பக்கங்கள்

வியாழன், 14 நவம்பர், 2019

நமது உண்மையான "குடியிருப்பு" - எது?

நம்மில் பலரும் ஓய்வறியாமல் உழைக் கிறோம்... உழைக்கிறோம்.. உழைத்துக் கொண்டே இருக்கிறோம்.

பல படித்தவர்களும், பல்வேறு பட்டறி வாளர்களும் 'பரதேசிகளாக' - பல தேசங் களுக் கும் சென்று - "திரை கடலோடியும் திரவியம் தேடுகிறோம்!"

இங்கே, இங்கே இப்போது நம் நாட்டில் 'அரசியல்' ஒரு நல்ல செழிப்பான செல்வத் தொழிலாகி வளர்ந்தோங்கி வருகின்றது.

ஊழல்கள் என்பவை, லஞ்சலாவண்யங்கள் என்பவைகளின் தார்மீக மீறல்கள் பற்றி எவரும் கண்டு கொள்வதில்லை.

குறுக்கு வழியில் கொள்ளையடித்து, வஞ்சித்து, பொய் சொல்லி, மோசடி மன்னராகியுமே - பணத்தைச் சேர்த்து விடு; பிறகு உன்னைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம்  - முகமன் கூறுவதற்கும் சரி - முந்தானை விரிப்பதற்கும் சரி எல்லாவற் றிற்கும் தயாராக இருக்கும் - (பிறகு அற்ற குளம் தேடும்) "அறுநீர்ப் பறவைகள்" கூட்டம், "காக்காய் - கரடிகள்" கூட்டத்திற்குப் பஞ்சமே இருக்காது!

கொள்ளையால் குவித்த 'குபேர' செல்வத்தை பாதுகாப்பாய் வைக்கத் தெரியாததால், பலருக்கும் "தான தர்மம், கோவில் கும்பாபிஷேகம்" பல செய்து "தர்மப் பிரபு கனவான்" பட்டத்தைச் சுமக்கும் சுகபோகிகள் பலரும் நம்  சமூகத்தில் மலிவாகக் காணப்படும் காட்சிகள்!

இந்த அறவிலை வணிகர்களின் நன் கொடைகள் நானிலம் முழுக்க விளம்பரப் படுத்திய வெளிச்சத்தில் பிறர் கண்கள் கூசு கின்றனவே தவிர  அவர்கள் கண்களோ கூசுவ தில்லை - காரணம் அவர்கள் பார்வை பாழ் பட்டுப் பல நாள் ஆகிறது என்ற உண்மை அருகில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த அதிசயம் ஆகும்!

இப்படி மாய்ந்து மாய்ந்து, 'ஊரடித்து உலையில்,  கொட்டும் உத்தமப் பிரபுக்கள் - பிரபுணிகள்' எதைத்தான் அனுபவிக்கின்றனர்  உண்மையில் என்ற கேள்விக்கு விடை கிடைப்பது அரிது! அரிது!!

தந்தை பெரியார் என்ற மானிட நேயர் தான் கவலையோடு சேர்த்த ஓட்டைக் காலணா முதல் ஏலம் விட்ட பொருள் எல்லாம் பெற்ற மக்களுக்கோ - சொந்த பந்தங்களுக்கு அல்ல - விட்டு விட்டு -  மாமனிதராய் எவரும் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்துக்கு உயர்ந்தாரே அவரேகூட 'நுகர்வு' பற்றி சொல்லும்போது ஒரு முறை "இப்படி குப்பை - செத்தை பொறுக்கு வதுபோல் பொறுக்கிச் சேர்த்து வைக்கும் நானா இதில் குளிர் காயப் போகிறேன்? மக்களாகிய மற்றவர்களும் தானே பயன்படப் போகிறார்கள்" என்றார்!

எவ்வளவு பெரிய மாளிகை அது! அம்பானி பங்களாவாக இருந்தாலும், பில்கேட்சின் பற்பல வசதிகளுடன் கூடிய வளமனை இல்லம் ஆனாலும் படுத்துறங்குவதற்குப் பயன்படுத்து வதற்குமான சரியான அளவுள்ள இருப்பிடம் அவரது மனம் தானே! அதுதான் நம் அனைவரது நிரந்தரக் குடியிருப்பு - அந்தக் குடியிருப்பிலிருந்து நாம் மரணத்தின்போதுதானே வெளியேறு கிறோம் - இல்லையா?

பின் இதற்கேன் இத்தனை ஆடம்பரம்! பகட்டான டம்பாச்சாரித்தன வெளிச்சங்கள்? விளைச்சல்கள்?

மனம் - அதற்கு நாம் வாடகை தருவதில்லை. முனிசிபல் வரி கட்டுவதில்லை. அது எல்லையற்ற பரந்துபட்ட..  விசால இடம். நாமே விரும்பினால் அதை எவ்வளவானாலும் சுருக்கிச் சுருக்கி சுருண்டுவிடச் செய்ய முடியுமே? அப்படியும் வாழ்ந்து அல்லது வாழ்ந்ததாகச் சொல்லி நினைத்து மறையலாம்! இல்லையா?

எவ்வளவு அழகுபடிந்த அறைகள் - அலங்கரிக்கப்பட்ட சிங்கார வரவேற்பறைகள் எல்லாவற்றையும்விட, மனதை தூய்மையாக வைத்திருக்கப் பழகுங்கள். அதில் குப்பைக் கூளத்தைக் கொட்டாதீர்கள்;

விஷத்தை வீணே தெளிக்காதீர்!

மனிதநேய மகத்தான ஜீவநதியை வற்றாது ஓடவிடுங்கள்! ஒத்தறிவு  'Empathy'க்கு முன் னுரிமை தாருங்கள்.!!

கவலைகளைக் குப்பை கூடை அங்கே; அதில் அடைத்துப் போட்டு மூடுங்கள்!

எதிர்பார்ப்புக்களை அகலப்படுத்திக் கொள்ளாது வாய்ப்பிற்கேற்ப, வசதிக்கேற்ப, தொண்டூழியத்திற்குரிய இடமே நமது நல்ல தொண்டிற் சிறந்ததொரு தூய்மைச் சூழல் அந்த குடியிருப்பின் மனமாக மட்டுமில்லாமல் -  மணமாக நறுமணமாக அமையட்டும்.

நல்ல மனங்களே நமது உயர்ந்த சிறந்த, நிரந்தர குடியிருப்பு. அடுத்தவர்களுக்கு அன்பால், பாசத்தால் அதற்குள் அழைத்து உலவ விடுங்கள்.

மகிழ்ச்சி ஊற்றுக்கள் உங்களை எப்போதும் உல்லாசப்படுத்தும் என்பது உறுதி! உறுதி!! உறுதி!!!

பள்ளங்கள் ஏற்படாத வகையில் பழுது பார்ப்பதற்கும் தவறாதீர்கள்!

- விடுதலை நாளேடு 11 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக