பக்கங்கள்

வெள்ளி, 1 நவம்பர், 2019

சேர்த்திடும் செல்வமும் 7 விதிமுறைகளும்! (4)

செல்வத்தை நேரிய வழியில் சம்பாதித்து, உயரிய வழியில் செலவிட்டு, காரிய வகையில் கண்ணுங் கருத்துமாய் பெருக்கி, அதனை தனக்கு மட்டும் பயன்படுத்தாமல், சமுதாய நலனுக்கும் அறப்பணிகள் மூலம் கொடுத்து, அதன் மூலம் உண்மையான "ஊருணிகளாக", "பயன் தரு மரம் பழுத்துப்" பலரின் பசி போக்குதல் போல், ஈத்துவக்கும் இன்பத்தைப் பெறுதலே மிகவும் சரியான வழி.

இது 6 விதிகளையும் தாண்டிய ஏழாவது விதியாகும்!

பணம் முடக்கப்படக் கூடாது. "ஓரிடந் தனிலே நில்லாதுலகினிலே. உருண்டோடிடும் உலகைச் சுற்றிடும்" என்பதாக உடுமலையாரின் பாட்டு ஒன்று அறிஞர் அண்ணாவின் 'வேலைக்காரி' திரைப்படத்தில் வரும்.

பணம் என்பது புழக்கத்தில் இருந்தால்தான் அதன் பயன் முழுப் பயனாகப் பரிமளிக்கும். Velocity of Money - Circulation என்பது பொருளாதாரத்தில் ஒரு முக்கிய விதியும் பாடமும் ஆகும்.

ஜான்மேனாட் JohnMaynard Keynes என்ற பிரிட்டிஷ் பொருளாதார வல்லுநர் ஒரு அருமை யான விளக்கத்தின் மூலம் பணப் பரிவர்த்தனை எப்படி சமூக வளர்ச்சியின் அடி நீரோட்டமாக அமைந்துள்ளது என்பதை அதன் மூலம் கூறினார்.

ஒரு மனிதரின் செலவு

மறு மனிதரின் வரவு ஆகும் என்றார்.

பொருளாதார வளர்ச்சியில் இது ஒரு முக்கிய அங்கமாகும். (பல்கலைக் கழகத்தில் பொருளாதார எம்.ஏ. வகுப்பில் இது எங்களுக்கு பாடம். அது மட்டு மல்ல தேர்வுக்குரியதும்கூட; இப்போதும் அந்த மலரும் நினைவுகள்தான்!)

பணம் முடங்கிப் போனால் என்னவாகும்? கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் - கலைஞர் எழுதிய 'மணமகள்' திரைப்படத்தில் ஒரு பாட்டு - மிக அருமையான கருத்துக்கோவை, பொருளாதார வகுப்புகளில் போதிக்கப் பட்டவைகளை எளிதில் புரிய வைக்கும் பாட்டு.

"எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?

பணத்தை எங்கே தேடுவேன்?

உலகம் செழிக்க உதவும் பணத்தை

எங்கே தேடுவேன்?

அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை

எங்கே தேடுவேன்?

கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?

கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?

கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?

அண்டின பேர்களை ரெண்டகம் செய்யும் பணத்தை

எங்கே தேடுவேன் பணத்தை

எங்கே தேடுவேன்?

பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?

பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?

சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?

சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ?

எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?

திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?

திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?

இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?

இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணந்தனை

எங்கே தேடுவேன் பணத்தை?

தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?

தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?

சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?

சூடஞ் சாம்பிராணியாய்ப் புகைந்து போனாயோ?

எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?

பணத்தை எங்கே தேடுவேன்?

உலகம் செழிக்க உதவும் பணமே பணமே பணமே..,

எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?

பணத்தை எங்கே தேடுவேன்?"

என்பார். (முழுப் பாடலைக் கேட்டுச் சுவையுங்கள்)

என்றாலும் சேமிப்பிலும்கூட வங்கிகளிலோ, தனியார் நிதி நிறுவனங்களிலோ முதலீடு செய்யும் போது, அவர்கள் வட்டி தருகின்றனர். அது முதலீடு செய்பவர்களுக்கு வருவாய் பெருக்கத்திற்கு அல்லது, வழக்கமான மாதாந்திர, வருடாந்திர செல வுக்கு உதவுகிறது. மூலதனம் செலவுகளில் கரையாத விதை நெல்போல் இருக்கிறது.

அந்த வகையில் சேமிப்பு மிகவும் இன்றியமை யாதது. தந்தை பெரியார்  அவர்கள் 89,90,95 ரூபாய் நோட்டுகள் சேர்ந்தால் அதை உடனே ஒரு 5 ரூபாயோ, 10 ரூபாயோ தற்காலிகமாக அம்மாவிடமோ, அருகிலுள்ள நெருக்கமான வர்களிடமோ பெற்று 100 ரூபாய் நோட்டாக மாற்றி வைத்துக் கொள்வார்!

சில்லறை நோட்டுகளாக இருக்கும் போது செலவழிக்கத் தோன்றும்; 100 ரூபாய் நோட்டு என்றால் செலவழிக்க மனம் வராதல்லவா! (அந்தக் காலத்தில் ஒரு பச்சை நோட்டு என்று மக்கள் மத்தியில் இந்த பழைய ரூபாய் நோட்டுக்குப் பெயர், மரியாதை உண்டு. அக்காலத்தில் பிரிட்டிஷ் அரசு - பச்சை வண்ணத்தில் அந்த நோட்டு இருக்கும்)

பிறகு பணம் வரும்போது, தோழர்களின் அன் பளிப்பு, வழிச் செலவு முன் பணம், இத்தியாதி மூலம்  வந்தவுடன் உடனடியாக வாங்கிய, "தற்காலிக கடனைத் திருப்பித் தந்து பைசல்" செய்து விடுவார்!

அப்படிச் சேமித்த செல்வத்தை இறுதியில் யாருக்கு விட்டு விட்டுப் போனார். மக்களுக்கு! மக்களுக்கு!! மக்களுக்கு!!!

தன் பெண்டு, தன் பிள்ளை, தானுண்டு, தன் சம் பாத்தியம் உண்டு என்ற சின்னதோர் 'கடுகு உள்ளம்' அய்யா அவர்களிடத்தில் என்றுமே இருந்ததில்லை.

வள்ளுவர் செல்வம் பற்றி பொது நலக் கண் ணோட்டத்தோடு, பிறருக்கும் சமுதாயத்திற்கும் அச் செல்வம் பயன்பட்டால் அது சரியான முறை. இன்றேல் அதனால் எந்தப் பலனும் சேர்த்து வைத்தவர் உட்பட யாருக்கும் இல்லை என்கிறார்!

தலைப்பே "நன்றியில்செல்வம்" பார்த்தீர்களா?

"வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்"

(குறள் 1001)

"தனது வீடு நிறையப் பெருஞ் செல்வத்தைச் சேமித்த ஒருவன், அதனைக் கொண்டு வயிறார உண்டு. அவனும் பிறரும் அதனை நுகரவில்லை என்றால் அவன் உருப்படியாகச் செய்யத்தக்கது என்று வேறொன்றும் இல்லையாதலால் அவன் உயிரோடு இருந்தும் செத்த ஒருவனாகவே கருதப்படுவான்"

செல்வம் சேர்ப்பவர்கள் எல்லாம் திருவள்ளுவர் கணக்கில் - பார்வையில் - வாழுபவர்கள் அல்ல - பலர் "செத்த மனிதர்களே!"

வாழும் மனிதர்களாக காட்சியளிக்க தானும் துய்த்து பிறரையும் துய்க்க வாய்ப்பளித்து வள்ளற்றன் மையின் வடிவமாக அல்லவா வாழ வேண்டும். இந்த ஏழாம் விதியை மறவாதீர் செல்வத்தினை சேர்ப்பவரே!

மறவாதீர் என்றும்.

- விடுதலை நாளேடு 29 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக