பக்கங்கள்

திங்கள், 21 நவம்பர், 2016

பேசும் பேச்சு - எப்படி? - யோசிப்போமா


வாழ்வில் நாம் அனைவரும் கற்றுத் தெளிந்து, கடைப்பிடிக்க வேண்டிய செய்திகளும், நடைமுறைகளும் ஏராளம்! ஏராளம்!!
வாசிப்பது
படிப்பது,
கற்பது
அறிவது
இவை எல்லாம் ஒன்றல்ல. வெவ்வேறான பல்வேறு படிநிலைகள் என்பதை நாம் அசை போட்டுச் சிந்தித்தால் மட்டுமே உணர முடியும்.
அறிதல் வேறு, புரிதல் வேறு, தெளிதல் வேறு - இல்லையா?
நாம் அறிந்ததையெல்லாம் புரிந்து கொண்டோமா?
புரிந்து கொண்டதையெல்லாம் பற்றி தெளிவடைந்துள்ளோமா?
தெளிவடைந்த பிறகும்கூட அவற்றை வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகத் துணிதல் நம்மில்
ஏன் பலருக்கு வருவதில்லை?
வாழ்க்கைக்குக் கேளிக்கை அவசியம்தான் ஆனால் கேளிக்கையே வாழ்க்கை ஆகலாமா?
உணவுக்கு உப்பு தேவைதான், ஆனால் உப்பே உணவாக முடியுமா?
பேசுவது என்பது விரும்பத்தக்க தேவைகளில் ஒன்றுதான் ஆனால் வெறும் பேச்சு மட்டுமே
பயன் தந்துவிட முடியுமா?
பேசுவதுகூட உரையாடலின் முக்கிய கூறுதான்; அப்பேச்சு பொருள் பொதிந்த தாகவும், செயலுக்கான முன்னோடி யாகவும், அமைந்தால்தான் பேச்சுக்குப் பயன்; பேசியவருக்குப் பெருமை!
திருவள்ளுவர்தம் திருக்குறளில் பயன் இல சொல்லாமை என்று ஒரு அதிகாரத்தினையே பத்து குறள்களில் எழுதியுள்ளார்களே! அறத்துப்பாலில் 20ஆம் அதிகாரமாக இது இடம் பெற்றுள்ளது!
சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலாச் சொல்            (குறள் 200)
பொருள்: சொற்கள் பலவற்றுள்ளும் பயன் அளிக்கக் கூடிய சொற்களை மட்டுமே தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும்; சொற்களில் பலன் ஏதும் அளிக்காத சொற்களை ஒரு போதும் சொல்லவே கூடாது.
அதற்கு முந்தைய குறளில் வள்ளுவர் - குற்றமற்ற அறிவினை ஒருவர் உடையவரா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டுமானால், அவரது பேச்சை வைத்து எடை போட்டு
ஆய்ந்து அறியுங்கள் என்று நமக்கு அறிவு றுத்துகிறார்!
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்                              (குறள் 199)
இதன்
பொருள்: மயக்கத்திற்கு இடமில்லாத குற்றமற்ற அறிவினை உடையவர்கள், மறந்தும் பொருளில்லாத பயனற்ற சொற்களை ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்.
அது மட்டுமா?
நாம் பேசும்போது - கேட்பவர்கள் விரும்பிக் கேட்குமாறு அப்பேச்சு அமைதல் வேண்டும். என்ன இவரிடம் வந்து மாட்டிக் கொண்டோமே எப்போது இவரிடமிருந்து விடுதலை பெறுவோம் என்று சலிப்பும், சங்கடமும் கொள்ளுமாறு செய்யலாமா?
இதை விட நமக்குத் தெரியாது, நாம் உருவாக்கிய அவமானம் வேறு உண்டா?
சள சள வென்றோ, தொண தொண வென்றோ பேசுவதுடன் நான், நான் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை கூறுவது நம்மை நாமே மற்றவர் முன் மதிப்பிழக்கத் தோண்டிக் கொள்ளும் படுகுழியாகும்! - மறவாதீர்!
அது மட்டுமா?
நாம் பேசும் பேச்சு கருத்தாழம் மிகுந்ததாக குறிப்பாக உரையாடலில் அமைதல் மட்டும் முக்கியம் அல்ல.
எக்காரணத்தைக் கொண்டும் நம் குரலை பிறர் முன் உயர்த்திப் பேசாமல் மென்மையாகக் கூறப் பழகிக் கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது!
(எனக்கே இந்த குறைபாடு பற்பல நேரங்களில் உண்டு; காரணம் ஆணவம் அல்ல. நாம் கூறும் கருத்து 100-க்கு 100 ஆதாரபூர்வமானது என்ற உறுதியால் தான். என்றாலும் விரும்பத்தக்கது அல்ல. நாம் இப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும் என்று பல நேரங்களில் உணர்ந்தது உண்டு. பெரும்பாலும் இதனைக் கடைப் பிடிக்க நான் இடைவிடாத முயற் சியை இன்னமும் செய்து கொண்டு தான் வருகிறேன்).
Asserting என்று உறுதிபட அழுத்திச் சொல்லுதலைக்கூட மென் குரலில் கூறலாமே!
ஜப்பானியர்களிடம் நாம் மரியா தையை எவ்வளவு கற்றுக் கொள்ள வேண்டுமோ, அதே அளவுக்கு அவர்கள் எவரும் உரக்கக் கூடப் பேச மாட்டார்கள். மென்மையாகத் தான் மெல்லிய குரலில் பேசுவர். அங்கு மட்டுமல்ல மேலை நாட்டவர் பலரும் இப்படித்தான்.
ஓங்கிய குரலில் பதில் அளிக்கக் கூட மாட்டார்கள். தாய்லாந்து மக்கள் கூட மென் குரலில்தான் பேசுவர்.
ஆனால், நாம் தான் பட்டாசுப் பேச்சு வெடித்து ஊர் அறிய, உலகறிய முழங்கிடும் பேச்சுப் பண் பாடு என்ற பொருள் குற்றவாளிகள் ஆவோம்!
எப்போது மாறுகிறோமோ, அப் போது தான் மனிதம் வளரும், உயரும்!
சிந்திப்போமா?
-விடுதலை.1.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக