அண்மையில் மேற்கொண்ட அமெரிக்கச் சுற்றுப் பயணத்தின்போது, பாஸ்டன் (Boston) நகரில் பெரியார் விழாவை நிறைவு செய்து அடுத்த நாள் சிகாகோவுக்குப் பயணமானோம். அப்போது 'லோகன்' பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைகளை யெல்லாம் முடித்து நானும் வாழ்விணையர் மோகனா, மகன் அசோக்ராஜ் ஆகியோர், விமானத்திற்குள் செல்ல வேண்டிய 'கேட்' அருகே சென்று அமர்ந்து கொண்டிருந்தோம்.
நான் அவர்களிடம் "வரும் வழியில் (விமான நிலைய தளத்தில்) ஒரு சிறு புத்தகக் கடை இருந்ததைப் பார்த்தேன்; அதைப் பார்த்துவிட்டு திரும்பி வருகிறேன்" என்று கூறியபோது, "பாருங்கள், புத்தகம், எதையும் வாங்காதீர்கள். பெயரை மட்டும் குறித்து வந்தால், நம்மூரிலேயே வாங்கலாம், மூட்டை பாரம் அதிகமாகி விடும்" என்று வழக்கம் போல எச்சரித்து அனுப்பினர்.
நானும் அந்த 20 மணித்துளிகள் அந்த புத்தகக் கடையை ஒரு அலசு அலசி விட்டேன். பெரிதும் புதினங்கள் - சி.டி, DVD இவைதான். நீண்ட நேரம் துருவித் துருவிப் பார்த்த நிலையில் மூலையில் ஒரு நூலைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை!
தென்னாப்பிரிக்க விடுதலை மாவீரர் நெல்சன் மண்டேலா அவர்கள் 27 ஆண்டுகள் தனித் தீவில், தனிச் சிறையில் தனியே இருந்த போது எழுதிய பல வகை கடிதங்களில் முக்கிய மானவை களின் அரிய தொகுப்பு அந்நூல்.
இது எனக்குக் கிடைத்த ஓர் அற்புதப் புதையல் - விடுவேனா? ஏற்கெனவே நெல்சன் மண்டேலாவின் அனைத்து நூல்களையும் வாங்கி, படித்து, சேகரித்து வைத்துள்ள எனக்கு இது ஒரு புதிய வரவு அல்லவா அது?
உடனே 18 யு.எஸ். டாலர் விலைக்கு வாங்கி விட்டேன். ஒரே ஒரு பிரதிதான், அங்கே எங்கோ ஒரு மூலையில் இருந்தது.
2 மணி நேர பயணத்தின் களைப்பைப் போக்க அருமையான இளைப்பாறுதல் அல்லவா?
அமெரிக்க விமானங்களில் உள்நாட்டில் எத்தனை மணி ஆனாலும் எதுவும் இலவசம் கிடையாது! காசு கொடுத்துதான் வாங்க வேண்டும். குடிக்க தண்ணீர் தருவார்கள். ஒரு பழரசம் சில விமானங்களில் மட்டும். தேவை யானவை காசு கொடுத்தே வாங்கித்தான் உண்ணவோ, குடிக்கவோ வேண்டும்!
எனது வாழ்விணையரின் வாய் முணு முணுத்தது. 'புத்தகம் வாங்காமல் உங்கள் அப்பா வர மாட்டார் என்று நான் சொன்னது சரியாகப் போய் விட்டது பார்த்தாயா?' என்றார். அசோக்ராஜ் சிரித்துக் கொண்டார்!
அங்கே பிரித்து படிக்கத் துவங்கினேன். சிகாகோ O'Hare என்ற பிரபல சுறுசுறுப்புக்குப் பெயர் போன பன்னாட்டு விமான நிலையம் அருகே வந்தபோது, தொடர் வண்டிகள் போல வரிசையாக விமானங்கள் புறப்பாடு ஆனதால் க்யூவில் இருந்தன! அதனால் எனக்கு உடனே இறங்கிட வாய்ப்பில்லை. விமானம் இணைப்புக்கு வரவே மேலும் 30 மணித் துளிகள்ஆயின. நானும் விடாமல் இந்த Prison Letters 'Heart Breaking and Inspiring' என்று நியூயார்க் டைம்ஸ் ஏட்டினால் விமர்சிக்கப்பட்ட இந்நூல் மிக அருமையான பொது வாழ்க்கையில் உள்ளோர் எப்படி மனோ திடத்தை வளர்த்து, நம்பிக்கை இழக்காமல் இலட்சியப் பயணத்தை தொடர்ந்து - தொல்லைகள் ஆயிரம் வரினும் - செய்வதில் தயக்கமோ, பின் வாங்குதலோ கூடாது என்பதை உணர்த்தும் ஒரு அரிய கருவூல மா மருந்துகள் போன்றவை இந்தப் பாடங்கள்.
மேலும் விரிவாக விளக்குவோம். அடுத்து - ஆயத்தமாகுங்கள்!
பயணக் களைப்பைப் போக்க, பயண தூரத்தை சுருக்க காலத்தின் அளவை எளி தாக்கிப் பறக்க வைக்க புத்தக நண்பன் ஒரு அற்புத வழிமுறை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
- விடுதலை நாளேடு நாலு 11 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக