சென்ற மாதம் அக்டோபரில் இரண்டு முக்கிய நண்பர்கள் மறைவு என்னுள் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவ்விரு நண்பர்களும் வெவ்வேறு துறையினர். என்னிடம் அவர்கள் காட்டிய நட்புறவும், அவர்களை மன மார நானும், எங்கள் குடும்பத்தவரும் நேசித்த பாசத்துக்குரிய நட்பும் என்றுமே மறக்கவொண்ணாதது.
வடலூரில் வாழ்ந்த நண்பர் நல்ல.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு தலைசிறந்த மனிதநேயர். திராவிடர் இயக்கப் பற்றாளர்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு (குறம் 281)
என்பதற்கு இலக்கணமானவர்.
தனது அன்னையாரிடம் அவர் கொண்ட பாசம் (அல்ல அல்ல ‘பக்தி’) வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தாகும். அவர்கள் மறைந்தபோது அவர்களை அடக்கம் செய்த அந்த நினைவிடத்தையே ஒரு முக்கிய பகுதியாக்கி (அவரின் மனநிறைவு அதில்; நாம்எப்படி குறை காண முடியும்?) ஒவ்வொரு ஆண்டும் பசித்த வயிற்றிற்கெல்லாம் சோறிட்டு மகிழ்வதில் முழு திருப்தி அடைபவர்.
அவரது பண்புகள், அடக்கம், எவரிடமும் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று பேசத் தெரியாதவர்; உதவி கேட்டவர்களுக்கும், கேட்காதவர் களுக்கும் குறிப்பறிந்து உதவுபவர். பல ஆண்டுகளாக அவர் எங்கள் குடும்ப நண்பர். பசித்திருக்கக்கூடாது எவரும் என்ற வள்ளலார் கொள்கை உடையவர்.
உடல்நலம் குன்றி சில மாதங்கள் இருந்தபோதும், நம்மைக் கண்டு பேசும்போதும், அதன் பிறகும் புதுத் தெம்பும், முகமலர்ச்சியும் பெறுவார்! அடிக்கடி பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரனிடம் விசாரிப்பார்.
சென்னை மருத்துவமனைக்கு வந்து திரும்பும்போது பெரும்பாலும் எங்கள் வீட்டிற்கு வந்து நலம் விசாரிக்கத் தவறமாட்டார். எனது நலம் குறித்து மிகவும் கவலை கொள்வார் - எனது வாழ்விணையர், அவரை அன்பொழுக உபசரித்து, வற்புறுத்தி சிற்றுண்டி அளித்து மகிழ்வார்!
நமது இயக்க அறக்கட்டளை உறுப்பி னராகவும் இருந்தவர்; அவரே உடல்நலம் காரணம் காட்டி, விலகிக் கொண்டார்.
அருமை நண்பர் திருச்சி கே.என்.நேரு அவர்களுக்கு மிக நெருக்கமானவர்.
இயக்க அறக்கட்டளைக்கு உதவிகள் ஏராளம் செய்தவர். வடலூர் அருகில் தந்தை பெரியார் படிப்பக நூலகம் சிறப்பாக இயங்க இடமும் தந்து, கட்ட டமும் கட்டித் தந்த கொடை வள்ளல். தஞ்சையில் உள்ள நமது பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழக வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றியவர். எனவே, அங்கே அவரது பெயரிலும், குடும்பத்தாரின் பெயரிலும் பெரும் கட்டடம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது!
அவரைப் போன்றே அவரது அருமைச் செல்வன் நண்பர் திரு.கி. இளங்கோவன் அவர்களும், அவரது உறவுகளும் நம்மிடம் மிகுந்த அன்பு காட்டுபவர்கள்.
இதுதான் நமக்கு இன்றுள்ள ஆறுதல். கைம்மாறு கருதாத நட்பு - அரிதிலும் அரிதல்லவா!
அதுபோலவே,நண்பர் கா.ஜெகவீரபாண்டியன்.இவர்தேசி யத்தில் வளர்ந்தவர். சுமார் 40 ஆண் டுகளுக்குமுன்பே நேரு சோஷலிஸ்ட் அமைப்புகளை ஏற்படுத்திய முற் போக்குச் சிந்தனையுள்ளவர். இன்றைய மூத்த அகில இந்திய காங்கிரஸ் தலை வர்கள் அன்று இவருடன் இளைஞர் காங்கிரஸ் நண்பர்கள். சஞ்சய் காந்தியுடன் அறிமுக நண்பராக நெருக்கடி காலத்தில் திகழ்ந்தவர். பிறகு காங்கிரசிலிருந்து விலகி, சோஷலிசத் தலைவர்களிடம் நெருக்கமானார்.
அனைத்திந்திய தலைவர்களில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் பேரன்பிற்குப் பாத்திரமானவர். தமிழ்நாடு என்றால், நண்பர் பாண்டியன், எப்படி இருக்கிறார் என்று கேட்பார். பெரியார் மய் யப் பணிகளில் அவருக்குப் பங்குண்டு.
மனிதநேய நண்பர்கள் குழுவின் செயலாளராக இருந்து அதனை சிறப்பாக நடத்தியவர்.
அவர் சமூகநீதி என்ற பெயரில் ஒரு கட்சியை உருவாக்கினார். அரசியலில் அவர் பல நிலைகளை எடுத்தார். கடை சியாக அவர் அ.தி.மு.க.வில் இணைந்தார்!
அவரது அரசியல் கட்சி மாற்றங்களோ, எடுத்த நிலைப்பாடோ அவரிடம் நாம் கொண்ட நட்புறவுக்கு ஒருபோதும் குறுக்கீடாக அமையவில்லை.
அவர் அக்காலத்திலேயே புரட்சிகர மான வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்து - இஸ்லாமிய சகோதரியை மணம் புரிந்தவர். நல்வாழ்வு நடத்தியவர்.
மணவாழ்வினைச் சிறப்பாக நடத்தி, தனது மருமகனையும் - தனது பிள்ளையாகக் கருதி வாழ்ந்தவர். சில நாள்களுக்குமுன் உடல்நலம் குன்றி ஜெகவீரபாண்டியன் மறைந்தார்.
அவரும், நாங்களும் எத்தனையோ போராட்டங்களை டில்லியிலும், சென்னையிலும் இணைந்து நடத்தி யிருக்கின்றோம். எல்லா அகில இந்திய தலைவர்களாலும் மதிக்கப்பட்டவர். அரசியல் கட்சிப் பார்வையில் நாங்கள் பிரிக்கப்படாமல், துவக்கத்தில் எப்படிப் பழகினோமோ, அதுபோலவே இறுதி வரை பழகியவர்.
‘தஞ்சையார்’ என்று நண்பர்கள் அன்போடு அழைக்கப்படும் தஞ்சை மூத்த வழக்குரைஞர் இராமமூர்த்தி அவர்கள், அவரது நெருங்கிய நண்பர் களில் முக்கியமானவர்!
நல்ல நட்புறவுகளை இழப்பது மிகப்பெரிய சோகம். என்ன செய்வது - எதைத் தவிர்க்க முடியாதோ, அதை ஏற்கத்தானே செய்யவேண்டும்!
‘அன்பிற்கும் உண்டோ அடைக் கும்தாழ்?’
-விடுதலை,2.11.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக