‘மனித நேயம்‘ என்ற தலைப்பில் திண்டுக்கல் மாவட்ட சர்வதேச ரோட்டரி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி
பெரியார் அறக்கட்டளை நிறுவனங்கள்
தந்தை பெரியார் அவர்கள் மக் களுக்குப் பயன்படும்படியாக ஓர் அறக்கட்டளையை உருவாக்கினார்கள். அந்த அறக்கட்டளைகளின் சார்பில் இப்பொழுது கல்வி, மருத்துவம் தொடர் பான 43 நிறுவனங்களை நடத்துகிறோம்.
அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் மனிதநேயத்தின் அடிப் படையில் ஒரு தெளிவான அணுகு முறையைச் சொன்னார். எது பிறர் நலம், பொது நலம் என்று கருதுகிறோமோ அதுவே ஒரு வகையில் சுயநலம்தான் என்பதை மிக அழுத்தமாகத் தெரிவித்தார் அய்யா,
எப்படி அது சுயநலமாகும் என்பதை அவரே சொல்கிறார். “ நான் பொது நலனுக்காகப் பாடுபடும்பொழுது ஒரு மகிழ்ச்சியை அடைகிறேன் அல்லவா? அது என்னுடைய சுயநலத்தின் முடிவு தானே’’ என்று மிகத் தெளிவாகக் கேட்டார்!
எனது பொதுநலப் பணியினாலே பல பேர் பயன்பெறுகிறார்கள். அதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்; நான் மனத்திருப்தி அடைகிறேன். அந்த மகிழ்ச்சி, திருப்தி என்னுடைய சுயநலத்தில் தானே முடிவடைகிறது என்று மிகத்தெளிவாகச் சொன்னார்.
இப்படிப்பட்ட ‘‘சுயநலத்தோடு’’ பல காரியங்கள் செய்தால்கூட மனித நேயத்தோடு பார்க்கும்பொழுது பிற ருக்கு உதவி செய்வது மிக முக்கியச் செயலாகக் கருதப்படுகிறது; இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
வள்ளலார் வாடினார்
வடலூர்வள்ளலாரைப்பற்றிஉங் களுக்குத் தெரியும். ‘‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’’ என்று பாடினார். வான் பொய்த்தது. மழை இல்லை, வறட்சி - அதன் காரணமாக அந்தப் பயிர்கள் செழு மையாக வளரவில்லை. இதைப் பார்க்கும்பொழுது வள்ளலாரின் மனித உள்ளம் வாடியது! வதங்கியது!!
ஒரு மனிதனுக்குத் துன்பம் வரும்பொழுது மட்டும் வாடுவது முக்கியமல்ல. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவருக்கு அவ்வளவு தூய்மையான மனிதநேய உள்ளம்! அவ்வளவு சீரிய உள்ளம் உள்ளவர்களை எல்லாம் கொண்டது நம்முடைய நாடு.
கடுகு உள்ளம் கூடாது
இதுபோன்றபொதுஅமைப்பு களின் மூலமாக ஒன்று சேர்ந்திருக் கிறோம் நாம். உங்களைப் பார்த்து நான் வேண்டிக் கொள்வதெல்லாம் மனித நேயத்தை நிலை நாட்ட ஒவ்வொருவரும் முயற்சி மேற் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய அன்றாட வாழ்க்கையிலே உறங்கப் போகுமுன் ‘இன் றைக்கு நாம் ஏதாவது உதவி யாருக் காவது செய்தோமா, எந்த வகையில் உதவி செய்தோம்?’ என்று அருள் கூர்ந்து நினைத்துப் பாருங்கள். உதவியதற்காக மகிழ்ச்சி கொண்டு உறங்குங்கள்!
ஏதோ நாம் உழைக்கிறோம். நம் முடைய குடும்பத்தைப் பாதுகாக் கிறோம். ‘தன்பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு’ என்பது, சின்னதோர் கடுகு உள்ளம். அதனைக் கொள்ளாமல் மனிதனாகப் பிறந்த நாம் பிறருக்குத் தொண்டாற்றவேண்டும் என்பதே பெரியஉள்ளம்.இதுதான்மனித நேயத்தின் அடிப்படைத் தத்துவ மாகும்.
மனித நேயமென்றால் என்ன?
ஒரு மனிதனுக்குப் பொருளை வழங்கலாம். மற்றொரு மனிதனுக்குப் பட்டங்களை வழங்கலாம். வேறு ஒரு மனிதனுக்குப் பதவிகளை வழங்கலாம். ஆனால் ஒரு மனித னுக்குள் மனிதத்தன்மையை ஏற் படுத்துவதுதான் எல்லாவற்றையும் விடப்பெரிது! ஒரு மனிதன் நேர்மை யாக மனிதத் தன்மையோடு உண் மையானவனாக இருக்கவேண்டும்.
ஒரு மிருகத்திற்குத் துன்பம் ஏற்படுகின்றபொழுது அது ‘‘வாயில்லாப் பிராணி அல்லவா?’’ என்று பரிதாபப்பட்டுக் கேட்கிறான் மனிதன். அதே நேரத்திலே இன்னொரு மனிதன் - சக மனிதன் - தன்னுடைய சகோதரனிடம், தன்னுடைய சகோதரியிடம் எப்படி நடந்துகொள்கிறான் என்பதைப் பார்க்கும்பொழுது - வாயில்லாப் பிராணிகளுக்காக ‘‘பரந்த மனப்பான்மை’’யோடு வக்காலத்து வாங்குகிற மனிதன், வாயிருந்தும் ஒரு மனிதன் தன்னுடைய துன்பத்தை வெளிப்படுத்தும் பொழுதும் கூட அந்தத் துன்பத்தைத் துயரத்தைத் துடைக்க இன்னொரு மனிதன் தயாராகஇருப்பதில்லையே, அந்த இடம் மனிதநேயம் மறைந்த சூன் யப்பிரதேசமாக இருப்பது நியாயமா? இன்னொரு மனிதனுடைய துன் பத்தைப்போக்குவதற்குப் பெயர்தான் ‘‘மனிதநேயம்‘’ என்பது.
மரம் போன்றவரே
நாம் எதை எதிர்ப்பார்க்கிறோமோ அதை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். தந்தைபெரியார் அவர்கள் ‘ஒழுக்கம்‘ என்பதற்கு விளக்கம் சொன்னார்கள் - மற்றவர்களிடமிருந்து எதை நான் எதிர்பார்க்கிறேனோ அப்படியே நானும் மற்றவர்களிடம் நடந்து கொள்வதற்குப் பெயர் தான் ஒழுக்கம் என்பது.
மனித நேயத்தை நாம் முன் னிலைப்படுத்தும்பொழுது அதில் ஜாதி, மதம், கட்சி, நாடு என்று பார்க்கத் தேவையில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே பண்புடைமை என்ற தலைப்பிலான அதிகாரத்தில் - வள் ளுவர் சொல்லியிருக்கிறார். ‘‘அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கட் பண்பு இல்லாதவர்’’ என்று கூறியிருக்கிறார். ஒருவர் மிகப் பெரிய அறிவாளி; மிகப் பெரிய கெட்டிக்காரர். ‘நோபல்’ பரிசினை வாங்கக் கூடிய தகுதி உள்ளவர். அவருடைய அறிவு மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும்.
(தொடரும்)
-விடுதலை,10.12.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக