பக்கங்கள்

வெள்ளி, 1 நவம்பர், 2019

சேர்த்திடும் செல்வமும் 6 விதிமுறைகளும்! (3)

5. அய்ந்தாவது விதி:

இது மிகவும் முக்கியமானது. செல்வத்தைச் சேர்க்கும் அதே நேரத்தில், பலரும் அறிவை, படிப்ப றிவை, பட்டறிவை, பகுத்தறிவை, நுண்ணறிவை, ஒத்தறிவைப் பெருக்கிக் கொள்ள எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

குவியும் செல்வம் அவர்கள் கண்ணையும், கருத்தையும் ஏன் பற்பல நேரங்களில் மறைத்து விடுகிறது?

கொள்ளையடிக்கிறவர்கள் அந்நேர அனுப விப்பு, மகிழ்ச்சியை மட்டுமே பெறுகிறார்கள். எப்படியும் 'பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்' என்ற பொது  உண்மையையோ, அனுபவப் பழமொழியையோ   சற்றும் எண்ணாமல், அந்தக் கண நேர இன்பத்திற்காக வாழ் நாள் முழுவதும் அனுபவிக்கும் துன்பத்தை ஏனோ எண்ணிப் பார்ப்பதில்லை.

எனவே, அறிவை விரிவு செய்தல், கற்றறிதல், பெற்ற செல்வத்தை விடவும் முக்கியமானது. தங்கள் அறிவை, ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சியை நாளும் பெருக்கிக் கொள்ளுவதில் அவர்கள் கண்ணும் கருத்துமாய் இருந்து தீர வேண்டும். திறமைகளை வளர்த்துக் கொள்ள மேலும் மேலும் அறிவு 'சாணை' தீட்டப்பட, அதற்குரியவைகளை  அன்றாடம் தேடி, அதைப் பெருக்க, மேலும் சேர்க்கும் செல்வத்தையும் சரி, அல்லது ஏற்கெனவே சேர்த்த செல்வத்தையும் பாதுகாப்பாகவும் வைக்க உதவும்.

செல்வத்தைச் சேர்ப்பதைவிட அதை முறை யானவற்றுக்கே செலவழிப்பது அதைவிட முக்கியம்.

தவறான செயல்களிலோ, ஆடம்பர வெளிச் சத்திலோ நனைவதுதான் செல்வச் செருக்கின் அடையாளம் என்று கருதினால் "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்பது போன்ற பழமொழிக்குச் சரியான எடுத்துக்காட்டாக அமைவர்!

சரியான அறிவு என்பது தன்னைச் சுற்றியுள்ள வர்களும், தனக்கு நண்பர்களாக உள்ளவர்களும், உள்ளபடியே உற்ற நண்பர்களாக இருப்பார்களா? என்று 'எக்ஸ்ரே கண்ணால்' எடை போடவும் அறிந்து, அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து, எந்த அளவு நெருங்கவிட வேண்டுமோ அந்த அளவுக்கு வைத்தால்தான் சரிப்பட்டு வரும். சம்பாதித்த செல்வம் நிலைக்கும். இல்லையானால் - வள்ளுவர் கூறுவதுபோல் -

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று

(குறள் 332)

அதாவது நாடகத்தின்போது கூடிடும் பல நூற்றுக்கணக்கானவர்கள் கூத்து, நாடகம் முடிந்த வுடன் கலைந்து செல்வது போல தானே கலைந்து சென்று விடும்!

மாஜி பணக்காரர்கள் மஞ்சள் கடிதாசி மறைவு டமையாளர் களாகி விடும் பரிதாப நிலையே ஏற்படும்.

பழைய தஞ்சை மாவட்டத்திலே ஒரு பிரபலமான பேருந்து கம்பெனி ஓட்டுநராக இருந்து பிறகு பல பேருந்துகளைக் கொண்ட முதலாளி என்றாகி, இரண்டாம் உலகப் போரின்போதும்கூட, பெட்ரோலுக்குப் பதில் கரி வண்டி என்ற ('கேஸ் பிளான்ட்') போட்டுக் கூட வெற்றிகரமாக நடத்தி யவர்; எளிமையின் சின்னமாக என்றும் திகழ்ந்தவர், பெரிய மனிதர், அவரது மகனை இங்கிலாந்து அனுப்பி, போக்குவரத்துத்துறையில் பெரிய பட்டப்படிப்பு படிக்க வைத்து, அழைத்து வந்து பொறுப்புகளை ஒப்படைத்தார். அவருக்குப்பின், பல தகாத உயர் ஜாதி ஆலோசகர்களுடன் இணைந்து, தேவையற்ற பழக்கங்களையும் உருவாக்க வைத்து, அஸ்திரங்களையும், அவதாரங்களையும் அனுப்பி அவரை வீழ்த்தினர். சாம்ராஜ்யம் சரிந்தது. அகலமாக விரிவு செய்ய நினைத்து, இறுதியில் மன உளைச்சலுக்கு ஆளாகி, செல்வம் சுருங்கியது. அவரோ சறுக்கிவிட்டார்.

வந்த வேகத்தைவிட செல்வம் இது போன்ற நேரங்களில் அதிக வேகத்துடன் தேயும், மாயும், பிறகு ஓயும்! கடனில் மூழ்கிவிடவும் செய்யும்! எனவே எச்சரிக்கையுடன் காக்க வேண்டும். தொண்டறப் பணிகளை செய்வதால் எந்தச் செல்வமும் தேயாது; ஓயாது! மாறாக மக்கள் மனதில் 'ஊருணி'யாக நிலைத்து நிற்கவே செய்யும்.

6. இறுதியாக ஆறாவது விதி:

ஒரே இடத்தில் முதலீடு என்று செய்யாமல், நன்றாக ஆராய்ந்து பல இடங்களில், அவற்றின் வரலாறு, பாதுகாப்பு அறிந்து முதலீடு செய்வது அவசியம்.

துவக்கத்தில் சொன்னதுபோல அதிக வட்டி என்பது; அதிகமான நம்பிக்கை சில நபர்கள் மீதும், நண்பர்கள் மீதும், "இவரா நம்மை ஏமாற்றிவிடப் போகிறார்" என்ற அலட்சியமான அனாவசிய மதிப்பீடுகள் காரணமாகவும் இழப்புகள் ஏற்படும்!

அறவழியில் சேர்ப்பதே நிலைக்கும். புறவழியில் - புழக்கடை வழியில் சேர்ப்பது தங்காது - மூடநம்பிக்கை அல்ல. அதன் பெருமையறியாது, அது எங்கெங்கோ ஓடும், தீயவற்றைத் தேடும், எனவே எச்சரிக்கை தேவை  - பொருள் சேரும் போது!

(அடுத்து எழுதப்படாத ஏழாவது விதியை வள்ளுவர் - பெரியார் மூலம் நாளை காண்போம்)

- விடுதலை நாளேடு 28 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக