ஏப்ரல் 6ஆம் தேதி - இரண்டு நாள் முன்பு ஒரு வகையாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்று முடிந்தது!
தமிழ்நாடு 'பகுத்தறிவு பூமி' என்ற பெயர் பெற்ற பண்பட்ட பூமியானாலும்கூட, தேர்தலில் அதன் கீழிறக்கம் கடந்த சில ஆண்டுகளாக மிக வேகமாகச் சென்று ஒரு பெரும் தலைகுனிவை ஏற்படுத்துவது, நமக்கெல்லாம் வேதனையாகவும், வெட்கமாகவும் உள்ளது!
ஜனநாயகம் மறுபுறத்தில் 'பணநாயக' அவதாரம் எடுத்தே வாக்காளர்களை 'ஆட் கொள்ளும்' அவலம். மிக மோசமாக உள்ளது.
தேர்தல் கமிஷன் என்பது ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டதுபோல - தேர்தல் - "கமிஷன்" Election - "Commission" என்று சொல்லும் பரிதாப நிலைக்கு - கையறு நிலைக்கு - தள்ளப்பட்டுள்ளது!
கண்டும் காணாது நடந்து கொண்ட நிலையில்கூட, சில அதிகாரிகளின் சோதனையில் சிக்கிய பணம் மாத்திரம் ரூபாய் 450 கோடி அளவில்!
தங்கமாக, சிக்கியது சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில் என்பது பணநாயக அவதாரம், மறுபுறத்தில் 'தங்கமான தேர்தல்' - வாக்குகள் என்ற நிலைக்கு "உயர்ந்து" - "வளர்ந்தோங்கி" நிற்கிறது!
நம் நாட்டுத் தேர்தலில் சூறையாடப்படுவது ஏழை, எளிய, கீழ் அடுக்கு, நடுத்தர மக்கள் - ஆகியவர்களின் நாணயமும், நேர்மையும் கூடத்தான்! வாக்குகள் மட்டுமில்லை!
சுயமரியாதை மண்ணில் வேட்பாளர்களின் சுயநலம் சுயமரியாதையையே காணாமற் போகச் செய்து விட்டது. இம்முறை பல கட்சி வேட் பாளர்களும் நடந்து கொண்ட கேலிக்கூத்தான 'வித்தைகள்' மூலம் ஜனநாயகப் பாடம் படித்த வர்கள் தலை கவிழ்ந்துக் கொள்ள வேண்டிய "அவசியமானம்" ஆங்காங்கே பரவலாகி, 'வைரலாகி' வெளிச்சம் போட்டு விட்டது!
ஒரு வேட்பாளர் வயலில் இறங்கி நாற்று நாட்டு "பொதுச் சேவை" செய்கிறார்!
இன்னொரு வேட்பாளர் சாயாக் கடையில் "டீ போட்டு சேவை" செய்து வாக்கு சேகரித்தார்!
அடுத்தவர் - டீ போட்டு, சமைத்துப் பரிமாறும் சேவை செய்கிறார்! சட்டசபைக்கு போவதற்கு இதுவா தகுதி?
"தொண்டில்" இந்த எம்.எல்.ஏ. வேட்பாளர் களுக்கிடையே எவ்வளவு போட்டா போட்டி பார்த்தீர்களா?
இன்னொரு வேட்பாளர் ஒரு அம்மணி துணி துவைப்பதை அவர் கையிலிருந்து வாங்கி, தானே துணி துவைத்து அந்த மூதாட்டியின் சிரம பரிகாரத்தைச் செய்து விளம்பரம் தேடுகிறார்!
இதனைவிட ரூபாய்களைக் கொடுக்க முடியாத படி ஒரு புது வித்தை - ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் கண்டுபிடித்த "டோக்கன்" வித்தை, அங்கிங்கெனாதபடி எங்கும் பரவலாகி, மளிகைக் கடைகள் முன்பு கூட்டம் - "அதற்கும் எங்கள் கடைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை" என்று ஒட்டுப் போட்ட பின் நீட்டிய டோக்கனுக்குப் பதிலாக கிடைத்தபோது மிஞ்சியது ஏமாற்றமே!
மாசில்லா நெஞ்சத்தோடு கையில் காசில்லா வேட்பாளர்கள் தேர்தலை- தனது கொள்கை, தொண்டு, மக்கள் பணி, நேர்மையை மட்டும் முன்னிறுத்தி, மூலதனமாக்கித் தேர்தலில் நின்று வென்று விடுவது இனி ஒரு போதும் சாத்தியப்படாது என்பது ஒரு சரித்திர உண்மை ஆகி விட்டது!
'எதுவும் தவறல்ல' என்ற அளவுக்குப் பொது ஒழுக்கச் சிதைவு உச்சத்தைத் தொடுகிறது!
19.12.1973 அன்று தியாகராயர் நகரில் தந்தை பெரியார் ஆற்றிய கடைசி சொற்பொழிவில் இந்த கீழிறக்கத்தைத் தொலைநோக்கோடு படம் பிடித்துப் பேசியுள்ளார். அதனைப் படித்துப் பாருங்கள்.
ஜனநாயகப் பாசாங்குத்தனம் பற்பல அவ தாரங்களை எடுக்கிறது!
கட்சி மாறுவதில் பச்சோந்திகள் நமது வேட்பாளர்களைக் கண்டு வெட்கப்படுகின்றன - தோற்றுப் போகின்றன.
ஒரு மணி நேரத்தில் கட்சி மாறி, தேர்தலில் வேட்பாளராக மாறும் டிக்கெட் வாங்கும் கலை ராக்கெட் வேகத்தில் அரங்கேறுகிறது!
இப்படிப் புலம்பினால் போதுமா? "எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டினிலே" என்ற பாட்டின் வரிகளில் ஒரு திருத்தம் -
எத்தனைக் காலந்தான் ஏமாறுவர் இந்த நாட்டிலே!
ஏ,தாழ்ந்த தமிழகமே! உனது மானமும், மதிப்பும் பாழாய்ப் போன ஜனநாயகத்தில் இப்படியா சந்தி சிரிப்பது?
- மாற்றுவழி கண்டுபிடிக்கப்பட்டு உண்மை ஜனநாயகத்தை நடத்த வழி காண்பது அவசர, அவசரம்.
பொது ஒழுக்கச் சிதைவை மிக வேகப்படுத்து வதற்கு இப்போதைய தேர்தல்கள் மிக முக்கிய பங்கு பாத்திரம் வகிக்கின்றன!
பல்லிருந்தும் கடிக்க முடியாதபடி உள்ளது தேர்தல் ஆணையம், ஏன் என்று புரியவில்லை.
தங்களுக்கு வாக்குப் போடுவதற்கு பணம் தரவில்லை என்று சாலையில் அமர்ந்து "சாலை மறியல்" நடத்தினார்கள் என்ற செய்தி எதைக் காட்டுகிறது? எவ்வளவு அசிங்கம் இது! அந்த மக்கள் மீது குற்றம் ஒரு புறமிருந்தாலும் அவர்களை அந்த உத்தரவாதம் தந்து தானே அழைத்து ஏமாற்றும் நிலை!
அதற்குமுன் பெருந் தலைவர்களின் கூட்டம் பெருங் கூட்டமாகக் காட்சியளிக்க காசு - பணம் - குவார்ட்டர் - பிரியாணி கொடுத்து கால்நடை களை அடைத்துக் கொண்டு வருவதுபோல, அழைத்து வந்து கூட்டம் முடிந்த பின்போ, முன்போ 'பணம் பட்டுவாடா' செய்யும் அரிய சேவையை உள்ளூர் தளகர்த்தர்கள் செய்வது எத்தகைய கேவலமான நடைமுறை?
எல்லோரும் நிர்வாணமாக வசிக்கும் நாட்டில் கோவணம் கட்டியவன்தானே "பைத்தியக் காரன்?" அதுபோன்ற நிலை. முந்தைய தேர்தல் களில் தலைவர்கள் பேச்சைக் கேட்க, கட்டுச் சோறு மூட்டையுடன் இரவெல்லாம் வந்து காத்திருந்து கேட்டுத் திரும்பும் நடைமுறை "அந்த நாள் ஞாபகம்" ஆகிவிட்டது!
திருநள்ளாற்றில் சனீஸ்வர பகவானிடம் பாவம் போக்கும் "புனிதஸ்தலத்தில்" தங்கக்காசு பிரதமர் மோடி உருவம் பொறித்ததுடன் - பா.ஜ.க. சின்னம் + ரூபாய் நோட்டுகள் கொடுத்தவரை தேடுகிறார்களாம் - தேடுகிறார்களாம் - தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.
'எந்தாடா ஆச்சரியம்!' அது மட்டுமா?
ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்று பத்திரிகைகளை சொல்லுவார்கள்.
அவற்றின் யோக்கியதையைக்கூட இத் தேர்தல் மிகவும் கேலிக்குரியதாக்கி விட்டது.
கடைசி நாளுக்கு முன்னாள் மூன்று நான்கு பக்க விளம்பரமாக எதிர்க்கட்சியை பற்றி ஆளுங்கட்சி கூட்டணி. முழுப் பக்க விளம்பரம் கொடுப்பது தவறில்லை. ஆனால் அதை விளம் பரமாக வாசகர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி, ஏதோ வழக்கமாக அந்த செய்தித்தாளின் செய்திகள் என்று 'சட்'டென்று பார்த்து வாசகர்கள் ஏமாறும் வண்ணம் ஒரு 'புதுடெக்னிக்'குடன் நடந்தது மோசடித்தனத்தின் முழு வீச்சு அல்லவா?
'பத்திரிகை தர்மம்', 'பத்திரிகை தர்மம்' 'பல்லவி, அனுபல்லவி, 'சரணம் பாடும் இவர்கள் இப்படி தங்களது ஒழுக்கத்தையும் நாணயத்தையும் பொதுச் சந்தையில் - வாசகர்களிடம் விலைக்கு விற்கலாமா?
மிக மிக வேதனை -
இப்படிப்பட்ட பத்திரிகைகள் 'அய்ந்து நோய்களில் ஒன்று என்று கூறிய தந்தை பெரியார் முன்னோக்கு எப்படி அனுபவத்தால் கனிந்தது பார்த்தீர்களா?
ஏற்கெனவே பழமொழிகள் உண்டு.
"நாய் விற்ற காசு குரைக்காது
கருவாடுவிற்ற காசு நாறாது'
வருமானம் கருதி
தங்கள் பெறுமானத்தை இழப்பது
நியாயம் தானா?
இதுதானா தேர்தல் தந்த வெகுமானம் -
ஜனநாயகத்தின் சன்மானம்?
நிலையிலிருந்து தவறிய பத்திரிகையாளர்களே மீண்டும் இப்படி சறுக்காதீர்!
அறிவுடையாரின் 'சாபத்திற்கும்' கண்டனத் துக்கும் ஆளாகாதீர்!
உண்மைகளைச் சொல்லித்தானே தீர வேண்டும்!
காசேதான் கடவுளடா, என்பதா கொள்கை?
யோசிக்க; யோசிக்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக