பக்கங்கள்

புதன், 21 டிசம்பர், 2016

இளைஞர்களே, முதுமையாளரிடம் பரிவு காட்டுங்கள்!


நம் வீட்டிலும் மற்றும் உறவு, நட்பு வட்டத்திலும் உள்ள முதியவர்கள் - பாட்டி, தாத்தா - ஏன் முதுமை அடைந்து, ‘பழுத்துள்ள' அம்மா, அப்பா, அக்கா, அண்ணன் மற்றும் பழகிய நண்பர்கள் - இவர்களில் சிலர் அல்லது பலர், அம் முதுமை அடைந்து, மூப்பின் நிலையாலோ அல்லது அன்பின், கவலையின் உச்சத் தாலோ, நம்மீது கொண்டுள்ள வற்றாத வாஞ்சையின் காரணத்தாலோ, அவர்களின் சில பல செயல்கள் இளைஞர்கள் விரும்புவது போல, ‘கட் அன் ரைட்டாக' இருக்காது!

அப்போது இளையர்களின் இனிய, மனிதநேயம் பொங்கும் கடமையும், பொறுப் புணர்வும் எப்படி வெளிக் காட்டப்பட வேண்டும் என்பதை, முதுமை அடைந்த தாய் ஒருவர், சலித்துக்கொள்ளும் அல்லது சங்கடப்படும் மகளுக்கு எழுதுவதான ஒரு கற்பனைக் கடிதம் ஒன்றை இணையத்தில் படித்தேன்.

அக்கடிதத்தினை அப்படியே தமி ழாக்கி, நம் குடும்ப இளைஞர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கில் தருகிறேன்.
படியுங்கள், சிந்தியுங்கள்!

“என் அன்பார்ந்த மகளான பெண்ணே,

இப்போதெல்லாம் பார்க்கிறாய் எனது முதுமை அடைந்த நிலையை; அதன் காரணமாக எத்தகைய சங்கடங்களை நான் அனுபவித்து வருகிறேன் என்பதும் உனக்குத் தெரியும்.
கொஞ்சம் பொறுமையாக நான் கூறுவதை சற்று காது கொடுத்துக் கேள் - புரிந்துகொள்!

நாம் இருவரும் உரையாடும்போது, ஒரே செய்தியை நான் ஆயிரம் தடவை திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன்; அப்பொழுது உடனே குறுக்கிட்டு, “இதே செய்தி, ஒரு நிமிடத்திற்கு முன்தானே சொன்னீர்கள்'' என்று கூறாதே, தயவு செய்து நான் சொல்வதைச் சற்று பொறுமை யாகக் கேள்:

“நீ குழந்தையாக இருந்தபோது, அதே கதையை நான், நீ தூங்கப் போகும்வரை எத்தனை முறை திரும்பத் திரும்ப ஒவ்வொரு இரவும் - பகலும் படித்துப் படித்துக் காட்டியிருப்பேன் - உனக்கு நினைவிருக்கிறதா?''

இப்போதெல்லாம் சில நாள்களில் நான் குளிக்க விரும்பாமல் இருக்கும்போது, உடனே கோபப்பட்டு குதிக்காதே, ஓங்கிச் சத்தமிடாதே,   நினைவிருக்கிறதா? நீ சிறு பெண்ணாக இருக்கும்போது எத்தனையோ முறை உன்னை நான் குளிக்கச் சொல்லும் போதெல்லாம் நீ எத்தனை சமாதானம் - குளிக்காமலிருப்பதற்குக் கூறி, என்னிடம்  ஆட்டம் காட்டியிருக்கிறாய் - அதை சற்று நினைவு கொள்.

நீ கூறும் இக்கால, புதுப்புது தொழில் நுட்பங்களை என்னால் புரிந்துகொண்டு உனக்கு இணையாகச் செயல்பட முடிய வில்லை என்பது உண்மைதான்!

மகளே, அதற்காக எனக்கு - அதனை பழகிக் கற்றுக்கொள்ள சிறிது அவகாசம் கொடு; அதற்காக என்னைக் கோபமாகவோ, ஏளனமாகவோ பார்க் காதே மகளே!
சற்று மீண்டும் உன் இளமைக் காலத்தை நினைவுபடுத்திக் கொள் மகளே! 

நீ சரியாக உண்ணும் பழக்கத்தை, சாப்பாட்டு மேஜை பழக்கம் கற்றுக் கொள்ள, சரியாக உடை உடுத்த, தலையை ஒழுங்காக வாரிச் சீவி முடிக்க - இப்படி ஒவ்வொரு நாளும் நீ பள்ளிக்கூடத்திற்கு ஆயத்தமாகிச் செல்லும் முன்பும், பின்பும் பல்வேறு தடவைகள்  நான், உனக்கு எவ்வளவு பொறுமையுடன் அவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறேன் - நினைவில் இல்லையா, கண்ணே!

எனவே, இப்போதெல்லாம் எனக்கு ஏற்பட்டுள்ள வயது தடுமாற்றம், முதுமை யின் தவிர்க்க இயலாத நிலையால்தான் இந்நிலைகள் என்பதை சற்றே புரிந்து கொள்ள முயற்சி செய்!

எப்போதாவது நான் பேசும்போதோ, செயல்படும்போதோ, சற்று நிதானம் இழந்து, பாதை விலகிச் சென்றுவிட்டால் (எனது செயல்களில்) அப்போதெல்லாம் - நான் உன்னை வேண்டுவது தயவு செய்து சற்றே எனக்கு அவகாசம் கொடு; நிதானமிழக்காமல் நினைவூட்டு - அதற்காக நீ பொறுமை இழந்து கூச்சல் போடாதே! ஆணவத்துடன் பேசி என் மனதை நோகடிக்காதே!

உனது இதயத்தில் நான் என்றும் உன்னுள் இருக்கவே விரும்பும் ஒரு தாய் என்பதை மறவாதே கண்ணே!

எனது முதுமை அடைந்த கால்கள், வேகமாக நடக்க முடியாது முன்பு போல் என்றால்,

உடனே எனக்குக் கைகொடு - மகளே!

நீ சிறு குழந்தையாக இருந்தபோது, முதல் முறையாக தத்தித் தத்தி நீ நடந்தபோது, ‘எங்கே விழுந்து விடுவாயோ?’ என்ற கவலையால், எத்தனை முறை உனக்குக் கை கொடுத்திருக்கிறேன். அதனை சற்று நினைவுபடுத்திக் கொள் அன்பே!

எனக்கு அப்படிப்பட்ட நாள் வரும் போது, நீ வருத்தப்படாதே, நீ என்னுடன் இருந்தாலே போதும். எனது வாழ்வு முடியும்வரை உனது அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் ஒரு தாய் நான் என்பதை மறவாதே, கண்ணே!

காலம் உன்னை எனக்குத் தந்த அருமையான பரிசாக எண்ணி எண்ணி மகிழ்கிறேன் நான்! நாம் எப்படியெல் லாமோ இதற்குமுன் பல தடவைகளில் நம் அன்பை - பாசத்தைப் பரிமாறிக் கொண்டி ருக்கிறோம் என்பதை எண்ணி மிகவும் மகிழ்கிறேன்.

மிகப்பெரிய புன்னகையும், வற்றாத பேரன்பும், உனக்கு நான் என்றும் கொண்டி ருக்கும் ஒரு தாய் என்பதை மறவாதே மகளே, என் உயிரே!
உன்னை நான் பாசத்தால் என்றும் அரவணைக்கத் தவறாத ஒரு தாய்!''

இப்படி - முகவரி இல்லாத முதுமைத் தாயின் உணர்வுகளின் குவியலுடன் அக் கடிதம் முடிகிறது!

இளைய நண்பர்களே, நினைவில் நிறுத்துங்கள் முதுமை நமக்கும் வரும்; நோய்கள் யாருக்கும் தனி உடைமையல்ல; எனவே, ஏளனப் பார்வையோடு சலிப்போ, சலசலப்போ கொள்ளாமல், ஒத்தறிவுடன் (Empathy)  அவர்களிடமும் பரிவு காட்டி உங்களை “மனிதத்தால்” அளக்கும்போது, அதில் கூடுதல் மதிப்பெண்களைப் பெறுங் கள் தோழர்களே, நம் கண்மணிகளே!

- கி.வீரமணி, வாழ்வியல் சிந்தனைகள்
-விடுதலை,23.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக