பக்கங்கள்

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

விளம்பரத்தில் கூட விநோதங்கள்!


இது விளம்பரயுகம்தான். சந்தே கமே இல்லை. வியாபாரத்திற்கழகு விளம்பரம் செய்தல் என்பது பழமொழி,
இதனைத் தோற்கடிக்கும் வகையில் அளவுக்கு மீறிய விளம்பரங்கள், ஊடகங்களுக்குக் கொள்ளை லாபங்கள்.
லட்சியம் முக்கியமல்ல; லட்சங் களே என்று பிரபல நாளேடுகள், ஊடகங்களில் முதல் மூன்று பக்கங்கள், கடைசி பக்கங்கள் எல்லாம் முழுப்பக்க விளம்பரங்களே!
இன்னும் கொஞ்ச நாளானால் சொற்களும் இடம் பெறும் - என்ற நிலை நாளேட்டுக்கும் வரும் போலிருக்கிறது!
அரசுகளே - விளம்பரத்தினைச் செய்வதால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் கலையின் உச்சத்தைத் தொடுகிறது!
ஆம் விளம்பரம் மூலம் ஊடகங்களை, ஏடுகளை விலைக்கு வாங்கி அவர்தம் வாயில் பணக் கொழுக்கட்டைகளை  திணித்த வண்ணம் அழுத்தித் திணற வைத்து விடுகின்றது!
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பது விளம்பரத்தின் தூணாக உயர்ந்து நிற்கிறது!
தமிழ்நாட்டில் இந்த விளம்பர வாசகங் களை கொள்கைப் பிரச்சாரத்திற்காக சுவர்களில் எழுதி மக்களுக்கு அறிவு கொளுத்தும் உத்தியை முதன்முதலாக திராவிடர் கழகம்தான் கற்றுக் கொடுத்தது!
அசாமிலும் மற்ற வட மாநிலங் களிலும் பெட்ரோல், மற்றவைகளுக்கு ராயல்டி உரிமத்தை வழங்கிடும் மத்திய அரசே தமிழ்நாட்டிற்கும் வழங்கு
நரிமணம் பெட்ரோல் நெய்வேலி நிலக்கரி இவைகளுக்கு ராயல்டி தமிழ் நாட்டுக்கு வழங்கு என்று எழுதினோம்.
இன்று அதன் விளைவு .. தமிழ்நாட்டுக் கருவூலத்திற்குப் பணம் ஆண்டுதோறும் - ராயல்டி வருகிறது.
அதுபோல சமூகநீதி - மண்டல் கமிஷன் பரிந்துரை அமலாக்குதல்,
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு பற்றிய சுவரெழுத்துகளால் மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்த  எவ்வளவு கனிந்த பலன்!
இது பிறகு
கட்அவுட் கலாச்சாரமாக மாறியது! எங்கெங்கு காணினும் கட்அவுட்டுகள் அது எல்லை மீறி, எரிச்சலை அனை வருக்கும் உண்டாக்கியது. எனவே, அதனை ரசித்தவர்களே மக்கள் உணர் வைப் புரிந்து பிறகு  எடுத்து விட்டார்கள்.
பிறகு இப்போது புதுத்தொழில் பிளக்ஸ் (flex) என்ற கணினி, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளினால் ஆன போர்டு, பதாகைகள் சின்னஞ்சிறு கிராமங்களில் கூட.
காது குத்தல், கல்யாணம் போன்ற நிகழ்வுகளில் தலைவர்கள் படத்தைப் போட்டு வருக வருக என்ற சாக்கில் தங்கள் அத்தனை பேர்களின் படங் களையும், பிளக்ஸ் பதாகையில் போட்டு பார்த்துப் பார்த்து மகிழ்தல்!
பல தலைவர்களுக்கே தெரியும் இது நமக்காக வைக்கப்படவில்லை. நம் சாக்கில் அவர்கள், தங்களை விளம் பரப்படுத்திக் கொள்ளும் விநோதமான கண்டுபிடிப்பு இது என்று!
எந்தெந்த முறையில் என்ற எல்லையற்று இது இன்று நீதி மன்றங் களாலும்கூட, டிராபிக் ராமசாமி களாலும் கூட தடுக்க முடியாதபடி அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாச மாய் தொங்குகின்றன!
வாசகங்களை எழுதும் வசனகர்த்தாக்களும் நம் நாட்டில் மிகப் பெருகி விட்டார்கள்!
தமிழ்நாட்டில்  கூலிப்படைகள் கொலையில் மட்டுமே செழிப்பாக தம் பணிகளைச் செய்வதில் மும்முரமாய் இருக்கிறது என்ற உண்மையோடு இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய மற்றொன்று
பாராட்டு மழைகளை வசனங் களாகப் பொழியும் கூலி வசன வியாபாரம் ஏராளம் உண்டே!
அந்தோ தாழ்ந்த தமிழகமே!
- கி.வீரமணி
-விடுதலை,31.8.15

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

அன்பு விளைச்சல் குடும்பத்தில் - எப்போது?


நேற்று முதல் நாள்  விடுதலையில் (27.8.2015) வெளிவந்த இங்கர்சாலின் இன்பவாழ்வியல் இதோ? என்பதில் நான் அவரது கருத்துகளில் உள்ள ஒரு நீண்ட சுவையான, பயனுறு அறிவுரை - கருத்துரையை எடுத்துக் கூறினேன்.
அதை அசை போட்டு எண்ணிப் பாருங்கள் - எவ்வளவு அழகான வாழ்க்கையின், இருட்டை விரட்டி வெளிச்சத்தை அழைத்து வந்து ஒளிவீச்சு தரும் பகுதி அது.
அதில் ஒரு மிக முக்கிய கருத்து
நானே குடும்பத்துத் தலைவன், வீட்டுக்கு  முதலாளி என்று கூறு பவனை நான் அறவே வெறுக்கிறேன்,
நானே தலைவன் நானே அதிகாரி என்று கூற ஒருவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? -  கேட்கிறார் இங்கர்சால்
குடும்பங்களைப் பொறுத்தவரை, அதற்கு ஆண்கள் தலைமை தாங்கும் முறை பின்னுக்குத் தள்ளப்பட்டு பெண்களே  தலைவர்களாக முதல் உரிமையும் வழிகாட்டிகளாகவும் அமைந் தால் அதைவிட வளர்ச்சிக்கு - முன் னேற்றத்திற்கு - சிறந்த வாய்ப்பு வேறு இருக்க முடியாது!
வீண் ஜம்பம் - ஆதிக்கத்தின் வெளிப் பாடு, உத்தரவு போடும் அதிகாரிகளாக ஆண்களாகிய நாம் மிகப்பெரும்பாலோர் இருக்கிறோம்.
நடைமுறையில் மிக அதிகமான அளவில்  பொறுப்பு பெண்களிடம்தான் இருக்கிறது - பெரும்பாலான குடும்பங்களில்!
பெரும் வசதி படைத்த செல்வச் சீமான்கள் குடும்பத்திற்கும் சரி, அன் றாடங் காய்ச்சிகளான அரை வயிற்றுக் கஞ்சி குடிப்பதற்கும் அல்லாடி, உழைத்து வறுமையில் உழலும் வாழ்க்கையை முறையாகவே மாற்றிக் கொண்ட  - வாழ்வின் மலம் அள்ளும் தொழிலாளித் தோழன், தோழி எப்படி மூக்கைப்பிடிக் காமல் சர்வ சாதாரணமாக அத்தொழி லுக்கு பழகி விடுகிறார்களே - அந்தக் குடும்பங்களிலும் சரி, ஆளுமை உண்மை யாக பெண்களிடமே உள்ளது!
சாராயம் குடிக்க காசுக்கு கையேந் துவதும் பல வீடுகளில், அன்றாடம் உழைத்து. கூலி பெற்றுவரும் எனதருமை தாய்மார்களிடம் அவர்களது குடிகாரக் கணவன்மார்கள் எப்படியெல்லாம் கெஞ்சுகிறார்கள் என்பது காணாத காட்சியா? அப்படியிருந்தாலும் கணவன் என்று உரிமை கொண்டாடி உதைத்தும், அடித் தும் காசு கேட்கும் கவுரவப் பிச்சைக் கனவான்களாக கணவன்மார்கள் அப் படிப்பட்ட நிலையிலும் - எஜமானத் தலைவர்களே என்றால் இதை விட பெருங்கேடான சமூக அநீதி வேறு உண்டா?
இல்லாள் அகத் திருக்க இல்லாதது ஒன்றுமில்லை
என்ற ஒரு சொலவடை உண்டு!
இதற்கு நேரடியான பொருள் வாழ்விணையரான மனைவி வீட்டில் இருந்தால் அவரே எல்லாவற்றையும் நீக்குப் போக்குக்கருதி சமாளித்துச் சரி செய்வார். அத்திறமை அந்தப் பெண் ணிற்கு உண்டு என்பதைச் சொல்லும் கருத்தியல் தானே!
இதில் அகத்திருக்க என்பதோடு வீட்டில் என்று பொருள் கொண்டால் அது குறுகிய வட்டத்திற்குள் நினைத்து துணைவியை அடைத்துவிடும் சிந் தனையே!
மாறாக அகத்திருக்க என்பதற்கு ஒரு விரிந்த பரந்த விளக்கப் பொருள் தரலாமே!
இல்லாள் - வாழ்விணையர் - உள்ளத்தில் - எல்லோர் உள்ளத்தில் அன்பு ஆட்சி செய்தால் - கணவன் - துணைவன் உள்ளம் உட்பட அனை வரின் உள்ளங்களையும் ஆள்பவராக மாறுகின்ற அன்பின் ஊற்றாக ஆனால் குடும்ப மகிழ்ச்சி சோலையாகத் தானே திகழும்!
முரட்டுக் கணவன்மார்களே, அதி காரக் குரலில் மிரட்டும் எஜமானர்களே!
கொஞ்சம் அன்பு வழியை - அர வணைப்பு - இதமானச் சொற்களைக் கூறி நடந்து பாருங்கள், அமோக அன்பு விளைச்சலைப் பெறுவீர் - இது! நிச்சயம்!
-விடுதலை,29.8.15

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

குடி - "குடித்த" செல்வங்கள்!


இன்று (20.11.2014) - சுயமரியாதைத் தோட்டத்தில் பூத்த புரட்சி மலர்களில் ஒன்றான கவிஞர் பொன்னி வளவனின் நினைவு நாள் என்றபோது, எனது சிந்தனைகள் மிசா காலத்து சிறை வாயிலுக்குள் சென்றன!
கவிஞர் பொன்னி வளவன் தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை யால் பூத்த தஞ்சைத் தரணி தந்த ஒரு தனித்துவமான, நறுக்குத் தெறித்தாற் போல் எழுதி, எரிமலையைத் தனது எழுத்துள் கொண்டுவரும் ஈடற்ற கவிஞர்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பரம்பரை என்ற கவிஞர்கள் வரிசையில் இடம்பெற்று, மறைந்தும் மறையாத கொள்கைக் கோமான்!
தமிழாசிரியராகப் பணிபுரிந்த தகை மையாளர்; அறிஞர் அண்ணாவிடமும், கலைஞரிடமும், பெரியார் திடலுடனும் மிகுந்த பாசப் பொழிவைக் கொட்டியவர்!
பொடி போட்டுப் பழகிய இச்சுயமரி யாதைச் சுடரொளி, பொடி வைத்தும் கவிதை எழுதி புகழ்பெற்ற, தகுதியான சீரிய பேச்சாளர். தி.மு.க.வின் அணி மணிகளில் ஒன்றானவர். எனவேதான், காரணமறியாத சிறைக் கைதியான மிசா கைதியாக எங்களோடு (1976 இல்) பிடித்து வந்து அடைக்கப்பட்டார்.
அவரின் நகைச்சுவை உணர்வுக்கு அறையிலேயே நடந்த சம்பவமும், அதையொட்டிய ஒரு கவிதையும் சிறைவாசம் என்ற கோடை (பலருக்கு அப்படித்தான்)யைத் தணித்துக் குளிரூட் டிய நிகழ்வும் நல்ல எடுத்துக்காட்டாகும்.
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அறிஞர் அண்ணாவுக்கு, கலைஞருக்கு வேண்டிய தி.மு.க. தோழர் சொக்கலிங்கம்.
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சிதம்பரம் கு.கிருஷ்ணசாமி அவர்களுக் கும், நமக்கும்கூட நல்ல நண்பர்.
அவரும், மிசா கைதியாக சிறைவாசி யானார்; அவரால் எளிதில் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மன தளவில் மிகவும் உளைச்சலுக்கு ஆளா னார். காரணமின்றி, எப்போது விடுதலை என்பதே தெரியாது என்பதால், பல ருக்கும் இப்படித்தான் (ஒரு சிலர்தான் அதை ஓய்வுக்கான வாய்ப்பு என்று கருதி, ஏற்ற பக்குவத்தினர்).
திரு.சொக்கலிங்கம் திடீரென்று பக்திப் பழமானார். நெற்றியில் பட்டை, குங்குமம் அடித்து, தாடி வளர்த்து, சிறைக்குள்ளே ஒரு சிறுபிள்ளையார் கோவிலில் கும்பிடத் தொடங்கி விட்டார்! அருட்பா பாடுவார்!!
கடவுள் பக்தி என்பது மனிதர்களின் பலவீனமான நேரத்தில் தாக்கும்; அல்லது அதிகரிக்கும் என்பதை நாங்கள் பலரும் உணர்ந்தோம் - இப்படிப்பட்ட அனுபவங்கள்மூலம்.
நானோ, கழகத் தோழர்களோ (மிசாவில்) இருந்த நிலையில் - யாரை யும் வெறுத்ததுமில்லை; கேலி பேசி யதும் இல்லை. அவர்கள் மனப்பக்குவ மின்மைக்காக இரங்கி, பரிதாபப்பட் டோம்!
இதனாலா சிறைக்கதவு திறக்கும்? இல்லை. புலவர் பொன்னி வள வனுக்குத் தீராத கோபம். எல்லோரும் பகல் உணவு வாங்கி கும்பலாக உட்கார்ந்து சாப்பிடும் நேரத்தில்,
தனது துண்டுச் சீட்டு ஒன்றை எடுத்து, கவியரசர் பொன்னி வளவன் ஒரு ஏழு வரி கவிதையை சத்தமாகப் படித்தார்.
பட்டை யடித்தாலும் அதன் நடுவே நன்றாய்
பொட்டு வைத்தாலும் தாடி வளர்த்திட்டாலும்
பொழுதெல்லாம் திருவருட்பா பாடினாலும்
விட்டுவிட முடியாது எனச் சிறைக்குள்
விடாப் பிடியாய் வைத்துள்ளார் சொக்கலிங்கம்
பட்ட துயர்போதாதா? நாளைக்கும்
நீ பற்ற வைக்க வேண்டுமா டீ அடுப்பு?
எல்லோரும் கலகலவெனச் சிரித் தனர்.
சொக்கலிங்கமும் எங்களோடு சேர்ந்து சிரித்தார் - கொஞ்சம் வெட்கங் கலந்த நிலையில்!
அந்நாள் சிறைவாசக் கொடுமை என்ற பாலைவனத்துச் சோலைபோல இத்தகைய நிகழ்வுகள்!
இவ்வளவு இலக்கியச் செறிவுள்ள ஈரோட்டுக் கவிஞன் இன்று நம்முடன் இல்லாமற் போனார் - இலக்கியத்தில் எப்போதும் இருக்கிறவர் என்றாலும் கூட!
காரணம், நேற்று இனமானத் தலை வர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியர் அவர்களும், நானும் பேசிக் கொண்டிருந்தபோது, வருந்திப் பேசி னோம் - குடி எத்தனை அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், வாழ்வு தொடங்கி, எண்ணற்றவர்களின் வாழ் வைக் குடித்த - குடிக்கும், குடி கெடுக்கும் மதுப்பழக்கம்பற்றி.
மூன்று வரிகளில் ஒரு ஆங்கிலக் கவிஞனின் கவிதை இதை அழகுறப் படம் பிடித்துக் காட்டுகிறது.
(முதலில்) மனிதன் குடிக்கிறான்,
(அடுத்து) குடி குடிக்கிறது
(இறுதியில்) குடி மனிதனையே குடிக் கிறது.
என்றுதான் விடியலோ! ஏக்கத்தோடு எழுதுகிறேன்.

- கி.வீரமணி
விடுதலை,20.11.14

சிங்கப்பூர் நாட்டின் தமிழ்ப் புதையல்கள்



சிங்கப்பூர் நாட்டின் தமிழ் மொழி உணர்வும், தமிழ் இலக்கியம் பண்பாடு காக்க, சிங்கைத் தமிழ்ப் பெரு மக்களிடையே பூத்துக் குலுங்கும், புலமை மிக்கோர் ஏராளம். அவர்களது தமிழ் மொழி உணர்வு கெட்டுப் போகவுமில்லை. பட்டுப் போன பழங்கதையாகவும் ஆனதில்லை.
தமிழ் ஆசிரியர்கள் பலரும், தமிழ் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், இலக்கியத் தேனீக்கள் ஏராளம், ஏராளம்!
சிங்கப்பூர் சிந்தனையாளரும், செந்தமிழ்ப் புலமையாளருமான திருவாளர் சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்களது பல அரிய சிந்தனைக் கட்டுரைகளைக் கொண்ட சிறந்த தொகுப்பினை,
மெய்ப்பொருள் காண்போம்
மேனிலை அடைவோம்,
என்ற தலைப்பில் 41 அரிய கருத்துக் கருவூலக் கட்டுரைகளைக் கொண்ட   பன்னூல் பொதிந்த ஒரு நூல் இது! என்ற அறிமுகத் துணைத் தலைப் பையும் அடக்கி வெளியிட்டுள்ளனர் சென்னை நர்மதா பதிப்பகத்தவர்கள். (சிறந்த நூல்களை வெளியிடும் ஒரு நல்ல புத்தக வெளியீட்டாளர்கள் இவர்கள்)
பல்வேறு தலைப்புகளில் பன்முகப் பரிமாணங்களில் பயனுறு கட்டுரைகள் உள்ள நவில்தொறும் நூல் நயம் கொண்ட நூல் இது!
மனிதநேயம் என்கிற தலைப்பில் அருமையான கருத்துக்களை தனது எழுதுகோல் மூலம் சொடுக்கி சாட்டையாகப் பயன்படுத்தியுள்ளார் சிங்கப்பூர் சித்தார்த்தன்.
இனச் சண்டை, பணச்சண்டை, சாதிச் சண்டை, சமயச் சண்டை, இளைத்தவன் - வலுத்தவன், ஏழை - பணக்காரன் என்ற வேறுபாடு - இப்படி எங்கு பார்த்தாலும் போரும், பூசலும், போட்டியும், பொறா மையும், பகைமையும், பழி உணர்ச்சியும், தலைதூக்கி நிற்பதையல்லவா காண முடிகிறது? இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன? அன்பு அருகி, அருள் குறைந்து, மனிதநேயம் மங்கி விட்டதால் தான் இந்நிலை என்பதைச் சிந்தித்துப் பார்ப்ப வர்கள் உணர முடியும்.
அன்பின் வழியது உயிர்நிலை என்ற வள்ளுவரின் அமுத மொழியை, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும் என்ற வள்ளலார் வாய் மொழியை ஏட்டில் படித்ததோடு நின்று விட்டோம்; மறந்து விட்டோம்.
இந்த நிலை இனியும் நீடிக்கலாமா? நீடிக்க விடலாமா? கூடாது... கூடாது... அறவே கூடாது... என்று மனித மனம் படைத்தோர் கூறுவது கேட்கிறது!
நமது சிந்தனை செயல்வடிவம் பெறு வதற்குப் புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் வழி காட்டுகிறார்!
என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்! அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
இப்படி பற்பலக் கருத்து முத்துக்கள்.
இப்படி எத்தனையோ அருமை யான அறிவுரைகள் அற உரைகள் - வாழ்க்கையில் ஒளியேற்றும் விளக் கின் வெளிச்சங்களாக விரவிக் கிடக்கின்றன.
தமிழைப் பாழ்படுத்தும் தகாத செயல் என்ற தலைப்பில் நான்கு கட்டுரைகளில், தமிழைப் பாழ் படுத்துவோரை அம்பலப்படுத்தி மீண்டும் தனது எழுதுகோலை வாளாகச் சுழற்றி, வையகத்தினை விழிக்கச் செய்கிறார்.
அந்நூலைப் படியுங்கள் - பயன் பெறுங்கள். மற்றொரு அரிய புதையலாக சில நாள்களுக்கு முன் சிங்கப்பூர் செம்மொழி ஆசிரியர், இலக்கியவாதி நண்பர் இலியாஸ் மூலம் தந்து அனுப்பினார் அறிவிலும், ஆற்றலிலும், ஆட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றும் இன்றும் கல்வித் தொண்டைச் செய்வதில் சலிக்காது ஈடுபட்டுள்ள சிங்கப்பூரின் பெருமை மிகுந்த மேனாள் குடிஅரசுத் தலைவர் மேதகு எஸ்.ஆர். நாதன் அவர்களது தன் வரலாறு - தமிழ்ப் பதிப்பு உழைப்பின் உயர்வு என்ற தலைப்பில் 678 பக்கங்களைக் கொண்ட மிக அருமை யான அனுபவக் களஞ்சியமாகத் திகழும் சுவைத் தேனாக உள்ள சிறந்த நூல் ஆகும்.
அதுபற்றி நாளை எழு துகிறேன்.

- கி.வீரமணி

தமிழர்களில் ஆற்றலும் அறிவுக் கூர்மையும், அனுபவங்களின் கட லாகவும் இருந்த இருபெரும் தமிழர்கள் ஒரே நேரத்தில் இரு நாடுகளின் குடிஅரசுத் தலைவர்களாக இருந்து, திறம்பட தமது ஆளுமைகளை சிறப் பாகச் செய்து வரலாறு படைத்தார்கள்.
இந்தியத் திருநாட்டின் குடிஅரசுத் தலைவர் மதிப்பிற்குரிய ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள்; அதுபோல சிங்கப்பூர் குடிஅரசின் தலைவராக - அதிபராக இருந்த மதிப்பிற்குரிய திரு. எஸ்.ஆர். நாதன் அவர்கள் ஆவார்கள்.
1924 ஜூலை 3ஆம் தேதி சிங்கப்பூரில் பிறந்தவர்; இவரது இள வயதில் குடும்பத்துடன் மலேசியா நாட்டுப் பகுதியான ஜோகூர் மாநிலத்தின் மூவாரில் வசித்த குடும்பத்தவர்களாக இருந்தவர்கள் -
அவரது தன் வரலாறு ஆங்கி லத்தில் ‘An Unexpected Journey path of Presidency’  என்ற தலைப்பிட்டு  சில ஆண்டுகளுக்கு முன்பே வெளி வந்தது - அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு.
அப்போதே அதைப் படித்து மகிழ்ந்தேன் இப்போது அதே சுய சரிதை ‘(Autobiography) ‘ உழைப்பின் உயர்வு என்ற தலைப்பில் திருவாளர் ஆர். பழனியப்பன் அவர்களால் தமிழாக்கப்பட்டு, 678 பக்கங்களில் மிக அருமையான கண் - கருத்து - கவர் பதிப்பாக, சிங்கப்பூரின் பாரம்பரியம் மிக்க தமிழ் நாளேடான (ஆசிரியர் தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களால் துவக்கப்பட்டு, சுமார் 80 ஆண்டுகளைக் கடந்து வரும்) தமிழ்முரசு வெளியீட்டகம் சார்பாக சில வாரங்களுக்கு முன் வெளியி டப்பட்டுள்ளது.
என்னிடம் அன்பு பூண்ட மேனாள் அதிபர்  பெருந்தகையாளர் (தற் போதைய பேராசிரியர்) அவர்கள், நண்பர் இலியாஸ் மூலமாக எனக்குக் கையொப்பமிட்டு அந்நூலை அனுப்பி வைத்தார்! அவரது அன்பிற்கும், பண் பிற்கும் எப்படித்தான் நன்றி சொல் வதோ!  - தெரியவில்லை!
பெரியார் - மணியம்மைப் பல் கலைக் கழகத்தின் பணிகளை கேட்டு, படித்து, பாராட்டியவர் சிங்கப்பூர் மேனாள் அதிபர் அவர்கள்.
எந்த நூலையும் எப்படியாவது நேரத்தை ஒதுக்கிக் கொண்டு படித்து விடும் ஒரு பழக்கம் என்பது எனது அன்றாடக் கடமைகளில் ஒன்று. அதன்படி படித்தேன் - நூலோ படி - தேனாகச் சுவைத்தது - அரிய பல்வேறு அரசியல் நிகழ்வுகள் இளமைக்கால நினைவுகளை எழுதும்போதுகூட எதையும் மறைத்தெழுதாத, உண்மை யின் வெளிச்சங்களாகவே உள்ள செய்திகள் எழுதியவரின் அறிவு நாணயம் எவ்வளவு உயர்ந்தது என் பதைக் காட்டுவதாக உள்ளது!
இதோ எடுத்துக்காட்டாக ஒரு சோறு பதம்:
..இளம் பிராயத்தில் எனக்கு நினைவுள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று - சிங்கப்பூரில் நான் பள்ளிக்கு அனுப்பப் பட்டது
நான் ஓர் இந்துவாக இருந்தாலும் நாங்கள் அனைவருமே பள்ளியில் உள்ள சிறு தேவாலயத்திற்குச் செல் வோம் (அது ஒரு மெதடிஸ்ட் பள்ளி. நாம் யாராக இருந்தாலும் கடவுள் ஒன்றுதான். ஆகவே, அங்கு போய்வா என்றார் என்தாய்) வாய்ப்பாட்டு வகுப்புகளும் இருந்தன, அதனை நடத்தியது எங்கள் இசை ஆசிரியர் குமாரி ரஸ்ஸல். சிறந்த பாடகர்கள் முதல் பிரிவில் இருந்தனர். நான் இரண்டாம் பிரிவில் இருந்தேன் என்று சொல்லத் தேவையில்லை. என் நண்பர் களுடன் நான் ‘God Save the King’ (ஆண்டவன் அரசரைக் காப்பாற்றட்டும்) என்பதற்குப் பதிலாக, ‘’God Shave the King’’ (ஆண்டவன் அரசருக்குச் சவரம் செய்யட்டும்) என்று அப்போதைய தேசிய கீதத்தை மாற்றிப் பாடினேன். அது ஒரு வகையில் நியாயம்தானே - அய்ந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு மெல்லிய தாடி இருந்தது. ஒரு நாள் குமாரி ரஸ்ஸல் எங்களைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். எப்படி பாடினீங்க? என்று கோபமாக கேட்டார். “God Shave the King” (ஆண்டவன் அரசருக்கு சவரம் செய்யட்டும்) என்று நான் ஒன்றும் அறியாதவன் போலச் சொன்னேன். இல்லை, இல்லை, அப்படி இல்லை என அவர் அலறினார். அது, save, அதாவது, S-A-V-E!  என்றார். நாங்கள் வேடிக்கையாக சிரித்து மகிழ்ந்தோம்.
இளவயதில் வறுமையை அனுபவித் தவர் இவரும், இவரது குடும்பத்தினரும் - அதை மறைக்காமல் விவரிக்கிறார்!
சிங்கப்பூர் நாடு, மலேசியா பற்றிய பல்வேறு சுவையான அரசியல் நிகழ்வு களின் பதிவுகளின் ஆவணமாகவும் இந்த தன் வரலாறு அமைந்துள்ளது.
நவீன சிங்கப்பூர் நாட்டைச் செதுக்கிப் பாதுகாத்து வளர்ச்சி குன்றா, வளமுள்ள சிறிய நாடாக ஆக்கியுள்ள மேதகு லீக்வான்யூ அவர்கள் இவரை இதனை இதனால் இவன் முடிப்பன் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல் என்ற குற ளுக்கு ஏற்ப,  அதிபர் பொறுப்பில் அமர, PAP  என்ற  கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு உயர்ந்தார்!
அதைத்தான் இது நான் முற்றிலும் எதிர்பாராத பயணம் - எனது வாழ்வில் எனக் குறிப்பிடுகிறார்!
அந்த மிகப் பெரிய பதவிக்குச் செல்லுமுன் இவர் (திரு S.R.   நாதன்) பல ஆட்சி பதவிகளில் இருந்து சிறப்பான சாதனை புரிந்து, அனுபவக் கொள் கலனாக இருந்துள்ளார்!
முன்பு அவர் வகித்த பதவிகளிலும் ஒன்றில் ஏற்பட்ட சுவையான ஒரு தக வலைக் கூறுகிறார்: கேட்போம். பெரிய பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு மிக மதி நுட்பம் இன்றியமையாதது என்பதை விளக்குகிறது அச்சம்பவம்.
1970ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரதமர் லீ குவான் யூ மேற்கொண்ட விரிவான உலக சுற்றுப்பயணத்தில் நான் அவருடன் சென்றேன்.
அவற்றைத் தொடர்ந்து அமெரிக்காவுக்குச் சென்றோம். (மேலும் முக்கிய அனுபவ பாடம் இதோ)
மூத்த அதிகாரிகளால் முடியாததை
நாங்கள் பயணம் மேற்கொண்ட முதல் நாடு சிலோன், அது இப்போது ஸ்ரீலங்கா என அழைக்கப்படுகிறது. (இந்தி யாவைப் போல) சிலோன், அணிசாரா நாடுகள் இயக்கத்தில் ஒரு செல்வாக்கு மிக்க நாடாக இருந்தது. அந்தச் சமயத்தில் அதற்கு ஒளிமயமான பொருளாதார எதிர்காலம் இருப்பதாகத் தோன்றியது. 1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 மாலை கத்துநாயகே விமானநிலையத்தில் நாங்கள் வந்து சேர்ந்த போது, அந்நாட்டு பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகெ எங்களை வரவேற்க, விழாக்கோல கண்டி மேளதாளம் ஒலிக்க, சிலோன் அரச விமானப்படைப் பிரிவினர் கவுரவ அணிவகுப்பு நடத்தினர். எங்களின் வாகனங்கள் சென்ற வழியில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாக நின்றனர். ஒரு மணிநேரப் பயணத்தின் பின்னர், பிரதமர் பண்டாரநாயகெயின் அதிகாரப்பூர்வ இல்லமான டெம்பிள் ட்ரீஸ் இல்லத்தை அடைந்தோம். அது காலனித்துவ ஆட்சியின் கீழ் கட்டப்பட்ட பழைய கட்டடம். மரங்கள், செடி கொடிகள் பூத்துக் குலுங்கும் தாவரங்கள் நிறைந்து பரந்த இடத்தில் அது அமைந் திருந்தது.
அரச தந்திர நடைமுறையில் உள்ள மரபுச் சீர்முறை பழக்கங்கள் சார்ந்த பிரச்சினையைத் தீர்ப்பதில் பரிசாரகர்கள் கூட எவ்வளவு முக்கியமானவர்களாக இருக்க முடியும் என்பதை அடுத்த நாள் ஏற்பட்ட அனுபவம் எனக்குத் கற்றுத் தந்தது.
மாலை 4 மணிக்கு பேரணி ஒன்றில் பிரதமர் லீ கலந்து கொள்ள திருமதி பண்டாரநாயகெ ஏற்பாடு செய்திருந்தார். வெயில் கொளுத்திய காலை நேர நிகழ்ச்சிகளுக்கு பின் பிரதமர் ஓய்வு எடுக்க விரும்பினார். எனவே, மதிய உணவிற்குப் பிறகு என்னிடம் மாலை 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பேரணியில் தாம் கலந்து கொள்ள முடியாமைக்கு தம்மை பொறுத்தருளு மாறு கேட்டு  கொள்ளும்படி என்னிடம் சொன்னார். நான் அந்நாட்டுத் தலைமை மரபுச் சீர்முறை அதிகாரியை அணுகி னேன். தமது பிரதமர் நேரடியாக அதற்கு ஏற்பாடு செய்திருப்பதால் தான் அதில் தலையிட முடியாது என அவர் உறுதி யுடன் மறுத்துவிட்டார். அதற்குள் மணி 3 ஆகி விட்டது. அதன் பிறகு நான் சிலோன் வெளியுறவு அமைச்சின் நிரந் தரச் செயலாளரை அணுகினேன். பயணத்திற்கு முன்னரே நிகழ்ச்சி நிரல் சிங்கப்பூருடன் கலந்தாலோசிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டது என்று கூறி அவரும் மறுத்துவிட்டார். அவர் தமது நிலையிலிருந்து அசைந்து கொடுக்க மறுத்து விட்டார். திருமதி. பண்டார நாயகெ வருகையளிக்கும் நேரம் நெருங் கிக் கொண்டிருந்தது. பிரதமர் லீ இன்னும் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். என்ன செய்வது என்ற சிந்தனையோடு நான் வாயிலில் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தேன்.
மூத்த அதிகாரிகளால் முடியாதது கீழ்மட்ட ஊழியரால் முடியும்
டெம்பிள் ட்ரீசுக்குப் பொறுப்பான தலைமைப் பரிசாரகர் நான் எதைப் பற்றிக் கவலைப்படுகிறேன் என்று கேட்டார். கவலைப்பட வேண்டாம், நான் அவருடன் பேசுகிறேன், அவர் புரிந்து கொள்வார் என்று அவர் சொன்னார் அவர் மரியாதைக்காக அவ்வாறு சொல்வதாக நினைத்தேன்.
கடிகார முள் ஓடிக் கொண்டி ருந்தது. திருமதி பண்டார நாயகெ குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேர்ந் தார். தலைமைப் பரிசாரகர் அவரை வாசலில் வரவேற்பதையும் அவரிடம் சிங்கள மொழியில் பேசுவதையும் என்னால் பார்க்க முடிந்தது. உள்ளே வந்ததும், நமது பிரதமர் பேரணியில் கலந்து கொள்ள இயலாமை குறித்த செய்தியைத் தாம் பெற்றதாகவும் அப்பேரணியில் தாம் மட்டும் தோன் றுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் நிலைமையை விளக்கிக் கூறுவ தாகவும் திருமதி பண்டார நாயகெ என்னிடம் சொன்னார். திரு லீக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம் என என்னை அவர் கேட்டுக் கொண்டார். எல்லாம் நல்ல விதமாக முடிந்தது. தலைமைப் பரிசாரகர் நிலைமையைக் கையாண்ட விதம் என் மனதில் பதிந்தது. திருமதி பண்டாரநாயக அங்கிருந்து சென்றதும் அவர் அதை எப்படிச் செய்து முடித்தார் என்று கேட்டேன். பிரதமரிடம் எது முக்கியம் என்று - அதாவது பேரணியா அல்லது அரசு விருந்தாளியா என்று தாம் கேட்டதாக அவர் சொன்னார். அக்கேள்வியை எதிர்கொண்ட சிலோன் பிரதமர், பேரணியில் கலந்து கொள்வதை நமது பிரதமர் தவிர்க்கலாம் என ஒப்புக் கொண்டார்.  இந்தச் சம்பவம் சிறு விஷயமாக இருந்தாலும், கீழ்மட்ட ஊழியர்கள் கூடச் சில சமயங்களில் தங்களின் முக்கிய அதிகாரிகளுடன் அணுக்க மான உறவு வைத்திருப்பார்கள் என்பதையும் அத்தகைய தனிப்பட்ட தொடர்புகள் இல்லாத மூத்த அதிகாரிகளால் செய்ய முடியாததை அவர்களால் செய்ய முடியும் என் பதை தான் உணர்ந்து பாராட்ட அது எனக்கு உதவியது.
இவரது உடன் தோன்றிய மதி நுட்பம் எப்படி இவருக்குக் கை கொடுத்துள்ளது பார்த்தீர்களா?
இதுபோல சுவைபடச் சொல்லும் நிகழ்வுகள் பற்பல.
இந்த புத்தகம்  தமிழ் இலக்கிய வரலாற்றில் சிங்கப்பூர் தமிழ் எழுத் தாளர், படைப்பாளிகளின் செறிந்த கருத்துவளம் தமிழாக்கம் போலவே படிப்பவருக்கு அது மொழிபெயர்ப்பு என்று தெரியாத அளவுக்கு சுவை குன்றா ஆற்றொழுக்கு நடை உள்ளது இந்த அரிய  களஞ்சியத்தில்!
தமிழில் அளித்த தமிழ் முரசு குழுமத் தலைவர் திரு சந்திரதாசும் பொறுப்பாசிரியர் இராஜேந்திரனும் தமிழ் கூறும் நல்லுலகத்தின் நன்றிக் குரியர். சிங்கப்பூர் பிரபல பல்கலைக் கழகங் களின் பேராசிரியராக இன்றும் உழைப் பின் உருவமாய் உள்ள மேனாள் அதிபர் திரு. எஸ்.ஆர். நாதன் அவரது வாழ்விணையரான திருமதி ஊர்மி நாதன் அவர்களும் பாராட்டத்தக்க நமது வாழ்த்துகளுக்கும் உரியவர் ஆவர்!

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்
-விடுதலை,2,3.10.14

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

மறதி என்னும் கொடு நோய்

மனித வாழ்வில் ஆறாம் அறி வாகிய பகுத்தறிவின் பயன் ஏராளம்; ஏராளம்.
மனித மூளை என்ற அந்த கண்ட்ரோல் ரூம் எப்படி எப்போது மிகவும் கவனத்துடன் (Alert) துடிப் புடன் இயங்குகிறது என்பது நமது உடலின் பல்வேறு எச்சரிக்கைகளைக் கூர்ந்து கவனித்து, ஆய்ந்து அறியாத வர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த மூளைக்கு இதயத்திலிருந்து இரத்த ஓட்டம் எவ்வளவு சீராக மூளைக்குச் சென்றடைகிறதோ, அவ்வளவும் செயல்திறன் சிறப்பாக அமையத் திறக்கும் கதவு ஆகும்.
இன்னமும் அம்மூளையின் 80 விழுக்காடு  பயன்படுத்தாத (பகுதி) நஞ்சை நிலம் போலதான் உள்ளது என்று அறிவியல் அறிஞர்கள் கூறு கிறார்கள்.
மனிதனின் நினைவாற்றல் - ஏன் மிருகங்களுக்குக்கூட இது உண்டு என்று கூறுகின்றார்களே, யானை தனக்குக் கேடு செய்தவர்களை ஒரு போதும் மறக்காது; யானையின் நினைவாற்றல் அவ்வளவு முக்கியம் என்று கூறுகிறார்களே என்பது ஒரு புறமிருக்கட்டும்; எப்போது குறை கிறதோ, அது ஒரு பெருங் குறையாகி, அதுவே பெரும் அளவில் வளர்ந்து விட்டால் நோயாக மாறி விடுகிறது என்று நரம்பியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள்!
மறதியே இல்லாத வாழ்வாக மனித வாழ்வு இயற்கையில் அமைந் திருந்தால், அதைவிடக் கொடுமை மனி தனின் வாழ்வில் வேறு இருக்க முடியுமா? நினைத்துப் பாருங்கள்
பிறர் நமக்குச் செய்த தீங்கு - தீமை கொடுமைகளை மன்னிக்கவும் மறக்கவும் செய்தலே சாலச் சிறந்தது என்று நமக்கு அறிவார்ந்த பெரு மக்களும் அவர்தம் சிந்தனைப் பூக்களான அறநூல்களும் நமக்குச் சொல்லித் தருகின்றன.
ஆனால் வாழ்க்கையில் நம்மில் சில ருக்கு மறக்க முடியவில்லை  - மன்னிக்க முடிந்தாலும்கூட. வேறு பலரோ, மறக்கத் தயாராகிறார்கள்; ஆனால் மன்னிக்கத் தயாராகவில்லை.
ஒரு சிலரே மறக்கவும், மன்னிக் கவும் ஆயத்தமாக இருக்கும் பெருங் குணம் கொண்ட பெருந்தகைகளாக இருக்கிறார்கள்!
முத்தமிழ் கலாவித்வ ரத்தினங்கள் என்று சுமார் 50 ஆண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் போற்றப்பட்ட தமிழ் இனவுணர்வாளர்களான டி.கே.எஸ். சகோதரர்களால் நடத்தப் பெற்ற டிகே.எஸ். நாடக சபையினரால் மனிதன் என்னும் ஒரு நாடகம் பல மாதங்களாக நடைபெற்றது. அதன் மய்யக் கருத்து - மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன் என்பதை வலியுறுத்தி, மக்களுக்குப் போதித்த நாடகம் அது!
இந்த மறதியே மனிதனுக்கு இல்லா திருந்தால் நினைவு ஆற்றலுக்காக எவரையாவது நாம் புகழ, பாராட்ட முடியுமா? யோசித்துப் பாருங்கள்.
சிலவற்றை மனதுக்குள்ளேயே புகுத்தி .. புழுங்கிக் கொண்டே இருக்காது, தன் வாழ்விணையரிடமோ, உயிர் நண்பர்களிடமோ, அல்லது தனக்கு உகந்த மதி உரைஞர்களிடமோ, கொட்டி, பிறகு அதனை மறந்து விடுவது மனிதர்களை புத்துணர்ச்சியும் லேசான இதயத்தையும் பெற வாய்ப்பேற்படுத்தும் நிகழ்வாகும்!
ஆனால், நினைவு ஆற்றலின் முற்பகுதி - பழையன - புதிதாக நடப் பவை புதியன அப்போதைய நிகழ்வுகள் என்று பிரித்துப் பார்த்தல் என்ற இரண்டு வகைகளில், நமது மூளையின் செல்கள் (Cells)
பழையன அழியாது இருத்தலும், புதியன பதிவாக மீண்டும் மீண்டும் நாம், அந்த மறதி நோயி (Dementia) னால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கும் போது நாம் பரிதாபமும் மனவேத னையும் துயரமும் அடைகிறோம். அதிலும் குடும்பத்து உறுப்பினர்கள் - நெருங்கிய நண்பர்கள்  என்பவர் களுக்கு அப்படி ஏற்படுள்ள நிலை கண்டு அளவற்ற மனவேதனை அடைகிறோம்.
அரசியலில் மத்திய அமைச்சராக இருந்து, பலருக்கும் உதவிய, எளிய தோழராக நடந்து கொண்ட ஒரு அறிஞர் பெரு மகனார் இன்று நினைவு இழந்த நிலையில் இருக் கிறார் என்று எண்ணுகையில் நான் விழியோரத்தில் தளும்பும் கண் ணீரைத் துடைத்துக் கொண்டே எழத வேண்டியுள்ளது.
இந்த மறதி நோய் பல கட்டங் களில் அதிகமாகி விடுகிறது.
இதற்குப் பொது அறிகுறிகள் (Common Symptoms) என்ன தெரி யுமா?
முதல் கட்டம்
(1) மறதி (Forgetfulness)

(2) நேரத்தை மறந்து எப்போது என்ற நினைவற்ற நிலை Loosing Lack of time)
(3) பழகிய இடங்களையேகூட மறந்துவிட்ட நிலை (Becoming lost in familiar places)
(மேலும் நாளை சந்திப்போம்)

- கி.வீரமணி

முதல் கட்ட மறதி நோய் பற்றி நேற்றைய வாழ்வியலில் பார்த்தோம்.
அதன் அடுத்த கட்டம். மத்திய கட் டத்தின் முக்கிய பொது அறிகுறிகள்.
(I) அண்மை நிகழ்வுகளையும், நாம் அறிந்தவர்களின்  பெயர்களை மறத்தல்.
(ii) நம் வீடுபற்றி நமக்கே நினைவு இன்மை - மறதி.
(iii) பேச, எழுத மிகவும் சிரமப்படல்.
(iv) இவர்களைப் பார்த்துக் கொள்ள, இவர்களது அன்றாடத் தேவை களைக் கவனித்துக் கொள்ள ஒருவர் இருக்க வேண்டிய அவசியம்.
(v) திரும்பத் திரும்ப கேட்ட கேள் வியையே (பாதிக்கப்பட்ட)  அவர்கள் கேட்பார்கள்.
எடுத்துக்காட்டாக எப்போ வந்தீங்க பதில் சொல்லி முடித்து, வேறு சில மணித்துளிகள் ஓடிய பின்னும் அதே கேள்வியை நம்மிடம் கேட்பார்கள்.
மூன்றாவது  இறுதி கட்டம்
பொது அறிகுறிகள்
(அ) கால நேரம் அறியாத நிலை; தாம் எங்கே இருக்கிறோம் என்றும் அறிந்து கொள்ளாத நிலை.
(ஆ)    உற்றார், உறவினர், நண்பர் களைக்கூட அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத (வேதனை மிக்க) நிலை.
(இ) ஒரு குழந்தையை நாம் எப்படி பராமரிக்க வேண்டிய அவசியம் - மற்றவர்களின் உதவியை நம்பி அக்குழந்தை எப்படி இருக்குமோ அந்நிலைக்கு பாதிக்கப்பட்ட முதியவர்கள் ஆகி விடுவார்கள்.
(ஈ) நடப்பதற்கும் முடியாத நிலை - கஷ்டப்பட்டுதான் நடக்க வைக்கும் நிலை.
(உ) மிகவும் தீவிரமான தாக்குதல் - என்ன செய்கிறோம் - என்ன செய் கிறார்கள் என்பது எதுவும் அவர்கள் அறியாத நிலை (Aggression).
உலகம் முழுவதிலும் 4 கோடியே 75 லட்சம் மக்கள் இந்த கொடும் மறதி நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 77 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு, மேற் காட்டிய பட்டியலில் சேரும் நிலை உள்ளது!
4 மணித் துளிகளுக்கு ஒரு மறதி நோயாளி சேர்ந்து கொண்டுள்ள பரிதாப நிலை. இது வருங்காலத்தில் எப்படி யெல்லாம் பெருகும் அபாயம் உள்ளது என்பதைக் கீழ்வரும் புள்ளி விவரம் உலகத்தோரை அச்சமூட்டுகிறது!
உலகம் முழுவதும் மொத்தமாக
2030-இல்    756 லட்சம் மக்கள்
2050-இல்    13 கோடியே 55 லட்சம் பேர்.
என்றாலும்கூட  139 நாடுகளில் தேசிய மறதி நோய் தடுப்புத் திட்டங்கள் தீவிரமாக உருவாக்கப்பட்டுள்ளன.
நம்முடைய இந்திய நாட்டில் 40 லட்சம் பேர் இந்த மறதி நோயால் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்றனர்!
இது மேலும் 1 கோடியே 20 லட்சமாக ஆகக் கூடும் என்ற மதிப்பீடு நம்மைப் பெரிதும் கவலை கொள்ளச் செய்கிறது.
வாஸ்குலர் டெமென்ஷியா (Vascular Dementia) என்பதும் 30 சதவிகிதம் பேருக்கு மற்ற 70 விழுக்காடு அல்ஷைமர்ஸ் என்ற மறதி நோய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றும் உலக, நல்வாழ்வு அமைப்புகள் புள்ளி விவரங்களைச் சேகரித்துள்ளன.
(இது எக்னாமிக் டைம்ஸ் நாளேட் டின் 8.8.2015 தகவல்கள் அடிப்படையில் திரட்டி எழுதப்படுகிறது).
இதனைத் தடுப்பது எப்படி என்பது நியாயமான கேள்வி அல்லவா?
விமானங்களில் வெளி நாட்டவர் பயணம் செய்யும்போது நான் கவனித்த துண்டு. Crossword Puzzles என்ற குறுக்கெழுத்துப் போட்டி, சொடுக்கு ‘Soduku’ என்ற கணக்குப் போட்டியை வெளியிட்ட நாளேட்டின் பகுதியை எடுத்து வைத்து அதற்கு விடை எழுதி தமது நினைவாற்றலை நிலை நிறுத்தி, மறதியை வயது - முதுமை காரணமாக விரட்டும் நிலை சர்வ சாதாரணம்.
மிக முக்கியமான தடுப்பு முறை மன உளைச்சல் காரணமாகவோ அல்லது வேறு காரணங்கள் ஏற்படும் (Depression)  மனச் சோர்வு - ஏற்படா மல் எப்போதும் உற்சாகமாக இருத்தல்.
நல்ல நகைச்சுவை உணர்வுடன் பேசி சிரித்து கலகலப்பாக  உள்ள வர்கள். நாமே நேற்று மணிக்கணக்கில், நிமிடங்கள், மணித்துளிகள் என்ன என்ன நிகழ்வுகள் என்று வரிசைப்படி எழுத முயல வேண்டும் - அது நல்ல மனவளப் பயிற்சியாகும்.
படித்தவற்றை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுதல் - மனத் திரையில் ஓட விட்டுப் பார்த்தல் - பிறகு சரி பார்த்தல் ஒப்பீடு மூலம் செய்தல் நல்லது.
சிக்கலான பிரச்சினைகளை நாம் நம் வாழ்வில் சந்திக்கும்போது, அவை களைத் தீர்ப்பதற்கு நம் மூளைக்கு சரியான வேலை கொடுப்பது மூளைக்கு நாம் கொடுக்கும் சரியான பயிற்சி, உடற்பயிற்சி, நடைப் பயிற்சியைப் போல.
எதையும் மனதில் பதிய வைத்து  திரும்ப மறுமுறை நினைவூட்டிக் கொள்ளுதல். இது ஓரளவு பயனளிக்கும் எல்லாவற்றையும்விட கலகலப்பாக பலருடன் பழகுதல் என்பது மறதி நோயிலிருந்து காக்கும் தடுப்புச் சுவர் ஆகும்.

- கி.வீரமனி
விடுதலை,14,15.8.15

வயிறு - நாக்கு - நம் போக்கு- நோக்கு!


எனது வீட்டு நூலகத்திலிருந்து பழைய புத்தகங்கள் சிலவற்றை மீண்டும் புரட்டும் வாய்ப்பு பெற்றேன் - சில நாள்களுக்குமுன்.
5.9.1953 அன்று அண்ணாமலைப் பல்கலைக் கழக நிறுவனர் நாள் கொண் டாட்டத்தையொட்டிய பேச்சுப் போட்டி யில் முதல் பரிசு வாங்கியதற்காக, உதவித் துணைவேந்தர் (திரு.ஓ.இராம நாதன் பிள்ளை) கையொப்பமிட்டு எனக்குப் பரிசாக அளித்த நூல் அந்தக் குறிப்புடன் கண்டேன். அதை மீண்டும் உண்டேன் மகிழ்ச்சியில்.
டாக்டர் மு.வ. என்று தமிழ் மொழி உணர்வாளர்கள், இலக்கியவாதிகளால் பெரிதும் பாராட்டி மதிக்கப்படும் டாக்டர் மு.வரதராசனாரின் தமிழ் நூல்கள் ஒரு காலகட்டத்தில் பல இளை ஞர்கள், தமிழ் வாசிப்பாளர்கள் மத்தி யில் அதிகமான புழக்கத்தில் இருந் தவை.
அவரது சவச் செய்தி பரிசு பெற்ற நூல் கள்ளோ காவியமா முதல் பல புதினங்கள் கரித்துண்டு வரை ஏராள மான பல்லாயிரக்கணக்கில் மக்களிடம் பரவி, விரும்பி வாங்கி, படித்துச் சுவைத்து, மு.வ.வின் அன்பர்களாகவே ஆகிவிட்டனர்.
டாக்டர் மு.வ. அவர்களும், நம் இனமானப் பேராசிரியர் க.அன்பழ கனார் அவர்களும், பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணி புரிந்த சம காலத்து நண்பர்கள் என்று ஈண்டு குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்ற டாக்டர் மு.வ.வின் நூல், ஒரு அருமையான, எளிமையான விளக்க நூல். (அவரது திருக்குறள் பொழிப்புரை, சைவ சிந்தாந்த நூற் பதிப்புக் கழகத்தவரால் உரிமை பெற்ற பல லட்சம் விற்பனையான முதல் எளிய பொழிப்புரை  பையடக்க நூல் ஆகும்).
இந்த நூலில் அவரது குறளுக்கு அளிக்கும் விளக்கம் முதலில் காமத்துப் பால் தொடங்கி, அடுத்து பொருட்பால், அதற்கடுத்து அறத்துப்பால் என்று செல்லும் ஒரு புதுமையைப் புகுத்திய நூல் அப்போது! தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வின் ஆழமான, அழகிய அணிந்துரையைக் கொண்ட நூல் இது!
காதலும், பொருளும் வாழ்க்கைப் படிகள். அறமே வாழ்க்கையில் உயிர் நிலை என்று விளக்கும் நோக்கத்தால் காமத்துப்பால், பொருட்பால், அறத்துப் பால் என்னும் முறையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது என்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் மு.வ.
இதைப் படித்தபோது, நம் உடல் அமைப்பின் உறுப்புகளின் முக்கிய பணிபற்றிய வள்ளுவரின் குறள் எவ் வளவு மருத்துவ நுண்ணறிவுடன் அமைந்துள்ளது என்பதை மிகவும் சிறப்பாக விளக்குகிறார் டாக்டர் மு.வ.
மருந்து என்ற தலைப்பில் (எனது பதிப்பில் பக்கம் 219) விளக்கம் எழுது கிறார் நூலாசிரியர் வள்ளுவர் குறளுக்கு.
பொதுவாழ்விற்குக் கருவியாக உள்ளத்தின் உறுதியும், அறிவின் தெளிவும், கெடாமல் காத்துக் கொள்ள வேண்டும். வரைவின் மகளிர், கள், சூது என்பன போல் உடம்பிற்கு வரும் நோயும், உள்ளத்தின் உறுதியையும் அறிவின் தெளிவையும் கெடுக்கவல்ல தாகும். ஆதலின், பொதுவாழ்வில் ஈடுபட்டோர் நோயற்றவராக வாழ வேண்டும் என்றும், நோய் வந்தாலும் உடனே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் திருவள்ளுவர் இங்குக் கூறு கின்றார். முதல் ஏழு குறளில் நோயில் லாமல் வாழ இயற்கை வழியைக் கூறி, பிறகு மூன்று குறளில் நோய் வந்தபின் மருந்தால் அதைத் தீர்த்துக் கொள்ளும் முறையைக் கூறுகின்றார். அதிகாரத் திற்கு மருந்து என்ற தலைப்பையே கொடுத்திருந்தும், ஏழு குறளில் மருந்து வேண்டாத வாழ்வையே அறிவுறுத்து கின்றார்; ஒரு குறளில் வெளிப்படை யாகவே மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு என்றும் தெளிவிக்கின்றார். ஆனால், இந்த நெறி மிக அரிய நெறி என்றும், எல்லோராலும் எல்லாக் காலத் திலும் இயலாதது என்றும் உணர்ந்து, தவறி நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருந்தால் தீர்க்கும் முறையை மூன்று குறளால் அறிவிக்கின்றார்.
பழங்காலத்து மருத்துவ முறைப்படி ஒருவனுடைய கையில் நாடி பார்த்து அவன் உற்ற நோய் இன்னது என்று காண முடியும். அவ்வாறு காணும்போது உடம்பில் வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் மூன்றும் மிகாமலும் குறையா மலும் இயற்கையான அளவில் இருந் தால் நோயற்ற நிலை என்று கூறுவார் கள். இந்த மூன்றில் ஒன்றோ, இரண்டோ மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் உண்டாக்கும்:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. (குறள் 941)
வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்றும் மிகாமலும், குறையாமலும் தம் அளவில் நிற்கவேண்டுமானால், என்ன செய்வது? வாதம் மிகுந்தால் வாயுப் பொருளை உண்ணாமல் விடுதல், பித்தம் மிகுந்தால் பித்தப் பொருளை உண்ணாமல் விடுதல், சிலேத்துமம் மிகுந்தால் கபம் உண்டாக்கும் ஈரப் பொருளை உண்ணாமல் விடுதல், இவ் வாறே ஒன்று குறைந்தால் அதை ஈடு செய்யும் பொருளைத் தேடி உண்ணுதல் ஆகிய இந்த முறையைச் சிலர் கையாள் வது உண்டு. இது அவ்வளவு சிறந்த முறை அன்று. ஏன்? உண்ணுகின்ற உணவுக்கு ஏற்ப வாதம் முதலியவை ஏற்படுகின்றன என்பது மட்டும் முழு உண்மை அன்று; உண்கின்ற உணவைச் செரிக்கச் செய்து ஏற்றுக்கொள்ளும் வயிற்றையும் பொறுத்தே அவை ஏற்படு கின்றன. ஒருவர் உடம்பில் இனிப்பு (சர்க்கரை) மிகுதியாவதாக வைத்துக் கொள்வோம். அவர் இனிப்பற்ற உணவையே தேடி உண்டாலும், எல்லாவற்றையும் இனிப்பாகவே மாற்றிக்கொள்ளும் ஆற்றல் வயிற்றுக்கு உள்ளது. ஆகையால், இனிப்புப் பொருளை மட்டும் விட்டுவிடுவதால் பயன் ஏற்படுவதில்லை. அவ்வாறே புளிப்பு உடம்பில் மிகுந்துவிட்டபோது, புளிப்பான பொருள்களை விட்டுவிடு வதால் பயன் விளைவது குறைவே; புளிப்பற்ற பொருள்களையே தேடி உண்டாலும் அவற்றை எல்லாம் புளிக்க வைத்துப் புளிப்பாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் வயிற்றுக்கு உள்ளது. மற்றச் சுவைகளுக்கும் இவ்வாறே காணலாம். சுவைகளை ஒட்டியே வாதம் முதலி யனவும் அமைந்துள்ளன என்று வகுப்பார்கள். அந்த முறைப்படி, சுவைப் பொருள்களை மாற்றி மாற்றி உண்பதால் வாதம் முதலியவற்றின் மாறுபாட்டால் வந்த நோய் தீர்ந்துவிடும் என்று நம்பு வார்கள். அது தவறு. விலங்குகளும், பறவைகளும் இயற்கையாகவே தம் உடலுக்கு ஏற்ற உணவையும், அதன் அளவையும் அறிந்து தின்கின்றன. அவற்றின் நாக்கு அளவறிந்து உண் ணும் கருவியாக அமைந்துள்ளது. மக்கள் நாக்கும் தொடக்கத்தில் அந்த ஆற்றல்  பெற்றிருந்தது. ஆனால், பகுத்தறிவும் எண்ணும் ஆற்றலும் வளர வளர புலன்களின் இயற்கை ஆற்றல் குன்றிவிட்டது. அன்றியும், சமைத்து உண்ணும் செயற்கை முறை வேரூன்றி விட்ட பிறகு, இயற்கை ஆற்றல் அழிவுபட்டது. ஆகையால், இன்று ஏற்ற உணவையும், ஏலாத உணவை யும் உணர்ந்து அறிவிக்கும் ஆற்றல் நாக்கிற்கு இல்லை. இன்றும் குழந்தை களிடத்திலும் சிலவகை நோயாளி களிடத்திலும் அந்த ஆற்றல் ஒருவாறு அமைந்திருத்தலை உய்த்துணரலாம். உடலுக்கு ஏலாத சில பொருள்களை அவர்கள் காரணமில்லாமலே விலக்கு கின்றார்கள். ஆயினும், உடலுக்கு ஏலாத சில பொருள்களை விரும்பவும் விரும்புகின்றார்கள்; உடல் கெடும் என்று பிறர் சொன்னாலும் கேளாமல் விரும்புகின்றார்கள்; அதனால் அந்த இயற்கை ஆற்றல் இன்று நாக்கிற்கு உள்ள அளவு போதாது; நம்பத் தகாததாகவும் உள்ளது.
இன்று நாக்கு இயற்கை உணர்வி னால் ஆளப்படும் தன்மை குறைந்து, மனிதனுடைய விருப்பு, வெறுப்பினால் ஆளப்படும் தன்மை மிகுந்துள்ளது. ஆயினும் இன்றும் உடம்பில் மற்றோர் உறுப்பு அந்த ஆற்றலை இழக்காமல் காத்து வருகின்றது; அது மனிதனுடைய விருப்பு வெறுப்புக்குக் கட்டுப்படாமல் வேலை செய்து வருகின்றது; அதுதான் வயிறு. அது ஒன்றே இன்றும் நம்பத்தக்கதாக உள்ளது. தக்க உணவை நன்கு செரித்து, தகாத உணவை நன்கு செரிக்காமல் தள்ளுகின்றது; மனிதன் ஆசை வயப்பட்டவனாய்த் தகாத உணவையே திணித்து வற்புறுத்து வானானால், அதற்காக அந்த வயிறு மாறி அமைவதில்லை; மனிதனுக்கு அடிமையாவதில்லை; வேலை செய்ய மறுக்கின்றது; திணிப்பும், வற்புறுத்தலும் மேலும் மிகுமானால், (செரிப்புக்கு மருந்து முதலியவை உண்டு வற்புறுத் தினால்) மறுக்கும் நிலைமையும் கடந்து மானமுள்ளவர்போல் தானே கெட்டு அழிகின்றது. ஆகவே, அது நன்றாக வேலை செய்கின்றதா, செரிப்பு வேலை சீராக நடைபெறுகின்றதா என்று ஆராயக் கற்றுக்கொண்டால், உடல் நலத்தைக் காத்துக் கொள்வது எளி தாகும். இந்த ஆராய்ச்சியை ஜெர்மனி யில் வாழ்ந்த டாக்டர் லூயி கூன் முதலான அறிஞர்கள் பலர் விளக்கிப் பல நூல்கள் எழுதியுள்ளனர். இதையே பல நூற்றாண்டுகளுக்குமுன் தமிழ் நாட்டில் வாழ்ந்த திருவள்ளுவரும் மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன் உண்ட உணவு எவ்வாறு அற்றது (சீரணமானது) என்பதை ஆராய்ந்து அறிந்து, அந்த அறிவைக் கடைப்பிடித்துப் போற்றிப் பிறகு அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும்; அவ்வாறு உண்டால், உடம்பிற்கு மருந்து என்று ஒன்று வேண்டியதில்லை. முன் உண்ட உணவு அற்ற பிறகு, உண்ண வேண்டியதை இன்ன அளவு வேண்டும் என்று அறிந்து உண்பதே கடமை. அதுவே உடம்பைப் பெற்றவன் அந்த உடம்பை நெடுங்காலம் காத்துச் செல்லும் வழியாகும். முன் உண்டது எவ்வாறு செரித்தது என்று செரித்த தன்மையை ஆராய்ந்து அதனால் அறிந்து உண்மை யைக் கடைப்பிடித்து, மாறுகொள்ளாத (உடம்புக்கு ஒத்துக்கொள்கின்ற) உணவை உண்ணவேண்டும்; அதையும் நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும். இவ்வாறு மாறுபாடு இல்லாத உணவையும், தன் மனம் விரும்பும் அளவு உண்ண மறுத்து உடலுக்குத் தேவையான அளவே உண்ணவேண் டும்; அவ்வாறு உண்டால், உயிர் வாழ்க் கைக்கு நோயால் வரும் இடையூறு இல்லையாகும். உடலுக்குத் தேவை யான உணவை ஆராய்ந்து குறைந்த அளவு இன்னது என்று அறிந்து உண்கின்றவனிடம் இன்பம் (உடல்நலம்) நிற்கும்; அதுபோல, மனத்தின் விருப் பத்திற்கு இயைந்து அளவு மீறி மிகுதியாக உண்கின்றவனிடம் நோய் நிற்கும். பசித்தீயின் அளவிற்கு ஏற்ற வாறு உண்ணாமல் ஒன்றையும் ஆரா யாமல் அளவு மீறி மிகுதியாக உண்டால், நோயும் அளவு கடந்து வரும்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்    (குறள் 942)
அற்றல் அளவறிந்து உண்க; அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு    (குறள் 943)
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து    (குறள் 944)
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு    (குறள் 945)
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்    (குறள் 946)
தீயளவு இன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோய்அள வின்றிப் படும்    (குறள் 947)
ஒருகால் நோய் வந்தால், நோயைத் தீர்க்க என்ன செய்யவேண்டும்? அது என்ன நோய் என்று ஆராய்ந்து, அந்த நோய் என்ன காரணத்தால் வந்தது என்று நாடி, அதைத் தணிக்கும் வழி என்ன என்று அறிந்து, பொருத்தமான முறையில் முயற்சி செய்யவேண்டும். மருத்துவன் உதவி செய்வதற்குமுன் நோயாளியின் உடல் நிலைமை, வலிமை, வயது முதலியவைகளையும், நோயின் தன்மையையும், தீர்ப்பதற்கு உரிய காலத்தின் வாய்ப்பையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்    (குறள் 948)
உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்    (குறள் 949) இதில் வயிறு எப்படி நமக்குக் கட்டுப்படாமல் நம் நலனைக் கருதி எவ்வளவு அருமையான எச்சரிக்கை களை தன்னகத்தே வைத்து, நம்மை காப்பாற்றி, வாழச் செய்கிறது பார்த்தீர் களா?
அதையும் அடக்கி வைக்கும் நாம் சர்வாதிகாரியாக மாறி கண்டதை யெல்லாம் நாக்கு சுவைக்காக சாப்பிட்டு கெடுத்துக் கொள்ளலாமா?

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
விடுதலை,25.3.15

காடுகள் பாதுகாப்பும் - வீடுகளின் பாதுகாப்பும்!



உலகில் நாடுகளும் மக்களும் நீண்ட நாள் நலவாழ்வு வாழ வேண்டுமானால் காடுகள் பாதுகாக் கப்பட்டாக வேண்டும். எந்த நாட்டில் காடுகள் அழிக்கப்படாமல் மிகவும் கவனத்துடன் பாதுகாக்கப்படுகின் றனவோ அந்நாட்டில்தான், பொருளா தார வளம் மட்டுமல்ல, நீண்ட ஆயுளைக் கொண்ட மக்களையும்கூடக் காண முடியும்.
வறட்சி ஏற்படாமல் விரட்டிட, மழை மிக முக்கியமல்லவா?
வானம் பொய்த்து விட்டது; மக்களுக்கு, மழை இல்லாததால் பயிர்கள் வளரவில்லை; நிலத்தடி நீர் மிகவும் கீழே போய் - காணாமலேயே போய் விட்டது, என்றெல்லாம் கூறுவ தற்கு அடிப்படைக் காரணம் காடுகளை அழித்து, மரங்களை வெட்டி, சூறை யாடி மனிதர்கள் பண அதிபர்கள் ஆகத் துடித்ததின் விளைவுதான்!
பயிர்கள் வளருவதுகூட பிறகு; உயிர்களுக்குக் குடிக்கவும்கூட குடிநீர் கிட்டவில்லையே!
ஒரு காலத்தில் வற்றாத ஜீவ நதியாக ஆறுகள் ஓடின. சிற்றோடை களும், மற்ற நீர் நிலைகளும் திரும்பும் பக்கமெல்லாம் வளமையை வாரித் தெளித்த வண்ணம் இருந்தன!
இன்றோ ஒரு போத்தல் தண்ணீர் ரூபாய் 16 முதல் 20 வரை வாங்கிக் குடிக்கும் அவலம் மலிந்து விட்டதே!
பற்பல ஊர்களில், நேரங்களில் ஒரு லிட்டர் பாலின் விலையைவிட அதிகமாக ஒரு   லிட்டர் தண்ணீர் விலை உள்ளது என்பது மிகவும் வேடிக்கையும் வேதனை யும் தரவில்லையா?
இதற்கு மூல காரணம் என்ன? காடுகள்அழிக்கப்படுவதால், மரங்கள் வெட்டிக் கொள்ளையடிக்கப்படுவதால் தான்!
மழை வேண்டி யாகம் செய்யும் சில புத்திசாலிகள் - யாகத்திற்கென மரத்தை வெட்டிக் கொண்டு வந்து போட்டு யாகம் செய்யும் வேடிக்கையும் விசித்திரமும் மலிவு இங்கே!
காடுகள் ஒரு நாட்டின் இயற்கைச் செல்வம், அவை பற்பல காரணங்களால் சூறையாடப்பட்டதன் விளைவுதான் நவீன உலகில் புவி வெப்பம் (Global Warming)  உயர்ந்து, பருவ மழை பொய்த்து, மக்களுக்கு நோய்கள் ஏராளம் பரவும் அபாயமும் ஓங்கி வருகின்றது!
காடுகளை அழித்து பலர் வீடுகள் கட்டுகின்றனர்! அமெரிக்கா போன்ற நாடுகளில் காடுகள் போன்ற மரங்கள் சூழ்ந்த மண்ணின் நடுவில் வீடுகளை கட்டி, ஏராளமான உயிர்க் காற்றினை (Oxygen) சுவாசித்து ஆயுள் பெருக்கி வாழுகின்ற முறை உண்டு.
காடுகளை அழித்து வருவதால், காட்டு மிருகங்கள் யானை, புலி, சிறுத்தைகள், ஊர்களுக்குள் வந்து மக்களை அடித்துக் கொல்லும் அவலம் தமிழ்நாட்டிலேயே பற்பல ஊர்களில் அன்றாட அவலங் களாக நிகழ்கின்றனவே! காடுகளை அழிப்பதின் தீய விளைவே இது! இன்று ஒரு நாளேட்டில் ஒரு வாசகர் எழுதியுள்ளார்.
ஒரு மனிதனுக்கு தினசரி மூன்று சிலிண்டர் ஆக்சிஜன் (Oxygen) உயிர் காற்று தேவை; ஒரு சிலிண்டர் 700 ரூபாய்; மூன்று சிலிண்டர் விலை ரூ.2100 ஆகும்.
இப்போது தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதைப் போலவே இனி காற்றையும் காசு கொடுத்து வாங்கும் கொடுமை (இப்போதே சில வணிக நிறுவனங்கள் நுழைந்து விட் டன) விரைவில் வந்துவிடக் கூடும்.
மூங்கில் காடுகளை வளர்க்க வாய்ப்பு இருக்கும் இடங்களில், அவை சிறிய இடங்களாக இருப் பினும் வளருங்கள். ஏராளம் பிராண வாயு   இதன் மூலம் கிடைக்கும்.
எனவே காடுகளை பாதுகாப்போம் அதன் மூலம் நம் வீடுகளை - வீட்டில் வாழும் உயிர்களையும் பாது காப்போம்!
ஏதோ  காடுதானே என்று அழிக்காதீர்கள்! மேழிச் செல்வம் போலவே, காடுகளும் நாம் பாதுகாக்க வேண்டிய நிரந்தரச் செல்வம் ஆகும். உயிர் காக்கும் தோழர்கள் நம் மரங்களும், காடுகளும் என்பதை மறவாதீர்!
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
-விடுதலை,24.3.15