மனித நேயம்‘ என்ற தலைப்பில் திண்டுக்கல் மாவட்ட சர்வதேச ரோட்டரி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி...
அந்த உதவியே எனக்கு - நீங்கள் பதினைந்து ரூபாயைத் திருப்பி அளித்ததாகப் பொருள்’’ என்று அவர் மனித நேய உணர்ச்சியில் நின்று கூறிவிடுகிறார். (கைதட்டல்).
பிறகு வி.பி. மேனன் அவர்கள் பல பதவிகளுக்கு வருகிறார். ஓய்வு பெற்று பெங்களூரில் குடியேறுகிறார்; கிளார்க் நிலையிலே இருந்து மத்திய அரசின் உள்துறைச் செயலாளர் பதவிவரை உயருகிறார். இது ஒரு சம்பவம் - அமெரிக்காவிலே இருக்கிறவருக்கு எப்படி இந்தச் சம்பவம் தெரிய வந்தது?
அமெரிக்கக்காரரின் தவிப்பு
இன்னொரு சம்பவத்தின் மூலம் இச்செய்தி வெளி வருகிறது.
அமெரிக்காவிலிருந்து ஒரு நண்பர் கல்கத்தாவுக்கு வருகிறார். அவர் விமான நிலையத்தில் இறங்கி அவருடைய பெட்டியைக் கட்டணப் பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு, திரும்ப எடுத்து ஊர் திரும்பும் பயணம் மேற்கொள்ள வருகிறார்!
அந்தப் பெட்டியை உடனடியாகப் பெற்றுக் கட்டணம் செலுத்தி இவர் இன்னொரு விமானத்தில் புறப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலையிலே அந்தப் பெட்டியைப் பெற வேண்டுமானால் இருபத்தைந்து ரூபாய் - இந்திய ரூபாய் இவர் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அந்த அமெரிக்கக்காரரிடம் டிக்கெட் மட்டுமே இருக்கிறது. டாலர் இருக்கிறது. இந்திய ரூபாய் இல்லை. டிராவலர்ஸ் செக்தான் இருக்கிறது. விமானத்தில் வேறு உடனடியாக ஏறியாக வேண்டும். இந்த அமெரிக்கக்காரர் சங்கடத்துடன் தவிக்கிறார். இதைப் பக்கத்தில் ‘க்யூ’வில் நின்று கொண்டிருந்த ஒருவர் பார்த்து ‘‘அய்யா! இருபத்தைந்து ரூபாய் தானே உங்களுக்கு வேண்டும்? அதற்காகப் பதட்டப்படாதீர்கள். இதோ நான் தருகிறேன்’’ என்று சொல்லித் தருகிறார். உடனே அந்த அமெரிக்கக்காரர் கட்டணம் செலுத்தி விட்டு அந்தப் பெட்டியை வாங்கிக் கொள்கிறார்.
சிக்கல் நேரும்பொழுது உதவுங்கள்
அந்த அமெரிக்கக்காரருக்குப் பெரிய ஆச்சரியம். இந்தியாவில் நாம் யாரென்று இவருக்குத் தெரியாது. இருந்தாலும் நமக்காக இந்த இருபத்தைந்து ரூபாயைக் கொடுத்தாரே என்று நன்றிப் பெருக்குடன் பணம் கொடுத்தவருக்கு நன்றி கூறிவிட்டு ‘‘அய்யா உங்களுடைய முகவரியைத் தாருங்கள். இந்த இருபத்தைந்து ரூபாயை நான் அனுப்பிவைக்கிறேன்’’ என்று அமெரிக்கக்காரர் இவரிடம் சொல்கிறார்.
அந்த இருபத்தைந்து ரூபாய் கொடுத்தவர், அமெரிக்கக்காரரிடம் சொல்கிறார்: ‘‘அய்யா! உங்களை யார் என்று எனக்குத் தெரியாது; நீங்கள் அந்த இருபத்தைந்து ரூபாயை எனக்கு அனுப்ப வேண்டாம். இன்றைக்கு உங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்போல வேறு யாருக்காவது இப்படி ஒரு உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டால் அவருக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். அதுவே எனக்குத் திருப்பித் தந்ததாகிவிடும்‘’ என்று சொல்லிவிட்டு மேலும் சொல்கிறார்.
‘‘இதை எப்படி நான் தெரிந்துகொண்டேன் என்று சொன்னால், என்னுடைய தந்தையார் வி.பி.மேனன் அவர்களின் கீழ் பணியாற்றியவர். அவரிடம் இருந்து இதைத் தெரிந்து வைத்திருந்தார் என்னுடைய தந்தையார். எனக்கு அதை மனித நேயத்தோடு எனது தந்தை சொல்லிக் கொடுத்தார். என் தந்தையார் சொல்லிக்கொடுத்த அந்த மனித நேயத்தின் அடிப்படையில் நான் உங்களுக்கு உதவி செய்தேன். வாய்ப்புக் கிடைக்கும் பொழுது நீங்களும் அதுபோன்று உதவி செய்யுங்கள்’’ என்று அந்த அமெரிக்கக்காரரிடம் கூறிவிட்டார்.
இதற்கிடையிலே வி.பி.மேனன் ஓய்வு பெறுகிறார். பெங்களூரிலே தங்குகிறார். முதுமை அடைந்த நிலையிலே, அந்த அமெரிக்கக்காரர் வி.பி.மேனன் அவர்களுடைய மகளிடம் தொடர்பு கொண்டு அந்தச் செய்திகளையும், குறிப்புகளையும் பெற்று நூலில் எழுதுகிறார்.
எண்பத்தைந்து வயதைத் தாண்டிய நிலையிலே வி.பி. மேனன் பெங்களூரில் இருக்கிறார். அவர் குடியிருக்கிற வீட்டிற்கு ஒரு பிச்சைக்காரர் வருகிறார். அவர் வி.பி. மேனன் அவர்களிடத்திலே கேட்கிறார்: ‘‘அய்யா! எனக்குச் செருப்பு இல்லை. குளிரில் காலில் செருப்பில்லாமல் நடக்க முடியவில்லை. ஒரு ஜோடி செருப்பு வாங்கித் தந்தால் உதவியாக இருக்கும். தயவு செய்து வாங்கித் தாருங்கள்’’ என்று கேட்கிறார். வி.பி. மேனன் தன்னுடைய மகளைத் தனது மணிபர்சினை எடுக்கச் சொல்லி, அதில் பத்திரப்படுத்தி வைத்த ரூ. 15 ரூபாய் நோட்டினை எடுத்து அவருக்குக் கொடுத்துச் செருப்பு வாங்கச் செய்தார்!
அந்தப் பிச்சைக்காரர் செருப்பு வாங்கிக் கொண்டார். வி.பி.மேனன் அவர்கள் தன்னுடைய கடன் அடைந்து விட்டது என்று மிகப் பெரிய மகிழ்ச்சியோடு கண்களை இறுதியாக மூடினார். மனிதநேயத்திற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேறு சொல்லவே முடியாது.
நம்மைப் பிறர் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்றுதான் நம்மில் பலர் எண்ணுகிறோம்; ஆனால், அதைவிட முக்கியம் நாம் மற்றவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். அப்படிப் புரிந்து கொள்ளுவதில்கூட இரண்டுவித அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று பிறர்பால் நாம் காட்டும் அனுதாபம் பரிவு (Sympathy). . ஆனால், அதைவிட முக்கியம் பிறர் நிலையிலேயே நம்மை ஆக்கிக் கொண்டு பார்த்து அவர்களது துன்பத்தை, சங்கடத்தை உணருவது (Empathy) என்று ஆங்கிலத்தில் இதைச் சொல்வார்கள்.
‘‘பிறருக்கு உதவி செய்திட ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.’’
‘சிம்பதி’ (Sympathy) என்பதைவிட, ‘எம்பதி’
(Empathy) என்பது வாழ்வில் மிக முக்கியம்.
‘சிம்பதி’க்கும், ‘எம்பதி’க்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.
‘சிம்பதி’ என்பது மற்றொருவரிடம் நாம் காட்டக்கூடிய இரக்கம்.
‘எம்பதி’ என்பது மற்றொருவர் படுகிற துன்பத்தின் நிலையை அவர் நிலையில் நம்மை நிறுத்திக் கொண்டு உணர்வது ஆகும்.
‘சிம்பதி’யைவிட, ‘எம்பதி’ என்பதே மனித நேயத் தின் முக்கிய அம்சம்
(நிறைவு)
-விடுதலை,13.12.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக