கடந்த செப்டம்பர் (2019) 21, 22 ஆகிய நாட்களில் அமெரிக்க வாஷிங்டன் ஞி.சி. க்கு அருகில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தின் சில்வர் ஸ்பிரிங் (Silver Spring) நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்பு - அமெரிக்க மனிதநேய சங்கம் (Periyar International and American Humanist Association) இணைந்து நடத்திய பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இது சுமார் 80 ஆண்டுகால வரலாறு படைத்த சங்கம் - 5 லட்சத்திற்கு மேல் அமெரிக்கர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்!
('கடவுள் இல்லாமலேயே மனித குலத்திற்கு மகத்தான நன்மை புரிய முடியும்', 'Good Without God' என்ற இலச்சினைச் சொற்களை மேடையில் அலங்கரித்தனர்!)
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவில் தமிழ்நாடு, மலேசியா, ஜெர்மனி, சில அய்ரோப்பிய நாடுகள், கனடா போன்ற பல நாட்டினரும், பேராளர் களும் கலந்து கொண்டு வெற்றிகரமாக அம்மாநாடு நடந்தேறியது.
தமிழ்நாட்டிலிருந்து வந்த 50 பேராளர்கள் ஒரு தனிப் பேருந்தில் பற்பல மாநிலங்களுக்குச் சுற்றுப் பயணமானார்கள். 23.9.2019 அன்று காலை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.
அன்று காலை மேரிலாண்ட் பகுதியில் 'பெத்தேசா' பகுதியில் நீண்ட காலமாகக் குடியிருக்கும் மூத்த முதியவர் மானமிகு பெரியவர்தில்லை ராசா அவர்கள் உடல்நலிவுற்று தற்போது தேறி வருகிறார். 92 வயது - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராட்டத்தில் அவர் அங்கிருந்தவாறே பணி செய்தவர். உலக வங்கியின் ஓய்வு பெற்ற தலைமை அதிகாரி அவர். அவர்களது உற்றார், உறவினர் எல்லாமே பெருநிலை அதிகாரிகள் - தமிழ் இன உணர்வாளரும்கூட! அவரைக் காலையில் 9 மணியளவில் சந்தித்துவிட்டு நலம் விசாரித்து தங்கியிருந்த ஓட்டல் ஆலிடே (Hotel Holiday Inn) திரும்பினோம்.
மதியம் 'குமரி இல்லம்' என்று சில்வர் ஸ்பிரிங் பகுதியில் பல கால ஆண்டுகளுக்கு முன்னே அமைந்த அருமை குடும்ப நண்பர் ராஜ் அவர்களையும் அவரது வாழ்விணையர் பாசமிகு திருமதி. சரோஜினி அவர்களையும், அவரது மகள், மகளின் பிள்ளைகள் - பேரப் பிள்ளை - என்னை எப்போதும் சிறு பிள்ளையாக இருக்கும் போதிலிருந்து 'வணக்கம் தாத்தா' என்றே அழைக்கும் அவர் -தற்போது 'கல்லூரிக் காளை' - அது போல மிகுந்த தமிழ் உணர்வாளர் பெரியாரிஸ்ட். ஈசாய்வேத முத்தும், அவரது துணைவியாரும், பேராசிரியர் அரசு செல்லையா, அவருடைய நண்பர் இராமபிரசாத், டாக்டர் சோம. இளங்கோவன் ஆகியோருடன் கலந்து கொண்ட பகல் விருந்து முடித்து, சகோதரர் டாக்டர் சோம. இளங் கோவன் 'சாரதி'யாகி கார் ஓட்டி அவரது வாழ் விணையர் டாக்டர் சரோஜா இளங்கோவன், எனது வாழ்விணையர் மோகனா எல்லோரும் வாஷிங்டன் D.C. க்குப் பயணமானோம்.
பகல் 3 மணி அளவில் ஏற்கெனவே சென்று சில ஏற்பாடுகளைச் செய்த 'சகல கலா வல்லரான' முனைவர் ரவி சங்கர் கண்ணபிரான் (KRS) அவர்கள் Library of Congress இல் என்னை உறுப்பினர் ஆக்கிட அந்த பரந்து விரிந்த பார்லிமெண்ட் நூலகம் (உலகின் பெரிய நூலகங்களில் அது ஒன்று) நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் அந்த பரந்த விரிந்த நூலகத்திற்குள் அழைத்துச் சென்றார். காரை நிறுத்த இடம் அங்கே எளிதில் கிடைக்காத வாய்ப்பைப் பயன்படுத்தி மோகனாவை வைத்து வாஷிங்டன் D.C. முக்கிய அலுவலகப் பகுதி வீதிகளை சுற்றிச் சுற்றிக் காட்டி வந்து கொண்டே இருந்தார். அழைக்கும்போது காருடன் வந்தால் நாங்கள் அதில் பயணம் செய்து அடுத்த இலக்குக்குச் செல்ல இது ஒரு நல்ல உத்தி அல்லவா?
நூலகத்தின் உள்ளே போனவுடன், ஏற்கெனவே பூர்த்தி செய்து வைத்திருந்த விண்ணப்ப மனுவில் கையெழுத்திட்டவுடன் அடுத்த கட்ட அறைக்குப் 'பறந்தோம்' (காரணம் 4.30 மணிக்குள் நூலகம் மூடி விடுவார்கள்). அதற்குள் உறுப்பினர் ஆகி விட வேண்டும் என்ற துடிப்பு. சாதிக்க முடியாதவை எவையும் இல்லை என்பதே நண்பர்கள் கே.ஆர்.எஸ்., டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களது உறுதி மிக்க முடிவு. விரைவுபடுத்தி பாஸ்போர்ட் அளவு ஒளிப்படம் எடுத்து பொறுப்பாளர் (ஒரு ஆப்ரோ அமெரிக்க பெரிய அதிகாரி) மிகவும் அன்போடும், பண்போடும் வரவேற்று ஒளிப்படம் வைத்து அடையாள அட்டையைத் தயாரித்துத் தரும் மற்றொரு பெண் அதிகாரியிடம் எங்களை அனுப்பினார்; அவரும் தேனீக்களைப் போன்ற சுறுசுறுப்புடன் விரைந்து பணி செய்து அடையாள அட்டை (ஓராண்டுக்குரியது) தந்தார்.
உடனே ஆராய்ச்சி Reference நூலகப்பகுதிக்கு அழைத்துச் சென்றார் நமது தோழர் (KRS) ரவிசங்கர் கண்ணபிரான், அதிகாரியிடம் என்னை பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக வேந்தர் என்று அறிமுகப்படுத்தி அடையாள அட்டையை - வரநிகர் தகுதி அட்டையைக் காட்டியவுடன் அவர் கை குலுக்கி எங்களை வரவேற்றார். 'அய்யா, அண்ணா, கலைஞர் நூல்கள் (தமிழ்) இருக்கின்றனவா Reference பகுதியில்' என்று கேட்டவுடன் எடுத்துத் தந்தார், படித்தோம், மகிழ்ந்தோம். மற்ற அமைப்பு சிறு சிறு ஏணிகள் ஆங்காங்கே படிப்பதற்கு வசதியான வெளிச்சம் தரும் விளக்கு அமைப்புகள் - குறிப்புகள் எடுக்க உதவும் வகையில் போடப்பட்டுள்ள மேசை மற்றும் இருக்கைகள் - எல்லாம் மரங்களால் ஆனவை - மிகவும் நேர்த்தி மிக்கவை.
முழு அமைதி ஆட்சி புரியும் அரிய இடம் அது! குண்டூசி என்ன மூச்சு ஒலிகூட கேட்கும் அளவுக்கு அமைதி அங்கே!
புத்தகப் பக்கங்கள் புரட்டும் ஒலிகூட கேட்கக் கூடாத அளவு, வாசகர்கள், நுகர்வோர் நடந்து கொள்ளும் பக்குவமான பண்புகள் - வியக்கத்தக்கது -விரிவுலகு பின்பற்றத்தக்கவை.
தனியே ஒரு பகுதியில் மெல்லிய குரலில் எங்களுக்கு மேல் நூலக அதிகாரி தனி அனுமதி கொடுத்து உள்ளே தாராளமாய்ப் போய்ப் பாருங்கள் என்று கூறி, என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், என்று மிகவும் பண்புடன் - பல நாள் பழகிய பாங்குடனும், அன்புடனும் பேசினார்.
கொஞ்சம் நூல்கள் வாசிப்பு, கொஞ்சம் சுற்றிப் பார்த்து ஒளிப்படம் எடுக்கத் தனி அனுமதி பெற்று எல்லா ஏற்பாடுகளையும் மின்னல் வேகத்தில் முடித்துச் சென்றோம்; கண்டோம் - படம் எடுத்துக் கொண்டோம். எங்களுடன் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களும் வந்து கலந்து கொண்டார். அதை முடித்து 10 மணித் துளிகள் அதனுடன் அமைக்கப்பட்டுள்ள வெளியீட்டுப் பகுதிக்குச் சென்றோம்; அருமையான அரசியல் வரலாற்றுப் பின்னணியை விளக்கும் நூல்கள்.
வாங்காமல் வருவேனா? வாங்கினோம்.
(நாளை விரியும்)
- விடுதலை நாளேடு 18 1119
அமெரிக்கா காங்கிரஸ் நூலகத்தில்.... (2)
அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் அரிய வரலாற்று நூல்கள், நினைவுச் சின்னங்கள் - பரிசளிக்கக்கூடிய பற்பலவகையான நூல்கள் (வீரமிக்க வரலாற்றோடு இணைந்தவை) எல்லாம் விற்பனையாகின்றன.
பேசும் நேரத்திற்கே அமெரிக்க வழக்குரை ஞர்கள் கட்டணத்திற்குரியதாக்கி, அவர்கள் வழக்கு சம்பந்தமான தகவலை தொலைப் பேசியில் - இந்தத் தேதியில் உங்கள் வழக்குக்கு வாய்தா போடப்பட்டிருக்கிறது என்ற தகவலை தெரிவித்ததற்கு வந்த இரசீதையே நான் பார்த்து வியந்தேன்.
பிறகு இங்கும் சில வழக்குரைஞர்கள் அதனைப் பின்பற்றுவதை அறிந்து அதிர்ச்சியா னேன். “காசில்லாதவன் கடவுளேயானாலும் கதவைத் சாத்தடி” என்ற உடுமலை நாராயணக் கவியின் திரைப்படப் பாடல் வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வந்தது!
‘Time Is Money’ என்பதே அவர்களது வாழ்க்கை முறையாக வந்த நிலையில், எங்கும் கட்டணம் நிர்ணயித்து வசூல் செய்து, அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு நிதி ஆதாரங்களை வைத்துள்ளனர் இப்படிப்பட்ட முறைமூலம்.
புத்தகங்கள் மிகச்சிறப்பாக - அழகுற அமைக்கப்பட்ட “பாக்கெட் சைஸ்” புத்தகங்கள் - 10 டாலர் (8 முதல் 10 டாலர்).
அமெரிக்கச் சுதந்திரத்தின் வரலாற்று ஆவ ணங்கள் பதிப்புரை வரலாற்று அறிவுத்திறன் உருண்டைகளாக - சுருக்கமாக, அழகான பதிவுகளாக அமைந்தன.
கீழ்க்கண்ட நூல்களை தேர்வு செய்தேன்; நானே அவ்வாறு தேர்வு செய்து கொடுப்பதில் ஓரளவுக்கே வெற்றி பெற்றேன்; பெரும் அளவில் தோற்றேன். டாக்டர் சோம.இளங் கோவனும், பேராசிரியர் முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான் (KRS) அவர்களும் அதில் போட்டியிட்டனர்.
1. The Declaration of Independence with Short biographies Of Its Signers.
சுதந்திரமணியின் சின்னத்துடன் 1776ஆம் ஆண்டு சுதந்திரப் பிரகடன வரைவுக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அதில் இடம் பெற்றவர்கள் தாமஸ் ஜெபர்சன், ஜான் ஆடம்ஸ், பெஞ்சமின் பிராங்கிளின், ரோஜர் ஷெர்மன், ராபர்ட் லிவிங்ஸ்டன்.
வரைவை எழுதியவர் தாமஸ் ஜெபர்சன் - டாக்டர் பெஞ்சமின் பிராங்கிளினும், ஜான் ஆடம்சும் சிறுசிறு சில திருத்தங்களைச் செய்துள்ளனர் என்ற குறிப்புடன் நூல் தொடங்குகிறது!
32 பக்கங்கள்தான்! (Everything in Nut shell)
2. The Bill of Rights with (Writings That Formed Its Foundation)
‘The Bill of Rights is the collective name for the First Law Amendments to the United States Constitution’
(அமெரிக்க அய்க்கிய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் முதல் 10 சட்டத் திருத்தங்கள்தான் இவை!)
இது 48 பக்கங்களைக் கொண்ட அரசியல் வரலாற்று ஆவணம்!
மற்றொரு புத்தகம்
3. The Emancipation Proclamation
by
Abraham Lincoln
1862ஆம் ஆண்டு அமெரிக்காவில் அடிமை முறையை ஒழித்துக் கட்டிய மனித உரிமைக் காவலராக அந்தநாளில் திகழ்ந்த - உழைப்பால் உயர்ந்த உத்தமர் - ஆபிரகாம் லிங்கன்! 1862ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் நாள் தனது அமைச்சரவை சகாக்கள் மத்தியில் இதன் முதல் வரைவினைப் படித்துக் காட்டினார்.
ஆனால் பொதுமக்களுக்கு இந்த (மனித) சுதந்திர சமத்துவ பிரகடனத்தின் வரைவினை வெளியிடுவதை சரியாக 30 நாள் தள்ளி வைத்தார்.
அமெரிக்காவில் வடக்குக்கும் - தெற்குக்கும் நடந்த அடிமை ஒழிப்புப் போர்கள் முடிவுக்கு வரட்டும், பிறகு வெளியிடலாம் என்ற காரணத் தால் தள்ளி வைத்தார்!
‘இந்தப் போரில் எனது தலையாய நோக்கம் கூட்டாட்சியைக் காப்பாற்றி நாட்டின் ஒன்று பட்ட அய்க்கியம் சிதறக்கூடாது என்பதே. அதன் பிறகே விளையும் அடிமை ஒழிப்பு’ - என்று உருக்கமுடன் பதில் அளித்தார் ஆபிர காம் லிங்கன்!
அடிமை ஒழிப்புப் போராளி ஆபிரகாம் லிங்கன் வெற்றிக்கனி பறித்த நாள் எது தெரியுமா தோழர்களே! செப்டம்பர் 17
அன்று அமைச்சரவைக் கூடிய போது, அதன் செயலாளர் சாலமன் பி.சோஸ் என்பவர் பிரகடனத்தின் துவக்கத்தைப் படித்தவர்! எத்தகைய மெய் சிலிர்க்கும் தகவல்.
(தொடரும்)
- விடுதலை நாளேடு, 20.11.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக