பக்கங்கள்

வெள்ளி, 30 டிசம்பர், 2016

நம் வாழ்வைப் பாதுகாக்கும் 10 சிறப்பு உணவுகள்!


நாம் நமது ஆயுளைப் பாதுகாக்க வும், நீட்டிக்கவும் மருத்துவர், மருந்து, இவைகளை நாடுவதைவிட உடற் பயிற்சியும், பசித்து உண்ணும்போது கண்டதையெல்லாம் உண்ணாமல், நல்ல சத்தான சிறந்த உணவுகளைச் சாப்பிடுவதும் மிகவும் உதவக்கூடியன வாகும்.

அண்மைக்காலத்தில் வெளிநாட்டு உணவுகள் - வேக உணவுகள் (Fast Foods) 
கடைகள் இறக்குமதியாகி விட்ட நிலையில், கொள்ளை விலை கொடுத்து அவற்றை வாங்கித்தின்று தங்களது பொருளையும், உடல் நலத் தையும் மிக வேகமாக இழந்து வருகின்றனர்!

ஒரு மருத்துவர் அம்மையார் என் னிடம் கூறினார். தங்களூரில் கொத்த னார் வேலை செய்யும் ஒருவர் டாஸ்மாக் சரக்கு வாங்கிக்கொண்டு, பக்கவாத்தியமாக முந்தைய பெரும் குடி மக்கள் முறுக்கு மற்றும் இறைச்சி வகையறாக்கள் - இவற்றைச் சாப்பிடு வதற்குப் பதிலாக அமெரிக்க பிட்சா (விலை ரூ.150, 200) வாங்கிச் சாப்பிட்டு தனது உடலைச் சீரழித்துக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனராம்! என்னே கொடுமை!

சிறந்த உணவுகள் என்று அமெ ரிக்காவின் சத்துணவு மய்யம் (Nutrition Centre) (இது தலைநகர் வாஷிங்டன் ஞி.சி.யில் உள்ளது) 10 சூப்பர் உயர்தர உணவு வகைகளைத் தேர்வு செய்து மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது!

1. இனிப்பு உருளைக் கிழங்குகள்
(Sweet Potatoes)

இது காய்கறிகளில் மிகவும் சத்தான நட்சத்திர உணவு என்று கூறலாம். கார்ட்டோனாய்டுஸ் என்று முக்கிய உடல்நலப் பாதுகாப்புச் சத்தும், சி வைட்டமின், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகளை ஏராளம் உற்பத்தி செய்து உடலுக்குத் தரும் உணவு ஆகும் இது!

இதை அவித்து கிழங்கை மசிய லாக்கி பட்டை, ஏலக்காய், ஜாதிக்காய் முதலிய வாசனைப் பொருள்களை (மசாலா பொருள்கள் அளவோடு) சேர்த்து சிறிது காரம், கொத்தமல்லி, மிளகாய்த்தூள் முதலிய சேர்க்க வேண்டி யவைகளோடு சமைத்து உண்டால், அதுவே சிறப்பான உணவாக- சத்துக் களைத் தருவனவாக அமைந்துவிடும்.

2. மாங்காய்

ஒரு கப் மாங்காய் ஒரு நாளுக்கு உட லுக்குத் தேவையான சி வைட்டமின், ஒரு நாளின் மூன்றில் ஒரு பகுதி தேவையான வைட்டமின் சத்தும் இதன் மூலம் உடலுக்குக் கிடைக்கிறது. தேவை யான அளவு இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் பொட்டாசியம், 3 கிராம் நார்ச்சத்து (Fiber). போனஸ் தகவல்: மாம்பழங்களில்தான் குறைவான அளவு கிருமிநாசினி தங்கல் உள்ளது; எனவே, அது ஒருவகை உடல் பாதுகாப்பு.

3. இனிப்பாக்கப்படாத கீரிக் தயிர்

கொழுப்பு இல்லாத பிளைன் தயிர் (கீரிக் தயிர்) இத்துடன் பெர்ரீஸ், வாழைப்பழம் முதலியவைகளை - உலர்ந்த திராட்சைகளைக்கூட விருப்பத்திற்கேற்ப சேர்த்து, குழைத்து காலை உணவுத் தானியங்களோடு சாப்பிட்டால் மிகவும் அருமையான ஊட்டச்சத்தினை அது நமக்கு அளிக்கும். இதில் ஏராளமான புரதச்சத்து உள்ளது. (நல்ல பாக்டீரியாக்கள் நமது நோய் எதிர்ப்பைப் பெருக்கவும், உணவைச் செரிக்கச் செய்யவும் உதவக்கூடும்) சாதாரண தயிரில் உள்ள புரதச் சத்தைவிட இரு மடங்கு இதில் கூடுதலாக உள்ளது. 6 அவுன்ஸ் சாதாரண (Plain) தயிரில் உள்ளது என்றால், இவ்வகையில் மூன்று மடங்கு 18 அவுன்ஸ் அதிகம் உள்ளதாம்.

4. பிராக்கலி கீரை
(Broccoli)

அமெரிக்காவில் இக்கீரை சர்வ சாதாரணம். இந்தக் கீரைக்குப் பதில் பொன்னாங்கன்னி, சிறுகீரை போன்ற வைகளை நாம் நம் நாட்டு வசதிக்கேற்ப பயன்படுத்தலாம். இத்தனை கீரைகளில் இரும்புச்சத்துடன் காரட்னாய்டுஸ் (Carotenoids)   கே வைட்டமின். ஃபோலிக்  ஆசிட் (Folic Acid) என்ற (ரத்தச்சோகை நீக்குவது) இத்தோடு சிவப்பு மிளகு.

5. ஓயல்வலட் சால்மன் - மீன்

ஒமேகா - 3 மீன் கொழுப்பு என்பது உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது. தற்போது ஜெர்மனியில் நாங்கள் தங்கியிருந்தபோது காலை உணவில் சேர்த்துக் கொள்ளும் வெண் ணெய் தயாரிப்பில் இந்த ஒமேகா-3-ம், ஒமேகா-6-ம் இணைக்கப்பட்டதைக் கண்டு வியந்தோம்; காலை உணவுக்கு வெண்ணெய்யை (Butter) ரொட்டியில் தடவி உண்டோம். இது இதயநோய் தடுப்பானாகப் பயன்படுகிறது! பக்க வாதம் (strokes) வராமல் தடுக்கவும் இது உதவக்கூடும். சால்மன் என்ற அரிய மீன்வகையில் இது கிடைப்ப தால் இதையும் உணவாகப் பயன் படுத்துவது மிகவும் நல்லது.

- (நாளை தொடரும்)

நேற்றைய வாழ்வியல் சிந்தனை யில் அமெரிக்க சத்துணவு ஆராய்ச்சி மய்யத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஊட்டச்சத்துள்ள உயர்வான உணவு வகைகள் என்ற தலைப்பில் வெளி யிட்ட அறிக்கையில் 5 உணவு வகை களைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தோம்.

அதன் தொடர்ச்சி வருமாறு:

6. முறுமுறு ரொட்டி -ரஸ்க் (Rusk) வகையறா...

Whole Grain  என்ற கோதுமையின் உமி நீக்காத முறுமுறு ரொட்டிகள் முழுச் சத்துள்ளவை (அமெரிக்காவில் வாசா, ரைகிரிஸ்ப், காவ்லி, ரிவிட்டா) அனைத்தும் நார்ச்சத்துள்ள கொழுப் பற்ற உணவுகளாக அமையும். தேன் சில சொட்டுக்கள் விட்டு, லவங்கப்பட் டையும் சேர்த்துக் கொண்டால், மிகவும் சுவையாக அது அமையும்.

7. கார்பன்சா பீன்ஸ் (Garbanzo Beans) 
கொண்டைக்கடலை

கடலை வகையறாக்கள் எல்லாமே சிறப்பான ஊட்டச் சத்துள்ளவை - அதிலும் கொண்டைக் கடலை - நம் வீடுகளில் சென்னா என்றும் சொல் வார்கள். இதன்மூலம் புரதச்சத்து, இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டா சியம், துத்தநாக சத்து (Zinc) 
எல்லாம் இதில் ஏராளம் உள்ளன. பலதரப்பட்ட வைகள் உண்டு.

அந்தக் கொண்டைக் கடலையை ஊற வைத்து, குழைத்து (குழைக்காமலும் வசதிப்படி) பச்சைக் காய்கறிகள், கீரை களுடன் இணைத்து சாலட் (Salad) செய்வதுடன், காய்கறிகள் எல்லாம் ஸ்டூ (Stew) கறிகளை போட்டு சூப் தயாரித்து இத்துடன் காய்கறி, பழுப்பு அரிசி (Brown Rice) லெபனீஸ் ரொட்டி அதற்குப் பெயர் Couscous, Bulgcul போன்ற முழு தவிடு நீக்கா தானியமாக அமைந்துள்ள வைகளையெல்லாம் பயன்படுத்தலாம்.

8. தர்ப்பூசணி (Watermelon)

இது ஒரு நல்ல ஊட்டச் சத்து உணவு, நிறையச் சாப்பிட்டால், திரவமாகி, வயிற்றை அடைக்காது; நல்ல வெயில் காலத்தில் நமது நாட்டில் நமக்கு நல்ல பயன் தரும் உணவு இது. 2 கப் தர்ப் பூசணி, ஒரு நாளுக்கு நம் உடலுக்குத் தேவைப்படும் ஏ வைட்டமின், சி வைட்டமின், ஒரு குறிப்பிட்ட அளவுக் குப் பொட்டாசியம், அத்துடன் லைக் கோன்டீன் சத்து (இது தக்காளியிலும் ஏராளம் உண்டு - இருதயப் பாதுகாப் புக்கு இது மிகவும் அம்சமான சத்து) 85, உப்பு இல்லா, கொழுப்பு இல்லா 85 கலோரி அளவுள்ள மிகவும் குறைந்த தேவை அளவுள்ள கார்பன் (Food Print) இதில் அடக்கம்.

9. பரங்கிக்காய் வறுவல் அல்லது சூப் (Butternut Squash)

பரங்கிக்காயின் ஜூஸ் - அதைத் துண்டு துண்டாக வெட்டி, நறுக்கிய துண்டுகளை அடுப்பில் வைத்து, ஒரு வறுவலைப் போல் அல்லது சூப் ஆகத் தயாரித்து, உணவின் ஒரு பகுதியாக ஆக்கி உண்ணலாம். இதன்மூலம் ஏராளமான ஏ வைட்டமின், சி வைட்டமின், நார்ச் சத்துக்கள் ஏராளம் கிடைக்கும்.

10. பச்சைக் கீரைகள்

(அமெரிக்காவில் சக்தி வாய்ந்த கீரைகளான கேல், கொலாட்ரிஸ், ஸ்பீனாச்), முள்ளங்கி, கடுகு கீரை, ஸ்விஸ் சார்டு (Swiss Chard) போன்றவைகளை எப்போதும் விலக்கி விடாதீர்கள்!

நம் நாட்டில் உள்ள கீரைகள் எல்லாம் பல்வகையான ஊட்டச் சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் உள்ளடக்கி யவையாகும். நினைவு ஆற்றலைப் பெருக்குவதற்குக்கூட நம் நாட்டில் ஏராளமான கீரைகள் (வல்லாரைக்கீரை) போன்றவைகள் உண்டே!

இந்தக் கீரை வகையறாக்கள் மூலம் வைட்டமின்கள் ஏ, சி, கே, மற்றும் ஃபோலேட் (Folate) பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், இரும்புச் சத்து, லுயூடெயின், நார்ச் சத்துக்கள் இவை கள் எல்லாம் இதில் ஏராளம் உண்டு.

இதை பலவிடங்களில் எலுமிச் சைப் பழச்சாற்றுடன் கலந்தும், ரெட் ஒயின் (Red Wine) கலந்த வினிகர் (புளிப்புள்ள காடிச்சத்துடன் இணைந் தும் பரிமாறிடும் பழக்கம் உள்ளது!)

எனவே, தினம் தவறாது எது நம் நாட்டில் எளிமையாக - குறைந்த விலையில் கிடைக்கிறதோ, அதனை வாங்கி, குடும்பத்துடன் சாப்பிட்டுப் பயன் அடையலாம்!
வெறும் நாக்கு ருசிக்காக மட்டும் சாப்பிடாதீர்கள் - வாழ்க்கையை நீட்டவே உண்ணுங்கள்! நீண்ட நாள் நன்றாக வாழுங்கள்!

இத்துடன் உங்கள் உடல்நலத் திற்கே பழங்களைக் கூடுதல் உண வின் ஒரு பகுதியாக - முக்கிய பகுதி யாக ஆக்கிக்கொண்டு நல வாழ்வு வாழுங்கள்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் இவைகளைத் தவிர்த்து, கொய்யாப் பழம், சாத்துக்குடி, ஆப்பிள், மாதுளை, நாவல் பழம், பாகற்காய் போன்றவை களைப் பயன்படுத்தி ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பருவப் பழங்களை உண்ணலாம் எப்போதோ ஒருமுறை.
உதாரணம், மாம்பழம், பலாச்சுளை - விதிவிலக்காக - ஒரு சில அளவு - மற்ற உணவைக் குறைத்துக்கொண்டு உண்பது தவறில்லை என்கிறார்கள் மருத்துவர்கள் - ஓகே!

- கி.வீரமணி

-விடுதலை,18,19.6.14

சிறு குழந்தைகளும் - தொலைக்காட்சிகளும்!



அண்மையில் வானொலியில் குழந்தைகள் வளர்ப்பு பற்றி, சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனை (எழும்பூர்) மருத்துவர் ஒருவர் உரையாடலை காரில் பயணம் செய்து கொண்டே கேட்டு மகிழ்ந்தேன்.

அரிய பல தகவல்களை, கேள்வி - பதில் மூலம் வானொலி சார்பாக கேட்டவரும், பதிலளித்த மருத்துவ நண்பரும் மிக அருமையாக கூறி வந்தார்.

சிறு குழந்தைகளை வளர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள பல பெற்றோர் களுக்கு, குறிப்பாகத் தாய்மார்களுக்குப் பயன்படும் என்பதால், வானொலியில் கேட்ட குறிப்புகளைக் கொண்ட - நினைவில் நின்றவைகளைக் கொண்ட -கட்டுரை இது! படித்துப் பயன் பெறுங்கள்.

இப்போதெல்லாம் பெற்றோர் இருவருமே பணிக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள்; தாய் மகப்பேறு மருத்துவத்திற்கு ஆளாகி, குழந்தை பிறந்த 2,3 ஆண்டுகள் ஆகும் நிலையில் - தொடர் விடுப்பு எடுக்க இயலாது என்ற காரணத்தாலும் சிறு குழந்தைகள் பகல் பராமரிப்பு நிலையங்கள் அவ்வளவு திருப்தியாக இத்தாய்மார்களுக்கு அமையாத காரணத்தாலும், மாற்று முறைகள் தேடுகின்றனர்.

வேலையிலிருந்து திரும்பிய பிறகுகூட, சமையல் பணி (இன்னமும் இது பெண்கள் தலையில் சுமத்தப்பட்ட பணியாகத்தானே பெரும்பாலான வீடுகளில் உள்ளது) செய்தாக வேண்டிய நெருக்கடி.

அதன் காரணமாக, 2 வயது, 3 வயது குழந்தைகளை தொலைக்காட்சிப் பெட்டி அருகில் படுக்க வைத்தோ,  ஆங்கில நர்சரி ரைம்ஸ் (Nursery Rhymes) பாட்டுகளைப் போட்டோ அல்லது குழந் தைகளின் ஈர்ப்புக்கான சி.டி.களையோ போட்டு அக்குழந்தைகள் சதா பார்த்துக் கொண்டே இருக்கும்படிச் செய்து தங்கள் பணிகளை இடையூறு, அவர்களது தொந்தரவு ஏதுமின்றி செய்து வருவது கண்கூடு.

கேட்டால் இந்த நவீன அறிவியல் தகவல் களஞ்சிய, பாட்டு சி.டி.கள் அக் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் என்றும் நம்பி பல தாய்மார்கள் இதனைச் செய்கின்றனர். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகளை அந்த வயதின் வளர்ச்சிக்குரிய கலகலப் புடன் பெற்றோர்களிடம் குடும்பத்தவரிடம் பழகுவதில்லாமல், பேச்சை அறவே தவிர்த்து விட்டு, எப்போதும் அரைத் தூக்கம், அரை மயக்கத்திலேயே இருந்து விடுகிறார்கள்.

(கிராமப்புற வயல்வெளியில் தூர வேலை செய்யும் பல தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் அழாமல் தூங்கிய வண்ணம் இருக்க, சில போதை மருந்து களை முலைக் காம்பில் தடவிக் கொண்டு குழந்தைக்கு வேலைக்கு வருவதற்குமுன் பாலூட்டிவிட்டு குழந்தைகளைத் தூங்க வைத்து சீனா போன்ற நாடுகளில் செய்வ தாக ஒரு கட்டுரையில் படித்த நினைவு)

அப்படி அறிவார்ந்த சி.டி.களைக் கூட போட்டு, மனித உறவுகளோடு, கலந்து கொள்ளச் செய்வது குழந்தைகளை வளரும்படிச் செய்வது மிகப் பெரிய தவறு என்று அந்த மருத்துவர் திட்டவட்டமாகக் கூறினார்.

ஒரு பந்தை அக்குழந்தை முன் எறிந்தால் அது ஓடிப் போய் துடிப்புடன் எடுத்து, மீண்டும் எறியாமல் அது வெறுமனே அமைதியாக, ஏதோ ஒரு பொம்மை போல்தான் இருக்கும்; காரணம் அத்தொலைக்காட்சிப் பெட்டி முன்பு அது அப்படியே பார்த்து பார்த்து - அதனுடைய இயக்கங்களுக்கே அதில் வேலையில்லை அதன் காரணமாகத்தான் சும்மாவே இருக்கும்.

இதுவே வீட்டில் மற்றவர்களோடு கலந்து  மற்ற குழந்தைகளுடன் தாத்தா, பாட்டி, பெற்றோர், அண்ணன், தங்கை, தம்பியுடன் கலந்து உறவாடினால் இப்படி இருக்கவே இருக்காது என்றார்!

ஜப்பானிய முறையில் முப்பரி மாண MRI Scan செய்து பார்த்ததில் அத்தகைய மேற்சொன்ன முறையில் - வளர்க்கப்படும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, அதற்குரிய அளவு வளரவில்லை என்பதை நன்கு நிரூ பணம் செய்யும் அளவில் உள்ளதாம்! கூறினார் மருத்துவர்.

நமது மூளை நான்கு பிரிவாக பகுக்கப்பட்டிருக்கிறது, நரம்பியல் மூளை நிபுணர்களால் (நூறு அளவு போன்ற மூளை முன் பகுதி (Frontal Lobe) தடித்துப் போகிறது.

அதனால் மின்னணு கருவிகள் (Electronic Gadgets) Mobile போன்ற வைகளை வைத்து பாட்டுகள் கேட்க வைத்தால் இவைகளை அருகில் கொண்டு சென்று 2 வயதுக்கு மேற் பட்ட சிறு குழந்தை வளர்ப்பில்கூட விரும்பத்தக்கது அல்ல என்கிறார் மருத்துவர்.

சில முக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 1 மணி 2 மணி நேரத் திற்கு மேல் - ஒரு வாரத்திற்கு இந்தக் குழந்தைகள் பார்க்காமல் தடுப்பது மிக மிக அவசியம் - என்கிறார் இந்த மருத்துவ வல்லுநர் அறிவுரைகள்!

கேட்டீர்களா? குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள பெற்றோர் கள் இந்த அறிவுரையைப் புறக் கணிக்காதீர் எச்சரிக்கை!
-விடுதலை,25.7.14

தயங்காதீர்; தடுமாறாதீர்; துணிச்சலுடன் முடிவு எடுங்கள்!


மனிதர்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் துணிந்து முடிவு எடுக்கத் தயங்கக் கூடாது. 'அய்யோ, இப்படிப் போனால் என்னவாகும்? அப்படி நடந்தால் சரியாய் வருமா?' என்று எந்த ஒரு முடிவுக்குமே வர இயலாத நிலையில், காலங் காலமாய் ஓர் உருப்படியான செயலையும் செய்து முடிக்க முடியாதவர்களாகவே ஆகி விடுபவர்கள் பலர்! காரணம் தயக்கம்! தயக்கம்!! தயக்கம்!!!

அதுபோலவே அச்சம், அச்சம், அச்சம்! இனந் தெரியாத பயம் இவர்களை வாழ்நாள் கோழைகளாக்கி மூலையில் முடக்கி உட்கார வைத்து விடுகிறது!

சாதிக்க நினைப்போர் அனைவருமே சாதிக்க முடியுமா? என்பது நம்மைப் பொறுத்தவரை ஒரு அர்த்தமில்லாத கேள்வியேயாகும்!

திட சித்தத்துடன் உறுதியாக - விளைவு வெற்றி, தோல்வியானாலும் அதைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் - நாம் 'துணிந்தவனுக்குத் துக்கமில்லை' என்பதுபோன்று துணிந்து குதிக்க வேண்டும். பலர் முடிவுகளைச் செயல்படுத்துவதில் கால நேரம் - மூடத்தன பஞ்சாங்க நேரங்களைப் பார்க்கும் பழைய பஞ்சாங்கங்களாகவே இருப்பதால், நடுங்கும் கால்கள் ஓட்டப் பந்தயத்தில் தானே தடுக்கி விழுந்து, வெற்றிக்குப் பதில் தோல்வியை அணைக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள்.

தோல்வி ஏற்பட்டால் என்ன குடியா மூழ்கிப் போகும்? நம் வாழ்க்கை என்பது என்ன ஒரு சில தோல்விகளால் அழியக் கூடியதா?

கடும் உழைப்பும், இடையறாத விடா முயற்சியும் உடைய எவருக்கும் அது ஒரு விவேக விளையாட்டுப் போல!

தாமஸ் ஆல்வா எடிசன் என்ற அறிவியல் கண்டுபிடிப்புகளின் மேதை ஒருமுறை மற்றவர்களின் கேள்விக்கு அமைதியாக, பதில் கூறினார்?

"நீங்கள் இதுவரை  சுமார் 20,000 தடவை உங்கள் முயற்சிகளிலே தோற்றுப் போய் இருக்கிறீர்களே, உங்களுக்கு சலிப்போ, விரக்தியோ, நம்பிக்கையின்மையோ தோன்றவில்லையா?" அதற்கு அவரது கனிந்த முதிர்ந்த பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

"ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவம் பெற்றேனே தவிர, நான் தோல்வியைத் தழுவியதே இல்லை; தோல்வியே எனக்குத் தெரியாது"

எவ்வளவு அருமையான, ஆழ்ந்த பொருள் பொதிந்த முதிர்ச்சி நிறைந்த வாழ்வியல் வளர்ச்சிக்கான பதில் பார்த்தீர்களா?

இங்கிலாந்தில் சில ஆண்டுகளுக்குமுன், இசைக் கருவிகளுக்கான கடை (Music Stores) ஒன்று வைத்து சிறிய அளவில் தொழில் நடத்தி லாபம் சம்பாதித்து   வந்தவர் சர் ரிச்சர்டு பிரான்சன் (Sir Richard Branson) 
என்பவர்.

அவருக்கு வெகு நாளையக் கனவு ஒன்று உண்டு; தான் ஒரு விமானக் கம்பெனி ஆரம்பித்து நடத்திட வேண்டும் என்பதே அது!

யோசித்து முடிவு எடுத்த அவர் தன் கையில் உள்ள மூலதனத்தையும் போட்டு துணிந்த முடிவு எடுத்தவுடன் அவரது வெற்றிக்குப் பின், அவரைப் பேட்டி கண்டவர்களிடம் கூறினார்; "சரியானதோ, தவறானதோ ஒரு முடிவை எடுத்து உடனே செயல்படத் துவங்க வேண்டும். (Good or Bad - you must decide it is better to take a bad decision than not taking a decision at all)"

ஒரு முடிவும் எடுக்காமல், தயங்கித் தயங்கி காலந் தள்ளுவதைவிட, தவறான முடிவை எடுத்து, அனுபவப்பட்டு அதிலிருந்து பாடம் கற்பது நம் வளர்ச்சிக்கு மேலும் வழி வகுக்கும் என்றாலும்...

விரைந்த முடிவு Quick decision) வேறு; அவசரப் பட்ட முடிவு (Hasty decision) வேறு; நியாயந்தானே! இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்!

எண்ணித் துணிக கருமம்! தேவையே!

விளைவு: அவர் முதலில் துவக்கியது மூன்று விமானங்களைக் கொண்ட Virgin Atlanta, பிறகு அது வளர்ந்து, அடுத்து கூடுதலாக Virgin Australia விமானக் கம்பெனி, மூன்றாவது Virgin U.S.  என்ற விமானக் கம்பெனி.

துணிச்சலின் அறுவடை அல்லவா இது!

எனவே திட்டமிடுதல், காலம், இடனறிதல் எல்லாம் சரிதான். தயக்கமோ, மயக்கமோ இன்றி துணிந்து செயல்படுவதுதான் மனித வாழ்வில் வெற்றியின் விளைச்சலைக் காண வைக்கும்.

எனவே தயங்காதீர்கள்! தள்ளாடாதீர்கள்!!
-30.12.16,விடுதலை நாளேடு

செவ்வாய், 27 டிசம்பர், 2016

தனிமை என்னும் கொடிய நோயை விரட்டுங்கள்!

மனித வாழ்க்கையே கூட்டு வாழ்க்கையில் மகிழ்வதும், குலாவுவதும், குதூகலிப்பதும், கும்மாளம் அடிப் பதும்தான்!

அறிவியல் குறிப்பாக நுண்ணறி வியல், மின்னணுவியல் முதலிய அறிவியலின் வியக்கத்தக்க கண்டு பிடிப்புகளால் மனித குலம் பெரிதும் வளர்ச்சி அடையும் வாய்ப்பைப் பெற்றி ருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான் என்றாலும்கூட, அதன் மறுபக்கத்தையும் நாம் பார்க்கத் தவறிவிடக் கூடாது!

அது சற்று பரிதாபகரமானதுதான்! கைப்பேசி வைத்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் பலரும் - குறிப்பாக இளசுகள், பிள்ளைகள், பேரன், பெயர்த்திகள் - சதா சர்வகாலமும் அக் கைப்பேசியுடன்தான் ஒரு நாளில் விழித்திருக்கும் நேரத்தின் பெரும் பகுதியைச் செலவு செய்து, குடும்பத்துப் பெரியவர்களான தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவிடம்கூட பேசாமல், கண்கள் பூத்தாலும், கழுத்து வலி கண்டாலும், ‘ஒரே பொசிஷனில்’ அதையே கட் டிக் கொண்டு அலைகிறார்கள். வேத னையும், வருத்தமும் ஏற்படுகின்றது!

நாலு பேர் ஒரு இடத்தில் இருந் தால், உரையாடல் இந்த நாலு பேரில் எவருடனும்இல்லை!மாறாக,வேறு வெளிநபருடனோ,5ஆம்நபரிடமோ தான் சளசளவென்றோ, கலகல வென்றோ உரையாடுகின்றனர்!

நாலு பேரும் நாலு திசை நோக்கி - இவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுவதே இல்லாத ஒரு விசித்திர சூழ்நிலை!

முன்பெல்லாம்வீட்டில்உணவு சாப்பிடும்போது-வீட்டில்உள்ள கூட்டுக் குடும்பத்தவர் அனைவரும் அமர்ந்து கலகலப்புடன் கலந்துரை யாடிக்கொண்டே உணவு உண்ணும் பழக்கம் இருந்தது.

அதுவும் இந்த கைப்பேசி கலாச் சாரத்தால் காணாமற்போனது!

இதை இளைய தலைமுறை தவிர்க்க வேண்டும். அடிப்படையில் மனிதன் ஒரு சமூகப் பிராணி.

தந்தை பெரியார் அழகான விளக் கத்தைத் தருவார்:

‘‘ஒரு குருவி இன்னொரு குருவிக்குக் கூடு கட்டித் தராது! ஆனால், மனிதன்தான் அடுத்தவனுக்கு வீடு கட்டித் தருகிறான்; துணி நெய்து தருகிறான்; கல்வி கற்றுக் கொடுக்கின்றான்!’’ அப்படியிருந்தும் தனிமை - ஏகாந்தம் என்பது மிகவும் இல்லறத்தாருக்கும், தொண்டறம் புரி வோருக்கும் எப்போதும் ஆகாத ஒன்று!

கலந்து உறவாடுதலும், உரையாடி மகிழ்வதிலும்,  ஒருவருக்கொருவர் மாறு பட்டு, நாகரிகமாக விவாதிப் பதிலும்கூட எத்தனை இனிமை! எவ்வகையான சுகம்!

இதை உணர்ந்தோரே வாழ்வைப் புரிந்தோர்!

தனிமை ஒருபோதும் இனிமை தராது - சிற்சில நேரங்களைத் தவிர!

சிறைச்சாலைகளில் தனியே நம்மைப் பூட்டி வைக்கும்போது, தனித்துச் சிந்திக்க மட்டுமே - நம்மைப்பற்றி நாமே - சுயபரிசோதனை செய்து மெரு கேற்றிக் கொள்ளவேண்டுமானால், இப் படிப்பட்ட தனிமை விரும்பத்தக்கது.

மற்றபடி பல நேரங்களில் அது தண்டனைக்குரியதே!

‘‘யாரும்நம்மைவீட்டில்கண்டு கொள்ளவில்லையே, அலட்சியப்படுத்து கிறார்களே....’’ இப்படித்தான் தனிமை யாக ஒதுக்கப்பட்ட பலரும் மனநோய் பாதிக்கப்பட்டவர்களாகி, மனம் வெந்து நொந்து நோயாளிகள் ஆகி விடுகிறார்கள்.’’

அவர்கள் தங்களது மன அழுத்தத்தை வென்று, தனிமைச் சிறையிலிருந்து  வெளியே வர குடும் பத்தவர்களில்லாவிட்டாலும், நண்பர்கள் உதவிட முன்வரவேண்டும்.

அவர்களிடம் அன்போடு உரை யாடுங்கள்; பாசம் கலந்த பேச்சுகளை பன்னீர் தெளிப்பதைப்போல பேசுங்கள்!

நலம் கேளுங்கள்; நாட்டு நடப்பு களில் சிலவற்றைப் பரிமாறி - அவர்தம் மவுனத்தை, விரதத்தைக் கலையுங்கள்!

கலகலப்பும், சிரிப்பும், கலந்துறவாட லும்தான் இதற்குக் கைகண்ட மருந்து!

வேறு மருத்துவர்களிடம் போகா தீர்கள்! நம்பிக்கைக்குரிய நண்பர்களை நாடுங்கள்! அன்பை விதையுங்கள்; மகிழ்ச்சியை அவர்களின் உள்ளத்தில் அவர்களே அறுவடை செய்ய தூண்டு கோலாக அமையுங்கள்!

காசு, பணம் தரவேண்டாம் - பாச நேசத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பலன் அதனால் ஏராளம் உண்டு.

மனித உறவுகள் மாண்பாக மாறும்!

- கி.வீரமணி
-விடுதலை,27.12.16

சனி, 24 டிசம்பர், 2016

நீண்ட காலம் வாழ்ந்த மக்களிடமிருந்து கிடைத்த 12 வாழ்க்கை ரகசியங்கள்! (3)


நேற்றைய வாழ்வியலின் தொடர்ச்சி...

11.   சமூக உறவுகளை ஏராளம் நிரம்ப ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!

நிறைய நண்பர்களை உருவாக்கி, வயதான முதுமைக் காலத்தில் அருமையான நண்பர்களைப் பெற் றிருப்பதுபற்றி   ஆய்வு செய்தி - ஆரோக்கியத்திற்கான எடை எப்போதும் குறைந்துவிடாமலிருக்க ஒரே வழி நண்பர்களால்  ஏற்படும் மகிழ்ச்சி; மகிழ்ச்சியானதே!

நார்த் கரோலினாவில் உள்ள  Brigham Young University (Chapel Hill  அருகில் உள்ள ஒன்று), 148 சுதந்திரமான உரிமை பற்றி ஆய்வு ஒன்றை மேற் கொண்டுள்ளது!

அதில் முதுமைக்காளான 50 வயதுக் குமேல் உள்ளவர்கள் கதையை அது ஆய்வு செய்ததில், 50 சதவிகித நல்ல நட்பு உறவுகள், நண்பர்கள்மூலம் தாராளமாகக் கிடைக்கும். அன்பு, நட்புறவை மட்டும் கொண்டு வந்து சேர்க்கவில்லை; கூடு தலாக இளமையையும், முதுமையில்  தனித்து மூலையில் ஒதுங்குவதை விரட்டிடும் வாய்ப்புகளையும் தருவதாக அமைகிறது!

எவ்வளவுக்கெவ்வளவு முதுமை அடைகிறீர்களோ அவ்வளவுக்கு அவ் வளவு, நண்பர்களுடனோ அல்லது சமூக உறவுகளுடனோ அல்லது தொண்டறப் பணிகளில் ஈடுபாடோ கொண்டு உழைப்பை நிறுத்தாமல், வெறும் முதுமைப் புயலில் வேரோடு சாய்ந்துவிட்ட மரங்கள் போல் ஆகி விடாதீர்கள்!

பழைய அல்லது புது நண்பர்கள், உறவுகள், பணிகள் என்ற மகிழ்ச்சி அலைகளில் நீந்தி மகிழுங்கள்; சீர ளமைத் திறத்தினை அது சிறப்புடன் உங்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்!

12. சாவை எண்ணிக் கலங்காதீர்! மகிழ்ச்சியோடு மரண பயமின்றி  எவ்வளவு நீண்ட காலம் வாழ முடியுமோ அவ்வளவு காலம் மக்களோடு மக்களாய், மனித குலத்திற்கு மாண்பு சேர்த்த மனிதம் பொங்கிய மனிதனாய் வாழ்ந்து, மனநிறைவுடன் சாவை அணைக்க எப்போதும் ஆயத்தமாகுங்கள்.

மாமனிதர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் (இந்தியாவின் மேனாள் குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமானவர்) சொன்னதுபோல பிறப்பு ஒரு விபத்து என்றாலும், நம் இறப்பு சரித்திரம் ஆகவேண்டாமா?  எண்ணி உழைத்து, மகிழுங்கள்!

அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகங்களில் ஒன்றான கார்னல் பல் கலைக் கழகப் பேராசிரியரான கார்ல் பில்லிமெர் பிஎச்.டி., (அமெரிக்கா) நம் ஊரில் போடுவது போல டாக்டர் (ஆய்வு) பட்டத்தைப் பெயருக்கு முன்னால் போடும் பழக்கம் கிடையாது.  கூடாது! அவர் 65 வயது முதல் 108 வயது வரை வாழ்ந்த சுமார் 1000 பேர்களிடம் நேர்காணல் நடத்தினார். அதன்மூலம் அவர் அறிந்த உண்மைகள்:

(அ) மரண பயமும், வயது ஆவதும் இரண்டும் நேர் எதிர்மறையாக உள் ளன!  (மரண பயம் வந்தால் முதுமை எங்கோயிருந்து வந்து ஒருவரைப் பிடித்துக் கொண்டு, கிழட்டுத்தனத்தையும் மேலே போர்த்திவிடும் போல் இருக்கிறது!

(ஆ) எங்கே நாம் மாரடைப்பினால் இறந்துவிடுவோமோ என்ற பயத்தி னாலும், அடிப்படையற்ற அச்சத்தினாலும் பலர் அப்படிப்பட்ட இதய நோய்த் தாக்குதலால் இறந்தேவிடும் நிலையும் உள்ளது! பயமே பலருக்கு இதய நோயை உருவாக்கி உயிரிழக்கச் செய்கிறது!

எனவே, மரணத்தைக் கண்டு அஞ்சாதீர்! தேவையற்ற பயம்வேண்டாம்; ஏற்பாடுகளைச் செய்ய எண்ணுங்கள்.உடனடியாக செய்துவிட்டு, மற்றவர்களிட மிருந்து- பயனுறுவாழ்க்கைவாழ்ந் தேன்; மக்களிடம் இல்லறம், தொண் டறம் செய்தேன் - மகிழ்வுடன் விடை பெறுகிறேன் என்று இருந்தால் விரைவில் உங்களுக்கு விடை கிடைக்காது!

(நிறைவ)

-விடுதலை,24.12.16

வெள்ளி, 23 டிசம்பர், 2016

12 வாழ்க்கை ரகசியங்கள்! (2)


நீண்ட காலம் வாழ்ந்த மக்களிடமிருந்து கிடைத்த
12 வாழ்க்கை ரகசியங்கள்! (2)

நேற்றைய வாழ்வியலின் தொடர்ச்சி...

காய்கறி உணவுக்கு, மாமிச உணவுக் காரர்களே மாறுங்கள் என்ற அறிவுரை பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று. அதனால் பெரும் விளைவு - நல வாழ்வுக்கு ஏற்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களும், வாழ்க்கையை அனுபவித்த பலரும்கூட ஒப்புக் கொள்வதில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும். அந்தக் கருத்தாளரின் கருத்து களையே நான் இங்கு உங்களுக்குத் தருகிறேன்.

நடுத்தர வயதுள்ள 55 வயது தாண் டியவர்கள் சுமார் 73,308 பேரிடம், ஆறு ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு செய்ததில், அவர்களில் சரி பகுதியினர் காய்கறி உணவுக்காரர்கள் என்றே தெரிவித்து தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்!

இப்படி ஆய்வு நடக்கையில், சுமார் 2,570 பேர் இறந்துவிட்டனர்! என்றாலும், மேலும் ஆய்வினைத் தொடர்ந்து நடத்தியபோது, சுமார் 12 விழுக்காட்டினர் சாகும் வாய்ப்புக் குறைவு அதனால் என்று கண்டறியப்பட்டது!

காரணம், அமெரிக்க சத்துணவு பற்றிய ஆய்வு ஏட்டில், (The American Journal of Clinical Nutrition) மார்ச்2013இல்கண்டறிந்ததுஎன்ன வென்றால்,இப்படிகாய்கறிஉணவு  சாப்பிடுபவர்களில் 32 விழுக்காட்டின ருக்கு இதயநோய் மாரடைப்பு  (Ischemic heart disease) வருவதில்லை என்றும், இவ்வகை மாரடைப்பினால்  (‘இஸ்கிமிக்‘ காரணமாக) மறைபவர்களே அமெரிக்காவில் அதிகம் என்று அறிவுறுத்துகிறது.

7. வைட்டமின் D

வைட்டமின் D பற்றி நன்கு ஆய்வு செய்யப்பட்டு சில முடிவுகள் - இதன் பலனால் என உறுதி செய்யப்பட்டுள்ளது!

பலமுள்ள பற்கள்; ஆரோக்கியமான எலும்புகள், நோய் எதிர்ப்பு சக்தியின் மிகை - இவை ஏற்படுகின்றன என்பது உண்மை.

கனடாவின் மருத்துவச் சங்கத்தினர் நடத்தும் ஏட்டில் (Canadian Medical Association Journal) ஒரு செய்தி வெளிவந்துள்ளது!
வைட்டமின் D அளவுக்கும், குடும்பத்தின் ஆயுள் நீட்சிக்கும் ஒரு வகைத் தொடர்பு உண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது.

90 வயதுக்குமேல் வாழுபவர்களின் பிள்ளைகளில் ஒன்று அவர்களது சந்ததியில் வைட்டமின் D  குறைந்து, புரதச் சத்து அதிகமாகி, வயதினை அதிகரித்திடக் காரணமாகி, அவர்கள் வயதானவர்களாக வாழ உதவுகிறது என்றாலும், இதன் விளைவு...?

அப் பரம்பரையினரும் 90 வயதுக்குமேல் வாழுபவர்களாகி விடுவார்களாம்! அப்படிப்பட்டவர்கள் வைட்டமின் ஞி க்குப் பதிலாக போதிய பழ வகைகளையும், காய்கறிகளையும்  ஒவ்வொரு நாளும் எடுத்தால், அது சம அளவாகி, எல்லாம் ஒரு சீராகி ஆயுள் நீட்சிக்கும் உதவுமாம்!

8. சீனாவில் மிகப்பெரிய மூலிகை வைத்தியரான லி சிங் யுவன் 1933 இல் இறந்தபோது, என்ன செய்தி வெளியாகியது தெரியுமா? அதுவரை அதிக காலம் வாழ்ந்தவர்களில் அவரே மூத்தவர் என்பதுதான் அச்செய்தி. அப்போது அவருக்கு 197 வயதாம்! நம்ப முடிகிறதா?

இதற்குக் காரணம் மன இறுக்கத்திற்கு இடம் தராத, மன அமைதியாக வாழ்ந்ததுதானாம்!

மன இறுக்கத்திற்கு இடம்தராமல், மன அமைதியுடன் வாழ்ந்தால், எப்போதும் மன இறுக்கத்தில் வாழுபவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளான இதய மார டைப்பு, மறதி நோய் (Alzheimer’s) முதலிய நோய்கள் ஏற்படாதாம்.

வயதான பலருக்கு உள்ளே ஏற்படும் மனப் போராட்டமே மன வருத்தத்தினை அவர்களுக்கு ஏற் படுத்தி விடுகிறது. எனவே, அதைத் தவிர்க்க அமைதியான மகிழ்ச்சியான வாழ்வு ஆயுள் விருத்தியைத் தானே கொண்டு வரும். நன்கு போடப்பட்ட ஒரு கப் கிரீக் காஃபி (a cup of boiled Greek Coffee) அதிகாலையில் சாப்பிடுங்கள்.

கிரேக்கத் தீவுகளில் ஒன்றான அய்க்காரியா என்பதன் வெள்ளை மணல் சூழ்ந்த கிராமங்களில் வாழுவோரில் ஒரு சதவிகிதத்தினர் 90 வயதுக்கு மேல் வாழுபவர்கள். அய்ரோப்பாவில் இப்படி 90 வயதுக்குமேல் வாழுவோர் எண்ணிக்கை 0.1 சதவிகிதமே!

அதன் ரகசியம் என்ன? மேலே குறிப்பிட்ட அவித்த கிரீக் காபியே! -  (Boiled Greek Coffee)

2013 மார்ச் மாதம் - Vascular Medicine-ல் வெளிவந்த ஒரு ஆராய்ச்சியின்படி, அத்தீவில் அப்படி 90 வயதுக்குமேல் ஒரு சதவிகிதத்தினர் வாழுவதற்கு மூல காரணம் இந்த ‘கிரீக் காபி’ தானாம்!

அதிகமான ஃபோலிபெனோல்ஸ் (Polyphenols) மற்றும் Antioxidants காபியை மிகவும் பக்குவப்படுத்தி, ரத்தக் குழாய் ஓட்டம் நன்கு இருக்கவும், இதயக் குழாய்கள் அடைப்பு வராமல் தடுக்கவும் - - endothelial function நன்கு நடைபெற, இதய அடைப்பு ஏற்படாமல் தடுக்க இது பெரிதும் உதவுகிறதாம்!

122 வயது வாழ்ந்தவரைப் பார்த்து ஒரு கேள்வி. நீங்கள் supercentarian- நூற்றாண்டையும் தாண்டிய ‘சூப்பர் நூற்றாண்டு நாயகன்’ என்றார்கள். 
1885 இல் பிறந்து 1997 இல் இறந்தார் அவர்!

அவருக்கு போர்ட் ஒபின், சிலம்பம் ஆடுதல், சைக்கிள் ஓட்டுதல் இவற்றில் மிகவும் பிரியமாம்! ஏன் காதலாம்!

ஜீன் கால்மெண்ட் என்ற அவருக்கு இவ்வளவு நாள் வாழ்நாள் நீண்டதற்கு ஒரு முக்கிய காரணம் ‘ஆலிவ் ஆயில்’ பயன்பாடாம்!

ஆலிவ் எண்ணெயில் உள்ள Antioxidants அதிகமாக உள்ளதாம் Monounsaturated lipids  இவைகள் ஆயுள் விருத்திக்கான காரணிகளாம்!
எனவே, நீங்களும் கூடுமானவரை ஆலிவ் (ஆயிலையே) எண்ணெய்யை பயன்படுத்திடுங்கள். உணவுத் தயா ரிப்பிலும், மற்ற தலைமுடிக்கான மிருதுத் தன்மையைப்பற்றிய முயற்சி எல்லாவற்றிற்கும் ஆலிவ் எண்ணெய் நிச்சயம் உதவிடக் கூடும்!

(நாளை பார்ப்போம்)
-விடுதலை,23.12.16

வியாழன், 22 டிசம்பர், 2016

இனிய வாழ்வுக்கு இதோ 26 எழுத்துகள்!


வலைப் பக்கங்களில்தான் எத்தனை எத்தனை அருமையான சிந்தனைப் பூக்கள் பூக்கின்றன! நண்பர் டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் அனுப்பிய ஒரு அருமையான கருத் துரைத்தொகுப்பை-அனைத்துவாச கர்களோடு பகிர்ந்து, யான் பெற்ற இன்பத்தைஅவர்களுக்கும் அளிப்பதில் தான் எத்துணை எத் துணை மகிழ்ச்சி!

ஆங்கில மொழி எழுத்துகள் 26 என்று நம் அனைவருக்கும் தெரியும். அதன் ஒவ்வொரு எழுத்தையும் முதன்மையாக்கிய சொற்கள் நமது இனிய வாழ்வின் ஒளிக் கீற்றுகளாக அமைதல் சிறந்தது என்பதை அனுப்பிப் பகிர்ந்துள்ளார் நண்பர்களுக்கு.

உறவுகள் மேம்பட A to Z என்ற தலைப்பில் வந்த செய்தி இதோ: (இதன் விளக்கம் என்னுடைய சில கருத்தும் இணைந்தது).

மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான்.

ஆனால், அதை மேலும் செம்மைப் படுத்தி இனிமையாக்கிக் கொள்ளத் தவறிவிட்டான்!

இனிய வாழ்க்கைக்கு சுமூகமான உறவும் அவசியம்; அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்.

1. A - Appreciation- பாராட்டுங்கள். மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்!

தந்தை பெரியார் அவர்கள் கூறு வார்கள், பாராட்ட நினைத்தால் உடனே பாராட்டவேண்டும்; தள்ளிப் போடக்கூடாது. தள்ளிப் போட்டால் மறதியோ, மாற்று எண்ணமோகூட நம்மைத் தடுத்துவிடும். ஒரு சிறிய பாராட்டு பல பெரிய மனிதர்களை உருவாக்கிட, செதுக்கப்பட்ட உயர் சிற்பமாக்கி உயர்த்திடும்.

குடும்பமாக, இயக்கமாக, நிர்வாக மாக, சக தோழர் - தோழியர்களாக, மாணவர்களாக, பணியாளர்களாக - எந்த நிலையிலிருந்தாலும் பாராட்டி மகிழக் கற்றுக் கொள்ளுங்கள் - பாராட்டைவிட அவர்களுக்கு நீங்கள் தரும் ஊட்டச் சத்து வேறு இருக்கவே முடியாது. (முகமன் ஒருபோதும் பாராட்டாகாது).

2. B - Behaviour  - நடத்தையின் தன்மை.

புன்முறுவல் காட்டுங்கள். சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும்கூட நேரம் இல்லாததுபோல் நடந்துகொள் ளாதீர்கள்.

புன்முறுவலோடு கூடிய உங்கள் முகங்களை கண்ணாடிமுன் பாருங்கள். ‘சீரியஸான’ முகங்களையும் பாருங்கள். உங்களின் உயர்வுக்கே இந்த புன்சிரிப்பு ஒரு நல்ல விளைச்சல் நிலம்போல் காட்சியளிக்க உதவும் - மறவாதீர்!

3. C - Compromise - தேவையான சமரசம் கற்க - நிற்க!

அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். அலட்சியப்படுத்திப் புறந்தள்ளப் பழகுங்கள்; மனந்திறந்து பேசி சுமுகமாகத் தீர்த்துக் கொள் ளுங்கள்.

இத்தகைய தீர்வு பற்பல நேரங்களில் இருசாராருக்குமே தோல்வியற்ற, இரு வருக்குமே வெற்றி என்ற Win - Win Situation அய் உருவாக்கி நம்மை உயர்த்திடும் என்பது உறுதி.

4.  D - Depression - - மனச்சோர்வு - மனக்கவலை


மற்றவர்கள் தங்களைப் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். மனச்சோர்வு பலரை பலவீனப்படுத்தி, விரக்தியின் விளிம்பிற்குள் தள்ளி வெளியே வர முடியாத வேலியைக் கட்டி விடுகிறது. எனவே, எவ்வளவு மனக்கவலை இருந்தாலும், மனச்சோர்வு  தவிர்த்து, எப்போதும் உற்சாகத்துடன் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

5. E - Ego -   தன்முனைப்பு;

வாழ் விணையர்களிடம் வம்பும், சண்டையும், வாழ்நாள் நண்பர்களிடமும் மனக்கசப்பும் வருவதற்குக் காரணமே இந்த ‘தான்’ என்ற தன் முனைப்பே முக்கியக் காரணமாகும்!

மற்றவர்களைவிட உங்களை உயர் வாக நினைத்துக்கொண்டு கர்வத்திடம் சிக்கிக்கொள்ளாதீர்கள்!

மற்றவர்கள் உங்களை உயர்வாக நினைத்தால்பெருமையே!தவிர, நீங்களே அப்படி எண்ணி அகந்தை, ஆணவம் கொள்ளுதல் நம்மை வீழ்த்தும், பள்ளத்தில் தள்ளிவிடும். நிலையில் உயர உயர, நாம் அடக் கத்தோடு எளிமையாக நடப்பதே நல்ல பாதுகாப்பினை நமக்கு எப் போதும் வழங்கும் -  உண்மையான உயர்வினைத் தரும்.

6. 6. F - Forgive -  மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

கண்டிக்கத்தக்க அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்றே எப்போதும் முயற்சி செய்யுங்கள்.

மன்னிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி (இருபுறத்திலும்) தண்டிப்பதில் ஒரு போதும் கிட்டாது - மறவாதீர்! மன்னிக்க முடியாதவர்களாகி அவ்வளவு பிடி வாதக்காரராக நீங்கள் இருந்தால், குறைந்த பட்சம் மறக்கவாவது (Forget) 
கற்றுக்கொள்ளுங்கள்! மறக்க வேண்டியது - பிறர்செய்த தீமையை; மறக்கக்கூடாதது - பிறர் செய்த உத வியை!

7. G - Genuineness - எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையா ளுங்கள்.

நேர்மைதான் நம் உள்ளத்தை - இதயத்தை மிகவும் கனத்ததாக ஆக்காமல், லேசானதாக, படுத்தவுடன் தூங்க உதவக் கூடியதாக இருக்கும். சிற்சில நேரங்களில் நேர்மை நமக்குத் துன்பத்தை, தொல்லையைத் தந்தாலும், அதிலிருந்து விலகாவிட்டால், நமது வெற்றியை எந்த எதிரியாலும் தட் டிப் பறிக்க முடியாது - நினைவில் நிறுத்துங்கள்!

8. H - Honesty - -  நாணயம்.

எதிலும் நாணயம் இருத்தல் வேண்டும். நாணயத்தைவிட நம்மு டைய பண்புகளில் தலைசிறந்தது வேறு எதுவும் இல்லை; நேர்மையும், நாணயமும் இரட்டைப் பிள்ளைகள். தவறு செய்தால் முந்திக்கொண்டு உடனே மன்னிப்புக் கேட்பதை ஒரு கவுரவமாகக் கருதுங்கள். போலி நாணயம் எப்படி செல்லாததோ, அப்படி கள்ள நாணயம் நம்மை என்றாவது ஒருநாள் காட்டிக் கொடுத்து, கேவலப்படுத்திவிடும்.

9. I - Inferiority complex - -  தாழ்வு மனப்பான்மை விடுக.

எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள்! தாழ்வு மனப்பான்மையை விட்டொ ழியுங்கள். நம்மால் முடியாதது யாரா லும் முடியாது - வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்று முயலுங்கள். முயன்றால் நமக்கு மாமலையும் ஒரு கடுகே!

- திங்கள் கிழமை வரும்

10.J - Jealousy - பொறாமை

பொறாமை வேண்டவே வேண்டாம் - அது கொண்டவனையே கொல்லும்! 'அழுக்காறு உடையார்க்கு அது சாலும்' என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறினார் வள்ளுவர். குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவுகளுக்குள்ளும் அல்லது பல காலம் பழகும் நட்புறவோ டும்கூட இது எப்படியோ ஊடுருவி நாசம் செய்து விடும்; எனவே இதற்கு ஆட்பட்டு விடாமல் தப்ப வேண்டும்.

11..K - Kindness - இதமான கனிவு

பேசும்போது இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள். மென்மையும், கனிவும் உள்ள நல்ல சொற்களைப் பயன்படுத்துதல் - கனியிருக்க காய்களைக் கடித்து பல்லை உடைத்துக் கொள்வது ஏன்?

12 .L - Loose talk -தேவையில்லாமல் பேசுவது

சிலர் சம்பந்தம் இல்லாமலும், அர்த்தமில்லாமலும், வள வளவென பேச வேண்டாதவைகளைப் பேசுவதையும், பின் விளைவு அறியாமல் பேசுவதையும் தவிர்த்தல் அவசியம்.

13.M -  Misunderstanding தவறாக - பிழைபட புரிந்து கொள்ளுதல்

மற்றவர்களை நாம் பல நேரங்களில், அவர்களது பேச்சு, நடத்தையைத் தவறாகப் புரிந்துகொண்டு, நல்ல நண்பர்களைக்கூட பகைவர்களாக்கிக் கொள்கிறோம். எனவே ஒருவரைப் பற்றி மதிப்பீடு அவசரப்பட்டுச் செய்யாமல், சரி வரப் புரிந்து கொண்டே பேச, பழக ஆயத்தமாகுதல் நல்லது!

14.N - Neutral    - நடுநிலை - பொது நிலை

எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்து விட்டுப் பேச வேண்டாம். பேசி விட்டு முடிவு எடுங்கள். எந்நிலையிலும் நடுநிலை பிறழாதீர்கள். சரியான பார்வையை   - எதைக் குறித்தும் -அப்போது தான் நாம் பெற முடியும்.

15.O - Over expectation    - அதிகம் எதிர்பாராதீர்

அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். எப்போது நமக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது தெரியுமா? அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கும் போதுதான்! எனவே தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்! தேவையை உள்ளடக்கி வாழும் முறை, மிகுந்த மன திருப்தியை, நிம்மதியைத் தரும்.

16.P - Patience - பொறுமை காத்தல்

சில சங்கடங்களை - நாம் விரும்பா விட்டாலும்கூட சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள். ஆத்திரம் அறிவுக்கு எதிரி, எதையும் பொறுமையுடன் அணுகுதல் நம்மை - பாதுகாப்பான முடிவுகள் எடுப்பதற்கு உதவிடக் கூடும்.

17.Q - Quietness - மவுனம் ஒரு சக்தி வாய்ந்த கருவி

தெரிந்ததை மாத்திரமே, தேவைப் படும் போது மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்சினைகளுக்குக் காரணமே தெரியாததைப் பேசுவதும், தேவையற்றவைகளை, நேரம் காலம் தெரியாமல் - பேசுதலேயாகும். கூடு மான வரை பேசாமலே இருந்து விடுங்கள்; மவுனமும், ஒரு லேசான புன்னகையும்கூட சக்தி வாய்ந்த மொழியாக மாறும் என்பதை மறவாதீர்!

(தொடரும்)

- கி.வீரமணி

-விடுதலை,5,7.11.16

கூசும்படியான ஆடம்பர வெளிச்சம்!


1976 ஆம் ஆண்டு - 50 ஆண்டு களுக்கு முன்பு - எனது நினைவுகள் பறந்தோடிக் கொண்டிருந்தது.

‘நெருக்கடிகாலம்' என்ற ஒரு கொடுமையான சுதந்திர பறிப்புக் கால நினைவுகள் என்னுள் நிழலாடியது!

அப்போது பல அதீதமான அதிரடி நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டன என்றாலும், அவைகளில் நாட்டுக்குத் தேவையான நல்லவைகளும் நடந்தன என்பதை மறுப்பதற்கில்லை!

நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் காரணம் காட்டப்படாமல் கைது செய்யப்பட்டு, ‘மிசா’ கைதிகளாக  சிறையில் அடைக்கப்பட்டனர்.

எங்களைப் போன்றோர் சிறை யில் அடைக்கப்பட்டது மட்டுமா? அடிக்கவும் பட்டனர்! (மற்றச் சிறைகளில் இம்மாதிரி மிருகத்தன நடவடிக்கைகள் நடக்கவில்லை என்று கேள்விப்பட்டு சென்னை ‘மிசா’ கைதிகளான நாங்கள் நிம்மதி அடைந்தோம்!).

‘மிசா’ கைதியின் கொடுமையான விசித்திரம் என்ன தெரியுமா?

அவன் - அவள் - எப்போது விடுத லையாவோம் என்று தெரியாமல் இருக்கும் மனநிலையில் தொடர்ந்து வைத்திருக்கும் மனோதத்துவ ரீதி யான ஒரு தண்டனை.

தூக்குத் தண்டனைக் கைதியை தவிர மற்ற அத்துணை  தண்டனைக் கைதிகளும் தண்டனை அடைந்து சிறைச்சாலைக்குள் சென்றால், விடுத லையாகும் அந்த காலத்தினை பித் தளை வில்லையில் அடித்து அவன் கழுத்திலோ, மேல் சட்டையிலோ குத்திக்கொண்டு, ‘ஒரு நாள் ஒரு பொழுது கழிந்தது!' என்று கணக் கிட்டுக் கொள்வார்கள்.

துவக்கத்தில் துயரமும், துன் பமும்வழிந்தாலும்‘போகப்போகப் பழகிவிடும்;’ மனமும் ஏற்றுக்கொள் ளும். சிறை அதிகாரிகளுக்கு, ‘நல்ல பிள்ளையாய்’ நடந்து, தண்டனை காலக் குறைவு என்ற ‘பரிசினை’ப் பெறுவது எப்படி என்ற நினைப்பும் மிஞ்சும்!

இந்த ‘மிசா’ கைதிகளுக்கு அப்படி ஒரு கணிப்பு என்றும் தெரியாது; தெரிய வாய்ப்பும் இல்லை.

நாளையே விடுதலை என்று சொன்னாலும்,சொல்லுவார்கள்;இன் றேல் இங்கேயே நம் வாழ்வு முடிந்து விட்டாலும் விடும். எதுவும் நடக்கலாம். எப்போது வேண்டுமானாலும் நடக் கலாம்.

துவக்கத்தில் நாங்கள் சிலர் அடி பட்டு,அவமானப்பட்டு, சட்டப் படியாக தரப்படவேண்டிய பல்வித உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக ஆனாலும், கேவலப்படுத்தப்பட்டவர்களாக, இருண்ட காலமே நம் வாழ்க்கை என்று எண்ணி பலர் வருந்தும் வாழ்வாக அமைந்தது என்றாலும், சில ஆண்டுகளுக்குமுன் என்னை அமெரிக்காவில் பேட்டி கண்டு உரையாடிய டாக்டர் கனிமொழி இளங்கோவன் அவர்களிடம் நான் கூறியது, ‘அது தான் என் வாழ்வில் கிடைத்தற்கரிய வாய்ப்பு' என்றேன். காரணமும் கூறினேன். துன்பத்தின் எல்லைக்கே சென்று திரும்பியதால், இனி வாழ்வில் எவ்வித மோசமான துன்பம் வரினும், ஏற்கும் பக்குவம் அதன் நற்பயன் என்றேன். எதற்காக இந்த பழைய மிசா புராணம் என் கிறீர்களா?

அத்தகைய தனி மனிதர்களுக்கு எல்லையற்ற, சுதந்திர பறிப்பு என்ற பெருநட்டம் - பெருங்கொடுமை என் றாலும்,

அதிலும்நன்மைகள்பலகிடைக் காமல் இல்லை என்றும் சொல்லப் பட்டது. அதன் மறுபக்கம் அது!

“ரயில்கள் குறித்த நேரத்தில் ஓடின! அரசு அலுவலகங்களுக்குத் தாமதமின்றி வந்து சரியாகப் பணி யாற்றிடும் ஊழியர்களை முதலும் கடைசியுமாகக் கண்டது!

அரட்டைக் கச்சேரியோ, குறட்டைத் தூக்கமோ தலைகாட்டவில்லை!’’

- இவை எல்லாவற்றையும்விட முக்கியம் ஆடம்பரத் திருமணங் களை அறவே பார்க்க முடியாத நல்ல வாய்ப்பு!

50 இலைகள் அதிகபட்சம் போதும் - அனுமதி வாங்கி 100 இலைகள் - திருமண விருந்தில்; வருமான வரி அதிகாரி இலையை எண்ணி தண்டனை விதிப்பார் என்ற அச்சம் உலுக்கியது.

அன்று ஆடம்பரம் விடை பெற்றது - விலை மதிப்பற்ற கருத்து, எழுத்து, பத்திரிகை சுதந்திரத்துடன், இன்று...?

தீயவற்றில் கூட சில நன்மைகள் - மற்றவை சொல்லக் கூசுகிறது.
-விடுதலை,12.11.16

நீண்ட காலம் வாழ்ந்த மக்களிடமிருந்து கிடைத்த 12 வாழ்க்கை ரகசியங்கள்!


அமெரிக்காவிலிருந்து ஒரு தகவல் வெளியானதை நம் நண்பர்கள் நமக்கு அனுப்பியுள்ளனர்.

‘நீண்ட காலம் வாழ்ந்த மக்களிட மிருந்து கிடைத்த 12 (பனிரெண்டு) வாழ்க்கை ரகசியங்கள்!’

என்பதே அதன் தலைப்பு.

ஜென்ஜோன்ஸ் டொனாட்டெலி என்பவர் இத்தகவல்களைத் திரட்டி பலருக்குப் பயன்பட அனுப்பியுள்ளார்.

2014 துவக்கத்தில் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுத்தல் மய்யம் - அமெரிக்கர்கள் அதிக காலம் வாழ்கிறார்கள்; ஒவ்வொரு ஆண்டும் அவர்களது வாழ்க்கை அளவு நீண்டு கொண்டே உள்ளது என்று கூறுகிறது!

இது அமெரிக்காவாழ் வெள்ளையர், கருப்பர், ஹிஸ்பானிக் என்ற பிரிவினர் அனைவருக்கும் பொருந்தும் உண்மை என்றும் இப்போது அமெரிக்கர்களின் சராசரி வயது 78.7 ஆண்டுகள் (பொத்தாம் பொதுவில்) என்றும் மதிப் பிடப்பட்டுள்ளது!

வாழ்க்கை நீட்சி என்பதன் பொருள், அதே அளவு நல வாழ்வு - நலமுடன் நோய் நொடி தாக்குதல் இன்றி வாழலாம் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம் என்று அதே மய்யத்தின் CDC Report) அறிக்கை தெளிவாக்குகிறது!

நீங்கள் நீண்ட காலம் வாழ விரும்பினால் அதுவும் நலத்துடன், ஏற்கெனவே நீண்ட வயது நலமுடன் வாழ்ந்தவர்களின் நிரூபிக்கப்பட்ட பனிரெண்டு பழக்க வழக்கங்களைத் தெரிந்துகொள்ளுதல் அவசியமே!

1. நீண்ட காலம் வாழ விரும்பும் நண்பர்களா நீங்கள்? உடனடியாக நீங்கள் செய்யவேண்டியது உங்களிடமி ருக்கும் கெட்ட பழக்க வழக்கங்களை இன்றுமுதலே விட்டுவிட்டு சரியான வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளுங்கள்!

புத்திசாலிகளான அமெரிக்கர் களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய 30 பாடங்கள் என்ற நூலில் கார்ல் பில்லிமெர் (Karl Pillemer) என்பவர், 65 வயதுமுதல் 108 வயது வரை வாழ்ந்த சுமார் ஆயிரம் பேர்களைக் கண்டு அளவளாவியதில் அவர்களின் கருத்துப் பிழிவு என்ன தெரியுமா?

உங்கள் உடம்பை நீங்கள் நூறு ஆண்டுகள் வாழப் போகும் மனிதர் என்ற வகையில் கவனமுடன் எண்ணி, அதற்கேற்ப நடந்துகொள்ளுங்கள்.

பலரும் இளம் வயதில் நாம் நீண்ட நாள் இருக்கப் போகிறோமா என்ன? எனவே, ‘இப்படித்தான் வாழவேண்டுமென்று’ நெறி வாழ்வு வாழாமல், ‘எப்படியும் வாழலாம்‘ என்ற லைசென்ஸ் வாழ்க்கை முறை வாழுவார்கள்; கண்டதைச் சாப்பிட்டு, கண்டபடி இருப்பர்; புகை பிடிப்பர். பிறகு நவீன மருத்துவ அறிவியல் காரணமாக, சராசரி வாழ்வை நீட்டும் நிலையில், சாக முடியாத நோயுற்ற வாழ்வினால் நொடித்து, நொய்ந்து வேதனையோடு வாழும் அவலத்திற்கு ஆளாவார்கள்!

எனவே, வாழ்க்கைக்கு ஆண்டு களை நீட்ட எண்ணுவதைவிட,  பல ஆண்டுகளுக்கு வாழ்வை அருமை யாக ஒளிவிடச் செய்து வாழ இளமை முதலே திட்டமிடுங்கள். திசை மாறாமல் சென்றால் திண்மையான வாழ்வு நமக்குக் கிட்டியே தீரும்!

2. ‘தன் பெண்டு, தன் பிள்ளை, தானுண்டு’ என்ற சின்னதோர் கடுகு வாழ்க்கை வாழாமல், தொல்லுலக மக்கள் எல்லாம் எம் மக்கள் என்ற தொண்டற மனப்பான்மையோடு, தோழர்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்; தொண்டு அமைப்புகளில் உங்களை இணைத்துக் கொண்டுசமூகத்தொண்டறம்செய் வதில் இன்பம் பெருக்குங்கள்; உங்கள் வாழ்வு உன்னதமான நீண்ட உயர்வாழ்வாக அது அமைவது உறுதி! உறுதி!!

தனித்தே கிடந்து, குறுகிய குடும்ப வட்டத்தையும் தாண்டாதவர்கள் ஒரு போதும் தம் ஆயுளை வளர்த்துக் கொண்டவர்களாகவோ, மகிழ்ச்சியும், இன்பமும் குலவும் நல வாழ்வாக தத்தம் குடும்ப வாழ்வை அமைத்துக் கொள்ளவோ முடியாது!

நோயுள்ளவர்கள்கூட, இப்படி தொண்டுஅமைப்புகளில்தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றும் போது, அவர்களை வாட்டி வதைக்கும் வலியும் பறந்தோடி, வலிமையையும், மகிழ்ச்சியையும் அழைத்து வந்தது என்று கூறும் அனுபவம் அதன்மூலம் ஏற்படும்; எனவே, தொண்டறம் துவக்குங்கள்!

இது நாம் எல்லோருக்கும் பரிந் துரைக்க முடியாத ஒன்று என்றாலும், மதுப் பழக்கத்தை உணவு - மருந்துபோல் எடுத்துக் கொள்ளும் பன்னாட்டு மனிதர்களுக்கும் பொருந்தும் என்பதால்,  அதைக் கூறுவது தவறாகாது!

3. ‘ரெட் ஒயின்’ (சிவப்பு ஒயின்) அளவோடு அன்றாடம் பருகுங்கள்!

2013 இல் வந்த ஹார்வேர்ட பல்கலைக் கழக ஆய்வு ஒன்று கூறுகிறது; ரெட் ஒயினில் உள்ள ‘ரெஸ்வர்ட்டிரால் காம்பவுண்டு (Resvertrol)   நல்ல உடல்நலத்தையும், ஆயுள் நீட்சியையும் கொடுக்கும்; காரணம், ஆண்டி ஆக்சிடெண்ட் போலிஃபெனனோல், ரெஸ்வாட்ரோல் என்பது ஒருவகை புரதச் சத்தை (சர்ட்டியூன் என்ற புரதச் சத்தை) பெருக்கி, முதுமையையும், நோய்களையும் எதிர்த்து தடுக்கும் ஆற்றலைத் தருகிறது! Aslog process)

நீங்கள் ஒயின் சாப்பிடாதவர்களாக - நம்மைப்போல - இருப்பவர்களானால் கவலைப்படவேண்டாம், (கிரேப்ஸ்) திராட்சை,வேர்க்கடலை,பெர்ரீஸ் இவைகளை நிறையச் சாப்பிடுங்கள். ரெஸ்வெர்ட்டிரால்,தானேஅவை மூலம்கிடைக்குமே!அல்லதுரெஸ் வர்ட்ரோலுக்கு சப்ளிமெண்ட் என் னவோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் அதேபலன் கிட்டும்

4. மூளை பலத்தைக் கூட்டுக! நூட்ராப்பிக்ஸ் (Nootropics என்ற ‘ஸ்மார்ட்’ மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள், செறிவுத்திறன் (Cognition) நினைவாற்றல் (Memory) குறிவை மய்யப்படுத்தும் பயிற்சி Focus) 
முதலிய மனோ பலத்தை, அவைப் பெருக்கும்.

பிரிசிடாம் (Pirceetam) என் பதை உலகம் முழுவதும் மறதி நோயை விரட்டும் மருந்தாகப் பயன்படுத்துகின்றார்கள்.

(இவைகளை நீங்களே தேர்வு செய்யாதீர்கள்; உங்கள் மனநல மருத்துவர், நரம்பு உணர்வு மருத்துவர்களிடம் கலந்தாலோசித்த பிறகு அவர்கள் உங்களைப் பரிசோதித்து சொன்னால் செய்யுங்கள்).

Dark சாக்லெட் - குறிப்பு கருப்பு சாக்லெட் (கோகோ அதிகம் உள்ளது) இதயத்திற்கும்கூட நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்!

‘கிரீன் டீ’ - பசுந்தேநீர்(Green Tea) இவைகளில் நூட்ராபிக்ஸ் உள்ள அதே சத்து உள்ளது! மறவாதீர்!!

5. குளிர்ந்த காற்றில் உங்களைப் பழக்கிக் கொண்டு, குளிர் தட்பவெட் பத்தை அணைத்துப் பழகுங்கள்!

மிச்சிகன் (Michigen University) பல்கலைக் கழக ஆராய்ச்சி என்ன கூறுகிறது தெரியுமா? பிராணிகள் - புழுக்கள், ஈக்கள், மீன்கள் போன்ற குளிர்ந்த ரத்தப் பிராணிகள் எல்லாம் இந்த குளிர் தட்பவெட்பத்தால் நீண்ட காலம் வாழுகின்றன!

இந்த ஆய்வு, நாளடைவில் இந்தக் குளிர் தட்பவெட்பம் நம் உடம்போடு இணைந்து நீண்ட நாள் வாழச் செய்கிறது! வாழ் நீட்சியை ஒழுங்குபடுத்துகிறது ‘TRPAI’ என்ற சேனல் இதைச் சொல்கிறது!

இது உடன்பாடில்லையா? கடுகைச் சேர்த்துக் கொள்ளுங்கள்; வாஸ்பி(Wasbi)’ கடுகு இவை உங்கள்  ஆயுள் நீட்ட உதவுமே!

இதுவும்கூட பிரச்சினைக்குரியதே - உடன்படாதவர்கள் பலர் இருக்கலாம். காய்கறி உணவுக்கு மாறுங்கள்!
-விடுதலை,22.12.16