பக்கங்கள்

புதன், 9 நவம்பர், 2016

மூடிய புத்தகத்தை திறவுங்கள்!

வாழ்க்கையைப் பலரும் பல விதமாகப் பார்க்கிறார்கள்! எப்போதும் தன்னம்பிக்கையுடன் பார்க்கும் எவரும் எத்தகைய சோதனை வாழ்வில் ஏற்பட்டாலும் அவைகளில் நீந்தி கரையேறி மகிழ்வர்.

வேறு சிலரோ எப்போதும் சலிப் புடனே எதைப்பற்றிப் பேசினாலும் பேசிப் பேசி, அனுபவிக்க வேண்டிய வைகளைக் கூட அனுபவிக்கத் தெரியாத - பயனற்ற வாழ்வையே வாழ்ந்து கொண்டுள்ள குறிக்கோள் அற்ற மண்ணோடு சேரும் மனித இயந்திரங்களாகவே வாழ்கிறார்கள்!

பகுத்தறிவுள்ள மனிதன் அதனை எவ்வளவு சிறப்பாக, கூர்மையாகப் பயன்படுத்துகிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்வின் வெற்றி - தோல்விகள் அமைகின்றன!

எப்போதும் ‘வெற்றி என்ற வெறி’யுடன் வாழுபவர்கள், சிறு தோல்வி ஏற்பட்டாலும் அவர்கள் மனமுடைந்து விரக்தி, வேதனை - இவைகளையே வாழ்வின் அன்றாட சந்திப்புகளாகி மனந்தளர்ந்து, வேறு எதற்கும் பயன்பட முடியாதவர்களாக - ஏன் ‘நடை பிணங்களாகவோ’ அல்லது ‘சோற்றால் அடித்த பிண் டங்களாகவோ’ தான் தங்களின் இறுதிக் கட்டத்தை அடைவார்கள்!

வெறும் இனிப்பையே விடாமல் தின்றால் அது திகட்டி விடாதா?

எனவே, இனிப்பின் சுவையின் முழு ருசியை, கசப்பினையும் நாம் சுவைத்த பிறகே முழுமையாக நம் மால் விளங்கிக் கொள்ளக் கூடும்!

வெளிச்சத்தின்பெருமைஎதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? வெளிச் சம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது யாருக்கு - எதற்குத் தெரியுமா? இருட் டுக்குத்தான்!

இருட்டினால் வெளிச்சத்திற்கு மதிப்பு!

துன்பத்தினால் இன்பத்துக்கு ஏற்றம்!

தோல்வியினால்தான் வெற்றிக்குப் பெருமை!

‘‘சொல்ல முடியாத சோகங்களும், வெல்லமுடியாதவாதங்களும்,பேச முடியாத வார்த்தைகளும், இழக்க விரும்பாத இழப்புகளும் ஆகிய இத்தனைக்கும் நடுவில் வாழ்வதுதான் வாழ்க்கை’’ என்ற ஒரு குறுஞ்செய் தியை அனுப்பினார் எனது அருமை நண்பர் ஒருவர்! ஆம்; உண்மைதான்!

இதுபற்றி நாம் அனைவருமே ஆழ்ந்து சிந்தித்தால், அவை ஒவ் வொருவரின் சமூக, குடும்ப, நட்புறவு வாழ்வில் அன்றாடம் தென்படும் அம்சங்கள்தான் என்பது புரிகிறது!

எனது அருமை நண்பர்களை நான் இழக்கும்போது, இயக்கத்தின் இரத்தஓட்டமானஇயக்கக்குடும் பத்தவரின் இழப்புகளைச் சந்திக் கும்போது, எனக்குள் ஏற்படும் சோகம் முழுவதையும் வெளியே காட்டுவதில்லை; காரணம், நாம் மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றவேண்டிய கடமையைச் செய்யவேண்டும். எனவே, காட்டாமல் மறைக்கவே வேண்டியுள்ளது!

அதுபோல வெல்ல முடியாத வாதங்களை நாம் நம்மைவிட வயது குறைந்தவர்களிடம்அடையும்நிலை ஏற்படுவதுண்டு.அதுகண்டுதன் முனைப்புள்ளவர்கள் வெட்கப்படு வார்கள். நம்மைப் போன்றோர் அவர்களது அறிவு வளர்ச்சி கண்டு மகிழ்ச்சியில் துள்ளவே செய்வர்!

சில நேரங்களில்  அல்லது பல நேரங்களில் நம் உணர்வுகளை வார்த் தைகளாக வடித்துப் பேச முடியாத நிலை ஏற்படும். அதற்குப் பல காரணங்களும், சூழ்நிலையும் உண்டு. விழுங்கித்தான் ஆகவேண்டும் - இல்லையா?

இழக்க விரும்பாத இழப்புகளை - நாம் வாழ்வில் இழக்கும்போது, எளிதில் மனம் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லைதான்! ஆனால், வேறு வழியில்லையே - என்ன செய்ய! அதை ஏற்பது அப்போது இகழ்ச்சியே அல்ல; காலத்தின் தேவை - ஏன் சில நேரங்களில் கடமையும்கூட!

இப்படி எத்தனையோ உண்டு!

இவை எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கை என்பது எத்தனையோ எதிர்பாராத திருப்பங்கள் என்ற பல அத்தியாயங்களைக் கொண்ட மூடிய புத்தகம்தான்!. அதனைத் திறந்து, திறன் அறிந்து படித்து மகிழுங்கள்; பிறரையும் மகிழ வையுங்கள் - வெற்றி நமதே!
-விடுதலை,9.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக