பக்கங்கள்

செவ்வாய், 29 நவம்பர், 2016

அறிவியல் சிந்தனைகள் 8. பாராட்டுவதை உடனே செய்யுங்கள்!

இன்னும் ஒரு மணி நேரம்தான் நீங்கள் வாழப் போகிறீர்கள், தொலைபேசி மூலம் அழைப்புவிட உங்களுக்கு ஒரே ஒரு முறை மட்டும் வாய்ப்புத் தரப்பட்டுள்ளது, யாரை அழைத்துப் பேசுவீர்கள்; என்ன பேசுவீர்கள்? நீங்கள் ஏன் காத்திருக்கிறீர்கள் என்ற செய்தியையும் சொல்ல வேண்டும்! என்ன செய்வீர்கள்? என்று அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் கேட்டார்.

நாம் யாருக்காகக் காத்திருக்கிறோம்; எப்படி நமது நெருக்கமான நண்பர்களையோ, உற்ற உறவுகளையோ நேசிக்கிறோம் - அவர்களிடம் எப்படி நாம் அன்பு செலுத்துகிறோம் என்பது நமது ஒவ்வொருவரது வாழ்க் கையிலும் மிக முக்கியமானது. காரணம், 'அன்பின் வழியது உயிர்நிலை', என்பது அடிப்படை அல்லவா?

நாம் ஏதோ நீண்ட காலம் வாழ்வோம் அல்லது நிரந்தரமாக வாழ்வோம் என்று எண்ணிக் கொண்டிருப் பவர்களைப் போலப் பலர் தங்கள் அன்பை வெளிக் கொணரக்கூடத் தயங்கிக்கொண்டோ - தள்ளிப் போட்டுக் கொண்டோ வருகிறோம்; அது சரியான வாழ்வியல் முறை அல்ல.

நோயுற்று இருப்பவர்களைப் பார்த்து ஆறுதல் கூற விரும்புவோரோ,  அன்றிப் பிறரைப் பாராட்ட வேண்டும் என்று விரும்புவோரோ, நினைக்கும் மாத்திரத்தில் அவரை உடனே நேரிலோ, தொலைபேசியிலோ, இல்லையாயின் (கடைசியாக) கடிதத்தின் மூலமாகவோ உடனே அன்பைப் பொழிந்து, ஆறுதல் கூறுங்கள், பாராட்டுங்கள்; தள்ளிப் போடாதீர்கள்! பிறகு அது நிரந்தரமாகத் தள்ளிப்போடப்பட்டு, வாழ்நாள் முழுவதும் உங்கள் அன்பெனும் பிடிக்குள் அகப்படாத மலைபோல் கைநழுவிடக் கூடும் !

பாராட்ட வேண்டும் என்று நினைத்தவுடன் பாராட்டி விடுங்கள். அறிஞர் அண்ணா அவர்கள் ‘விடுதலை' ஆசிரியராக ஈரோட்டில் பணியாற்றிய போது ஒரு சம்பவம்!

தந்தை பெரியார் அவர்கள், அண்ணா ‘விடுதலை' யில் எழுதிய அன்றையத் தலையங்கம் படித்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்து அதைப்பாராட்ட முனைப் புடன் விரும்பி, ஈரோட்டில் அவரால் கட்டப்பட்ட மூன்று மாடி பிரமாண்டக் கட்டடத்தின் மேல் மாடியில் தங்கியிருந்த அண்ணாவை நேரில் பார்த்துப் பாராட்ட மாடிப்படி ஏறி நடந்து சென்றார். அண்ணாவுக்கு ஒரு பழக்கம். இரவு நெடுநேரம் கண் விழித்து விடியும் நிலையில்தான் தூங்கப் போவார்; படிப்பார்; எழுதுவார்; நண்பர்களுடன் உரையாடுவார் எல்லாம் இரவு முழுவதும். காலை வெகு நேரம் கழித்தே எழுவார்.அய்யா போனபோது - அவரிடம் தெரிவித்து எழுப் பினார்கள். அவரோ பதட்டப்பட்டு எழுந்தார் - அன்று அய்யா ‘முகத்தில் விழித்தார்'. அய்யா அவர்கள் அண்ணா எழுதிய தலையங்கத்தைப் பாராட்டிச் சொன்னபோது, அண்ணா அடக்கம் தொனித்த குரலில், "அய்யா அவர்கள் இதற்காகவா மாடி ஏறி வந்தீர்கள்; சொல்லியனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே" என்றார்.

ஆனால், அதற்கு அய்யா, "இல்லை, இல்லை; பாராட்ட வேண்டும் என்று நாம் நினைத்தால் உடனே பாராட்டுவதுதான் இருவருக்கும் நல்லது" என்று கூறினார்கள்.

‘டீம்' (Team) குழுமுயற்சி என்ற இடத்தில் பாராட்டத் தக்க செயல்களைச் சுமாராக ஒருவர் செய்தால் கூட நாம் பாராட்டத் தயங்கக் கூடாது.

நமது மகிழ்ச்சியைப் பெருக்குவதற்கும் இது உதவு கிறது அல்லவா?

கண்டிப்பதைத் தள்ளிப்போடுவது நல்லது. பாராட்டுவதை, அன்பு காட்டுவதைத் தள்ளிப்போடுவது அவ் வளவு சரியான நிலை அல்ல.

 

- கி.வீரமணி
-விடுதலை,29.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக