பக்கங்கள்

சனி, 3 டிசம்பர், 2016

அறிவியல் சிந்தனைகள் 12. எதையும் எப்போதும் வெல்லலாம்!

 

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 50 ஆயிரம் எண்ணங்களை எண்ணுகிறார்கள் என்கிறது அறிவியல்! வியப்பாக இருக்கிறதா?

மனித மூளை மிகவும் சிறியதே. ஒன்று அல்லது இரண்டு கிலோ கிராம் எடையுள்ள இந்த மனித மூளை எவ்வளவு அதியற்புதமான அமைப்பைப் பெற்றது தெரியுமா? ஆயிரம் பில்லியன் (1000 billions)  உயிர் அணுக்களைக் (Cells) 
கொண்டு உருவாகியுள்ளது. ஒரு பில்லியன் என்பது 1000 மில்லியன்களைக் கொண்டது. ஒரு மில்லியன் நமது கணக்குப்படி 10 லட்சம், 10 பில்லியன் ஒரு கோடி. கணக்கிட்டுப் பாருங்கள். எத்தனைக் கோடி ‘செல்’ - அணுக்கள் அந்த சிறிய மூளைக்குள்ளே! 100 கோடி உயிர் அணுக்களா? அதுவும் 1 கிலோ கிராம் அல்லது 2 கிலோ கிராம் எடைக்குள்ளே என்று எண்ணி எண்ணி நாம் வியப்பின் விளிம்பிற்கே சென்று விடுகிறோம்! இந்த அணுக்கள் 10 ஆயிரம் மற்றவைகளுடன் சந்திப் புகளாக இணைந்துள்ளன!

‘சினாப்செஸ்’ (Synapses) என்று அவைகளுக்குப் பெயர். ஒவ்வொரு சினாப் செஸ்சும் 1 டஜன் (12) ரசாயனத் தூதுவர்களை (Chemical Messengers) அழைத்து ஆணையிடும் ஆற்றல் உள்ளவைகளாக உள்ளன.  இந்த ரசாயனத் தூதுவருக்கு ‘நியுரோ டிரான்ஸ்மிட்டர்’ (Neuro Transmitters) என்று பெயர். நரம்பியல் பணியினை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத் திற்கு - மூளை அணுக்களிடையே கொண்டு செல்லும் வேலையே இவைகளுடைய பணியாகும்.

இந்த இணைப்புகளை ஒரு வினாடிக்கு ஒரு ‘சினாப் செஸ்’ வீதம் எண்ணத் துவங்கினோமேயானால் இதற்கே நமக்கு 32 ஆண்டுகள் ஆகலாம் என்று அறிவியலார் கணக் கிட்டுள்ளனர்! 1999 ஆம் ஆண்டில் இதற்குமுன் அதிகம் நுழையாத, நினைவு ஆற்றலைப்பற்றிய ஆய்வை,  மூளை சம்பந்தப்பட்டு மிகுதியாகச் செய்ய உள்ளனர்!

இப்போது நாம் ஒவ்வொருவரும் ஒரு நாளில் 50 ஆயிரம் எண்ணங்களை எண்ணுகிறோம் என்ற உண்மை ஏற்கத் தகுந்ததுதான் என்று புரிகிறதா?

இப்படி எண்ணுகையில், வாழ் வியலை எதிர்மறையான (Negative Thoughts) சிந்தனைகளுக்கே அடி மைப்படுத்தி,ஆக்கரீதியானசிந்த னைகளுக்கு இடம்தராமல் இருப்போ மேயானால், அந்த வாழ்வு பயனுள்ள வாழ்வாக அமைய இயலாது.

எத்தனையோஇழப்புகள்- இளமைக் காலத்திலோ அல்லது கூட்டுக் குடும்பத்தினாலோ அல் லது பணியாற்றும் இடத்திலோ ஒருவருக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அதையே மனதில் வைத்துக்கொண்டு, எல்லோரிடத்திலும் மிகவும் எரிந்துவிழுவது அல்லது ஆத்திரத்தைக் கொட்டுவது, சலிப்பும், விரக்தியும் அடைந்து வாழ்க்கையைப் படிப்படியாக வெறுப்பது, தோல்வி மனப்பான்மையையே சதாசர்வ காலமும் வளர்த்துக்கொண்டே வாழ் வது போன்றவைகளால் மனிதன் வளர்ச்சியோ, முன்னேற்றமோ அடைந்துவிடவே முடியாது.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் எல்லாமே எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா நாள் களிலுமே நல்லவைகளாகவோ அல்லது நம்மால் விரும்பிச் சுவைக் கக் கூடியவைகளாகவோ மட்டும் அமைந்திடாது. தோல்விகள், எதிர் பாராதவைகள், ஏமாற்றங்கள் ஏற்படுவது சகஜம். அதை வெகு சாதாரணமாக எடுத்துக்கொண்டு, அதிலிருந்து பாடம் பெறுவது பயன் தரும்; அல்லது அதனால் ஏற்படும் விளைவுகளின் மறுபக்கம் என்னவென்பதை எண் ணுதல் போன்றவைகளையே யோசித் தால்-அடுத்து என்ன செய்தால் வெற் றியை எளிதாகவே எட்டிப் பிடிக்க முடியும் என்று சிந்திக்கவேண்டும்!

இதற்கு ஒருவகையான ஆக்க ரீதியான பயிற்சி தேவை என்பதால், தேவையற்றுப் பலர் இதில் பல வீனத்தைப் பயன்படுத்தி பக்தி போதை மருந்தைத் தந்துவிடுகின்றனர்!

எதையும் ஏற்பதற்கோ, இகழு வதற்கோ நமது அணுகுமுறைதான் முக்கியமானதாகும். ஒருமுறை நேரு சொன்னார்நாடாளுமன்றத்தில்.அது மற்றொரு தத்துவஞானியின் கருத்துதான். அதை அவர் கையாண் டார்!

“ஒரு குவளையில் அரை அளவுக்குத் தண்ணீர் உள்ளது. அதை நாம் பெறுகிறோம். தாகம் எடுத்துள்ள நிலையில் அதைப் பார்த்து ஒருவன், அய்யோ அரைக் குவளைத் தண்ணீர்தானே கிடைத்தது குடிக்காமலோ அல்லது குடித்துவிட்டோ புலம்புகிறான். மகிழ்ச்சியற்றவனாக வாழுகிறான். மற்றொருவன் அந்த அரைக் குவளை தண்ணீர் கண்டு மகிழ்ந்து, இந்த தாகத்தைத் தீர்க்க அந்த அரைக்குவளை கிடைத்ததை எண்ணி எண்ணி மகிழ்கிறான்; குடிக்கிறான். அடுத்த பணிக்கு  ஆயத்தமாகிறான் - யார் சிறந்தவர் -இந்த இரண்டு பேர்களில்?பின்னவரைப்போல, வாழ எண்ணி, மேலும் அரைக் குவ ளையோ, ஒரு குவளையையோ மறுபடிபெறுவேன்,அல்லது வெற்று தாகத்தைத் தீர்த்துக்கொள்ள நம்பிக்கையுடன் செயல்படுவேன் என்பவனே சிறப்பானவன். எதையும் பார்க்கும் விதம்தான் முக்கியம்.

தம்மிடமிருந்த பணத்தையெல்லாம் பலவிதமான வகையில் பெருக்கி, இயக்கத்தின் சொத்துக்களைப் பெருக் கினார் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள்!

ஒரு வேடிக்கையான - வேதனை யான எதிர்பாராத நிகழ்ச்சி. கோவையில் உள்ள திரு.ரத்தினசபாபதி முதலியாரின் ஆதிக்கத்தின்கீழ் சிறப்பாகச் செயல் பட்ட பருத்தி மில்களில் ஒன்று ‘பங்கஜா மில்ஸ்’ ஆகும். அவருடைய வேண்டுகோளை ஏற்று, தந்தை பெரியார் பல லட்ச ரூபாய்களை பங்காக - வட்டிக்காக - போட்டு வட்டியை வாங்கி, இயக்க நிதிகளைப் பெருக்கி, சொத்துக்களையும் பெருக்கினார்!

திடீரென்று அந்த ஒரு மில் ‘திவாலாகி’ விட்டது. மூடப்பட்டது. பணம் கட்டியவர்களுக்கு அத்தொகை திரும்பி வர இயலாத நிலை. அய்யா அவர்களுக்கு - ‘அந்த காலத்து ஒரு லட்சம்‘ இழப்பு என்றால் அதைத் தாங்கிக்கொள்ள முடியுமா? இப்படித்தான் உடனிருந்த பலரும், அம்மா உட்பட எண்ணினார்கள்!

எதற்கும் அஞ்சாத அஞ்சாநெஞ்சரான தந்தை பெரியாருக்கு இந்தச் செய்தி துவக்கத்தில் அதிர்ச்சியையும், வருத்தத்தையும், துன்பத்தையும் தந்தது என்றாலும், (அப்போது உடனிருந்தேன் நான்!) ஒரு அய்ந்து மணித்துளிகள் தனிமையில் அமைதியாக இருந்தார். அதுபற்றியே யோசித்தாரோ என் னவோ நமக்குத் தெரியாது. பிறகு எங்களைப் போன்றவர்களை அருகில் அழைத்து ‘தெரியுமா சேதி’ என்று கூறிச் சொன்னார்கள். எங்களுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் மவுனமாக நின்றோம். உடனே சிறிது நேரத்தில் அய்யா அவர்கள், ‘‘உம்... பலமுறை நாம் அந்த மில்காரர்களிடமிருந்து வட்டித் தொகையாகவே பல லட்சம் முன்பு வாங்கினோமே அதை நினைத்துக்கொண்டால், போன ஒரு லட்சம் ஒன்றும் பெரிதல்ல. அடுத்த வேலையைப் பார்ப்போம்‘’ என்று அப்பிரச்சினையால் ஏற்பட்ட துன்பம், துயரம், வேதனை எல்லாவற்றையும் உடனே ஒரு முற்றுப்புள்ளி மூலம் முடித்துவிட்டார்.

எதையும் எப்படிப் பார்க்கிறோம் எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது நமது துன்பமும், இன்பமும்.

இதை மறவாமல், வாழ்வில் கடைப்பிடித்தால், எதையும் எப்போதும் வெல்லலாம்! வெற்றியை அள்ளலாம்!

- கி.வீரமணி
-விடுதலை,3.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக