நம்மை பிறர் வாழ்த்தும் போதெல்லாம் நூறாண்டு வாழ்க என வாழ்த்துவது வழமையாகும்!
தந்தை பெரியார் அவர்களுக்கு 'வாழ்த்திலும்' நம்பிக்கை இல்லை - 'வசவிலும்' வருத்தமில்லை - காரணம் அவர் ஒரு முழுப் பகுத்தறிவுவாதி அல்லவா?
அப்புறம் வேடிக்கையாக ஒன்று சொல்வார் - கூட்டங்களில்!
"வாழ்த்தினிங்க, ரொம்ப நன்றிங்க. ஆனால் நீண்ட காலம் வாழ்வது என்பது - அப்படி முதுமையில் வாழ்வது எவ்வளவு கடினமான அனுபவம் என்பது வாழும் எங்களுக்கு அல்லவா அந்தக் கஷ்டம் தெரியும்!
உங்களுக்கெல்லாம் இரண்டு கால்கள், எனக்கோ ஆறு கால்கள்! என்ன ஆச்சரியப்படுகிறீர்கள்? என்னை ஒரு பக்கத்தில் பிடிப்பவருக்கு இரண்டு கால், எனக்கு இரண்டு கால், மறுபுறத்தில் என்னைத் தாங்கிப் பிடிப்பவருக்கு இரண்டு கால் - ஆக ஆறு கால் தயவில்தானே நான் அனுதினமும் செயல்பட்டு எனது பிரச்சாரத்தை நடத்தவேண்டியுள்ளது?
நூறாண்டு வாழ்தலை நமது யுகத்தில் அதிசயமான சாதனை என்றே கொண்டாட முடியாது. காரணம் - இந்தியாவில் சராசரியான வயதே ஆணுக்கு 78, பெண்ணுக்கு 70அய் நெருங்கி விட்டது.
அண்மையில் கல்வித்துறையில் நீண்ட கால இயக்குநராகவும் - பிறகு அண்ணாமலை, மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும் இருந்து, கல்வி வள்ளல் நெ.து. சுந்தரவடிவேல் பாரம்பரியத்தில் பூத்துக் குலுங்கி காய்த்துக் கனியான டாக்டர் எஸ்.வி. சிட்டிபாபு அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர், எத்தகைய சரித்திர சாதனை செய்தவர்!
தலைசிறந்த ஆற்றல் வாய்ந்த பேச்சாளர் (Orator) ஆங்கிலத்திலும், தமிழிலும் வரலாற்றுப் புலமையாளர்!
அவரது நூற்றாண்டு விழா சென்ற வாரம் 7.11.2019 இல் அவரது இல்லத்தில் எளிமையாக நடைபெற்ற போது நேரில் சென்று அவர்களை வாழ்த்தினோம்; வாழ்த்தும் பெற்றோம்.
என்னே தெளிவான சிந்தனை - அவருக்கு
அறிவார்ந்த பேச்சு.
அன்பொழுக பண்பு மிகுந்த உபசரிப்பு, அவரது குடும்பம் ஒரு அருமையான கல்விப் பல்கலைக் கழகம்!
அதுபோலவே நமது முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அவலூர்பேட்டை (திருவண்ணா மலை - பழைய வட ஆர்க்காடு மாவட்டம்)
வீ.மு. வேலு. பெங்களூருவில் வசிக்கும் அவரை நான் "இளைஞரணித் தலைவர்" என்றே வேடிக்கை யாக அழைப்பேன். இன்றும் ஓடியாடி, 32 வயது இளைஞனைப் போல துடிப்புடன் இயக்கத் தோழர் களுடனும், நண்பர்களுடன் கலந்துறவாடும் லட்சியத் தோழராகத் தொண்டராகவே செயல்பட்டு வருகிறார். அவரது நூற்றாண்டு விழா கருநாடக மாநில திராவிடர் கழகம் சார்பில் வரும் டிசம்பர் 29 மாலை நடத்திட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. (உள்ளாட்சித் தேர்தல் என்ற கரடி குறுக்கே வருகிறதோ என்னவோ!) என்றாலும் விழா அன்றோ, மறுநாளோ வெகு சிறப்புடன் நடைபெறும். மகிழ்ச்சி யுடன் நாம் குடும்பத்துடன் கலந்து கொள்ள விருக்கிறோம்!
உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் வெங்கடாச்சலய்யா (அவர் "உயர்ஜாதிக்காரர்"தான்) பெங்களூருவில் ஒரு சட்டக் கருத்தரங்கில் கலந்து கொண்டபோது, "கடவுள் மறுப் பாளர்கள் - நாத்திகர்கள் - இவ்வளவு அதிகமான வயதிலும் வாழ்கிறார்கள்; அதிலும் வெகு சுறுசுறுப் புடனும் வாழ்கிறார்கள் - இதன் ரகசியம் என்ன?" என்று கேட்டார்.
நானும், பொருளாளர் குமரேசனும் சொன்னோம்- "பகுத்தறிவாளர்களும், நாத்திகர்களும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்கள். நினைத்ததை ஒளிக்காமல் பேசி - பட்டென்று உண்மைகளைக் கூறுபவர்கள்.
மனதில் மாசில்லாதவர்கள், கையில் காசில்லாத வர்கள். ஆனாலும் கொள்கை அவர்களை நேர்மை யுடன் வாழ வைக்கிறது" என்றோம். வியந்தார், ஒப்புக் கொண்டார்!
(நாளை நீளும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக