பக்கங்கள்

வியாழன், 22 டிசம்பர், 2016

இனிய வாழ்வுக்கு இதோ 26 எழுத்துகள்!


வலைப் பக்கங்களில்தான் எத்தனை எத்தனை அருமையான சிந்தனைப் பூக்கள் பூக்கின்றன! நண்பர் டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் அனுப்பிய ஒரு அருமையான கருத் துரைத்தொகுப்பை-அனைத்துவாச கர்களோடு பகிர்ந்து, யான் பெற்ற இன்பத்தைஅவர்களுக்கும் அளிப்பதில் தான் எத்துணை எத் துணை மகிழ்ச்சி!

ஆங்கில மொழி எழுத்துகள் 26 என்று நம் அனைவருக்கும் தெரியும். அதன் ஒவ்வொரு எழுத்தையும் முதன்மையாக்கிய சொற்கள் நமது இனிய வாழ்வின் ஒளிக் கீற்றுகளாக அமைதல் சிறந்தது என்பதை அனுப்பிப் பகிர்ந்துள்ளார் நண்பர்களுக்கு.

உறவுகள் மேம்பட A to Z என்ற தலைப்பில் வந்த செய்தி இதோ: (இதன் விளக்கம் என்னுடைய சில கருத்தும் இணைந்தது).

மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான்.

ஆனால், அதை மேலும் செம்மைப் படுத்தி இனிமையாக்கிக் கொள்ளத் தவறிவிட்டான்!

இனிய வாழ்க்கைக்கு சுமூகமான உறவும் அவசியம்; அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்.

1. A - Appreciation- பாராட்டுங்கள். மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்!

தந்தை பெரியார் அவர்கள் கூறு வார்கள், பாராட்ட நினைத்தால் உடனே பாராட்டவேண்டும்; தள்ளிப் போடக்கூடாது. தள்ளிப் போட்டால் மறதியோ, மாற்று எண்ணமோகூட நம்மைத் தடுத்துவிடும். ஒரு சிறிய பாராட்டு பல பெரிய மனிதர்களை உருவாக்கிட, செதுக்கப்பட்ட உயர் சிற்பமாக்கி உயர்த்திடும்.

குடும்பமாக, இயக்கமாக, நிர்வாக மாக, சக தோழர் - தோழியர்களாக, மாணவர்களாக, பணியாளர்களாக - எந்த நிலையிலிருந்தாலும் பாராட்டி மகிழக் கற்றுக் கொள்ளுங்கள் - பாராட்டைவிட அவர்களுக்கு நீங்கள் தரும் ஊட்டச் சத்து வேறு இருக்கவே முடியாது. (முகமன் ஒருபோதும் பாராட்டாகாது).

2. B - Behaviour  - நடத்தையின் தன்மை.

புன்முறுவல் காட்டுங்கள். சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும்கூட நேரம் இல்லாததுபோல் நடந்துகொள் ளாதீர்கள்.

புன்முறுவலோடு கூடிய உங்கள் முகங்களை கண்ணாடிமுன் பாருங்கள். ‘சீரியஸான’ முகங்களையும் பாருங்கள். உங்களின் உயர்வுக்கே இந்த புன்சிரிப்பு ஒரு நல்ல விளைச்சல் நிலம்போல் காட்சியளிக்க உதவும் - மறவாதீர்!

3. C - Compromise - தேவையான சமரசம் கற்க - நிற்க!

அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். அலட்சியப்படுத்திப் புறந்தள்ளப் பழகுங்கள்; மனந்திறந்து பேசி சுமுகமாகத் தீர்த்துக் கொள் ளுங்கள்.

இத்தகைய தீர்வு பற்பல நேரங்களில் இருசாராருக்குமே தோல்வியற்ற, இரு வருக்குமே வெற்றி என்ற Win - Win Situation அய் உருவாக்கி நம்மை உயர்த்திடும் என்பது உறுதி.

4.  D - Depression - - மனச்சோர்வு - மனக்கவலை


மற்றவர்கள் தங்களைப் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். மனச்சோர்வு பலரை பலவீனப்படுத்தி, விரக்தியின் விளிம்பிற்குள் தள்ளி வெளியே வர முடியாத வேலியைக் கட்டி விடுகிறது. எனவே, எவ்வளவு மனக்கவலை இருந்தாலும், மனச்சோர்வு  தவிர்த்து, எப்போதும் உற்சாகத்துடன் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

5. E - Ego -   தன்முனைப்பு;

வாழ் விணையர்களிடம் வம்பும், சண்டையும், வாழ்நாள் நண்பர்களிடமும் மனக்கசப்பும் வருவதற்குக் காரணமே இந்த ‘தான்’ என்ற தன் முனைப்பே முக்கியக் காரணமாகும்!

மற்றவர்களைவிட உங்களை உயர் வாக நினைத்துக்கொண்டு கர்வத்திடம் சிக்கிக்கொள்ளாதீர்கள்!

மற்றவர்கள் உங்களை உயர்வாக நினைத்தால்பெருமையே!தவிர, நீங்களே அப்படி எண்ணி அகந்தை, ஆணவம் கொள்ளுதல் நம்மை வீழ்த்தும், பள்ளத்தில் தள்ளிவிடும். நிலையில் உயர உயர, நாம் அடக் கத்தோடு எளிமையாக நடப்பதே நல்ல பாதுகாப்பினை நமக்கு எப் போதும் வழங்கும் -  உண்மையான உயர்வினைத் தரும்.

6. 6. F - Forgive -  மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

கண்டிக்கத்தக்க அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்றே எப்போதும் முயற்சி செய்யுங்கள்.

மன்னிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி (இருபுறத்திலும்) தண்டிப்பதில் ஒரு போதும் கிட்டாது - மறவாதீர்! மன்னிக்க முடியாதவர்களாகி அவ்வளவு பிடி வாதக்காரராக நீங்கள் இருந்தால், குறைந்த பட்சம் மறக்கவாவது (Forget) 
கற்றுக்கொள்ளுங்கள்! மறக்க வேண்டியது - பிறர்செய்த தீமையை; மறக்கக்கூடாதது - பிறர் செய்த உத வியை!

7. G - Genuineness - எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையா ளுங்கள்.

நேர்மைதான் நம் உள்ளத்தை - இதயத்தை மிகவும் கனத்ததாக ஆக்காமல், லேசானதாக, படுத்தவுடன் தூங்க உதவக் கூடியதாக இருக்கும். சிற்சில நேரங்களில் நேர்மை நமக்குத் துன்பத்தை, தொல்லையைத் தந்தாலும், அதிலிருந்து விலகாவிட்டால், நமது வெற்றியை எந்த எதிரியாலும் தட் டிப் பறிக்க முடியாது - நினைவில் நிறுத்துங்கள்!

8. H - Honesty - -  நாணயம்.

எதிலும் நாணயம் இருத்தல் வேண்டும். நாணயத்தைவிட நம்மு டைய பண்புகளில் தலைசிறந்தது வேறு எதுவும் இல்லை; நேர்மையும், நாணயமும் இரட்டைப் பிள்ளைகள். தவறு செய்தால் முந்திக்கொண்டு உடனே மன்னிப்புக் கேட்பதை ஒரு கவுரவமாகக் கருதுங்கள். போலி நாணயம் எப்படி செல்லாததோ, அப்படி கள்ள நாணயம் நம்மை என்றாவது ஒருநாள் காட்டிக் கொடுத்து, கேவலப்படுத்திவிடும்.

9. I - Inferiority complex - -  தாழ்வு மனப்பான்மை விடுக.

எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள்! தாழ்வு மனப்பான்மையை விட்டொ ழியுங்கள். நம்மால் முடியாதது யாரா லும் முடியாது - வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்று முயலுங்கள். முயன்றால் நமக்கு மாமலையும் ஒரு கடுகே!

- திங்கள் கிழமை வரும்

10.J - Jealousy - பொறாமை

பொறாமை வேண்டவே வேண்டாம் - அது கொண்டவனையே கொல்லும்! 'அழுக்காறு உடையார்க்கு அது சாலும்' என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறினார் வள்ளுவர். குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவுகளுக்குள்ளும் அல்லது பல காலம் பழகும் நட்புறவோ டும்கூட இது எப்படியோ ஊடுருவி நாசம் செய்து விடும்; எனவே இதற்கு ஆட்பட்டு விடாமல் தப்ப வேண்டும்.

11..K - Kindness - இதமான கனிவு

பேசும்போது இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள். மென்மையும், கனிவும் உள்ள நல்ல சொற்களைப் பயன்படுத்துதல் - கனியிருக்க காய்களைக் கடித்து பல்லை உடைத்துக் கொள்வது ஏன்?

12 .L - Loose talk -தேவையில்லாமல் பேசுவது

சிலர் சம்பந்தம் இல்லாமலும், அர்த்தமில்லாமலும், வள வளவென பேச வேண்டாதவைகளைப் பேசுவதையும், பின் விளைவு அறியாமல் பேசுவதையும் தவிர்த்தல் அவசியம்.

13.M -  Misunderstanding தவறாக - பிழைபட புரிந்து கொள்ளுதல்

மற்றவர்களை நாம் பல நேரங்களில், அவர்களது பேச்சு, நடத்தையைத் தவறாகப் புரிந்துகொண்டு, நல்ல நண்பர்களைக்கூட பகைவர்களாக்கிக் கொள்கிறோம். எனவே ஒருவரைப் பற்றி மதிப்பீடு அவசரப்பட்டுச் செய்யாமல், சரி வரப் புரிந்து கொண்டே பேச, பழக ஆயத்தமாகுதல் நல்லது!

14.N - Neutral    - நடுநிலை - பொது நிலை

எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்து விட்டுப் பேச வேண்டாம். பேசி விட்டு முடிவு எடுங்கள். எந்நிலையிலும் நடுநிலை பிறழாதீர்கள். சரியான பார்வையை   - எதைக் குறித்தும் -அப்போது தான் நாம் பெற முடியும்.

15.O - Over expectation    - அதிகம் எதிர்பாராதீர்

அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். எப்போது நமக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது தெரியுமா? அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கும் போதுதான்! எனவே தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்! தேவையை உள்ளடக்கி வாழும் முறை, மிகுந்த மன திருப்தியை, நிம்மதியைத் தரும்.

16.P - Patience - பொறுமை காத்தல்

சில சங்கடங்களை - நாம் விரும்பா விட்டாலும்கூட சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள். ஆத்திரம் அறிவுக்கு எதிரி, எதையும் பொறுமையுடன் அணுகுதல் நம்மை - பாதுகாப்பான முடிவுகள் எடுப்பதற்கு உதவிடக் கூடும்.

17.Q - Quietness - மவுனம் ஒரு சக்தி வாய்ந்த கருவி

தெரிந்ததை மாத்திரமே, தேவைப் படும் போது மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்சினைகளுக்குக் காரணமே தெரியாததைப் பேசுவதும், தேவையற்றவைகளை, நேரம் காலம் தெரியாமல் - பேசுதலேயாகும். கூடு மான வரை பேசாமலே இருந்து விடுங்கள்; மவுனமும், ஒரு லேசான புன்னகையும்கூட சக்தி வாய்ந்த மொழியாக மாறும் என்பதை மறவாதீர்!

(தொடரும்)

- கி.வீரமணி

-விடுதலை,5,7.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக