"ஒவ்வொரு நாளும் ஆப்பிளைச் சாப்பிட்டால், நாம் நோய் தீர்க்க மருத்துவரை தனியே அழைக்க வேண்டிய அவசிய மில்லை" என்ற பழமொழி (An Apple a day - Keeps the Doctor away) பலரும் அறிந்த ஒன்றுதான்.
அண்மையில் ஒரு பிரபல ஆங்கில இதழில் ஆப்பிள் பற்றிய ஒரு கட்டுரையைப் படிக்கப் படிக்க மிகவும் சுவையாக ருசித்தது. கட்டுரை அவ்வளவு சுருக்கமானது, அழகானது!
பைபிள் காலத்து பழைய ஏற்பாட்டின்படி ஆதாம் -ஏவாள் கதையில் ஒரு பழத்தைத் தின்னக் கூடாது என்று ஏவாள் பணிக்கப்படுகிறாள். அது என்ன பழம்? ஆப்பிள்தானா என்ற கேள்வியை இப்போது ஆய்வாளர்கள் பலரும் எழுப்புகிறார்கள். (அது நடந்திருக்க முடியுமா? அதன்படி ஆணின் விலா எலும்புவிடத்துதான் பெண் தோற்றுவிக்கப்பட்டாள் என்ற இனிய கதையும் கற்பனையாகத்தான் இருக்க முடியும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்)
பைபிளில் - அப்படிச் சாப்பிடக் கூடாது என்று தடுக்கப்பட்ட பழம் எது? Genesis என்ற நூல் அந்தப் பழத்தைத் தன்னோடு பகிர்ந்து கொள் ளுமாறு ஏவாள் கேட்டது (ஈடன் தோட்டத்தில்) எந்தப் பழம் என்ற கேள்வி ஆய்வு - Hebrew பைபிளில் - யூத பைபிளில் மாதுளை என்று சிலரும், பெரி என்று வேறு சிலரும், அத்தி பழமாக இருக்கும் என்று மற்ற சிலரும், ஆப்ரிகாட் (Apricot) அல்லது திராட்சை அல்லது கோதுமை யாகக்கூட இருக்கலாம் என்று பலரும் பல விதக் கருத்துக்களைக் கூறுகின்றனர்!
கற்பனைக் குதிரை கண நேரத் தில் - கண வேகத்தில் பறக்கிறது! - இல்லையா?
அது எப்படியோ போகட்டும்; இந்த ஆப்பிளுக்கு பகுத்தறிவு வாதிகள், அறிவியல் தருகிற மரியாதை (மருத்துவர்கள் வேறு ஒரு கோணத்தில் என்றாலும் - உடல் நலப் பார்வையிலும் என் றாலும்) மிகவும் வரவேற்கத்தக்கது!
17ஆம் நூற்றாண்டில் சர் அய்சக் நியூட்டன் என்ற இங்கிலீஷ் இளைஞன், ஆப்பிள் தோட்டத்தில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்த போது, மரத்திலிருந்து விழுந்த ஆப்பிள் பழத்தை எடுத்து கழுவியோ, கழுவாமலோ கடித்துச் சாப்பிடும் வழமையான இளமைத் துடிப்பைத் "தியாகம்" செய்து விட்டு, முற்றிலும் தனித்தன்மையான வகையில் சிந்தனைக் குதிரையில் ஏறி அமர்ந்தான்; அது பறக்க ஆரம்பித்தது. "மரத்தின் மேலே இருந்து ஆப்பிள் ஏன் கீழ்நோக்கி விழ வேண்டும்" என்று மனதுக்குள் கேள்வி மேல் கேள்வி கேட்டு மனதைக் குடைந்தான். அச்சிந்தனை பெற்றெடுத்த குழந்தைதான் புவியீர்ப்பு தத்துவ விதி (Law of Gravitation) என்ற அறிவியல் அடிப்படை விதி, பிறகு வந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாய் அமைந்தது!
உண்ணாத ஆப்பிள்பற்றி இதுவரை எவரும் எண்ணாத கருத்துக்களை வெளியிட்டு விஞ்ஞான உலகின் முன்னோடிகளில் ஒருவராய் சர் அய்சக் நியூட்டன் உலகப் புகழ் பெற்றார்.
நியூட்டனின் விதிகள் விஞ்ஞான உலகில் நிலைத்து நின்று விட்ட விதிகளாகி விட்டன!
இதுபோலவே எல்லாரும் ஆப்பிளை வாங்கி உடலுக்கு ஊட்டச் சத்துத் தேடிக் கொண்டிருக்கை யில் அமெரிக்காவில் ஒரு சுதந்திர சிந்தனையாளர் - அவரின் செய்கைகள் பலவும் அவர் ஏதோ ஒரு விசித்திர மனிதர் - விநோத பிராணி போல என்று அவரை (Freak) நினைத்தனர்!
ஸ்டீவ் ஊசானியாக் (Steve Wozniak) என்ற ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) அவர்களை வைத்து தனது கணினி கம்பெனி கார்ப்பரேஷனுக்கு பெயர் வைக்க கருத்துக் கேட்டார் - வால்ட்டர் அய்ச்க்ஸன் (Walter Isaacson) எழுதிய ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாற்றுப்படி 1970ஆம் ஆண்டுகால நடுவில் பெயர் சூட்டும் படி - கேட்டார். கடித்த அல்லது ஒரு பகுதி அரிந்த ஆப்பிள் படம் போட்டு ஆப்பிள் கணினியை கண்டுபிடித்து இன்று உலகத்தையே ஆக்கிரமித்து விட்டார்கள்!
ஆப்பிள் கைப்பேசி (Cell Phone) வாங்கி விட் டீர்களா? அடேடே 11ஆம் வகையா? லேட் டஸ்ட்டா என்று வியக்கும் வகையில் உலகத்தைத் தனது படையெடுப்பால் வென்று விட்டது!
தின்று தெவிட்டாத ஆப்பிள் ஒருபுறம்; மறுபுறம் வென்று தெவிட்டாமல் ஆண்டுக்கு ஆண்டு பல புதுமைகளைத் தன்னுள்ளே பதுக்கி ஒரு அறிவுப் புரட்சியை அல்லவா தெறிக்கச் செய்தது!
அறிவு விளைச்சல் என்றதொரு புதிய திருப்பம் ஏற்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது அல்லவா?
(நாளை மற்ற தகவல்கள்)
- விடுதலை நாளேடு, 1.11. 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக