தென்னாப்பிரிக்க கறுப்பு இன மக்களின் சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும் போராடிய African National Congress (ANC) என்ற மிகப் பெரிய அரசியல் கட்சிக்குத் தலைமை தாங்கியும், போராட்ட களத்தில் இறுதி வரை உறுதியோடு நின்று, வெஞ்சிறைக் கொடுமை களை வென்றெடுத்த வெற்றி வீரர் நெல்சன் மண்டேலா அவர்கள், தென்னாப்பிரிக்க நிறவெறியை, அதன் முடியைக் கழற்றி அதுவே செய்யும் அளவுக்குசக்தி வாய்ந்த மனித உரிமைப் போராட்டத்தையும் நடத்தி, அதன்பிறகு கறுப்பின உழைப்பாளர்களான மண்ணின் மைந்தர்களுக்குத் தனி உரிமை படைத்த சுதந்திர ஆட்சியையும், அதற்கென ஒரு தனி அரச மைப்புச் சட்டத்தையும் உருவாக்கி தன் வாழ்நாளில் வெற்றி இலக்கை அடைந்த உலகம் பாராட்டி வியக்கும் வண்ணம் சாதனை புரிந்த சரித்திரம் படைத்தவர்.
'Long Walk to Freedom' என்ற அவரது சுயசரிதை இளைஞர்கள் - மாணவர்கள் கற்க வேண்டிய அருமையான இலட்சிய நூலாகும்!
பொதுவாக பல ஆண்டுகள் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் வதிந்த சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் பலரும் சிறையில் இருந்து தத்தம் உறவுகளுக்கோ, மிக நெருங்கிய நண்பர்களுக்கோ எழுதும் கடிதம் வரலாற்றுக் கருவூலங்களாகும்.
தனது பொது வாழ்வில் ஏறத்தாழ 8-10 ஆண்டுகள் சிறையில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் செலவழித்த பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் தனது மகள் - பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவியான இந்திரா பிரியதர்சினி அவர்களுக்கு எழுதிய கடிதங்கள் பிரபலமானவை. அவை 'Letters of a Father to his Daughter' என்ற தலைப்பில் ஓர் ஆங்கில நூலாகவே வந்துள்ளது. பல பதிப்புகள் - பல மொழிகளிலும் மொழி பெயர்க் கப்பட்டு வெளியே வந்துள்ளன!
எளிய ஆங்கிலத்தில், ஒரு மாணவிக்கு உலக வரலாற்றை - நாட்டு வரலாற்றைக் கற்றுக் கொடுக்கும் ஒரு ஆசிரியராகவும், அதே நேரத்தில் பாசமுள்ள தந்தையாகவும் தன்னை நிலை நிறுத்தி எழுதியுள்ள அக்கடிதங்கள் அவர் மகளுக்கு மட்டுமல்ல; நாட்டு மக்களில் இளையர் களாக உள்ள பலருக்கும் பாடம் போல் பயன் தரும் அரிய இலக்கியம் ஆகும்!
அதுபோலவே மாவீரன் பகத்சிங் சிறைச் சாலையிலிருந்து புனைப்பெயரில் எழுதி அது வங்கத்திலிருந்து ஆங்கில நாளேட்டிலும், ஹிந்தி, வங்காள ஏடுகளிலும் வெளிவந்து அண்மையில் 'புரட்சி' - 'Ingulab' என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளது!
27வயதிலேயே புரட்சிக்காரராகி தூக்கு மேடையை முத்தமிட்ட ஒப்பற்ற மாவீரன் பகத்சிங் "நான் ஏன் நாத்திகன் ஆனேன்?" என்ற அரிய நூலை சிறையிலிருந்து, துணிவையும், தியாக சுவாசத்தையும் பெற அதுவே ஒரே வழி - உண்மை வழி என்பதை வலியுறுத்தி எழுதினார்! "புரட்சி என்பது (இன்குலாப்) வெடி குண்டு கலாச்சாரம் அல்ல; துப்பாக்கி (Pistol) கலாச்சாரமும் அல்ல. புரட்சியின் பொருள் என்ன தெரியுமா? உள்ள நிலைமைகளை - அவைகள் அப்பட்டமான அநீதியின் வெளிப் பாடான நிலைமைகளாக இருப்பதால் - மாற்றி அமைப்பது என்பதேயாகும்!
தந்தை பெரியார் ஒரு முறை அழகான விளக்கம் சொன்னார்:
"புரட்டிப் போடுதல் புரட்சியின் வேலையும், விளைவும்" என்று!
எனவே புரட்சி என்றால் வன்முறையாகத் தான் இருக்க வேண்டும் என்பதோ, ரத்த ஆறு ஓட வேண்டும் என்பதோ அல்ல; அல்லவே அல்ல. அறிவுப் புரட்சி - ஆயுதம் ஏந்தாமல்கூட அறிவுப் புரட்சி - அது அந்த சந்தர்ப்பங்களின் அவசியத்தைப் பொறுத்தது!
"ஆறறிவுள்ள மனிதர்களுடன் போராடும் போது - அதை அவன் பயன்படுத்திட ஆயத்தப் படுத்துவோம்; பக்குவப்படுத்துவோம்" என்று தந்தைபெரியார் கருதியதுபோல, செய்தது போல "மனப்போர்" (Battle was fought in minds of the people) மக்கள் மனங்களுடன் போர் செய்து, அறிவுப் புரட்சி அறிவாயுதம் கொண்டே செய்யலாம்.
ஆனால் 'மிருகங்களுடன்' போராடும் போது ஆயுதம் ஏந்தித்தானே மனிதர்கள் வேட்டை யிடச் செல்ல வேண்டியுள்ளது. வேறு வழி இல்லை.
ஆயுதம் ஏந்தி நெல்சன் மண்டேலா கட்சியினர் தென்னாப்பிரிக்க வெள்ளை (நிறத்திமிர்) அரசைக் கவிழ்க்கச் சதி செய்தனர் என்று குற்றம் சாற்றப்பட்ட நெல்சன் மண்டேலா ரோபின் தீவு என்ற ஒரு 'ஆள் அரவம்' அற்ற ஒரு தீவுக்குக் கடத்தப்பட்ட நிலையில்தான் இந்தக் கடிதங்கள் அவருக்கு ஒரு கொதி நிலை உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைந்தன.
அதில் காதல், வீரம், அன்பு, பாசம், உரிமை, உறுதி, லட்சியத்தில் அயராமை எல்லாம் பளிச்சிடுகின்றன!
வானவெளியில் தோன்றும் வான வில்லின் நிறம்போல பலவகை உள்ளன.
அடுத்துக் காண்போம்.
- விடுதலை நாளேடு 5 11 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக