நமது வாழ்க்கையை ஒவ்வொரு மனிதரும் செம்மையான, சீர்மையான, சிறப்பான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையாக வாழ முயலவேண்டும் ஒரு நாளில்.
நம்மால் முயன்றால் முடியும். சாத னையாளர்களாக உலகில், பல்வேறு துறையில் சரித்திரம் படைக்கும் மாமனிதர் களுக்குக்கூட கிடைப்பது 24 மணி நேரம் தான்!
அறிவார்ந்த முறையில், திட்டமிட்டு, உழைத்து வெற்றி பெறுகிறவர்கள், அந்தக் கால அளவினை பயனுறு வகையில் செலவழிக்கிறார்கள்.
காலம் என்பது அரிதானது! அதை இழந்தால் மீண்டும் எவரும் பெறவே முடியாது. இழந்த செல்வம் திரும்பப் பன்மடங்காகக்கூட கிடைக்கும். இழந்த காலம்....? ஒரு போதும் மீண்டும் கிட்டாது. நினைவில் கொள்ளுங்கள்.
தொலைந்த உடல் நலம் - பெரும் பகுதி அப்படி என்றாலும் -ஓரளவு மீண்டு, மீண்டும் சிறப்பாக நல்ல உடல் நலத்தோடு வாழமுடியும்.
எனவே காலத்தின் அருமையை உணர்ந்து, வீணே செலவழிக்காமல், தனக்கும், தான் சார்ந்த இல்லம் முதல் நாடுவரை எல்லோருக்கும் பயன்படும் வகையில் வாழ்வை அமைக்கலாம்.
குறித்த காலத்தில் குறித்தபடி எது வும் நடைபெற, நல்லதோர் பழக்கத்தினை நம்மில் பலர் ஏற்படுத்திக்கொள்ளாததனால்தான், நாம் பற்பல நேரங்களில் அவதிக்கும், தோல்விக்கும் ஆளாக வேண்டியிருக் கிறது.
மற்ற நாடுகள் மேற்கு, கிழக்கு எதுவானாலும், காலத்தை அவர்கள் வீண டிக்காமல், குறித்த காலத்தில் பணியாற்றி வெற்றியைக் குவிக்கின்றனர்.
அமெரிக்காவில், ஒரு சொற்றொடர் உண்டு. ‘காலம் என்பது அவ்வளவும் பணம்' என்பது. ‘Time is money’ அவர்களுக்கு.
‘எதுவும் நம் கையில் இல்லை; எல்லாம் தலையெழுத்துப்படிதான் நடக் கும்' என்ற தலைவிதித் தத்துவம் நம் மக்களை வெகுவாகப் பாழடிக்கும், நமது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையான தத்துவம் ஆகும்.
‘‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’’ என்ற பண்பாட்டு அடிப்படையில், ‘முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்‘, ‘மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு’ என்ற உயர்ந்த மனிதகுல மாண்புகள் மலர்ந்திருந்த சமுதாயத்தில் ஏற்பட்ட ஆரியப் பண்பாடு, ‘கர்மா, விதிப்பயன்’ போன்ற கவைக்குதவாக் கருத்துகளின் ஊடுருவல், வளர்ச்சியடையாத ஒரு தேக்கத்தினை உருவாக்கியுள்ளன!
‘எல்லாம் அவன் செயல், எதுவும் நம் கையில் இல்லை என்பது மனித முயற்சிக்கு தன்னம்பிக்கைக்கு வேட்டு வைத்துச் செய லற்றவர்களாக (Man is only passive and has no active role) மனிதர்களை ஆக்கிடும் தத்துவம் ஆகும். அவன் தானே சுயமாக சிந்தித்து, சொந்தமாக சாதிக்கும் ஆற்றல் பெற்றவனாக இல்லை என்ற தத்துவத்தைக் கடவுள் நம்பிக்கை போதிப்பதால்தான், தந்தை பெரியார் அவர்கள் “கடவுளை மற, மனிதனை நினை'' என்றார்! எனவே இதனை கடவுளுக்கு எதிரான கருத்து என்று வர்ணிப்பதைவிட, மனித குல வளர்ச்சிக்கு உதவிடும் தத்துவம் என்ற சரியான பார்வையில் பார்த்தால், வாழும் வாழ்க்கை ஒளி மிகுந்த ஒன்றாக இருக்கும்!
மனித வாழ்வு சிறப்பாக - குடும்பம் ஆனாலும், குழுமம் ஆனாலும், நாட் டின் அமைப்பு ஆனாலும் - அநேக சிந் தனையாளர்கள் அன்று முதல் இன்றுவரை பலர் சிந்தித்து, தங்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தித் தந்துள்ளனர்.
அவைகளால் நாம் பயன் அடையலாம்.
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டு களுக்கு முன்னால் வெளிவந்தது ஒரு நூல்! ஸ்டீபென் ஆர்.கவி(Stephen R.Covey)
என்ற அறிஞர் (The seven Habits of Highly Effective People) ‘பயனுறு வாழ்க்கை வாழ்வோரின் ஏழு பண்பு நலன்கள்’ என்ற நூலில் மிகவும் ஆய்ந்து, ஏற்றம் தரும் ஏழு பண்பு நலன்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
அவரை உலகத்தின் பற்பல நாடுகளும், அதில் உள்ள பிரபல தொழில் நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கம்பெனிகள், அரசுகள் அழைத்து - அதை அவர் விளக்கிச் சொற்பொழிவு பணிமனைகளை (Workshop) நடத்திடுமாறு செய்துள்ளனர்.
அவரது நூல் பல லட்சக்கணக்கில் மக்களிடையே பரவியுள்ளது.
அந்நூலின் சாரத்தை இங்கே பிழி வாகத் தருகிறோம்.
அந்த ஏழு பண்பு நலன்கள்:
1) பாதிப்பால் பழுதாகா அறிவுத்திறன்.
(Be Pro Active)
2) மனதில் இலக்கினை எட்டும் துவக்கம்.
(Begin with an End in Mind)
3) முதலில் முடிக்க வேண்டியவையே முதலில்.
(First Thing First)
4) அனைவருக்குமே வெற்றி என்ப தான சிந்தனை.
(Think Win-Win)
5) நம்மைப் புரிந்து கொள்ளுவதைவிட சாலச் சிறப்பு - மற்றவரை நாம் புரிந்து கொள்ளுவது.
(Seek First to Understand Then To be Understood)
6) எல்லோருக்குமே லாபம்தான்.
(Synergize)
7) கூர்மை - ஒரு தொடர்பணி.
(Sharpen The Saw)
முதல் பண்புநலன்: ‘பாதிப்பால் பழுதாகா அறிவுத் திறன்’ நமது பண்புகளில் முதன்மையாக அமையவேண்டும்.
நமது வாழ்வுக்கென ஒரு குறிக்கோளை - இலக்கினை அமைத்துக்கொண்டு, அந்த இலக்கினை அடைவதற்கு உழைக்க விரும்பும் நாம், பற்பல நேரங்களில் தற் காலிகமாக நமக்கு ஏற்படும் அனுப வங்கள், இன்னல்கள், சங்கடங்கள், சவால் களையெல்லாம், அதன் போக்கில் பாதிப்பை நம்முள் அவை ஏற்படுத்தாத வகையில், நமது அறிவுத்திறனால் அவற்றைப் பின் னுக்கு தள்ளி ஆழ்ந்து ஆக்கரீதியாக சிந்தித்துச் செயல்படும் பக்குவத்தைப் பெற்றாக வேண்டும்.
நாம் ஒரு திட்டமிடுபவராகச் செயல்பட வேண்டுமே தவிர, சூழ்நிலைகள் நம்மை திட்டம் ஆக ஆக்கிக் கொண்டு செயல்பட வைக்கும் நிலைக்கு பலியாகக்கூடாது. (It Seeing yourself as a Programmer, not as a Programme being acted out.)
ஒரு சம்பவத்தின் நிகழ்வுக்கும் அது நம்முள் ஏற்படுத்தும் தாக்கத்திற்கும் இடையே ஓர் இடைவெளி உள்ள வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி, நமது குறிக்கோளுக்கு அந்நிகழ்வு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் நாம் இலக்கில் குறியாய் இருந்து சிந்தித்துச் செயல்படுவதே நம்மைப் பயனுறு வாழ்க்கை வாழச் செய்யும் முதல் படியாக அமையும்.
சூழ்நிலை, சுற்றுச் சார்பு - நிகழ்வுகள் என்ற சூழல் நம்மை நோக்கி வரும்போது, நமது அறிவுத் திறனால் அதில் அடித்துச் செல்லாதவாறு தலையை உயர்த்தித் தப்பித்தல் மூலமே நாம் நாமாக வாழ முடியும் என்பதே அதன் சுருக்கமான தத்துவம் ஆகும்.
(தொடரும்)
- கி.வீரமணி
-விடுதலை,26.11.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக