத்துச் செலவழிப்பது நல்ல 'பட்ஜெட்' - சீராக்கும் வழி முறை!
மருத்துவ செலவு - என்பதற்கு ஒரு பங்கு அவசியம் ஒதுக்க வேண்டும்.
கல்விக்கு எப்படி ஒதுக்குதல் முதலீடோ அது போலத்தான்!
நல்ல உடல் - நல்ல உள்ளம் - நல்ல நலவாழ்வு முக்கியம்! அல்லவா?
நல்ல புத்தகங்களை வாங்கிப் படிக்க ஒரு பங்கு குறைந்த அளவேனும் நிதி ஒதுக்கீடு செய்க!
வாய்ப்பிருந்தால் வருமானத்தில் ஒரு சிறு பகுதியேனும் - தொண்டறம் மூலம் உண்மையான வறியோரின் தேவைக்கு உதவுதல் அல்லது சிறந்த அறக்கட்டளைகளின் தொண்டை ஊக்கப் படுத்தவே நிதி தரலாம்.
வாழ்க்கை வாழ்வதற்கே!
ஏமாறுவதற்கு அல்ல! அல்லவே அல்ல!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக