பக்கங்கள்

புதன், 21 டிசம்பர், 2016

மரணத்தை மகத்தான உறுதியுடன் எதிர்கொண்ட மாமருத்துவரின் கதை இதோ!


மரணம் என்பது இயற்கையின் தத்துவம்.

வாழ்க்கையின் முடிவு மரணம் - இன்றுவரை அது சிலருக்குத் தள்ளிப் போகலாம். எதிர்பாராத வகையில் சிலருக்கு விபத்துகளால் ஏற்படலாம்!

மனிதர்களுக்கு நோய்கள் என்பவை மரணத்தின் ஒத்திகை! மருத்துவர்களும், மருந்துகளும் நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலும் போராட்டக் களத்தில் நின்று நோயை விரட்டி நம் வாழ்க்கைக்கு ஆயுள் காப்பீடு தருகிறார்கள்!

பிறக்கும்போது மனிதர்கள் சிரித்துக் கொண்டே பிறப்பதில்லை; அழுதுகொண்டுதான் பிறக்கிறார்கள் - குழந்தைகளாக வெளி உலகத்தை, வெளிச்சத்தைக் காணும்போது!

அத்தகைய மனிதன், இறக்கும்போது - மரணம் அவனைத் தழுவும்போது - (விபத்துகளும், திடீர் மாரடைப்பும் தவிர) எங்காவது சிரித்துக்கொண்டே இறக்கிறானா?

வாழ்க்கையில் தவறுக்குமேல் தவறு செய்து குறுக்கு வழிகளில் சென்று - நேர் வழியிலிருந்து விலகி, பொன்னும், பொருளும், பதவியும், போலிப் புகழும் சேர்த்துக்கொண்டே இருந்த மனிதர்கள் எவராவது, இறுதிப் பயணத்தில் அவைகளை எடுத்துக்கொண்டா செல்கிறார்கள்? இல்லையே!

எப்பேர்ப்பட்ட மாமனிதனைக்கூட, சாவு தன் மார்பில் அணைத்துக் கொண்டு, வெற்றிப் புன்னகையோடு நோக்கும் நிலை ஏற்பட்டுவிட்டால், அவனது பண மலை, பதவி உச்சி, புகழ்ச் செருக்கு - இவைகளில் அவன் புரண்டவனாக இறுதி மூச்சடங்கும்வரை வாழ்ந்தாலும்கூட, இறந்த பின் ‘மனிதம்‘ பறிக்கப்பட்டு, பிணம், சவம், சடலம் என்ற பெயர்களில் உயர்திணை நிலை மாறி, அஃறிணையால்தானே அழைக்கப்படுகிறார்கள்?

“எப்போது சவ ஊர்வலம்?’’
“அங்கே ஒரு பிணம் போகிறது’’
- இவைதானே உரையாடலின் மின்னல்கள்?

மரணத்தைக் கண்டு அளவுக்கு அதிகமாக மனிதர் களில் பலரும் பயப்படுகிறார்கள்;  மரணத்தைவிட மகாக் கொடியது மரண பயம்!

மனிதர்கள் மரணம் அடைந்துவிட்டால், அவர் களுக்குத் தொல்லையிலிருந்து விடுதலை!

அருகில் இருந்து அவர்தம் இழப்பினால் பாதிக்கப்படுவோருக்கு அல்லவா உண்மையான கொடுந்துன்பம் - நீடு துயரம் - நீங்காக் கவலை?

உலகின் மிகப்பெரிய நரம்பியல் அறுவை சிகிச்சையாளராகவும், ஆங்கிலத்தில் இலக்கியச் செறிவோடு மிளிரும் எழுத்தாற்றல் உள்ளவர், இவை எல்லாவற்றையும் தாண்டி, மனிதநேயத்தின் வற்றாத ஊற்றாகவும், மருத்துவம் என்பது தொண்டு அது வெறும் தொழில் அல்ல என்றவர்.

நோயாளிகளின் மனநிலைக்கு ஆறுதல் கூறி, உடல்நிலையைச் சீர்படுத்துவதுதான் என்று மட்டும் பல சராசரி மருத்துவர்கள் செயல்படுவதுபோல் இல்லாமல், அந்த நோயாளியின் குடும்பத்தவரின் வலியைப் போக்கிடும் வகையில் அவர்கள் மனநிலைக்கும், மருந்திடும் மனிதத்தின் மலர்ச்சி யாகவே காட்சியளித்த டாக்டர் பால் கலாநிதி - இவர் தமிழ்நாட்டின் தென் மாவட்டம் ஒன்றிலிருந்து அமெரிக்க நாட்டின் அரிசோனா மாநிலத்திலிருந்து பெற்றோரின் அரவணைப்போடு, சகோதரர்களின் வாஞ்சையோடு, தனது ஆரூயிர்க் ‘காதலி’ வாழ் விணையர் டாக்டர் லூசியோடு மிகப்பெரும் கனவு களோடு, தொண்டு செய்து, நரம்பியல் நிபுணராக மருத்துவ உலகின் ஒப்பற்ற தொண்டறச் செம்மலாக உச்சத்தை அடையவேண்டிய ஒரு 36 வயது நிறைந்த மாமனிதரை, பாழும் நுரையீரல் புற்றுநோய் பறித்துவிட்ட கொடுமை!

ஒரு புறத்தில், அறுவை சிகிச்சை செய்த நரம்பியல் நிபுணர், ‘மூளைக்கட்டிகளை’ லாவகமாக அறுவை சிகிச்சைமூலம், தனது அரிய திறமையால் குணப்படுத்தியவர் அவர்!

அவருக்கே நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் அதிகமான அளவுக்குப் பிறகுதான், அதிர்ச்சி தந்த ஆழிப்பேரலையின் கொடுமை!

நோய்வாய்பட்ட பின்பு, தமது மருத்துவப் பணி - ஒரு தொண்டு ஆனபடியால், நிறுத்தக்கூடாது என்ற தளராத மன உறுதியுடன், அறுவை சிகிச்சைகளை ஒருபுறம் டாக்டராகவும், மறுபுறம் சிகிச்சை பெறும் நோயாளியாகவும் இருந்த அவரது வாழ்நாள் குறுகிக் கொண்டு வந்தபோதும், அவரது பட்டங்கள் பெறும் கனவு நிறைவேறிய நிலையிலும், நோய் விடாமல் துரத்தி அடித்தபோது, அவர்கள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக்கொண்டு. அவரது வாழ்விணையருக்கு ஓர் ஆறுதல் - நிரந்தர அன்பு செலுத்தும் வாய்ப்பு தனக்கடுத்து இருக்கும் என்று இருவரும் பேசி, முடிவு செய்து, 8 மாத குழந்தையின் மருத்துவம் இந்த மருத்துவருக்கு மருந்துகள் தராத சிகிச்சை அன்பு -  வாஞ்சைமூலம் ஊட்டியது.

இந்நிலையில், அவர் மரணத்தைப் பற்றி தனது நோயின் கொடுமை தாக்கத் தாக்க, தத்துவ ரீதியாக அதை ஆய்வு செய்து ஏற்ற பக்குவமான மனநிலையை அவரது துணைவியார், பெற்றோர், சகோதரர்கள் எல்லோரையும் பக்குவப்படுத்துகிறார்.

அவர் அந்நோயின் உபாதையிலும்கூட எழுதிய நூல், அவர் மறைந்த மார்ச் 2015-க்குப் பின் வெளிவந்துள்ளது.

‘சுவாசம் என்பது வெறுங் காற்றாகியபொழுது’ (‘When Breath Becomes  Air’) என்ற தலைப்பில் வெளியாகி உள்ளதைப் படித்தால், மரண பயத்தினால் நம்மை அதிகம் அலட்டிக் கொள்ள, இறுதி மூச்சடங்கும்வரை நம் பணியில் நாம் ஓய்ந்தோமில்லை என்ற மனநிறைவுடன் வாழலாம்! மற்றவர்களையும், மரண இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு - சற்று ஆறுதல் பாதை யைக் காட்டி, அமைதிப்படுத்தி, அடுத்த பணிகளில் அதிக கவனம் செலுத்தும் பரிபக்குவத்தைப் பரிமாறலாம் என்பதை விளக்குகிறது அந்நூலின் பல பக்கங்கள் - வெறும் எழுத்துக்கள் அல்ல - மனிதத்தின் பிழிவுகள்! துணிவின் வெளிச்சங்கள்.

மூத்திரக் கோளாறு - நோய் பாதிப்பிலும் 95 ஆம் வயதிலும் தொடர்ந்த தொண்டறப் பெரியார்தம் மன உறுதியைப் போலவே இந்த வாலிபரும் தமது மருத்துவத் தொண்டை - வசந்தமாக்கியவர் என்றே நினைத்தேன்!

வாய்ப்புள்ளோர் படியுங்கள்!

தொண்டறத்தையும், நோய் வந்தோர் அதனை எதிர்த்துப் போராடும் துணிவையும் இழந்தவர்கள் இழப்பை பெரிதும் சதா எண்ணி வீணாக்காமல், மீண்டும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரும் வழிகாட்டி நூல் - என்பதால் பயன்பெறுங்கள்!

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

-விடுதலை,22.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக