நம் வாழ்வில் பெறற்கரிய செல்வங் களில் முக்கியம் நல்ல நண்பர்கள்.
நட்புறவு என்பது இரத்த உறவை விட கெட்டியானது- மட்டுமல்ல; நெருக்கடி காலத்தில், துன்பத்தில் நாம் உழலும்போதும், துயரத்தில் மூழ் கும்போதும் நமக்கு ஆறுதல் அளிக்கும் மாமருந்து நட்புள்ளம் கொண்ட நல்ல நண்பர்களே என்பது மறுக்க முடியாத உண்மை!
பள்ளி, கல்லூரி இவைகளில் படித்த காலத்திலும், இன்றும் (கழகப் பணிகளில் மூழ்கியுள்ள இந்த காலகட்டத்திலும்) நட்புறவான நல்ல நண்பர்களிடம் மனந்திறந்து பேசுதலும், அவர்கள் தரும் ஆறுதல் வார்த்தைகளும், அன் பொழுக அவர்கள் அரவணைத்து ஆதரவு பொழிவதும் எத்தனையோ இடர்ப்பாடுகளிலிருந்து எம்மைக் காப் பாற்றி வருகின்றன!
பெறுதற்கு அரிய உண்மை அன்பு பொழியும் ஆழமான பண்புகளின் பெட்டகமான சிறந்த நண்பர்களை நாம் பெறும்போது, அள்ள அள்ளக் குறையாத கருவூலத்தையே பெற்றது போல் மகிழ்ச்சி அடைதல் வேண்டும்.
எனது உணர்வுகள் எப்போதும் அப்படித்தான். நமது உற்ற நண்பர் களுக்குத் துன்பமோ, நோயோ, தொல்லையோ, துயரமோ ஏற்படும் போதெல்லாம் அது நம்மை, நம் உள்ளத்தை, நம் உடலைத் தாக்கிய உணர்வையே பெற்று, அதிலிருந்து வெளிவர முடியாத வேதனையை நான் அடைவதுண்டு.
கைம்மாறு கருதாத, தன்னலம் பேணாத நட்பு என்பதன் இலக்கணம் அதுதானே!
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு (குறள் 781)
“நட்பைப் போல, ஒருவன் தனக்குச் செய்து கொள்வதற்கு அருமையான செயல்கள் என்று வேறு எவையும் இல்லை.அந்தநட்பினைப்போல எதிரிகளின் செயல்களைத் தடுப்பதற் குரிய அருமையான பாதுகாப்பு நட வடிக்கைகள் என்று வேறு எவற்றையும் சொல்வதற்கு இல்லை’’ என்பதே இதன் உரையாக்கம் ஆகும்!
அவர்கள் சம்பாதிக்கும் பொருளை வைத்துத்தான் இவ்வுலகில் மனிதர் களைப் பாராட்டுகிறார்கள் - எடை போட்டுப் பார்க்கிறார்கள்.
அது சரியான அளவுகோல் அல்ல! கொழுத்த சம்பளம் அவர் வகிக்கும் பதவிக்கே தவிர, அவரது பண்பிற்காக அல்ல; அவரது ‘‘மனிதத்தை’’ அளந்து நிர்ணயம் செய்த தொகை அல்ல அது!
அதுபோல, நல்ல நண்பர்களை -உயிர் நண்பர்களை - நாம் இழந்து தவிக்கும்போது, வெளியில் சொல்லொணாத் துன்பக் கணைகள் எம்மைத் துளைக்கும்!
அரும்பாடுபட்டு, தனக்குள்ள சிறிய நிலப்பரப்பில் விதைத்த, முற்றிய கதிர் அறுவடைக்குத் தயாராக இருக்கும் கட்டத்தில், திடீர்ச் சூறாவளியால் அது நாசமாக்கப்பட்டு, பயனற்று விழுகையில், அந்த ஏழை உழவனின் மனம் என்ன பாடுபடும்? அவனது துயரத்தைத் தான் வார்த்தைகளால் வடித்துவிட முடியுமா?
அதுபோல்தான் நமது பல ஆண்டு கால நட்பை - கண்களை திடீர் மின்னல் பறித்துப் போவதுபோல - பறித்துச் செல்லும்போது அந்த இழப்பு ஏற்படுத்திடும் சோகம் - துயரம் எப்படி வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியும்?
எனது பள்ளி, கல்லூரி கால நண் பர்களை நான் இழந்தபோதும், அவர்கள் என் கொள்கை, லட்சியங்களுக்கு மாறானவர்களாகவும், என்னால் கடு மையாகத் தாக்கப்படும் கொள்கைகளில் நம்பிக்கை உடையவர்களாகவும் இருந் தாலும், அவர்களின் பரஸ்பர நட்பு வற்றாத ஊற்றாகத்தான் இருந்தது!
இதுபோல பன்மடங்கு அதிகம் கழகத் தோழர்களை இழக்கும்போது.
நான் எண்ணி எண்ணிப் பார்க் கிறேன். தந்தை பெரியார் மணமக் களுக்கு அறிவுரை கூறுகையில்,
‘உற்ற நண்பர்களாக’ வாழுங்கள் என்பார்!
உறுதிமொழி எடுக்கச் சொல்லும் போதும் ‘உற்ற நண்பர்களாக வாழ் வோம்‘ என்று உறுதிமொழி கூறி, பின்பற்றச் சொல்லுவார்.
அதன் ஆழம், அருமை - பெருமை - தத்துவம் - பொருள் இந்த நட்புதான்! எதையும் எதிர்பார்க்காமல், வருவது துன்பம் என்று நமக்குத் தெரிவதற்குமுன்பு நமது உற்ற நண்பர்களுக்குத் தெரியும்போது, நமக்கு அவர்கள் தடுப்புக் கேடயமாய், காக்கும் கவசமாய்த் திகழுவார்கள் என்றும், ஆழமான நட்பு எப்படி பாதுகாப்பு ஆயுதமாகவும் பயன்படுகிறது என்றும் கூறும் வள்ளுவரின் கருத்தும், எளிதாக எதையும் எடுத்தியம்பும் தந்தை பெரி யாரின் விளக்கமும்பற்றியும் எண்ணி மகிழ்வோமாக!
உறுதியான நட்பினை - உண்மை யான நண்பர்கள் வட்டத்தை சுருக்கிக் கொள்ளாது பெருக்கிடுக! இன்பம் அதனைப் பெருக்கிடும்!
- கி.வீரமணி
-விடுதலை,1.11.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக