மனிதர்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் துணிந்து முடிவு எடுக்கத் தயங்கக் கூடாது. 'அய்யோ, இப்படிப் போனால் என்னவாகும்? அப்படி நடந்தால் சரியாய் வருமா?' என்று எந்த ஒரு முடிவுக்குமே வர இயலாத நிலையில், காலங் காலமாய் ஓர் உருப்படியான செயலையும் செய்து முடிக்க முடியாதவர்களாகவே ஆகி விடுபவர்கள் பலர்! காரணம் தயக்கம்! தயக்கம்!! தயக்கம்!!!
அதுபோலவே அச்சம், அச்சம், அச்சம்! இனந் தெரியாத பயம் இவர்களை வாழ்நாள் கோழைகளாக்கி மூலையில் முடக்கி உட்கார வைத்து விடுகிறது!
சாதிக்க நினைப்போர் அனைவருமே சாதிக்க முடியுமா? என்பது நம்மைப் பொறுத்தவரை ஒரு அர்த்தமில்லாத கேள்வியேயாகும்!
திட சித்தத்துடன் உறுதியாக - விளைவு வெற்றி, தோல்வியானாலும் அதைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் - நாம் 'துணிந்தவனுக்குத் துக்கமில்லை' என்பதுபோன்று துணிந்து குதிக்க வேண்டும். பலர் முடிவுகளைச் செயல்படுத்துவதில் கால நேரம் - மூடத்தன பஞ்சாங்க நேரங்களைப் பார்க்கும் பழைய பஞ்சாங்கங்களாகவே இருப்பதால், நடுங்கும் கால்கள் ஓட்டப் பந்தயத்தில் தானே தடுக்கி விழுந்து, வெற்றிக்குப் பதில் தோல்வியை அணைக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள்.
தோல்வி ஏற்பட்டால் என்ன குடியா மூழ்கிப் போகும்? நம் வாழ்க்கை என்பது என்ன ஒரு சில தோல்விகளால் அழியக் கூடியதா?
கடும் உழைப்பும், இடையறாத விடா முயற்சியும் உடைய எவருக்கும் அது ஒரு விவேக விளையாட்டுப் போல!
தாமஸ் ஆல்வா எடிசன் என்ற அறிவியல் கண்டுபிடிப்புகளின் மேதை ஒருமுறை மற்றவர்களின் கேள்விக்கு அமைதியாக, பதில் கூறினார்?
"நீங்கள் இதுவரை சுமார் 20,000 தடவை உங்கள் முயற்சிகளிலே தோற்றுப் போய் இருக்கிறீர்களே, உங்களுக்கு சலிப்போ, விரக்தியோ, நம்பிக்கையின்மையோ தோன்றவில்லையா?" அதற்கு அவரது கனிந்த முதிர்ந்த பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!
"ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவம் பெற்றேனே தவிர, நான் தோல்வியைத் தழுவியதே இல்லை; தோல்வியே எனக்குத் தெரியாது"
எவ்வளவு அருமையான, ஆழ்ந்த பொருள் பொதிந்த முதிர்ச்சி நிறைந்த வாழ்வியல் வளர்ச்சிக்கான பதில் பார்த்தீர்களா?
இங்கிலாந்தில் சில ஆண்டுகளுக்குமுன், இசைக் கருவிகளுக்கான கடை (Music Stores) ஒன்று வைத்து சிறிய அளவில் தொழில் நடத்தி லாபம் சம்பாதித்து வந்தவர் சர் ரிச்சர்டு பிரான்சன் (Sir Richard Branson)
என்பவர்.
அவருக்கு வெகு நாளையக் கனவு ஒன்று உண்டு; தான் ஒரு விமானக் கம்பெனி ஆரம்பித்து நடத்திட வேண்டும் என்பதே அது!
யோசித்து முடிவு எடுத்த அவர் தன் கையில் உள்ள மூலதனத்தையும் போட்டு துணிந்த முடிவு எடுத்தவுடன் அவரது வெற்றிக்குப் பின், அவரைப் பேட்டி கண்டவர்களிடம் கூறினார்; "சரியானதோ, தவறானதோ ஒரு முடிவை எடுத்து உடனே செயல்படத் துவங்க வேண்டும். (Good or Bad - you must decide it is better to take a bad decision than not taking a decision at all)"
ஒரு முடிவும் எடுக்காமல், தயங்கித் தயங்கி காலந் தள்ளுவதைவிட, தவறான முடிவை எடுத்து, அனுபவப்பட்டு அதிலிருந்து பாடம் கற்பது நம் வளர்ச்சிக்கு மேலும் வழி வகுக்கும் என்றாலும்...
விரைந்த முடிவு Quick decision) வேறு; அவசரப் பட்ட முடிவு (Hasty decision) வேறு; நியாயந்தானே! இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்!
எண்ணித் துணிக கருமம்! தேவையே!
விளைவு: அவர் முதலில் துவக்கியது மூன்று விமானங்களைக் கொண்ட Virgin Atlanta, பிறகு அது வளர்ந்து, அடுத்து கூடுதலாக Virgin Australia விமானக் கம்பெனி, மூன்றாவது Virgin U.S. என்ற விமானக் கம்பெனி.
துணிச்சலின் அறுவடை அல்லவா இது!
எனவே திட்டமிடுதல், காலம், இடனறிதல் எல்லாம் சரிதான். தயக்கமோ, மயக்கமோ இன்றி துணிந்து செயல்படுவதுதான் மனித வாழ்வில் வெற்றியின் விளைச்சலைக் காண வைக்கும்.
எனவே தயங்காதீர்கள்! தள்ளாடாதீர்கள்!!
-30.12.16,விடுதலை நாளேடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக