அன்றொரு நாள் அந்த பெரிய தோப்பில் உள்ள
மரத்தை அணைத்தேன்; மகிழ்ச்சி அடைந்தேன்.
காரணம் அது என்னை அன்பால் பிணைத்தது!
முன்பொரு நாள் மனிதனை அணைத்தேன்; துன்பத்தால் துவண்டேன்.
அவன் உதறித் தள்ளி ஓடினான்; ஓடினான்.
காரணம் கேட்டேன் அவனிடம்; அவன் சொன்ன பதில்
என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது!
‘நீ கீழ்ஜாதி; நானோ மேல்ஜாதி ஒதுங்கிப்போ!’
என்று வெறுத்த முகத்துடன் வெகுண்டு கூவினான்!
மற்றொரு நாள் வேறு ஓர் மனிதனை அழைத்தேன்;
‘அருகில் வா; அன்பைத் தா’ என்ற வேட்கையுடனே
அவனும் பதறி ஓடினான்; ஓடினான்.
ஓடிய மனிதனை நானும் விடவில்லை,
துரத்திப் பிடித்துக் காரணம் கேட்டேன்?
‘அய்யோ நான் ஓர் கீழ்ஜாதி; நீங்களோ மேல்ஜாதி!
என்னைத் தொட்டால் அந்தப் பாவம் என்னைச்
சேரும்; அடுத்த இந்த பாவப்பட்ட ஜென்மம் வேறு
பிறப்பை வேண்டி வாழும் எனக்கும்
கேடு அல்லவா உங்கள் ‘தொடுதல்’
என்றான். இவனுக்குமா இப்படி...?
புரியவில்லை எனக்கு!
வேறு ஒருநாள் இன்னொரு மிகக் கறுப்பு
மனிதனைக் கண்டேன்; கைகுலுக்கினேன்.
அவன் பதறவில்லை; உதறவில்லை.
மாறாக கதறி அழுது கண்ணீர்க் கடலை
என்மீது பாய்ச்சினான்!
‘நீங்கள் தானய்யா என்னையும்
அரவணைத்து அன்பைப் பொழிந்தீர்!
இது என்வாழ்நாளில் இதற்குமுன் கிடைக்காத சுகம்!
என்னே பேறு; எத்தனை மகிழ்ச்சி. என்னுள் தெரியுமா?
எனவேதான் கதறினேன்; களித்தேன்; துள்ளினேன்;
குதித்தேன்! மகிழ்ச்சி. கண்ணீர் ஊற்றைத்
தந்தது’ என்றான்.
பரவாயில்லை; மரத்தை மண் காத்ததுபோல
இந்த மனதை அவன் புரிந்து மகிழ்ந்தான்
புல்லரித்தது; புளகாங்கிதம் பெருகியது!
சில மிருகங்கள் - துட்ட மிருகங்கள் - நெருங்க முடியாது
வேறு சில பிராணிகள் - சூழ்ச்சிகள் நிறைந்தவை
குழி பறித்த மண்ணால் எதிரே வந்த மனிதனை
கண்ணைப் பறித்து மண்ணுக்குள் தள்ளுமாம்!
மனிதர்களில் கூட அவ்வகை ஏராளம், ஏராளம்!
துட்ட மிருகங்களில்கூட ஜாதியில்லை
‘நல்ல?’ மனிதர்கள்கூட ஜாதியால் சாய்கின்றனரே!
ஜாதி வெறி, அவனை நெருங்கவிடாமல்
துரத்துகிறது துரத்துகிறது; துரத்திக்
கொண்டே உள்ளது!
தன் சொந்த இரத்த வாரிசைக்கூட
கொலை செய்யும் புத்தி - எந்த மிருகத்திடம்
கற்றானோ புரியவில்லை - புரியவில்லை!
இந்தக் கொலைக்கு இவன் இட்ட பெயர் என்ன தெரியுமா?
‘கவுரவக் கொலையாம்!’
‘உங்கள் கவுரவம்‘ எங்கே இருக்கிறது?!
உங்களுக்கு நோய் வந்தால் மருந்து தரும்
மருத்துவர் உங்கள் ஜாதிக்காரரா?
உங்களுக்குப் பணம் தரும் ‘முதலாளி'
முதல், உங்களுக்கு துணி மணி தரும்
மானம் காக்கும் மனிதர்கள் உங்கள் ஜாதி
தானா? உறுதியாய் சொல்லுங்கள் பார்ப்போம்!
ரத்தம் தரும்போது, ஜாதி பார்த்தா
ஏற்றுகிறார்கள்? மதம் பார்த்தா உறுப்புக்
கொடை? அட மவுடீக மண்டூகங்களே!
பகுத்தறிவுப் பகலவனின் வெளிச்சத்திற்குப்
பிறகும் இருட்டை விரும்பும் திருட்டு
மனிதனாக ஏனோ இருக்கிறீர்கள்?
மரம் காட்டும் அன்பின் தரம்
அருளின் பொழிவு, ஆறறிவு
என்று பீற்றிக்கொள்ளும் உன்னிடம்
இல்லையென்றால் நீ ஒரு மனிதனா?
மரம் என்றோ மண் என்றோ கூட
கூற முடியாமல், வேறு சொல்லைத்
தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே
ஓடுகிறேன்!
தெரிந்தால் சொல்லுங்கள்!
புரிந்தால் வெல்லுங்கள்!
மரத்தினை அணைத்தேன்
மகத்தான பாடத்தைக் கற்றேன்
ஜாதி பார்த்து பூக்காது அது!
ஜாதி பார்த்து காய்க்காது அது!
ஜாதி பார்த்து கனி தராது அது!
தன்னை வெட்டும் கோடரி மனிதனுக்கும்
நிழலையும், கனியையும் தரும்.
அதன் பெருந்தன்மைதான் என்னே!
மரமே உனது விருப்பு - வெறுப்பற்ற
பாடம்! எங்களுக்கு - மனிதர்களுக்கு
இன்னும் கற்றுக்கொள்ளாப் பாடம்!
இது கவிதையல்ல; கருத்தோட்டம் - அவ்வளவுதான்!
(பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழக ஆய்வுத் தோட்டங்களில் ஒன்றான ஆச்சாம்பட்டியில் சில நாள்களுக்கு முன் சென்றபோது ஏற்பட்ட அனுபவம், சிந்தனையாக ஓடியது. அதுவே இந்த வாழ்வியல்!
-விடுதலை,11.11.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக