பக்கங்கள்

ஞாயிறு, 27 நவம்பர், 2016

புதுமைத் தென்றல் : வி.ஸ. காண்டேகரின் கருத்து மழை


மராத்திய புதுமை எழுத்தாளர் - புதினம் புனையும் பொலிவு மிக்க கருத்தாளர் வி.ஸ. காண்டேகர் அவர்கள் ஆவார்கள்.
மராத்தியில் அவர் எழுதிய புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள் - இவைகளை தமிழில் சுவை குன்றாமல் தரும் பணியை - அரும்பணி செய்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்களுக்கு புது உலகம் தேடுவோர் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
மருத்துவமனையில் நான் சிகிச்சை பெறும் முன்னரும், பெற்ற பின்னரும் எனக்குத் தேவையான மெல்லியப் பூங்காற்றை  (சுவாசிப்பதைப்போல) வாசிப்பது அவசியம் - நேரமும் பறந்து விடும். வலியை மறந்து விடுவோம் என்ற வகையில் காண் டேகர்தான் எனக்குத் துணையாக இருந்தார் - முழு நேரப் பணி பெரியார் சிந்தனைகளை பரப்புவதுதான் என்றாலும்கூட!
வி.ஸ.காண்டேகர் கதைகள் என்ற நூலில் மூன்று உருவகங்களைக் கொண்ட யதார்த்தத்தை கற்பனை வண்ணம்பூசி அருமையாக தந்துள் ளார் நந்தவனம் என்ற  தலைப்பில் ஒரு சிறுகதையில்; அதைப் படித்து (ஏற்கெனவே படித்திருந்த போதும்) நவில்தொறும் நூல் நயம் கண்டேன்!
அதனை உங்களைப் போன்ற பயில்தொறும், படிக்கும் வாசக நண்பர் களுடன் பகிர்ந்து கொண்டு, யான் பெற்ற இன்பத்தை எனது வாசக உலகமும் பெறட்டும் என்பதாக இதனைத் தருகிறேன்.
அடிவானம்
புதுயுகம்
மரத்தின் வேர்
பெண்ணின் உள்ளம்
வழிபாடு
என்ற அய்ந்து குறுந் தலைப்புகளில் சுவைமிக்க கருத்து உருவகங்கள்-
கற்க வேண்டிய பாடங்களே அவரவர் பயிற்சிக்கும், பக்குவத்திற்கும்  ஏற்பவே ரசனைகள் அமையக் கூடும்.
சமைத்து வைத்த சுவை உணவைப் பரிமாறுகிறவன் பரிமாறாமல் பசி வந்தவர்முன் பலபடப் பேசுவதும் காலத்தைத் தாழ்த்துவதும் கூடா ஒன்று அல்லவா?
அதனால் நேரே நந்தவனத்தின் நறு மலர்களின் மணத்தை அனுபவிக்கவும், மலர்க் காட்சியைக் கண்டு உள்ளங்  குளிரவும் அழைத்துச் செல்கிறேன்.
புதுயுகம் என்ற சிறு தலைப்பின் கீழ்
முன் காலத்து முனிவர்களுக்கு உற்சாகம் பிறந்தது. இறைவனுடைய வடிவத்தைக்காண அவர்களின் அறிவு முயன்றது. வேதங்கள் பிறந்தன. ஆண்டவனைப்பற்றி இது அல்ல அது அல்ல என்ற அறிவு மட்டுமே அவர் களுக்கு உண்டாயிற்று.
உண்மையான தத்துவஞானம் இதுதான்! என்று மக்கள் வியந்தனர்.
இடைக்காலத்துப் பெரியவர்களுக்கு உற்சாகம் பிறந்தது. இறைவனுடைய வடிவத்தைக் காண அவர்கள் பிரதிக் கினை செய்து கொண்டார்கள். அப்புறம் கேட்க வேண்டுமா? கல் தெய்வமாயிற்று; குரங்கு தெய்வமாயிற்று. ஆண்டவன் நீரிலும், தரையிலும், மரத்திலும், கல்லிலும் இருப்பதாக அவர்கள் அறிந்தார்கள். உண்மையான பக்தி இதுதான்! என்று மக்கள் மகிழ்ச்சியோடு கூவினார்கள்.
விஞ்ஞான யுகம் வந்தது. விஞ் ஞானிகளுக்கு உற்சாகம் பிறந்தது. கல்லிலிருந்து, குரங்கு வரைக்கும் எல்லாப் பொருள்களின் வாழ்வையும் அவர்கள் ஆராய்ந்தார்கள். எந்தப் பொருளிலும் எங்கும் அவர்களுக்கு இறைவன் புலப் படவில்லை. அவர்கள் இகழ்ச்சியோடு, இதுவும் அல்ல, அதுவும் அல்ல என்றார்கள்.
நாஸ்திகன் நாஸ்திகன்! என்று மக்கள் சினம் பொங்கக் கத்தினார்கள்.
@@@@@@@@@@@@@
மற்றொரு மிக அருமையான உருவகம்!
மரத்தின் வேர் என்ற தலைப்பில் -
ஒரு மரத்தில் மலர்களின் மணம் எங்கும் பரவி இருந்தது.
வழிப்போக்கன் ஒவ்வொருவனும் அந்த மணத்தை நுகர்ந்து கொண்டு அங்கே கணப் பொழுதாவது நிற்காமல் போவதில்லை.
அந்த மரத்தில் கனிகள் காய்த்துக் குலுங்கின. அவற்றின் நறுமணத்தில் மயங்கி, நிறம் நிறமான பறவைகள் அந்த மரத்தைச் சுற்றிக் கூத்தாடின.
மலர்களும், கனிகளும் சொர்க்க இன்பத்தை எய்தின.
ஒருநாள் காலையில் தோட்டக் காரன் அந்த மரத்தின் வேருக்கு நீர் பாய்ச்சினான்.
மலர்கள் அவனைப் பார்த்து, தோட்டக்காரா! உனக்குப் புத்தியே இல்லை! அங்கே மண்ணில் எதற் காகத் தண்ணீர் விடுகிறாய்! பீச்சாங் குழலினாலே எங்கள்மீது நீர்த்துளி களை வீசு. முகத்தைப்போலே அவை ஒளிவீசும் என்றன.
பழங்களும் அப்படியே பிடிவாதம் பிடித்தன. கோணல் மாணலான, நிறமும் அழகும் இல்லாத, எப்பொ ழுதும் மண்ணிலே புரளுகிற அந்த வேர்களுக்கு எதற்காக நீரினால் அபிஷேகம் செய்ய வேண்டும்? என்று அவை நினைத்தன.
தோட்டக்காரன் மலர்களுக்கும், கனிகளுக்கும், நீரைத் தெளித்தான்.
தண்ணீர் கிடைத்துங்கூட மலர்கள் வாடின; கனிகள் அழுகின.
அவை கடைசியில் தோட்டக்கார னுடைய காலில் விழுந்து, தோட்டக் காரத் தாத்தா, மண்ணில் இருக்கும் அந்த வேர்களுக்கே முதலில் நீர் பாய்ச்சுங்கள், அவை பிழைத்தால் தான் நாங்கள் உயிர் வாழ்வோம் என்று கெஞ்சின. - இதனைப் புரிந்து கொள்ளுங் கள்; ஓர் இயக்கம், குடும்பம்,நிறுவனம் எல்லாவற்றுக்குமே இந்த உண்மை புரிய வேண்டும் - புரிந்து நடக்க வேண்டும்.
- கி.வீரமணி
-விடுதலை,11.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக