பக்கங்கள்

புதன், 30 நவம்பர், 2016

அறிவியல் சிந்தனைகள் 9. மருத்துவத்தில் தெய்வீகமா? சிறுநீரக எச்சரிக்கை

செயற்கைச் சிறுநீரகம் (டயாலி ஸிஸ்) ஒரு தற்காலிக மாற்று ஏற்பாடாக செயல்பட்டு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற உதவ முடியும். அதுவேகூட, பல ஆண்டுகளுக்குத் தகுந்த சிறுநீரகம் கொடையாகக் கிடைக்கும்வரை உதவ முடியும்.

மாற்றுச் சிறுநீரகம் பொருத்தும் அறுவைச் சிகிச்சை மட்டும்தான் ஒரு நிரந்தரமான உயிர்காக்கும் சிகிச் சையாக அமைய முடியும்.

தெய்வீக மருத்துவம் பயன்படுத்தும் காசினிக்கீரை உட்பட எந்தக் கீரை யும், எந்த மூலிகையும் இரண்டு சிறு நீரகங்களும் முழுவதுமாக செயலிழந்த பிறகு அவற்றைச் செயல்பட வைக்க முடியாது.

தெய்வீக மூலிகை மருத்துவத்தை மட்டுமே நம்பி முறையான மருத்துவச் சோதனைகளைச் செய்து கொள்ளாமல், சரியான சிகிச்சைகளை மேற்கொள்ளத் தவறினால், உங்கள் பணத்தைப் பறி கொடுப்பதோடு சிறுநீரகச்செயல் இழப்பு (கிட்னி ஃபெய்லியரும்) முற்றிப் போய் அந்த நிலையில் ‘டயாலிஸிஸ்’ தவிர வேறு வழி இல்லை என்ற நிலைமைக்கு ஆளாகி விடுவீர்கள். பத்திரிகை, டி.வி. விளம்பரங்களை நம்பி உங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.

சிறுநீரக மருத்துவக் கோளாறுகள் இருந்தால் சிறுநீரக மருத்துவர்களான ‘நெஃப்ராலஜிஸ்ட்’களும், ‘சிறுநீரகம்‘ உட்பட சிறுநீர்ப் பாதை கோளா றுகளுக்கு, ‘நியூராலஜிஸ்ட்’களும்தான் உங்களுக்கு முறையான சோதனைகள் செய்து சரியான சிகிச்சை அளித்து உங்கள் சிறுநீரகங்களையும், உயிரையும் காப்பாற்ற முடியும்.

செலவு குறைவான சிகிச்சை, ஏழை மக்களுக்கு ஏற்ற சிகிச்சை என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் விளம்பரங்களாகும்.

உலகம் முழுவதும் நடைபெறும் பல்லாயிரக்கணக்கான மாற்றுசிறுநீரக அறுவைச்சிகிச்சைகள்செய்யும்மருத் துவர்களும்லட்சக்கணக்கானபேர்க ளுக்கு டயாலிஸிஸ் சிகிச்சை செய்து கொள்கிறவர்களும் முட்டாள்களா?

உணவுக் கட்டுப்பாடுமூலம் மட்டுமே சிகிச்சையளிக்கக் கூடிய ஆரம்ப நிலை (தற்காலிக) கிட்னி ஃபெய்லியர் நோயாளிகளுக்கும், மருந்தே தேவையில்லாத நோயாளிகளுக்கும் மட்டுமே,  இலை, தழைகளைக் கொடுத்து குணப்படுத்திவிட்டதாகத் தாங்களும் ஏமாந்து, மக்களையும் ஏமாறச் செய்வது அறியாமையினாலா? அல்லது மோசடியா? அல்லது மூட நம்பிக்கையா?

- கி.வீரமணி
-விடுதலை,30.11.16

செவ்வாய், 29 நவம்பர், 2016

அறிவியல் சிந்தனைகள் 8. பாராட்டுவதை உடனே செய்யுங்கள்!

இன்னும் ஒரு மணி நேரம்தான் நீங்கள் வாழப் போகிறீர்கள், தொலைபேசி மூலம் அழைப்புவிட உங்களுக்கு ஒரே ஒரு முறை மட்டும் வாய்ப்புத் தரப்பட்டுள்ளது, யாரை அழைத்துப் பேசுவீர்கள்; என்ன பேசுவீர்கள்? நீங்கள் ஏன் காத்திருக்கிறீர்கள் என்ற செய்தியையும் சொல்ல வேண்டும்! என்ன செய்வீர்கள்? என்று அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் கேட்டார்.

நாம் யாருக்காகக் காத்திருக்கிறோம்; எப்படி நமது நெருக்கமான நண்பர்களையோ, உற்ற உறவுகளையோ நேசிக்கிறோம் - அவர்களிடம் எப்படி நாம் அன்பு செலுத்துகிறோம் என்பது நமது ஒவ்வொருவரது வாழ்க் கையிலும் மிக முக்கியமானது. காரணம், 'அன்பின் வழியது உயிர்நிலை', என்பது அடிப்படை அல்லவா?

நாம் ஏதோ நீண்ட காலம் வாழ்வோம் அல்லது நிரந்தரமாக வாழ்வோம் என்று எண்ணிக் கொண்டிருப் பவர்களைப் போலப் பலர் தங்கள் அன்பை வெளிக் கொணரக்கூடத் தயங்கிக்கொண்டோ - தள்ளிப் போட்டுக் கொண்டோ வருகிறோம்; அது சரியான வாழ்வியல் முறை அல்ல.

நோயுற்று இருப்பவர்களைப் பார்த்து ஆறுதல் கூற விரும்புவோரோ,  அன்றிப் பிறரைப் பாராட்ட வேண்டும் என்று விரும்புவோரோ, நினைக்கும் மாத்திரத்தில் அவரை உடனே நேரிலோ, தொலைபேசியிலோ, இல்லையாயின் (கடைசியாக) கடிதத்தின் மூலமாகவோ உடனே அன்பைப் பொழிந்து, ஆறுதல் கூறுங்கள், பாராட்டுங்கள்; தள்ளிப் போடாதீர்கள்! பிறகு அது நிரந்தரமாகத் தள்ளிப்போடப்பட்டு, வாழ்நாள் முழுவதும் உங்கள் அன்பெனும் பிடிக்குள் அகப்படாத மலைபோல் கைநழுவிடக் கூடும் !

பாராட்ட வேண்டும் என்று நினைத்தவுடன் பாராட்டி விடுங்கள். அறிஞர் அண்ணா அவர்கள் ‘விடுதலை' ஆசிரியராக ஈரோட்டில் பணியாற்றிய போது ஒரு சம்பவம்!

தந்தை பெரியார் அவர்கள், அண்ணா ‘விடுதலை' யில் எழுதிய அன்றையத் தலையங்கம் படித்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்து அதைப்பாராட்ட முனைப் புடன் விரும்பி, ஈரோட்டில் அவரால் கட்டப்பட்ட மூன்று மாடி பிரமாண்டக் கட்டடத்தின் மேல் மாடியில் தங்கியிருந்த அண்ணாவை நேரில் பார்த்துப் பாராட்ட மாடிப்படி ஏறி நடந்து சென்றார். அண்ணாவுக்கு ஒரு பழக்கம். இரவு நெடுநேரம் கண் விழித்து விடியும் நிலையில்தான் தூங்கப் போவார்; படிப்பார்; எழுதுவார்; நண்பர்களுடன் உரையாடுவார் எல்லாம் இரவு முழுவதும். காலை வெகு நேரம் கழித்தே எழுவார்.அய்யா போனபோது - அவரிடம் தெரிவித்து எழுப் பினார்கள். அவரோ பதட்டப்பட்டு எழுந்தார் - அன்று அய்யா ‘முகத்தில் விழித்தார்'. அய்யா அவர்கள் அண்ணா எழுதிய தலையங்கத்தைப் பாராட்டிச் சொன்னபோது, அண்ணா அடக்கம் தொனித்த குரலில், "அய்யா அவர்கள் இதற்காகவா மாடி ஏறி வந்தீர்கள்; சொல்லியனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே" என்றார்.

ஆனால், அதற்கு அய்யா, "இல்லை, இல்லை; பாராட்ட வேண்டும் என்று நாம் நினைத்தால் உடனே பாராட்டுவதுதான் இருவருக்கும் நல்லது" என்று கூறினார்கள்.

‘டீம்' (Team) குழுமுயற்சி என்ற இடத்தில் பாராட்டத் தக்க செயல்களைச் சுமாராக ஒருவர் செய்தால் கூட நாம் பாராட்டத் தயங்கக் கூடாது.

நமது மகிழ்ச்சியைப் பெருக்குவதற்கும் இது உதவு கிறது அல்லவா?

கண்டிப்பதைத் தள்ளிப்போடுவது நல்லது. பாராட்டுவதை, அன்பு காட்டுவதைத் தள்ளிப்போடுவது அவ் வளவு சரியான நிலை அல்ல.

 

- கி.வீரமணி
-விடுதலை,29.11.16

திங்கள், 28 நவம்பர், 2016

அறிவியல் சிந்தனைகள் 7. ஊன்றிப் படியுங்கள்! உயர்ந்து வாழுங்கள்!!


நமது வாழ்க்கையை ஒவ்வொரு மனிதரும் செம்மையான, சீர்மையான, சிறப்பான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையாக வாழ முயலவேண்டும் ஒரு நாளில்.

நம்மால் முயன்றால் முடியும். சாத னையாளர்களாக உலகில், பல்வேறு துறையில் சரித்திரம் படைக்கும் மாமனிதர் களுக்குக்கூட கிடைப்பது 24 மணி நேரம் தான்!

அறிவார்ந்த முறையில், திட்டமிட்டு, உழைத்து வெற்றி பெறுகிறவர்கள், அந்தக் கால அளவினை பயனுறு வகையில் செலவழிக்கிறார்கள்.

காலம் என்பது அரிதானது! அதை இழந்தால் மீண்டும் எவரும் பெறவே முடியாது. இழந்த செல்வம் திரும்பப் பன்மடங்காகக்கூட கிடைக்கும். இழந்த காலம்....? ஒரு போதும் மீண்டும் கிட்டாது. நினைவில் கொள்ளுங்கள்.

தொலைந்த உடல் நலம் - பெரும் பகுதி அப்படி என்றாலும் -ஓரளவு மீண்டு, மீண்டும் சிறப்பாக நல்ல உடல் நலத்தோடு வாழமுடியும்.

எனவே காலத்தின் அருமையை உணர்ந்து, வீணே செலவழிக்காமல், தனக்கும், தான் சார்ந்த இல்லம் முதல் நாடுவரை எல்லோருக்கும் பயன்படும் வகையில் வாழ்வை அமைக்கலாம்.

குறித்த காலத்தில் குறித்தபடி எது வும் நடைபெற, நல்லதோர் பழக்கத்தினை நம்மில் பலர் ஏற்படுத்திக்கொள்ளாததனால்தான், நாம் பற்பல நேரங்களில் அவதிக்கும், தோல்விக்கும் ஆளாக வேண்டியிருக் கிறது.

மற்ற நாடுகள் மேற்கு, கிழக்கு எதுவானாலும், காலத்தை அவர்கள் வீண டிக்காமல், குறித்த காலத்தில் பணியாற்றி வெற்றியைக் குவிக்கின்றனர்.

அமெரிக்காவில், ஒரு சொற்றொடர் உண்டு. ‘காலம் என்பது அவ்வளவும் பணம்' என்பது. ‘Time is money’    அவர்களுக்கு.

‘எதுவும் நம் கையில் இல்லை; எல்லாம் தலையெழுத்துப்படிதான் நடக் கும்' என்ற தலைவிதித் தத்துவம் நம் மக்களை வெகுவாகப் பாழடிக்கும், நமது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையான தத்துவம் ஆகும்.

‘‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’’ என்ற பண்பாட்டு அடிப்படையில், ‘முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்‘, ‘மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு’ என்ற உயர்ந்த மனிதகுல மாண்புகள் மலர்ந்திருந்த சமுதாயத்தில் ஏற்பட்ட ஆரியப் பண்பாடு, ‘கர்மா, விதிப்பயன்’ போன்ற கவைக்குதவாக் கருத்துகளின் ஊடுருவல், வளர்ச்சியடையாத ஒரு தேக்கத்தினை உருவாக்கியுள்ளன!

‘எல்லாம் அவன் செயல், எதுவும் நம் கையில் இல்லை என்பது மனித முயற்சிக்கு தன்னம்பிக்கைக்கு வேட்டு வைத்துச் செய லற்றவர்களாக (Man is only passive and has no active role) மனிதர்களை ஆக்கிடும் தத்துவம் ஆகும். அவன் தானே சுயமாக சிந்தித்து, சொந்தமாக சாதிக்கும் ஆற்றல் பெற்றவனாக இல்லை என்ற தத்துவத்தைக் கடவுள் நம்பிக்கை போதிப்பதால்தான், தந்தை பெரியார் அவர்கள் “கடவுளை மற, மனிதனை நினை'' என்றார்! எனவே இதனை கடவுளுக்கு எதிரான கருத்து என்று வர்ணிப்பதைவிட, மனித குல வளர்ச்சிக்கு உதவிடும் தத்துவம் என்ற சரியான பார்வையில் பார்த்தால், வாழும் வாழ்க்கை ஒளி மிகுந்த ஒன்றாக இருக்கும்!

மனித வாழ்வு சிறப்பாக - குடும்பம் ஆனாலும், குழுமம் ஆனாலும், நாட் டின் அமைப்பு ஆனாலும் - அநேக சிந் தனையாளர்கள் அன்று முதல் இன்றுவரை பலர் சிந்தித்து, தங்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தித் தந்துள்ளனர்.

அவைகளால் நாம் பயன் அடையலாம்.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டு களுக்கு முன்னால் வெளிவந்தது  ஒரு நூல்! ஸ்டீபென்  ஆர்.கவி(Stephen R.Covey) 
என்ற அறிஞர் (The seven Habits of Highly Effective People) ‘பயனுறு வாழ்க்கை வாழ்வோரின் ஏழு பண்பு நலன்கள்’ என்ற நூலில் மிகவும் ஆய்ந்து, ஏற்றம்  தரும் ஏழு பண்பு நலன்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

அவரை உலகத்தின் பற்பல நாடுகளும், அதில் உள்ள பிரபல தொழில்  நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கம்பெனிகள், அரசுகள் அழைத்து - அதை அவர் விளக்கிச் சொற்பொழிவு பணிமனைகளை (Workshop)   நடத்திடுமாறு செய்துள்ளனர்.

அவரது நூல் பல லட்சக்கணக்கில் மக்களிடையே பரவியுள்ளது.

அந்நூலின் சாரத்தை இங்கே பிழி வாகத் தருகிறோம்.

அந்த ஏழு பண்பு நலன்கள்:

1) பாதிப்பால் பழுதாகா அறிவுத்திறன்.

(Be Pro Active)

2) மனதில் இலக்கினை எட்டும் துவக்கம்.

(Begin with an End in Mind)

3) முதலில் முடிக்க வேண்டியவையே முதலில்.

(First Thing First)

4) அனைவருக்குமே வெற்றி என்ப தான சிந்தனை.

(Think Win-Win)

5) நம்மைப் புரிந்து கொள்ளுவதைவிட சாலச் சிறப்பு - மற்றவரை நாம் புரிந்து கொள்ளுவது.

(Seek First to Understand Then To be Understood)

6) எல்லோருக்குமே லாபம்தான்.

(Synergize)

7) கூர்மை - ஒரு தொடர்பணி.

(Sharpen The Saw)

முதல் பண்புநலன்: ‘பாதிப்பால் பழுதாகா அறிவுத் திறன்’ நமது பண்புகளில் முதன்மையாக அமையவேண்டும்.

நமது வாழ்வுக்கென ஒரு குறிக்கோளை - இலக்கினை அமைத்துக்கொண்டு, அந்த இலக்கினை அடைவதற்கு உழைக்க விரும்பும் நாம், பற்பல நேரங்களில் தற் காலிகமாக நமக்கு ஏற்படும் அனுப வங்கள், இன்னல்கள், சங்கடங்கள், சவால் களையெல்லாம், அதன் போக்கில் பாதிப்பை நம்முள் அவை ஏற்படுத்தாத வகையில், நமது அறிவுத்திறனால் அவற்றைப் பின் னுக்கு தள்ளி ஆழ்ந்து ஆக்கரீதியாக சிந்தித்துச் செயல்படும் பக்குவத்தைப் பெற்றாக வேண்டும்.

நாம் ஒரு திட்டமிடுபவராகச் செயல்பட வேண்டுமே தவிர, சூழ்நிலைகள் நம்மை திட்டம் ஆக ஆக்கிக் கொண்டு செயல்பட வைக்கும் நிலைக்கு பலியாகக்கூடாது. (It  Seeing yourself as a Programmer, not as a Programme being acted out.)

ஒரு சம்பவத்தின் நிகழ்வுக்கும் அது நம்முள் ஏற்படுத்தும் தாக்கத்திற்கும் இடையே ஓர் இடைவெளி உள்ள வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி, நமது குறிக்கோளுக்கு அந்நிகழ்வு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வண்ணம் நாம் இலக்கில் குறியாய் இருந்து சிந்தித்துச் செயல்படுவதே நம்மைப் பயனுறு வாழ்க்கை வாழச் செய்யும் முதல் படியாக அமையும்.

சூழ்நிலை, சுற்றுச் சார்பு - நிகழ்வுகள் என்ற சூழல் நம்மை நோக்கி வரும்போது, நமது அறிவுத் திறனால் அதில் அடித்துச் செல்லாதவாறு தலையை உயர்த்தித் தப்பித்தல் மூலமே நாம் நாமாக வாழ முடியும் என்பதே அதன் சுருக்கமான தத்துவம் ஆகும்.

(தொடரும்)

- கி.வீரமணி
-விடுதலை,26.11.16

ஞாயிறு, 27 நவம்பர், 2016

இடுக்கண் வருங்கால் நகுக - மிசாவில் நிகழ்வுகள்!


இந்திய வரலாற்றின் இருண்ட காலம்  என்று வர்ணிக்கப்படும் நெரு டிக்கடி காலம் (Emergency Period) என்பது எத்தனையோ உள் அடக்கங் களையும் வெளிப்புற ஆகா, ஊகா பாராட்டுகளையும் பெற்ற இரு புறத் தோற்றங்களைக் கொண்டது!
எண்ணற்ற பதினாயிரக்கணக்கில் இந்தியாவின் பல்வேறு கட்சி, அமைப் புகளின் தலைவர்கள் கைது - காரணம் காட்டப்படாமலேயே, எப்போது அவர்கள் வெளி வருவார்கள் என்று கைதானவர்களுக்கோ சிறை நிர் வாகிகளுக்கோ கூடத் தெரியாத - தெரிந்து கொள்ள முடியாத விசித்திர நிலை. (ஆயுள் தண்டனைக் குற்ற வாளிகளுக்குக்கூட ஒரு இரும்பு பித்தளை அட்டை பெயர், எண், விடுதலையாகும் நாள் - 20 ஆண்டு கழித்து, என்று உண்டு. மிசா என்ற நெருக்கடி கால கைதிகளுக்கு எது வுமே தெரியாது!
இப்படிப்பட்ட இருண்ட, இறுக்க மான சூழ்நிலைகள் கவ்விய நேரத்தில், நாங்கள் மிகவும் கலகலப்பாகவே சிறை வாழ்க்கையை அனுபவித்தோம் - ஆரம்பக் கொடு மைகளையும்  தாண்டி!
இடுக்கண் வருங்கால் நகுக என்ற வள்ளுவர்தம் குறளின் பொருளை பல நேரங்களில் சுவைத்து மகிழ்ந்தோம்!
1976 ஜனவரி 31ஆம் தேதி இரவு தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப் பட்டு, மாலையே குடிஅரசுத் தலைவர் ஆட்சிஅமுலுக்கு வந்தது. எங்களை நள்ளிரவு 1 மணி அளவில் கைது செய்து சென்னை நகர போலீஸ் கமி ஷனர் அலுவலகத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டோம்!
தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் இவர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு பகுதியி லிருந்தும் கைது செய்து அங்கு (போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு)க் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டி ருந்தனர்.
இரவெல்லாம் அங்குள்ள ஹாலில்(Press Room) உட்கார்ந்திருந்தோம்.
அந்த நள்ளிரவில் நடிகவேள் M.R.  ராதா அவர்களைக் கைது செய்து எங்களுடன் அமர வைத்தனர்.
சில நிமிடங்கள் கழித்து நடிகவேள் அவர்கள், என்னை அழைத்துக் கொண்டு மாட்டப்பட்டிருந்த ஒவ்வொரு பழைய அய்.ஜி.கள், சிட்டி போலீஸ் கமிஷனர்கள் படங்கள்பற்றி கேட்டுக் கொண்டே வந்தார். நான் பெயரைப் படித்து இது சஞ்சீவிப் பிள்ளை, இது  F.V. அருள் இப்படி வரிசையாக  நான் ஒவ்வொரு படத்தையும் பற்றி விளக்கி வந்தேன். அங்கே ஒரிடத்தில் மய்யப்பகுதியில் திருவள்ளுவர் படம் மாட்டப்பட்டிருந்தது.  உடனே என்னைப் பார்த்து ராதா அண்ணன் அவருக்கே உரிய குரலில், சத்தமாக - ஏம்பா, திருவள்ளுவர் எப்பப்பா நம் நாட்டிலே அய்.ஜி.யா இருந்தார்? என்று ஒரு போடு போட்டார்!
உடனே மிகுந்த அதிர்ச்சி கலந்த சோகத்துடன் உட்கார்ந்திருந்த அத் தனைப் பேரும் கலகலப்பாக சத்தம் போட்டுச் சிரித்தனர்!
நிலவிய இறுக்கச் சூழ்நிலை திடீரென மறைந்தது!
இடுக்கண் வருங்கால் நகுக இதுதானோ?
****
வாரம் ஒரு முறை சிறையில் நேர் காணல் இரண்டு மிசா கைதிகளை தனித்தனியாக உட்கார வைத்து, அவர்கள் வீட்டுக் குடும்ப உறுப்பினர்கள் - மனைவி - மக்கள் - நெருங்கிய உறவினர்கள் அமர வைத்து நலம் விசாரித்து உரையாட அனுமதிப்பர் சிறை அதிகாரிகள்.
அந்த இடத்திற்கு முன்னால் சிறை அதிகாரி ஒருவர் அமர்ந்திருப்பார்.
ஒரு சி.அய்.டி இன்ஸ்பெக்டர்  (Intelligence Inspector) சுருக்கெழுத்தில் கைதிகளின் மனைவி மற்றும் சொந்தக் காரர்களிடம் பேசுவதைக்கூட ஒருவரி விடாமல் எழுதுவார். திரைக்குப்பின்னால் இதே போன்று மற்றொரு அதிகாரி துப்பறியும் இன்ஸ்பெக்டர் (CID) அமர்ந்து குறிப்பெடுப்பார்.
இப்படிப்பட்ட ரத, கஜ, துரகபதாதி களுடன் எங்களின் தனிப்பட்ட சுதந்தரம் காவு கொடுக்கப்பட்டு -  ஏதோ ஒப்புக்கு பார்த்தும், பேசியதுமாக நேர்காணல் முடிந்து விடும்.
நடிகவேள் ராதா அவர்களின் நேர் காணலுக்கு அவரது மனைவி திருமதி தனலட்சுமி அம்மாள் வந்து பேசிக் கொண்டு, எப்ப மாமா நீங்க வீட்டுக்கு வருவீங்க? என்று வெகுளித்தனமாகக் கேட்டார்.
விட்டா நான் இங்கேயா இருப்பேன்? உடனே வந்துர மாட்டேனா? நான் என்ன இங்கேயே தங்கி குடும்பம் நடத்தப் போறேனா?  என்றார்.
ஒரே சிரிப்பு அதிகாரிகளாலும் அடக்க முடியவில்லை. அதற்கு அடுத்த கட்டம் தான் மிகவும் சுவையானது!
ஏன் மாமா வெளியே சொல் றாங்க; என்னவோ நீங்க எழுதிக் கொடுத்தா உட்டுடுவாங்க வீட்டுக்கு வந்துடலாம் என்று. அப்படி எழுதிக் கொடுத்துட்டு வாங்களேன் என்றார்.
என்னான்னு எழுதித் தர்றது?  - M.R. ராதா; அந்த அம்மா இனிமே இந்த தப்பைச் செய்ய மாட் டேன்ண்ணு எழுதிக் கொடுங்க என்றார்.
ஏம்மா, நான் என்ன தப்புப் பண்ணி இங்கே கூட்டியாந்திருக் காங்க... இன்னமும் புரியலையே யாருக்கும்!
நான் வீட்டிலே படுத்து தூங்கிக் கிட்டு இருந்தேன். எழுப்பிக் கூட்டி யாந்துட்டாங்க,
இனிமே இப்படி செய்ய மாட் டேன்னு என்னை எழுதிக் கொடுக் கச் சொல்றே.
இனி நான் ராத்திரிலே தூங்க மாட்டேன்னு எழுதிக் கொடுக்கச் சொல்றியா? என்று பட்டென்று பதில் சொன்னார்.
ஒரே சிரிப்பு - எழுதிய சி.அய்.டி. இன்ஸ்பெக்டர் பேனாவைக் கீழே போட்டு விட்டு சிரித்தார். சிறை அதிகாரி களின் சிரிப்பு அடங்க நேரமாகியது.
பக்கத்தில் நேர் காணலில் இருந்த எங்களுக்கு அவரது  - பதிலை நையாண்டி நகைச்சுவைக் குரலில் கேட்டு சிரித்துச் சிரித்து மகிழ்ந்தோம். இப்போதும் இது நல்ல காமெடி  பீஸ் அல்லவா!
இடுக்கண் வருங்கால் நகுக! - துன்பம் போயிற்று - மகிழ்ச்சி மின்னிற்று!
-விடுதலை,25.6.15

நலவாழ்வின் எதிரி சர்க்கரை நோய் - புரிந்திடுவீர்!


சர்க்கரை நோய் என்பது மிகவும் ஆபத்தானது; அது மட்டுமா? ஒருமுறை நம் உடம்பினுள் புகுந்து அது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டால், அது நமக்கு வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்தே தீரும் என்பதுதான் இதுவரை நிலவிவரும் மருத்துவத் தகவல். இனி எதிர்காலத்தில் - ஆய்வுகளால் எப்படி மாறுமோ? நாம் அறியோம்!
இன்றைய (24.6.2015) டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில நாளேட்டில் இந்த நோய் தாக்குவதற்குரிய மூலகாரணம் ஒன்றைப்பற்றி மிகவும் தெளிவாக ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.
மிக நீண்ட நேரம் அமர்ந்தே, எழா மல், சிறிதுநேரம்கூட நடந்து, திரும்பி பணியை மேற்கொள்ளாது பணியாற்றும் போது, அந்தப் பல மணிநேர அமர்வு - உட்கார்ந்திருத்தல்கூட, நாம் பணியாற்று கிறோம்; சும்மா இருக்கவில்லை என்ற போதிலும்கூட, அது நமது ரத்தத்தின் சர்க்கரை அளவை மிகவும் கூடுதலாக்கி, சர்க்கரை நோயை (Diabetes) கொண்டு வந்து விடுகிறது.
பொதுவாக பணியாற்றுகிறவர்கள் கணினி முன்னால், அல்லது பல மணிநேரம் இடைவிடாது நாற்காலியில் அமர்ந்தோ தொடர்ந்து தொலைக் காட்சி (டி.வி.) பார்த்துக்கொண்டே இருக்கும் இருபாலர்களோ, சில பொது நிகழ்ச்சிகளில்கூட அன்பு தண்டனை யாக மூன்று, நான்கு மணிநேரம் நம்மை அமரச் செய்து, நீங்கள் முக்கிய மானவர்; இறுதியில் பேசுங்கள்; அப் போதுதான் கூட்டம் கலையாமல் இருக்கும் என்று கூறி, நேரத்தை வீணாக்கி, மற்ற பலரையும் பேசவிட்டு, பெருங்கூட்டத்தைக் கொஞ்சம் கொஞ்ச மாகக் கலையச் செய்த பிறகு, கூட்டத் தினரிடையே பேச வைக்கும் ஏற்பாடு - இப்படி எத்தனையோ விதங்களில் தொடர்ந்து அமர்ந்திருப்பது - எழாமல் இருப்பது - சர்க்கரை நோய் மட்டுமல்ல - கூடுதல் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) - அதன் விளைவாக மாரடைப்பு - இருதய நோயை உண்டாக்குதல் போன்றவை களோகூட முன்னோட்டமான நிலை மைகளை உருவாக்குவது போன்ற தொடர் நிகழ்வுகள்தான்!
இவைகளைத் தவிர்க்க, எளிய வழிகள்:
1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காமல், அடிக்கடி எழுந்து, அல்லது அலுவலக அறைக் குள்ளே பொடி நடைச் சுற்று சுற்றி மீண்டும் வந்து அமர்ந்து பணி தொடர் தல் போன்றவற்றைச் செய்யலாம்.
உடல் அசைவுகள், எல்லா உறுப்பு களுக்கும் ரத்த ஓட்டம் செல்லும்படி சிறு சிறு மாற்றுப் பணிகள் இடைவேளை களில் செய்தல், எழுந்து, நடந்து மீண்டும் அமர்தல் போன்றவைகளைச் செய்யலாம்.
நீண்ட நேரம் அமர்ந்திருப்பது (தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்த உருளைக்கிழங்கு போண் டாக்களும் இது சேர்ந்ததே)
இருதயம்:
எந்தெந்த உடல் உறுப்புகளை இப்படி நீண்ட நேரம் குந்தியே (உட் கார்ந்தே) சில ஊர்களில் இச்சொற் றொடர் புழக்கத்தில் உள்ளது.
நீங்கள் அமர்ந்தே இருக்கும்போது ரத்த ஓட்டம் குறைகிறது; தசைகளில் கொழுப்பை (உணவின்மூலம் சேரு வதை) எரிப்பது குறைகிறது. விளைவு கொழுப்பு திரவங்கள் (Fatty Acids) இதயத்தின் இரத்தக் குழாய்களை அடைக்கின்றன.
கணையம்:
உடல் உறுப்பில் இந்தக் கணையம் (Pancreas) தான் இன்சுலின் என்பதை ஈர்த்து ஒழுங்குபடுத்தும் கருவி,  ஒரு நாள் அதிகமாக உட்கார்ந்தே இருப்பது அதிகமான அளவு இன்சுலின் அதிக அளவில் உற்பத்தியாவதற்குக் காரண மாக - சர்க்கரை நோயைத் தோற்று விக்கிறது.
செரிமான உறுப்புகள்:
உட்கார்ந்தே இருப்பதால், செரி மானப் பணிகளைச் செய்யும் வயிற்று உறுப்புகள் சுருங்கி, செரிமானத்தைத் தாமதிக்கிறது. இப்படி சரியானபடி ஆகாத மிகவும் தாமதமான செரிமானம் - வயிற்றில் ஒரு பிடிப்பு (வலி) (Cramping, Bloating) நெஞ்சு எரிச்சல் (Heart Burn)  மலச்சிக்கல் (Constipation) இவைகளை உருவாக்குகிறது.
உடற்பயிற்சி ஏதும் செய்யாது மிக நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதனால், சுறுசுறுப்பு இன்றி மிகவும் டல்லாக குறைந்த சக்தியை மட்டுமே பெறும் அளவுக்கு ஆக்கி அசத்தி உட்காரவும் வைத்துவிடுகிறது!
எனவே, அடிக்கடி எழுந்து குறு நடை நடைப் பயிற்சி செய்து; உள்ளே, வெளியே சென்று தண்ணீர் குடித்தோ, உரையாடியோ திரும்புங்கள்.
இன்று வந்துள்ள இந்து ஆங்கில நாளேட்டில் சர்க்கரை நோய் வரு வதற்கு நான்கு முக்கிய காரணங்கள் என்பவைபற்றியும் விளக்கி ஒரு செய்திக் கட்டுரை வந்துள்ளது.
அந்த நான்கு பெரிய (Big Four) என்ன தெரியுமா?
1. உணவு - கண்டதையும் அரைத்தல் (குறிப்பாக, வேக உணவுகள்)
2. உடற்பயிற்சி இன்மை - lack of exercise
3. உடற்பருமன் - Obesity
4. கொலஸ்ட்ரால் (கொழுப்புச் சத்து) மிகுதல்
இவற்றில் நாம் அனைவரும் கவனம் செலுத்துதல் முக்கியம் - மிக முக்கியம்  - நல வாழ்வுக்கு.
-விடுதலை,24.6.15

கண்ணாடியும் - நண்பர்களும்


காலத்தை வென்ற மேல்நாட்டுக் கலைவாணர் (நகைச் சுவை அரசு என்.எஸ். கிருஷ்ணனைப் போல்) சார்லி சாப்ளின் அவர்கள் வெறும் சிரிப்புமூட்டும் கலைஞர் மட்டுமல்ல; சிரிக்கவும் வைத்து உலக மக்களைச் சிந்திக்கவும் வைத்த மிகப் பெரிய மேதை.
அவரது சிந்தனையின் பலனாக உருவாக்கப்பட்ட திரைப்படங் களையே கண்டு மிரண்ட அரசுகளும், அதன் காரணமாக நாட்டையே விட்டு வெளியேறிட வேண்டிய நிர்ப்பந்த மும்கூட அவருக்கு ஏற்பட்டதுண்டு!
மக்களையெல்லாம் இப்படி மகிழ்ச்சி அருவியில் குளிக்க வைத்து மகிழ்வித்த அந்த மாமேதையின் வாழ்க்கைக்குள்ளோ எத்தனையோ சோகத் தாக்குதல்கள்; அவற்றை மறைத்தோ, மறந்தோ அவர் மக் களுக்கு தனது நகைச்சுவை (துணுக் குகள்) மூலம் அறிவு கொடுக்கத் தவறவில்லை!
அவர் ஒருமுறை சொன்ன கருத்து உலகம் முழுவதும் பரவிய கருத்து; ஊடகங்களும்கூட இதனை அவ்வப் போது மேற்கோளாகக் காட்டிடத் தவறவில்லை!
முகம் பார்க்கும் கண்ணாடி (Mirror) தான் என் சிறந்த நண்பர்; ஏனெனில் நான் அழும்போது, அது ஒரு போதும் சிரித்ததில்லை - சார்லி சாப்ளின்
இதில்தான் எத்தனைத் தத்துவங்கள் புதைந்துள்ளன, பொதிந்துள்ளன!
நம்முடைய நண்பர்களில் பலர் நமக்கு முகமன் கூறியே நம்மிடம் சலுகையோ, தயவோ, பெற விரும்புவர்கள்.
நகுதல் பொருட்டல்ல நட்பு என் பதைக் கடைப்பிடித் தொழுகுவதை அறியாதவர்கள்.
காரியம் ஆவதற்குக் காலைப் பிடி; காரியம் முடிந்தவுடன் கழுத்தைப் பிடி என்ற அனுபவ மொழிக்கேற்ப, பயன் கருதி நட்புப் பாராட்டுபவர்களே உலகில் ஏராளம்!
ஒப்பனை இல்லாத நட்பே உயர் நட்பு!
இடுக்கண் வருங்கால் நகுக என்ப தற்கு நாங்கள் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் படித்த 60 ஆண்டு களுக்கு முன்பு - இக்குறளைப் பல நண்பர்கள் எப்படிப் பொருள் கொண்டு கூறினார்கள் தெரியுமா?
துன்பம்; இன்னல், சோதனை ஒருவருக்கு வரும்போது அதுகண்டு உதவிடவோ, ஆதரவுக்கரம் நீட்டவோ கூடச்செய்யாது, சிரித்து மகிழ்வதில் - அதாவது கேலிச் சிரிப்பு நகுதலை வாடிக்கையாகக் கொண்டு ஒழுகுக என்பது இன்றைய நடைமுறை என்று மாணவத் தோழர்கள் கூறுவதுண்டு.
நம்மில் பலரும் - அது குடும்பமா கவோ, நிறுவனமாகவோ, இயக்கமாகவோ - எதுவாக வேண்டுமானாலும் இருக் கட்டும், பரவாயில்லை. அவற்றுடன் தொடர்புடைய நமது நண்பர்கள் கூறும் மாறுபட்ட கருத்து எதையும் கேட்கக் கூட நம்மில் பலர் தயாராக இருப்பதில்லை.
எப்போதும் புகழுரை என்ற குளிர் பதனத்தையே அனுபவித்துக் கொண் டுள்ள நாம், கொஞ்சம் வித்தியாசமான - அது நம்முடைய உண்மை நலனில் அக்கறை கொண்ட கருத்துரையாக இருப்பினும்கூட,  வெப்பம் போல் அதைக் கேட்கக் கூடத் (ஏற்றுக் கொள்வது பிறகு அடுத்த நிலை - அல்லது இறுதி நிலை) தயாராக இருப்பதில்லை.
எந்தக் கருத்து, அறிவுரையாயினும் நண்பர்கள் - உள்நோக்கம் ஏதுவும் இன்றி - கூற முன் வரும்போது அதை வர வேற்று, பொறுமையுடன் காது கொடுத்துக் கேட்டு, கொள்ளுவதைக் கொள்ளலாம்;  தள்ளுவதைத்  தள்ளலாம். திருத்திக் கொள்ள வேண்டியவற்றைத் திருத்தி நாம் மேலும் வளரலாம் - வாழலாம்.
அதற்குப் பலரும் தயாராவ தில்லை என்பது ஒரு கெட்ட வாய்ப்பே ஆகும்!
மழையோ, புயலோ வரக்கூடும் என்று வானிலை நிலவரம் கூறும் பொறியாளர் - விஞ்ஞானி மக்கள் பகைவரா?
ஆட்சிக்கு எதிரான சதிகாரரா? இல்லையே, மக்களை எச்சரிக்கைப் படுத்திடும் மிக அரிய பணியைச் செய்யும் நண்பர் அல்லவா?
உடைந்த எலும்பை படமாகக் காட்டும்  எக்ஸ்ரே கருவியை - நாம் விரோதி என்றா கருதுகிறோம்?
அதன் மூலம் தானே நாம் நம் உடல் நலத்தை சீரமைத்துக் கொள் ளும் வாய்ப்பை மருத்துவ உதவி மூலம் பெறுகிறோம் - இல்லையா?
எனவே, உண்மை நட்பை - அவர்கள் கசப்பு மருந்தை தந்தாலும் அதை உண்டு நலம் பெறுவோம். ஒப்பனை (முகமன் கூறும்) நண் பர்களை  அடையாளம் காண்போம். சில கண்ணாடிகள் மாற்றிக் காட்டி னால் அதை எறிந்துவிடுங்கள்.
சில நண்பர்கள், கண்ணாடி கீழே விழுந்தால் பட்டென்று உடை வதுபோல் உடைந்து, ஒதுங்கி விடு வதும் உண்டு; அதையும் மறுபுறம் கவனத்தில் கொள்ளத் தவறாதீர்கள்.
அக நக நட்பே; தலையாயது என்று உறுதியுடன்  கணியுங்கள்.
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
-விடுதலை,19.6.15

எதுவும் அளவுக்கு மிஞ்சிட வேண்டாம்!

வாழ்க்கையில் நம்மில் பலருக்குத் துன்பம் ஏற்படுவதற்கு நாம் கையாளும் நடைமுறை பழக்க வழக்கங்கள் பெரிதும் காரணமாகும்.
எளிய பழமொழிகள் பல அனுபவத் தின் அடிப்படையிலேயே முகிழ்த் தவை. அவற்றிற்கு நாம் அதிக முக்கி யத்துவம் தராமல் அலட்சியப்படுத் துவதே துன்ப, துயரங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற மூதுரையின் முக்கியத் துவத்தை அலட்சியப்படுத்தியோ, வாழ்வில் கடைப்பிடித்தொழுகு வதையோ நாம் செய்வதில்லை. (அமிழ்து என்பது இனிய சுவை தரும் பண்டம்)
எதையும் அளவுவோடு விரும்புதல் ஆசை என்பதாகும்.
அளவின்றி மோக முள் அதன்மீது குத்திக் குத்தி, இரத்தம் சிந்தினாலும் கூட அந்த ஆசைக்கு எல்லைக்கோடு - வரையறை செய்யாது, அலையோ அலை என்று அலைந்து பணம், சொத்து, புகழ் சேர்க்க வேண்டும் என்று நடப்பது பேராசை என்பதாகும்.
மீதூண் விரும்பேல் என்பது எவ்வளவு பெரிய அறிவுரை!
நன்கு சுவைத்து உண்ணும் அளவுக்கு உணவு வகைகள் மிகுந்த சுவைமிக்க தாயினும்,  அளவு - வரம்பு கடந்தால் செரிமானக் கோளாறுதானே!
பிறகு அதற்குரிய மருத்துவம், மருந்து, அவதி - இவையெல்லாம் தவிர்க்க இய லாத அவசியமற்ற விளைவுகள் தானே!
நம்மில் எத்தனை பேர் இதனைக் கடைப்பிடித்து ஒழுகுபவர்களாக உள் ளோம்?
வயிற்றில் ஒரு பகுதி எப்போதும் காலியாக வைத்துக் கொண்டே (முக்கால் + கால்)  எந்த விருந்தாயினும் உடனே எழுந்து கை கழுவி விட்டீர்களானால், அது கையை மட்டும் கழுவியதாகாது,  அஜீரணக் கோளாறு என்ற நோயை யும்கூட கை கழுவியதாகவே ஆகும்!
வயிறுமுட்டச் சாப்பிடுவது என்பதும் அதனைக் குறைத்துச் சாப்பிடுவது என்பதும் எல்லாம் நம் கையில் - நம் முடிவில் தான்!  இருக்கிறது!
உண்ணும்போது சபல அலைகள் நம்மை, தம்பக்கம் சாய்த்து விடாமல் காக்க வேண்டிய பொறுப்பு பிறருக்கா? நமக்கா? உபசரிக்கிறவர்கள் விளைவை அனுப விப்பவர்கள் அல்லவே?
அப்படி மறுக்கும்போது கனிவுடன் அதனை மறுப்பதே நல்லது. விருந்தளிப் போரைச் சங்கடப்படுத்தி எரிச்சல் ஊட்டி ஏண்டா இந்த மனுஷனை வீட்டிற்கு அழைத்து விருந்து போட்டோம்! என்று தன்னைத்தானே நொந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்தலாமா?
அதில் சற்று நயத்தக்க  நாகரிகம் ததும்ப வேண்டாமா?
உணவு - பரிமாறல் - விருந்து பற்றி பரவலான ஒரு உண்மை, பலராலும் சொல்லப்படும் கருத்து, சாப்பாடு ஒன்று தான் போதும் என்று சொல்லும் அளவுக்கு நிறுத்தச் சொல்வது; மற்றவை களுக்கு இது மாதிரி உச்சவரம்பு கட்டுவதே இல்லையே!
அண்மைக்கால அன்றாடச் செய்திகள் பணத்தாசை, திடீர் பணக்காரராக பிறரை வஞ்சித்து, களவாடி, பறித்து, கொள்ளை யடித்து, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து - அதன் விளைவாக தீராத சங்கடங்களையும், ஆறாத அவலத்தை யும் அனுபவித்தாலும், போதையை விரும்பி மது குடிப்பவன் - வேட்டி அவிழ்ந்து வீதியில் கிடந்து அவதியுற் றாலும் மறுநாளும் நேற்று குடித்த அளவுக்குமேல் குடித்துக் கும்மாளம் போட்டு, அதே இடத்தில் மீண்டும் முழு நிர்வாண கோலத்தில் மூச்சுப் பேச்சின்றி விழுந்து கிடப்பதில் ஒரு சுயஇன்பம் காணுவது போன்ற பரிதாபம் அல்லவா?
பணம் - காசு - செல்வம் தேவை மூச்சு விடுதலுக்குத் தேவையான பிராண வாயு போல - மறுக்கவில்லை நாம்!
அதையே மூச்சு முட்டித் திணறும் அளவுக்கு ஒரு வழிப்பாதையாக்கி, மறுவழி செலவோ, நன்கொடையோ, பொதுத் தொண்டோ, செய்யாமல் பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்து அனுபவிக்கக்கூட முடியாதபடி ஊர் சிரிக்க, உலகம் கெக்கெலி கொட்ட, சட்டம் தண்டிக்க, உச்சியிலிருந்து அதல பாதாள பள்ளத்தில் வீழ்ந்து எழ முடியாமல் நாதியற்று பிறர் நெருங்க அஞ்சிடும் நிலைக்குத் தள்ளப்பட்ட வர்களாவது எதனால்?
அளவுக்கு மிஞ்சி பொருள் சேர்த்த குற்றம் புரிந்ததினால்தானே!
புகழேகூட  போதையில் பெரும் போதையாகும். அதையேகூட ஒரு கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் அது நம் உயிர்க்கு இறுதியாகி விடும்.
புகழுக்காக வேட்டையாடுதல், செலவழித்தல் அறவிலை வணிகர் ஆவது விரும்பத்தக்கதா? ஆராய்ந்து பார்க்க!
(எஞ்சியது  நாளை)
-விடுதலை,20.6.16
எதுவும் அளவுக்கு மிஞ்சிட வேண்டாம்!-2

எதுவும் அளவுடன் இருப்பதே எல்லா வகையிலும் வாழ்க்கையின் சிறப்புக்கு வரப்பு கட்டியதாகும். என்பதை சனிக்கிழமையன்று (20.5.2015) வெளிவந்த வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை கூறியது.
மேற்கொண்டும் சிந்திப்போமா? அளவுடன் இருப்பதுடன் அதே நேரத்தில் குறையாமலும் பார்த்துக் கொள்வது அச்சிறப்பிற்கு மேலும் சீர் சேர்க்கக் கூடியதாகும்.
இதற்கு ஆங்கிலத்தில் ‘Optimum’  என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றனர்  ‘Optimum Level’  என்றெல்லாம் கூடக் கூறுவர்.
எது இரண்டு நிலைகளுக்கும் நடுவில், பொருத்த மாகவும் மிகாமலும், குறையாமலும் அமைந்து நல்ல பயனையும் விளைவையும் தருமோ அதுவே அந்த போதிய அளவுத் திறன் (Optimum) ஆகும்!
உடலில் உள்ள ஒவ்வொரு சத்தும்கூட இப்படி மிகவும் - அதிகமாகவும் கூடாது; அதே நேரத்தில் சீரான - போதிய தேவை அளவைவிட - குறைந்து விடவும் கூடாது!
எடுத்துக்காட்டாக நம் உடலில் இருக்கும் சத்துக் களின் அளவையேகூட  காட்டலாம்!
உப்பு (Sodium)ச் சத்து நமக்கு அதிகமாகக் கூடாது; அதே நேரத்தில் மிகவும், குறையவும்  கூடாது. அதிகமானால் சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பர் மருத்துவர்கள்.
குறைந்து போனால் அது பல நேரங்களில் மூளையின் இரத்த ஓட்டத்தைக்கூட பாதித்து, பேசுவது, செயல்படுவது போன்றவற்றினைக்கூட தடுத்து விடும் என்பதையும் புரிந்து கொண்டால் உப்புக்குப் பெறாத விஷயம் என்ற சொற்றொ டரைக்கூடத் தயங்கித்தான் இனி நாம் பயன் படுத்துவோம் - இல்லையா?
இரத்தத்தில் சர்க்கரை அளவும்கூட இது போலத்தான்!
சர்க்கரை நோயாளிகள் - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இன்சூலின் ஊசி போடுவதோ (Type I) அல்லது மருந்து எடுத்துக் கொள்ளும்போதோ (Type II)கூட சர்க்கரை அளவினை திடீரெனச் சரிந்து விட்டால் அது பற்பல நேரங்களில் மாரடைப்பில் கொண்டு போய் நிறுத்தி விடக் கூடும்.
‘Hyper’  என்றால் அதிகம் - மிகை
‘Hypo’ என்றால் அளவு குறைதல் என்பதாகும்.
நம் உடலேகூட நமது வாழ்க்கைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்  நல்லாசான்; நம்மில் பலரும் கூர்ந்து கவனஞ் செலுத்தி மனதைப் பக்குவப்படுத்த அதனையே படித்துக் கொண்டு வாழலாமே!
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்        (குறள் - 479)
பொருள்: தனக்குள்ள பொருளின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கையானது, முதலில் வசதி உள்ளது போலத் தோற்றமளித்துப் பின்னர் அந்தத் தோற்றமும் இல்லாமல், கெட்டுப் போய் விடும்.
உடம்பிலிருந்து எல்லாவற்றிலுமே அளவறிந்து- அளவு குன்றாமலும், மிகாமலும் வாழ்ந்தால் பின்னால் வலியோ, வம்போ ஏற்படவே ஏற்படாது.
இதே அதிகாரத்தில் வள்ளுவர் கூறிய மற்ற இரண்டு குறள்களும்கூட நம் அனைவருக்குமே வாழ்நாள் வாழ்க்கைப் பாடங்கள் ஆகும்!
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்   (குறள் - 475)
பொருள்: மிக மெல்லியதான மயில் இறகுகள் ஏற்றப்பட்ட வண்டியேயானாலும்கூட, அந்த இறகு களை அளவுக்கு மீறிய வகையில் மிகுதியாக வண்டி யில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு, ஒரு கட்டத் தில் பளு தாங்க முடியாமல் முறிந்து போய் விடும்.
எளிய உவமை! அரிய உண்மைப் போதனை!!
அடுத்த மற்றொரு குறள்; அதே அதிகாரத்தில்,
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதியாகி விடும்         (குறள் - 476)
பொருள்: ஒரு மரக்கிளையின் நுனி வரை சென்றவர் அதற்கு அப்பாலும் ஏற முயலுவாரே யானால்; அம்முயற்சி, அவரது உயிருக்கு அழிவைத் தந்து விடும்.
குறைந்த உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடிகூட சற்றுக் குறைவாக இருக்கும்; ஆளைக் காப்பாற்றி விடலாம்; ஆனால் மிக உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடியும் பலமாக, உயிர்  பிழைக்கும் வாய்ப்பும் அரிதாகி விடக் கூடுமே! இல்லையா?
அதிகாரத்திற்கு வந்து தலைகால் புரியாமல்  ஆடும் நுனிக்கொம்பர்களுக்கு பிரான்சிஸ் பேகன் என்ற ஆங்கில எழுத்தாளர் ஓர் அரிய உண்மையை நினைவூட்டினார்!
கீழே விழுகின்றவரை அந்த நுனிக்கொம்பர் களுக்கு இது விளங்காது, விளங்கவே விளங்காது; விழுந்து உயிருக்குப் போராடிடும் நிலைமைக்குப் பின்னரே அது விளங்கும்.
அப்போது விளங்கி யாருக்குப் பயன்?
“Power Corrupts;
Absolute Power;
Corrupts Absolutely”
ஆட்சி - அதிகாரம் - கெடுக்கும்; அதிகமான செல்வாக்குப் படைத்த ஆட்சி - அதிகாரமோ - முழுமையாக - தேற முடி யாத அளவு அவர்களைக் கெடுக்கும் என்றார்!
எனவே, அளவுடன் தூக்கம், அளவுடன் செலவு, அளவுடன் மகிழ்ச்சி, புகழ் எல்லாம் கொண்டு மகிழ்ச்சி ஊற்று வற்றாத வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ளுவோம்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
-விடுதலை,21.6.16