சில நாள்களுக்குமுன் ‘பொதிகை' தொலைக்காட்சியில் கோலி சோடா கலர் உற்பத்தி, தற்போதுள்ள மக்களிடையே அதற்குக் கிடைக்கும் வரவேற்பு - இவைபற்றி சோடா பேக்டரி உரிமையாளர், தொழிலாளத் தோழர்கள், நுகர்வோர் ஆகிய பலரின் பேட்டி - இவற்றை வைத்து சுவையான ஒரு காட்சிக் கதையை (எபிசோட்) தயாரித்து ஒளிபரப்பினர் - பாராட்டத்தக்க முயற்சி!
இன்றுள்ள இளைய தலைமுறைக்கு ‘7-அப்பும்', ‘ஃபேண்டாவும்', ‘பெப்சி கோலாவும்'தான் பெரிதும் தெரியும்.
நமது குடிசைத் தொழில் போன்ற ஏழை, எளிய நடுத்தர வாழ்வாதாரங்களை எப்படி பன்னாட்டுப் பெருமுதலாளிகள் ‘காலி' செய்துவிட்டனர் என்ற கோணத்தோடு பார்த்தால், இதுபோன்று ‘காலியான' பல பொருள்களும், இல்லத்தரசிகளின் வாழ்வாதார வகைகளும் கொண்ட பட்டியல் மிகவும் நீளும்!
அக்காலத்தில் - எனது மாணவப் பருவ நினைவுகளை - மலரும் நினைவுகளாகக் கொண்டு ஒரு 70 ஆண்டு பின்னே சென்று, யோசித்தால், ‘ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே' என்று எத்தனையோ சங்கதிகள் அணிவகுத்து வருகின்றன!
பெரிய சினிமா தியேட்டர்கள் சில ஊர்களில் ஒரு சிலவே. கிராமப்புறங்களில் எல்லாம் ‘டெண்ட் கொட்டகை'தான். தற்காலிக லைசென்ஸ் வாங்கி நடத்தி சினிமா திரையில் காட்டுவதும், தரை டிக்கெட், பெஞ்சு, கேலரி முதலிய வகையறாக்கள்.
அங்கேதான் அந்தக் குரல், ‘இண்டர்வெல்' - இடைவெளியில் சோடா - கலர் - கொஞ்சம் ஒஸ்தி ‘கிரஷ்' என்ற புது வகை பாட்டிலில்! (விலை கூடுதல்).
கோலி சோடாதான் மிகவும் ‘பாப்புலர் பிராண்ட்' அக்காலத்தில்! கலர் சோடா உண்டு; சர்க்கரை (சாக்ரின் போட்ட) சோடாவும் உண்டு; சோடா கலர் - சத்தம் உண்டு - சிறு பையன்கள் ஒரு சின்ன கிரேட் பெட்டியைத் தோளில் தூக்கிக் கூவிக் கூவி விற்பார்கள்!
கோலி சோடாவை உடைத்துக் குடிப்பது, கலர் சோடாவை கிராமத்திலிருந்து அந்நாளில் வருவோர் பெருமிதத்துடன் வாங்கிக் குடிப்பதும் பழம் பெருமைகளில் ஒன்று.
பேச்சாளர்களாகிய எங்களது தோழன் இந்த கோலி சோடாதான்!
உரத்த குரலில் பேசிக் கொண்டே இருக்கும்போது, தொண்டை விக்கிக் கொண்ட நிலையில், கோலி சோடாதான் ‘ஆபத்பாந்தவன்!'
சேலம் மாநாட்டு மேடையில் மேஜையில் ஏறி இடைவேளையில் பேசிய எனக்கு, அறிஞர் அண்ணா அவர்களே (பரிதாபப்பட்டு) சோடாவை உடைத்துக் குடிக்கத் தந்தது என் வாழ்நாளில் யாம் பெற்ற பேறு!
பல கூட்டங்களில் மேடையோடு, அப்போது ஒலிபெருக்கி அபூர்வம். ஆனால், கோலி சோடாதான் எங்கள் தோழன் - மேடையில் எப்போதும் இருக்கும்.
‘வெண்ணிலாவும் வானும் போல' என்ற வரிகள்போல, ‘அக்காலப் பேச்சாளரும் கோலி சோடாவும் போல!' என்று கூறலாம்!
மேடையில் நடைபெற்ற வேடிக்கை நிகழ்வு ஒன்றை நமது மூத்த திராவிடர் இயக்கத் தலைவர்கள் சொல்லி சொல்லி சிரிப்பது உண்டு.
குடந்தை கே.கே.நீலமேகம் அவர்கள் அக்கால திராவிடர் இயக்க மூத்த முன்னோடிகளில் ஒருவர். (அதே ஊரில் (குடந்தையில்) ‘கே.கே.என்.' என்ற
கே.கே.நீலமேகம், ‘வி.சி.' என்ற வி.சின்னதம்பி, ‘பி.ஆர்.பி.' என்ற பி.ஆர்.பொன்னுசாமி (சேர்வை) மூவரும் பிரபலமானவர்கள்) அவர் மேடைகளில் ஆவேசமாகப் பேசுவார்.
‘‘இரண்டாம் உலக யுத்த நேரம் அது - அந்தக் கொடுங்கோலன் ஹிட்லர் இங்கிலாந்து நாட்டின்மீது குண்டுபோட்டு அழிக்க முயற்சித்தபோது, பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் என்ன செய்தார் தெரியுமா?'' என உரத்த குரலில் மக்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டே,
(‘‘சின்னதம்பி அண்ணே ஒரு சோடா தாங்களேன்'' என்பார்) இதை அண்ணா உள்பட பலரும் சொல்லி சொல்லி சிரிப்பார்கள்!
திராவிடர் இயக்கத்தை வளர்த்தவர்களில் கோலி சோடா, கலர் தயாரிக்கும் தொழில் நடத்தியோர் (அக்கால தொழிலதிபர்கள்(?)) பலர் உண்டு!
கலைஞர் அவர்களை நாடகங்கள் எழுதத் தூண்டி நடிக்கவும் வைக்க முழுக் காரணமான நாகைத் தோழர் ஆர்.வி.கோபால் அவர்கள் ‘‘ராயல் சோடா பேக்டரி'' என்று வைத்திருந்தார். அது சிறப்பாக நடந்தது! அதன் வருவாய் மூலம் கழகத்திற்கும் தொண்டு செய்த பெருமகன். ‘நாகை திராவிட நடிகர் சபா' என்று உருவாக்கி, அதன்மூலம்தான் ‘சாந்தா அல்லது பழனியப்பன்', ‘போர்வாள்' போன்ற பல நாடகங்கள் அரங்கேறி நடந்தன. புதுச்சேரியில் பல வாரங்கள் நடந்தன. (அப்போதுதான் மாநாட்டு நிகழ்ச்சியில் கலைஞர் தாக்கப்பட்டது).
(தொடரும்)
மன்னார்குடியில் உள்ளிக்கோட்டை சு.பக்கிரிசாமி சோடா பேக்டரிதான் எங்களது - பேச்சாளர்களது தங்குமிடம் - ஓய்வு இல்லம் - சு.ப. அவர்களுடன் சைக்கிளில், ஹேண்ட் பாரில் முன்னே அமர்ந்து, அவரது ‘பீடிப் புகை'யின் நெடிய வாடையை எப்படியோ சகித்துப் பிரச்சாரத்திற்குச் சென்றுள்ளேன்.
சோடா எப்படி தயாரிக்கிறார்கள் என்பது அங்கெல்லாம் பார்த்து பலவற்றைத் தெரிந்து கொண்டோம்!
பழனியில் திராவிடர் கழகத் தோழர் சோடா பேக்டரி முத்துச்சாமி அவர்கள்தான் இயக்கம் வளர்த்தத் தோழர்; தமிழரசனை மிகவும் ஊக்கப்படுத்தி, துணை நின்றவர்!
இப்படி ஒரு நீண்ட பட்டியலே உண்டு!
அந்தக் காலத்திலேயே இந்த கோலி சோடாவுக்குப் பெருத்த போட்டி (பெரும் கார்ப்பரேட் முதலாளித்துவ போட்டி). ஸ்பென்சர் சோடா - சென்னையில் தயாரித்து ரயிலில் பல ஊர்களுக்குப் போகும்போது - ரயில் நிலையங்களுக்குச் சென்று சில்லறை வியாபாரிகளான வெற்றிலைப் பாக்குக் கடைக்காரர்கள் பணம் கொடுத்து வாங்கி வருவர்! அக்காலத்தில் ‘‘அந்தஸ்தின் சின்னம்'' (Status Symbol) அது!
அதற்குப் போட்டியாக திருச்சி வின்சென்ட் சோடாவும் வணிகத்தில் வந்து நின்றது.
ரயிலில் ஸ்பென்சருக்குப் பதிலாக ஷி.ஷி. சார் (Char)என்ற சோடாவும் வந்தது!
பிறகு விருதுநகர் காளிமார்க் போன்றவை எல்லாம் வந்தன!
கோலி சோடா தாகத்திற்குப் பேச்சாளர்களுக்கு உதவுவதை, நம் நாட்டில் போர் ஆயுதமாகவும்கூடக் கையாண்ட கதையை சொல்லாமல் விட்டால் நியாயமல்ல.
சோடா புட்டியை வீசி எறிந்து கூட்டத்தில் கலவரம் செய்தல், சோடா பாட்டில் வீச்சு, கல் வீச்சு என்றெல்லாம் செய்திகள் வேகமாக வரும்.
பெரும் கூட்டத்தைக் கலைத்து கலவரம் உண்டாக்க இந்த கோலி சோடா பாட்டில்கள் பெரிதும் கலவரக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டதும் உண்டு!
(பிறகுதான் சைக்கிள் செயின் அது இணைத்துக் கொண்டது போலும்!)
கோலி சோடா பாட்டிலில் உள்ள குண்டு உள்ளே போக - உடைக்க ஒரு தனி மரக் கருவி உண்டு. ஆனால், பலர் தங்களது கட்டை விரலைக் கொண்டே உடைத்து ‘வீர'த்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் உண்டு!
இந்த சோடாவை உடைத்துக் கொண்டு வரச் சொல்லும் சொலவடையை நகைச்சுவைக் காட்சிக்கே ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் தேவக்கோட்டை ரஸ்தாவில் அந்நாளில் தயாரித்து வெகு ஜோராக ஓடிய ‘சபாபதி' சினிமாவில் பயன்படுத்திக் கொண்டார்!
பணியாளரான, அக்கால பிரபல நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினத்திடம் சோடாவை உடைத்துக் கொண்டு வரச் சொன்னதை, அப்படியே அட்சரம் பிசகாமல் செய்து, ‘‘சுக்கு நூறாக உடைத்தே'' கொண்டு வந்து சிரிக்க வைப்பார்!
செரிமானத்திற்கு ‘ஜிஞ்சர் பீர்' என்ற இஞ்சிச் சாறு கலந்த சோடா மிகவும் பயன் தரும். முக்காலணா, ஒரு அணா சோடா விலை எனக்குத் தெரியும் - அக்காலத்தில்!
உவமைகளுக்குக்கூட சோடா பயன்பட்டது!
பொங்கிய சிலரின் ஆர்வம் உடனே குறைந்து விடுவதைப்பற்றி ஒப்பிட்டுக் கூற, அவர் செயலில் தொடக்கத்தில் வேகம் இருக்கும் - அப்புறம் மறைந்துவிடும் - ‘உடைத்த சோடா புட்டி கேஸ் மாதிரி' என்று கூறுவதுண்டு!
பேச்சாளர்களுக்கு சோடா உடைத்துத் தரும் பழக்கம் இப்போது குறைந்தே போய்விட்டது! அவர்களும் ‘அது வேண்டாங்க, கேஸ் (Gas) அதிகமாகுங்க' என்று சொல்லி அவரவர் பருகுவதற்குக் கையோடு காபி, தேநீர், வெந்நீர், தண்ணீர் கொண்டுவந்து விடுகிறார்கள். இப்போதுதான் பாட்டில் தண்ணீரும் வந்துவிட்டதால், Carbonated Aerated Water என்பதைத் தவிர்க்கவும் செய்கிறார்கள்!
என்றாலும், கிராமத் திருவிழாக்களில் இன்னமும் கதாநாயகன் கலர் சோடாதான்! பலரை வாழ வைத்த, தொண்டை வறளாது காப்பாற்றிய சோடா வாழ்க!
இப்பொழுது மீண்டும் கோலி சோடா புழக்கத்திற்கு வருகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக