பக்கங்கள்

வியாழன், 28 நவம்பர், 2019

அமெரிக்கா காங்கிரஸ் நூலகத்தில்.... (3)&(4)

மேலும் சில புத்தகங்கள் ஈர்த்தன; என்றாலும், புத்தகச் சுமை, ஏற்கெனவே அதிகம்; மேலும் ‘மகிழ்ச்சியுடன்' பாரத்தைச் சுமக்க விரும்ப வில்லை.

தாமஸ் பெயின் (1737-1809) அவர் களின் ‘‘The Age of Reason'' என்ற நூல் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கிய ஒரு சிந்தனை ஏவுகணையாகும்!

அதுபோலவே அவரது மற்றொரு நூல் பிலடெல்பியா நகரில் வெளியிடப்பட்டது (14.2.1776). அது 'Common Sense' என்ற நூலாகும்!

அந்த நூலை நமது பொருளாளர் தோழர் வீ.குமரேசன் அவர்கள் அமெரிக்காவிலிருந்து திரும்புகையில் எனக்கு வாங்கி வந்து தந்தார்!

தாமஸ் பெயின் ஒரு சிந்தனைப் புரட்சியாளர். பொது அறிவு - பட்டறிவு என்பது எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டால் தக்க விளைவு ஏற்பட்டு, சமூகம் மாறுதலை அடையக்கூடும் என்பதை விளக்குவதாக இருக்கும் நூல்! (இன்னும் முழுமையாகப் படித்து முடிக்கவில்லை).

அந்நூலை அந்த அமெரிக்க நூலகத்தின் விற்பனையகத்தில் வாங்குவதற்குப் பதிலாக ஆபிரகாம் லிங்கனின் வரலாற்றுப் புகழ் வாய்ந்த பிரபலமான உரையான ‘கெட்டீஸ் பர்க் பேருரை' ('The Gettysburg Address') புத்தகம் என் உள்ளத்தைப் பறித்து, ஆக்கிரமித்துக் கொண்டது! அதனால் அதை நானே வாங்கினேன்.

இந்த பிரபலமான - புகழ் வாய்ந்த - கெட்டீஸ் பர்க் பேருரை என்பது ஆபிரகாம் லிங்கன் (ஜனாதிபதி) அவர்களால் நவம்பர் 19, 1863 இல் நிகழ்த்தப் பெற்ற ஓர் உரையாகும்.

அமெரிக்காவில் அடிமை முறை ஒழிப்புக்கு எதிராக ஏற்பட்ட போரில் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் கட்டளையை ஏற்று, உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் நினைவுக் கல்லறைத் தோட்டம் (பென்சில்வேனியா) போர்க்களம் அருகில் அமைந்த தேசிய இராணுவ வீரர்கள் நினைவகம் அருகேதான் கெட்டீஸ்பர்க் சண்டை யும் நடைபெற்றதாம். ஜூலை 1 ஆம் தேதிமுதல் 3 ஆம் தேதிவரை 1863 இல் நடைபெற்று  வெற்றியை ஈட்டியவர்களுக்கு வீரவணக்கம் செலுத்து வதற்காக அக்கல்லறைத் தோட்ட நினைவகம் அமைக்கப்பட்டது.

டேவிட்வில்ஸ் என்பவரின் ஆணைப்படி

17 ஏக்கரா பூமி - போர்க்களம் நினைவகமாக கல்லறைத் தோட்டம் அமைப்பதற்கு 32 வயதான வழக்குரைஞர் ஆண்ட்ரூ கர்ட்டின் என்பவர் - பென்சில்வேனியா கவர்னராக நியமிக்கப்பட்டவர் அந்த இடத்தைத் தேர்வு செய்து ஒப்புக்கொண்டார். அழுகிய இராணுவ வீரர்களின் உடற்பாகங்களை எல்லாம் அப்பகுதி மக்கள் தேடிக் கண்டுபிடித்து - திரட்டி - இந்த நினைவுக் கல்லறைத் தோட்டத்தை உருவாக்கினர்!

இதனைத் திறப்பதற்காக ஆரம்பத் தில் நிர்ணயித்த தேதி செப்டம்பர் 23 (1863), நமது மாநாட்டுக்கு அடுத்த நாள் - இப்புத்தகம் அன்றுதான் வாங்கினேன். வேடிக்கை யான எதிர்பாராத நிகழ்வு இது!

எட்வர்டு எவரெட் என்ற பிரபல பேச்சாளரை - நினைவேந்தல் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தனர். (இவர் முன்னாள் அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் ஆவார்) மசாசுசெட்ஸ் மாநிலத்தின் கவர்னரின் பிரதிநிதியாவார். பிரபல ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளி - மிகப்பெரிய நிர்வாகி; அதனால் தான் அவரை அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வுக்கு சிறப்புப் பேச்சாள ராக அழைத்து ஏற்பாடு செய்திருந்தனர்.

அன்றுதான் அந்த இராணுவ உயிர்த் தியாகி களின் கல்லறைத் தோட்டத்தை நாட்டுக்கு அர்ப் பணிப்பு  செய்வதை அந்த விழாவில் நடத்திட ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால், இத்தேதி தள்ளி வைக்கப்பட்டது! நவம்பர் 19 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்க அப்பிரபலப் பேச்சாளராகிய அவர் கேட்டுக் கொண்டார். காரணம், முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று உரையாக அது அமையவேண்டும் என்பதனால், கால அவகாசம் - அதனைத் தயாரிக்கத் தேவை என்றார் எட்வர்ட் எவரெட்.

ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அவர்களையும் அந்த அர்ப்பணிப்பு நிகழ்வு - வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த ஒன்றாகையால், அவரையும் அழைக்கலாம் என்று முடிவு செய்து, அவரை விட்டே அர்ப்பணிப்பை நிகழ்த்துவது பொருத்தம் என்று கருதி அழைத்தார்கள், வந்தார். அதற்குப் பின் நடந்த நிகழ்வு சுவாரஸ்யம் வாய்ந்தது!

(தொடரும்)

விடுதலை நாளேடு 21 11 19

அமெரிக்கா காங்கிரஸ் நூலகத்தில்.... (4)

அமெரிக்க குடியரசுத் தலை வரான ஆபிரகாம் லிங்கன் அவர்கள், ஏற்கெனவே அர்ப் பணிப்புப் பணி செய்ய குழுவினர் விடுத்த அழைப்பை ஏற்று கெட்டீஸ் பர்க் பகுதிக்கு ரயிலில் புறப்பட்டு இரவே வந்து தங்கினார். அடுத்த நாள் அவர் வெறும் ரிப்பனைக் கத்தரிக்கும் பணியைத்தான், குடியரசுத் தலைவர், அதிபர் என்ற முறை யில் செய்யவிருக்கிறார்!

நவம்பர் 18 ஆம் தேதி இரவு வந்தவர், டேவிட் வில்ஸ் அவர் களது விருந்தினராக அவரது இல்லத்திலேயே தங்கினார்;  அங்கு வந்து தங்கியவர் ஏற்கெ னவே அவர் வாஷிங்டன் தலைநகரிலிருந்து புறப்பட்டு வந்து தங்கிய நிலையில், அடுத்த நாள் ஆற்றப் போகும் உரையை வாஷிங்டனில் தொடங்கியவர் இங்கு வந்து தொடர்ந்து எழுதி முடித்தார்.

ரயிலில் வரும்போது, ஒரு அஞ்சல் உறைமீது அந்த உரையை அவர் எழுதி வந்துள்ளார் என்று நம்பப்பட்டு கூறப்பட்ட கருத்து உண்மை அன்று.

சுமாராக 15,000 பேர்கள் கூடுவர் அங்கே என்று எதிர்பார்க்கப்பட்டது.

எட்வர்ட் எவரட்டின் உரைதானே சிறப்பு உரை (அதற்காகத்தான் அவர் சிறப்புப் பேச்சாள ராக அழைக்கப்பட்டார்) - மொத்தம் 13,607 வார்த் தைகளைக் கொண்டது; இரண்டு மணிநேர உரை அது!

ஆபிரகாம் லிங்கன் உரையோ வெறும் 272 வார்த்தைகளை மாத்திரமே கொண்ட வரலாற் றுப் புகழ் பெற்ற லிங்கனின் கெட்டீஸ் பர்க் உரை யாக அமைந்துவிட்டது!

வரலாற்றை விவரித்தார் அந்த 272 வார்த்தை களில் ஆபிரகாம் லிங்கன்! 1787 ஆம் ஆண்டைய அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின்படி "பல மாநிலங்களிலும் ஏற்படவேண்டிய ஒற்றுமை இறுக வேண்டும்; சுதந்திரமும், சமத்துவமும் பூத்துக் குலுங்க வேண்டும்" என்பதை அவ்வுரை யில் அழகாகக் குறிப்பிட்டார்!

அவ்வுரையை பல்வேறு விதமான வார்த்தை களைப் போட்டு பலவிதமாக அக்காலத்திய செய்தித்தாள்கள் வெளியிட்ட போதிலும், அவ் வுரையின் சரியான வடிவமும், அமைப்பும், சொற்கள் ஜொலிக்கும் வண்ணமும்  வரைவாக லிங்கன் நினைவிடத்தில்,‘Bilits Version' என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளது!

பல்வேறு வகைகள் - கதைகள் கூறப்பட்டாலும், ரத்தின சுருக்கமாக உரை அமைந்தாலும்கூட, அது வரலாற்றில் நீடித்து நிலைத்த உரையாக இன்றும் ஒளிருகிறது!

இவ்வுரையாற்றப்பட்ட பின், ஆபிரகாம் லிங்கன் இதைத் திருத்தி, தனது சிந்தனைகளை முறையாகவே அமைப்பதில் கவனம் செலுத் தினார்! அவருடைய கையொப்பத்துடன் கூடிய அந்த உரைதான் அதிகாரப்பூர்வ  வார்த்தைகளைக் கொண்ட பிரபல 'கெட்டீஸ் பர்க்' உரையாகும்.

இதுதான் அந்த 272 வார்த்தைகளைக் கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை; கிடைத்தற்கரிய பொக்கிஷம் அது!

அந்த ஆங்கில உரையை அப்படியே தந்து தமிழாக்கத்தையும் தருகிறேன். அது எப்படிப்பட்ட சாசன உரையாக உள்ளது என்பதை உணரும் போது நம் மெய் சிலிர்க்கிறது!

‘‘Four score and seven years ago our fathers brought forth on this continent, a new nation, conceived in Liberty, and dedicated to the proposition that all men are created equal.
Now we are engaged in a great civil war, testing whether that nation, or any nation so conceived and so dedicated, can long endure. We are met on a great battlefield of that war. We have come to dedicate a portion of that field, as a final resting place for those who here gave their lives that, that nation might live. It is altogether fitting and proper that we should do this. But, in a larger sense, we cannot dedicate - we cannot consecrate - we cannot hallow- this ground. The brave men, living and dead, who struggled here, have consecrated it, far above our poor power to add or detract. The world will little note, nor long remember what we say here, but it can never forget what they did here. It is for us the living, rather, to be dedicated here to the unfinished work which they who fought here have thus far so nobly advanced. It is rather for us to be here dedicated to the great task remaining before us - that from these honored dead we take increased devotion to that cause for which they gave the last full measure of devotion - that we here highly resolve that these dead shall not have died in vain - that this nation, under God, shall have a new birth of freedom -and that government of the people, by the people, for the people, shall not perish from the earth.

இதன் தமிழாக்கம்:

"நம் நாடு எண்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் இந்தக் கண்டத்தில் உருவாக் கித் தந்த ஒரு புதிய நாடு. சுதந்திரமே நம் நாட்டின் அடிப்படைக் கொள்கை. சமத்துவமே இதன் மகத்துவம். இவற்றை நிலை நாட்டும் பணிக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நாடு இது.

இப்படி உருவாகி தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு நாடு நிலைத்து நிற்குமா என்று சோதித்துப் பார்ப்பது போல், இன்று நம் நாட்டில் உள்நாட்டுப் போர் மூண்டு நம்மைப் போராட வைத்துள்ளது. அந்தப் போர்க்களத்தில் தான் இன்று நம் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த நாடு நீடூழி வாழ தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ள நம் போராளிகளின் உடல்கள் அமைதிகாண இந்தப் போர்க் களத்தின் ஒரு பகுதியை அர்ப்பணிக்க வந்துள்ளோம் நாம். இதை நாம் செய்தே தீர வேண்டும்.

எனினும் வேறொரு விதத்தில் பார்த்தால், இந்த பூமியை அர்ப்பணிப்பதோ புனிதப்படுத் துவதோ இயலாத பணி என்றே தோன்றுகிறது. காரணம்? இங்கே போராடி உயிர் பிழைத்தவர் களும், உயிர் துறந்தவர்களும் இந்த மண்ணை தங்கள் ரத்தத்தால் ஏற்கெனவே புனிதப்படுத்தி விட்டார்களே! இந்தப் புனிதத் தன்மையை கூட்டவோ குறைக்கவோ இனி எவரால் முடியும்?

இந்த உலகம் நாம் கூறுவதை பொருட் படுத்தாமல் போகலாம். பொருட்படுத்தினாலும் வெகு விரைவில் மறக்கவும் செய்யலாம். ஆனால் நம் வீரர்கள் இங்கே புரிந்த சாதனையை மட்டும் இந்த உலகம் ஒரு நாளும் மறுக்கவும் முடியாது. மறக்கவும் முடியாது.

இவ்வளவு தூரம் கடந்து வந்து, இயன்ற வரை போராடி மறைந்த வீரர்கள் விட்டுச் சென்றுள்ள பணிகளை நிறைவேற்ற, உயிர் வாழ்ந்து கொண்டி ருக்கும் நாம் நம்மையே அர்ப்பணித்துக்  கொள்ள வேண்டிய தருணம் இது. நாம் எதிர் கொண்டுள்ள மிகப் பெரிய கடமைக்கே நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்.

மறைந்த பெரும் வீரர்களின் தியாகமே நம் நாட்டுப் பற்றை மேலும் அதிகரிக்கச் செய்யட்டும். எந்த மகத்தான நோக்கத்திற்காக அவர்களுடைய தேசப் பற்று இறுதி வரை அவர்களைப் போராட வைத்ததோ, அதே நோக்கத்திற்காக நாம் நம்மையே அர்ப்பணித்துக் கொள்வோம்.

நம் வீரர்களின் உயிர்த் தியாகம் வீணாகப் போய்விடக் கூடாது என்று நாம் உறுதி கொள் வோம். கடவுளின் அருளால் நம் நாட்டில் சுதந்திரம் மீண்டும் புதிதாய்ப் பிறக்கட்டும்!

மக்களுக்காக, மக்களால் இயங்கும் மக்களாட்சி இந்த பூமியிலிருந்து என்றுமே அழிந்து விடாதபடி பாதுகாக்க நாம் அனைவரும் உறுதி கொள்வோம் வாருங்கள்!"

இந்த கெட்டீஸ் பர்க் உரை 5 விதமான வரைவு களாக பதிவாகியுள்ளது.

1. நிக்கோலே வரைவு

2. ஹே வரைவு

3. பாங்க்கிராட் காப்பி

4. எவரெட் காப்பி

மற்றும் 3 வித வரைவுகள். இதில் 5-ஆவது இறுதிவரைவுதான் ‘ஙிவீறீவீts க்ஷிமீக்ஷீsவீஷீஸீ' என்பது. இதில் மட்டும்தான் ஆபிரகாம் லிங்கனின் கையொப்பம் உள்ளது.

வாசகர்களே, இதைப் படித்தவுடன் எப்போதும் சுருக்கிப் பேசுங்கள் என்று என்னை சதா வற் புறுத்தும் எனது வாழ்விணையரின் அறிவுரையே நினைவுக்கு வந்தது!

வெகுகாலம் எடுத்த 1,300 வார்த்தைகளைக் கொண்ட சிறப்புரை எவரெட்டுடையது எடுபட வில்லை.

வெறும் 274 வார்த்தைகளைக் கொண்டு முதலில் ரயிலிலும், இரவு தங்குமிடத்திலும் ஆபிரகாம் லிங்கன் தயாரித்த அந்த உரை ஜனநாயகத்திற்கே விளக்கம் அளித்து காலத்தால் அழியாத கருவூலமாக உள்ளது!

(இனிமேல் சுருக்கிப் பேசவே முடிவு எடுத் தாலும்,  எல்லோரும் லிங்கனாக ஆக முடியாது என்றாலும்கூட).

உரையின் நீளம் முக்கியமல்ல நண்பர்களே! முத்தாய்ப்பும், உள்ளத்தில் பதியும் உணர்வுப் பெருக்கை உருவாக்கி, நிலைக்க வைக்கும் அழி யாத நினைவுச் சின்னமாக, அமெரிக்க வீரர் களுக்கு வீரவணக்க உரையாகிவிட்டது அவ்வுரை.

இந்த நூலில் மட்டுமே இத்தனை சுருக்கத்தில் கொள்ளைத் தகவல்கள்.

நல்ல நூல் நயம் இதுவல்லவோ!

அமெரிக்க நூலகத்தில் செலவழித்த நேரம் எவ்வளவு பயனுறு நேரம் பார்த்தீர்களா?

- விடுதலை நாளேடு 21 11 19

செவ்வாய், 26 நவம்பர், 2019

அமெரிக்கா காங்கிரஸ் நூலகத்தில்.... (1)&(2)

கடந்த செப்டம்பர் (2019) 21, 22 ஆகிய நாட்களில் அமெரிக்க வாஷிங்டன் ஞி.சி. க்கு அருகில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தின் சில்வர் ஸ்பிரிங் (Silver Spring)  நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்பு  - அமெரிக்க மனிதநேய சங்கம் (Periyar International and American Humanist Association) இணைந்து நடத்திய  பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இது சுமார் 80 ஆண்டுகால வரலாறு படைத்த சங்கம் - 5 லட்சத்திற்கு மேல் அமெரிக்கர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்!

('கடவுள் இல்லாமலேயே மனித குலத்திற்கு மகத்தான நன்மை புரிய முடியும்', 'Good Without God'   என்ற இலச்சினைச் சொற்களை மேடையில் அலங்கரித்தனர்!)

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவில் தமிழ்நாடு, மலேசியா, ஜெர்மனி, சில அய்ரோப்பிய நாடுகள், கனடா போன்ற பல நாட்டினரும், பேராளர் களும் கலந்து கொண்டு வெற்றிகரமாக அம்மாநாடு நடந்தேறியது.

தமிழ்நாட்டிலிருந்து வந்த 50 பேராளர்கள் ஒரு தனிப் பேருந்தில் பற்பல மாநிலங்களுக்குச் சுற்றுப் பயணமானார்கள். 23.9.2019 அன்று காலை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.

அன்று காலை மேரிலாண்ட் பகுதியில் 'பெத்தேசா' பகுதியில் நீண்ட காலமாகக் குடியிருக்கும் மூத்த முதியவர் மானமிகு பெரியவர்தில்லை ராசா அவர்கள் உடல்நலிவுற்று  தற்போது தேறி வருகிறார். 92 வயது - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராட்டத்தில் அவர் அங்கிருந்தவாறே  பணி செய்தவர். உலக வங்கியின் ஓய்வு பெற்ற தலைமை அதிகாரி  அவர். அவர்களது உற்றார், உறவினர் எல்லாமே பெருநிலை அதிகாரிகள் - தமிழ் இன உணர்வாளரும்கூட! அவரைக் காலையில் 9 மணியளவில் சந்தித்துவிட்டு நலம் விசாரித்து தங்கியிருந்த ஓட்டல் ஆலிடே (Hotel Holiday Inn)  திரும்பினோம்.

மதியம் 'குமரி இல்லம்' என்று சில்வர் ஸ்பிரிங் பகுதியில் பல கால ஆண்டுகளுக்கு முன்னே அமைந்த அருமை குடும்ப நண்பர் ராஜ் அவர்களையும் அவரது வாழ்விணையர் பாசமிகு திருமதி. சரோஜினி அவர்களையும், அவரது மகள், மகளின் பிள்ளைகள் - பேரப் பிள்ளை - என்னை எப்போதும் சிறு பிள்ளையாக இருக்கும் போதிலிருந்து 'வணக்கம் தாத்தா' என்றே அழைக்கும் அவர்  -தற்போது 'கல்லூரிக் காளை' - அது போல மிகுந்த தமிழ் உணர்வாளர் பெரியாரிஸ்ட். ஈசாய்வேத முத்தும், அவரது துணைவியாரும், பேராசிரியர் அரசு செல்லையா, அவருடைய நண்பர் இராமபிரசாத், டாக்டர் சோம. இளங்கோவன் ஆகியோருடன் கலந்து கொண்ட பகல் விருந்து முடித்து, சகோதரர் டாக்டர் சோம. இளங் கோவன்   'சாரதி'யாகி கார் ஓட்டி அவரது வாழ் விணையர் டாக்டர் சரோஜா இளங்கோவன், எனது வாழ்விணையர் மோகனா எல்லோரும் வாஷிங்டன் D.C. க்குப் பயணமானோம்.

பகல் 3 மணி அளவில் ஏற்கெனவே சென்று சில ஏற்பாடுகளைச் செய்த 'சகல கலா வல்லரான' முனைவர் ரவி சங்கர் கண்ணபிரான் (KRS)  அவர்கள் Library of Congress இல் என்னை உறுப்பினர் ஆக்கிட அந்த பரந்து விரிந்த பார்லிமெண்ட் நூலகம் (உலகின் பெரிய நூலகங்களில் அது ஒன்று) நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் அந்த பரந்த விரிந்த நூலகத்திற்குள் அழைத்துச் சென்றார். காரை நிறுத்த இடம் அங்கே எளிதில் கிடைக்காத வாய்ப்பைப் பயன்படுத்தி மோகனாவை வைத்து வாஷிங்டன் D.C.  முக்கிய அலுவலகப் பகுதி வீதிகளை சுற்றிச் சுற்றிக் காட்டி வந்து கொண்டே இருந்தார். அழைக்கும்போது காருடன் வந்தால் நாங்கள் அதில் பயணம் செய்து அடுத்த இலக்குக்குச் செல்ல இது ஒரு நல்ல உத்தி அல்லவா?

நூலகத்தின் உள்ளே போனவுடன், ஏற்கெனவே பூர்த்தி செய்து வைத்திருந்த விண்ணப்ப மனுவில் கையெழுத்திட்டவுடன் அடுத்த கட்ட அறைக்குப் 'பறந்தோம்' (காரணம் 4.30 மணிக்குள் நூலகம் மூடி விடுவார்கள்). அதற்குள் உறுப்பினர் ஆகி விட வேண்டும் என்ற துடிப்பு. சாதிக்க முடியாதவை எவையும் இல்லை என்பதே நண்பர்கள் கே.ஆர்.எஸ்., டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களது உறுதி மிக்க முடிவு. விரைவுபடுத்தி பாஸ்போர்ட் அளவு ஒளிப்படம் எடுத்து  பொறுப்பாளர் (ஒரு ஆப்ரோ அமெரிக்க பெரிய அதிகாரி) மிகவும் அன்போடும், பண்போடும் வரவேற்று ஒளிப்படம் வைத்து அடையாள அட்டையைத் தயாரித்துத் தரும் மற்றொரு பெண் அதிகாரியிடம் எங்களை அனுப்பினார்; அவரும் தேனீக்களைப் போன்ற சுறுசுறுப்புடன் விரைந்து பணி செய்து அடையாள அட்டை (ஓராண்டுக்குரியது) தந்தார்.

உடனே ஆராய்ச்சி Reference நூலகப்பகுதிக்கு அழைத்துச் சென்றார் நமது தோழர் (KRS)  ரவிசங்கர் கண்ணபிரான், அதிகாரியிடம் என்னை பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக வேந்தர் என்று அறிமுகப்படுத்தி அடையாள அட்டையை - வரநிகர் தகுதி  அட்டையைக் காட்டியவுடன் அவர் கை குலுக்கி எங்களை வரவேற்றார். 'அய்யா, அண்ணா, கலைஞர் நூல்கள் (தமிழ்) இருக்கின்றனவா Reference பகுதியில்' என்று கேட்டவுடன் எடுத்துத் தந்தார், படித்தோம், மகிழ்ந்தோம். மற்ற அமைப்பு சிறு சிறு ஏணிகள் ஆங்காங்கே படிப்பதற்கு வசதியான வெளிச்சம் தரும் விளக்கு அமைப்புகள் - குறிப்புகள் எடுக்க உதவும் வகையில் போடப்பட்டுள்ள மேசை மற்றும் இருக்கைகள் - எல்லாம் மரங்களால் ஆனவை - மிகவும்  நேர்த்தி மிக்கவை.

முழு அமைதி ஆட்சி புரியும் அரிய இடம் அது! குண்டூசி என்ன மூச்சு ஒலிகூட கேட்கும் அளவுக்கு அமைதி அங்கே!

புத்தகப் பக்கங்கள் புரட்டும் ஒலிகூட கேட்கக் கூடாத அளவு, வாசகர்கள், நுகர்வோர் நடந்து கொள்ளும் பக்குவமான பண்புகள் - வியக்கத்தக்கது -விரிவுலகு பின்பற்றத்தக்கவை.

தனியே ஒரு பகுதியில் மெல்லிய குரலில் எங்களுக்கு மேல் நூலக அதிகாரி தனி அனுமதி கொடுத்து உள்ளே தாராளமாய்ப் போய்ப் பாருங்கள் என்று கூறி, என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், என்று மிகவும் பண்புடன் - பல நாள் பழகிய பாங்குடனும், அன்புடனும் பேசினார்.

கொஞ்சம் நூல்கள் வாசிப்பு, கொஞ்சம் சுற்றிப் பார்த்து ஒளிப்படம் எடுக்கத் தனி அனுமதி பெற்று எல்லா ஏற்பாடுகளையும் மின்னல் வேகத்தில் முடித்துச் சென்றோம்; கண்டோம் - படம் எடுத்துக் கொண்டோம். எங்களுடன் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களும் வந்து கலந்து கொண்டார். அதை முடித்து 10 மணித் துளிகள் அதனுடன் அமைக்கப்பட்டுள்ள வெளியீட்டுப் பகுதிக்குச் சென்றோம்; அருமையான அரசியல் வரலாற்றுப் பின்னணியை விளக்கும் நூல்கள்.

வாங்காமல் வருவேனா? வாங்கினோம்.

(நாளை விரியும்)

- விடுதலை நாளேடு 18 1119

அமெரிக்கா காங்கிரஸ் நூலகத்தில்.... (2)

அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் அரிய வரலாற்று நூல்கள், நினைவுச் சின்னங்கள் - பரிசளிக்கக்கூடிய பற்பலவகையான நூல்கள் (வீரமிக்க வரலாற்றோடு இணைந்தவை) எல்லாம் விற்பனையாகின்றன.

பேசும் நேரத்திற்கே அமெரிக்க வழக்குரை ஞர்கள் கட்டணத்திற்குரியதாக்கி, அவர்கள் வழக்கு சம்பந்தமான தகவலை தொலைப் பேசியில் - இந்தத் தேதியில் உங்கள் வழக்குக்கு வாய்தா போடப்பட்டிருக்கிறது என்ற தகவலை தெரிவித்ததற்கு வந்த இரசீதையே நான் பார்த்து வியந்தேன்.

பிறகு இங்கும் சில வழக்குரைஞர்கள் அதனைப் பின்பற்றுவதை அறிந்து அதிர்ச்சியா னேன். “காசில்லாதவன் கடவுளேயானாலும் கதவைத் சாத்தடி” என்ற உடுமலை நாராயணக் கவியின் திரைப்படப் பாடல் வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வந்தது!

‘Time Is Money’ என்பதே அவர்களது வாழ்க்கை முறையாக வந்த நிலையில், எங்கும் கட்டணம் நிர்ணயித்து வசூல் செய்து, அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு நிதி ஆதாரங்களை வைத்துள்ளனர் இப்படிப்பட்ட முறைமூலம்.

புத்தகங்கள் மிகச்சிறப்பாக - அழகுற அமைக்கப்பட்ட “பாக்கெட் சைஸ்” புத்தகங்கள் - 10 டாலர் (8 முதல் 10 டாலர்).

அமெரிக்கச் சுதந்திரத்தின் வரலாற்று ஆவ ணங்கள் பதிப்புரை வரலாற்று அறிவுத்திறன் உருண்டைகளாக - சுருக்கமாக, அழகான பதிவுகளாக அமைந்தன.

கீழ்க்கண்ட நூல்களை தேர்வு செய்தேன்;  நானே அவ்வாறு தேர்வு செய்து  கொடுப்பதில் ஓரளவுக்கே வெற்றி பெற்றேன்;  பெரும் அளவில் தோற்றேன்.  டாக்டர் சோம.இளங் கோவனும், பேராசிரியர் முனைவர் ரவிசங்கர் கண்ணபிரான் (KRS) அவர்களும் அதில் போட்டியிட்டனர்.

1. The Declaration  of Independence with Short biographies Of  Its Signers.

சுதந்திரமணியின் சின்னத்துடன் 1776ஆம் ஆண்டு சுதந்திரப் பிரகடன வரைவுக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அதில் இடம் பெற்றவர்கள் தாமஸ் ஜெபர்சன், ஜான் ஆடம்ஸ், பெஞ்சமின் பிராங்கிளின், ரோஜர் ஷெர்மன், ராபர்ட் லிவிங்ஸ்டன்.

வரைவை எழுதியவர் தாமஸ் ஜெபர்சன் - டாக்டர் பெஞ்சமின் பிராங்கிளினும், ஜான் ஆடம்சும் சிறுசிறு சில திருத்தங்களைச் செய்துள்ளனர் என்ற குறிப்புடன் நூல் தொடங்குகிறது!

32 பக்கங்கள்தான்! (Everything in Nut shell)

2. The Bill of Rights with (Writings That Formed Its Foundation)

‘The Bill of  Rights is the collective name for the First Law Amendments to the United States Constitution’

(அமெரிக்க அய்க்கிய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் முதல் 10 சட்டத் திருத்தங்கள்தான் இவை!)

இது 48 பக்கங்களைக் கொண்ட அரசியல் வரலாற்று ஆவணம்!

மற்றொரு புத்தகம்

3. The Emancipation Proclamation

by

Abraham Lincoln

1862ஆம் ஆண்டு அமெரிக்காவில் அடிமை முறையை ஒழித்துக் கட்டிய மனித உரிமைக் காவலராக அந்தநாளில் திகழ்ந்த - உழைப்பால் உயர்ந்த உத்தமர் - ஆபிரகாம் லிங்கன்! 1862ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் நாள் தனது அமைச்சரவை சகாக்கள் மத்தியில் இதன் முதல் வரைவினைப் படித்துக் காட்டினார்.

ஆனால் பொதுமக்களுக்கு இந்த (மனித) சுதந்திர சமத்துவ பிரகடனத்தின் வரைவினை வெளியிடுவதை சரியாக 30 நாள் தள்ளி வைத்தார்.

அமெரிக்காவில் வடக்குக்கும் - தெற்குக்கும் நடந்த அடிமை ஒழிப்புப் போர்கள் முடிவுக்கு வரட்டும்,  பிறகு வெளியிடலாம் என்ற காரணத் தால் தள்ளி வைத்தார்!

‘இந்தப் போரில் எனது தலையாய நோக்கம் கூட்டாட்சியைக் காப்பாற்றி நாட்டின் ஒன்று பட்ட அய்க்கியம் சிதறக்கூடாது என்பதே. அதன் பிறகே விளையும் அடிமை ஒழிப்பு’ - என்று உருக்கமுடன் பதில் அளித்தார் ஆபிர காம் லிங்கன்!

அடிமை ஒழிப்புப் போராளி ஆபிரகாம் லிங்கன் வெற்றிக்கனி பறித்த நாள் எது தெரியுமா  தோழர்களே! செப்டம்பர் 17

அன்று அமைச்சரவைக் கூடிய போது, அதன் செயலாளர் சாலமன் பி.சோஸ் என்பவர் பிரகடனத்தின் துவக்கத்தைப் படித்தவர்! எத்தகைய மெய் சிலிர்க்கும் தகவல்.

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 20.11.19

நூற்றாண்டில் வாழும் மனிதநேயர்கள்! (2)

1900-க்கும், 2000-க்கும் இடையில் நூற்றாண்டு தாண்டி வாழுபவர் எண்ணிக்கை 51 விழுக்காடு, லு மடங்குக்கு மேல் - அதிகமாகியுள்ளது; காரணம் பகுத்தறிவு வளர்ச்சியின் பயனான மருத்துவ இயலால் ஆகும். பல சக்தி வாய்ந்த மருந்துகள் கண்டுபிடிப்பு, நோய் தடுப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, உடல் நலம் பேணும் அரிய கரிசனம், மந்திரவாதிகளையும், தலைவிதியையும் மட்டுமே நம்பியவர்கள் - மருத்துவர்களையும், மருத்துவத்தையும் நம்புவது, மூடநம்பிக்கைகளி லிருந்து விடுதலை பெறுவது போன்ற இத்தியாதியான பல காரணங்கள் ஆகும்.

அமெரிக்காவில் சராசரி மனித ஆயுள் 78.8 விழுக்காடு அளவுக்கு அண்மையில் உயர்ந் துள்ளது!

வாழ்க்கை முறைகளை மாற்றும் தன்மைகளே(Changes in Life Style) இதற்கு - ஆயுள் நீட்டிப்புக்குப் பெரிதும் உதவுகிறது.

புகை பிடித்தல் தீது என்ற பிரச்சாரம் ஓங்கி யுள்ளது ஒருபுறம்; மற்றொருபுறம் புகைபிடிக்கக் கூடாத இடங்களாக பறக்கும் விமானம், ஓடும் ரயில், பேருந்து, அலுவலகங்கள் முதலியவற்றை அறிவித்ததினால் இப்படி ஆயுள் இரட்டிப்பு மயம் - குடிப்பதும் நிதானமாக மட்டுப்படுத்தல் மற்றொரு காரணம் ஆகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்!

உடற்பயிற்சியை அவரவர் (முதுமையில்) வயதுக்கேற்ப நாளும் தவறாமல் செய்து வருவது -  ஏறும் வயதிற்கு  எதிர் மறையாக்கிட முக்கிய காரணம் ஆகும்.

வாரத்தில் 5 நாள்கள் சிறு சிறு உடற்பயிற்சியை மூத்த குடி மக்கள் செய்து வருவது மிகவும் அவசியமாகும்!

நீண்ட நேரம் வெறுமனே உட்கார்ந்தே இருப்பது மரணத்திற்கு விரைந்த அழைப்பாகும்.

இருபாலான அவர்களில் பலர் நாற்காலியில் அல்லது சாய்வு நாற்காலியில் அவித்த உருளைக்கிழங்குபோல் உட்கார்ந்து இருப்பது இதயத்தின் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட வழி வகுக்கக் கூடும் என்கின்றனர் இதய நிபுணர்கள்.

வீட்டுக்குள்ளேயாவது விட்டு விட்டு நடந்து கொண்டு இருக்கும் நடைப்பயிற்சி நல்லதும் கூட!

எவ்வளவு தூரம் உடற்பயிற்சி செய்தோம்? எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி, அமர்ந்து எழுதுதல், பேசுதல் என்பதை அன்றாடம் ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்தல் நல்லது என்பது மருத்துவர்கள் கருத்தாகும்.

மற்றொரு முக்கிய காரணம் செயல்களைக் குறைத்துக் கொள்ளாமல் - முடிந்த வரை சுறு சுறுப்புடன் அன்றாட வாழ்க்கையில் சோம் பலுக்கு இடம் தராமல் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுதல் வயது நீட்சிக்கும், ஆரோக்கிய வாழ்வுக்கும் பெரிதும் உரமிட்ட தாகவே அமைந்து மகிழ்ச்சியைப் பெருக்கும்!

எல்லாவற்றையும் விட மேலான சக்தி வாய்ந்த மருந்து எது தெரியுமா? நெருக்கமான நல்ல நட்பு வட்டம்! அவர்களுடன் கலகலப்புடன் பழகி வர வேண்டும். கருத்துப் பரிமாற்றம், உரையாடலை உறைவிடமாகவே மாற்றிடுவது, அடிக்கடி பயணம் செய்து உயிருக்குயிரான நண்பர்களுடன் உலா வருதல் முதல் உயிர்ப் பிரச்சினைகள் வரை மனந்திறந்து விவாதிப்பது,  நம் நீண்ட ஆயுளுக்கு உதவி - வளர்க்கவும் செய்யும்.

காது கொடுங்கள்; காசு கொடுக்கிறார்களோ இல்லையோ  அவர்களுக்காக உங்கள் காது களைக் கொடுங்கள் - "கூறியது கூறல் குற்றம்" என்று கூடப் பார்க்காதீர்கள். சுற்றம் போன்ற நட்பு வட்டம் பின்னால் குறுகிவிடும்!

-  விடுதலை நாளேடு, 16.11.19

வெள்ளி, 22 நவம்பர், 2019

நூற்றாண்டில் வாழும் மனிதநேயர்கள்! (1)

நம்மை பிறர் வாழ்த்தும் போதெல்லாம் நூறாண்டு வாழ்க என வாழ்த்துவது வழமையாகும்!

தந்தை பெரியார் அவர்களுக்கு 'வாழ்த்திலும்' நம்பிக்கை இல்லை -  'வசவிலும்' வருத்தமில்லை - காரணம் அவர் ஒரு முழுப் பகுத்தறிவுவாதி அல்லவா?

அப்புறம் வேடிக்கையாக ஒன்று சொல்வார் - கூட்டங்களில்!

"வாழ்த்தினிங்க, ரொம்ப நன்றிங்க. ஆனால் நீண்ட காலம் வாழ்வது என்பது -  அப்படி முதுமையில் வாழ்வது எவ்வளவு கடினமான அனுபவம் என்பது வாழும் எங்களுக்கு அல்லவா அந்தக் கஷ்டம் தெரியும்!

உங்களுக்கெல்லாம் இரண்டு கால்கள், எனக்கோ ஆறு கால்கள்! என்ன ஆச்சரியப்படுகிறீர்கள்? என்னை ஒரு பக்கத்தில் பிடிப்பவருக்கு இரண்டு கால், எனக்கு இரண்டு கால், மறுபுறத்தில் என்னைத் தாங்கிப் பிடிப்பவருக்கு இரண்டு கால்  - ஆக ஆறு கால் தயவில்தானே நான் அனுதினமும் செயல்பட்டு எனது பிரச்சாரத்தை நடத்தவேண்டியுள்ளது?

நூறாண்டு வாழ்தலை நமது யுகத்தில் அதிசயமான சாதனை என்றே கொண்டாட முடியாது. காரணம் - இந்தியாவில் சராசரியான வயதே  ஆணுக்கு 78, பெண்ணுக்கு 70அய் நெருங்கி விட்டது.

அண்மையில் கல்வித்துறையில் நீண்ட கால இயக்குநராகவும் - பிறகு அண்ணாமலை, மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும் இருந்து, கல்வி வள்ளல் நெ.து. சுந்தரவடிவேல் பாரம்பரியத்தில் பூத்துக் குலுங்கி காய்த்துக் கனியான டாக்டர் எஸ்.வி. சிட்டிபாபு அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர், எத்தகைய சரித்திர சாதனை செய்தவர்!

தலைசிறந்த ஆற்றல் வாய்ந்த பேச்சாளர்  (Orator) ஆங்கிலத்திலும், தமிழிலும் வரலாற்றுப் புலமையாளர்!

 

அவரது நூற்றாண்டு விழா சென்ற வாரம் 7.11.2019 இல் அவரது இல்லத்தில் எளிமையாக  நடைபெற்ற போது நேரில் சென்று அவர்களை வாழ்த்தினோம்; வாழ்த்தும் பெற்றோம்.

என்னே தெளிவான சிந்தனை - அவருக்கு

அறிவார்ந்த பேச்சு.

அன்பொழுக பண்பு மிகுந்த உபசரிப்பு, அவரது குடும்பம் ஒரு அருமையான கல்விப் பல்கலைக் கழகம்!

அதுபோலவே நமது முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அவலூர்பேட்டை (திருவண்ணா மலை - பழைய வட ஆர்க்காடு மாவட்டம்)

வீ.மு. வேலு. பெங்களூருவில்  வசிக்கும் அவரை நான் "இளைஞரணித் தலைவர்" என்றே வேடிக்கை யாக அழைப்பேன். இன்றும் ஓடியாடி, 32 வயது இளைஞனைப் போல துடிப்புடன் இயக்கத் தோழர் களுடனும், நண்பர்களுடன் கலந்துறவாடும் லட்சியத் தோழராகத் தொண்டராகவே செயல்பட்டு வருகிறார். அவரது நூற்றாண்டு விழா கருநாடக மாநில திராவிடர் கழகம் சார்பில் வரும் டிசம்பர் 29 மாலை நடத்திட  ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. (உள்ளாட்சித் தேர்தல் என்ற கரடி குறுக்கே வருகிறதோ என்னவோ!) என்றாலும் விழா அன்றோ,  மறுநாளோ வெகு சிறப்புடன் நடைபெறும். மகிழ்ச்சி யுடன் நாம் குடும்பத்துடன் கலந்து கொள்ள விருக்கிறோம்!

உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் வெங்கடாச்சலய்யா (அவர் "உயர்ஜாதிக்காரர்"தான்) பெங்களூருவில் ஒரு சட்டக் கருத்தரங்கில் கலந்து கொண்டபோது, "கடவுள் மறுப் பாளர்கள் - நாத்திகர்கள் - இவ்வளவு அதிகமான வயதிலும் வாழ்கிறார்கள்; அதிலும் வெகு சுறுசுறுப் புடனும் வாழ்கிறார்கள் - இதன் ரகசியம் என்ன?" என்று கேட்டார்.

நானும், பொருளாளர் குமரேசனும் சொன்னோம்-   "பகுத்தறிவாளர்களும், நாத்திகர்களும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்கள். நினைத்ததை ஒளிக்காமல் பேசி - பட்டென்று உண்மைகளைக் கூறுபவர்கள்.

மனதில் மாசில்லாதவர்கள், கையில் காசில்லாத வர்கள். ஆனாலும் கொள்கை அவர்களை நேர்மை யுடன் வாழ வைக்கிறது" என்றோம். வியந்தார், ஒப்புக் கொண்டார்!

(நாளை நீளும்)

-  விடுதலை நாளேடு 15 11 19

வியாழன், 21 நவம்பர், 2019

நல்ல தூக்கத்திற்கான அய்ந்து சீலங்கள்! (2)

அறையின் வெப்பம் 68 டிகிரி பாரன்ஹீட், 18 டிகிரி செல்ஷியஸ் ஆக இருப்பது மிகவும் நல்லது.

நான்காவதாக,

படுக்கப் போகுமுன் மது வகை களையோ  - காபி போன்ற பானங் களையோ குடிப்பதை அறவே நிறுத்தி விடல் மிகவும் அவசியம்.

அவைகளால் தூக்கம் வரும் சில வேளைகளில் என்றாலும்கூட, அதனால் எவ்வித நிரந்தரப் பயனும் கிடையாது. அந்தப் பழக்கம் வெகுவாக மூளையைப் பாதிக்கக் கூடும். அப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு நாளடைவில் அது ஒரு போதைப் பழக்கம் போல (Addiction) மாறும் அபாயமும் உண்டு.

சாதாரணமாக காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் உள்ள பலருக்கும் கூட, காலை மலங் கழிக்கும் முன் காபி குடித்தால், கழிப்பறைக் குச்சென்று மலம் கழிக்க முடியும் என்ற மனப் பழக்கம் அதனால் அமைந்துவிடக் கூடும்; அது விரும்பத்தக்கதா? அது இல்லாமலேயே அதாவது காபி குடிக்காமலேயே கூட கழிப்பறைக்குச் சென்று மலம் கழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி பெறக்கூடும். இப்படி மது வகைகளை தூங்குவதற்கு முன் குடிப்பது, நாளடைவில் ஒரு போதைப் பழக்கமாக மாறுவது மட்டுமின்றி அவைகளில் உள்ள ரசாயனப் பொருள்கள் மூளையைத் தாக்கி ஒழுங்கான தூக்கத்திற்கும் இடையூறு செய்து, உடல் நலத் தைச் சீர்கேடடையச் செய்து விடுகின்றன!

எனவே கூடுமானவரை, மது, காபி முதலிய பானங்களை தூங்கப் போகுமுன் குடிப்பதைத்தவிர்த்து விடுங்கள். அதுவே நல்ல பழக்கம் அதற்குப் பதிலாக தூய நீரையோ, வெந் நீரையோகூட குடிக்கலாம்.

[சாப்பிட்டவுடனேயே படுக்கைக்குச் சென்று தூங்க ஆரம்பிப்பது அவ்வளவு விரும்பத்தக்கதல்ல - செரிமானக் கண்ணோட்டத்தில்! பலருக்கு நெஞ்செரிச்சல் (GERD) வருவதற்கு  இதன் மூலம் வாய்ப்பு ஏற்படும். உணவுக் குழாய்களின் வழியே கீழே - உள்ளே சென்று செரிமானம் ஆக வேண் டிய உணவு - மேல் நோக்கி வந்து ஒருவித எரிச்சலை திடீரென்று உண்டாக்குவதுதான் "GERD" ஆகும். அதைத் தவிர்க்க குறைந்தபட்சம் அரை மணி, முக்கால் மணி நேரம் அமர்ந்து படியுங்கள் அல்லது செய்தி  அறிதல் மற்ற ஏதாவது வேலையில் ஈடுபடலாம்.]

அய்ந்தாவதாக,

படுக்கையில் தூக்கம் வராதபோது விழித்துக் கொண்டு படுத்திருக்காதீர்கள்; மாறாக, அடுத்த அறைக்குச் சென்று உங்களுக்கு விருப்பமான புத்தகம் ஏதாவது ஒன்றைப் படிக்கத் துவங்கி விடுங்கள்; அந்த அறையின் வெளிச்சம்கூட மிக அதிகமான ஒளிவீச்சு இல்லாமல் படிப்பதற்குரிய அளவு தேவையான வெளிச்சம் உடையதாக இருப்பது மிகவும் விரும்பத் தக்கது; அந்தப்படி படித்துக் கொண்ட இருந்தால் ஒரு 15 மணித்துளிகள், அரை மணி நேரத்தில் மீண்டும் தூக்கம் உங்கள் கண்களைத் தழுவக் கூடும். அதை எதிர்த்துப் படிப்பதைத் தொடராமல், தூக்கத்திடம் சரண் அடைந்து விடுங்கள். அது ஆழ்ந்த தூக்க மாகவும்கூட பல நேரங்களில் அமையக்கூடும்; உடல் வலிவும் பொலிவும் பெற, மன அமைதி, புத்துணர்வு ஏற்பட இத்தகைய தூக்கம் மிகவும் நமக்குப் பயன்படும்.

உணவு, மருந்து, உடற்பயிற்சி (நடைப்பயிற்சி) என்ற பலவும் எப்படி நமது உடல் நலத்திற்கு உதவுபவைகளோ; அதே அளவுக்கு நேரத் தூக்கம் - ஒழுங்கு முறை தூக்கம் நம்மை வாழ வைப்ப தோடு, பிற்காலத்தில் மறதி நோய் தாக்குதலி லிருந்தும் நம்மைக் காப்பாற்றக் கூடும். மறவாதீர்!

- விடுதலை நாளேடு 14 11 19

நல்ல தூக்கத்திற்கான அய்ந்து சீலங்கள்!

மாத்யூ வாக்கர் என்ற பேராசிரியர் "நல்ல தூக்கம்" பற்றி ஆய்வு செய்து அருமையான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.! "நாம் ஏன் தூங்கு கிறோம்?" என்ற தலைப்புள்ள நூல்! கலிபோர் னியா - பெர்க்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்.

இவர் நரம்பியல் தத்துவப் பேராசிரியர், அவர் கூறுவது ஒரு சிறு 'வீடியோ' - காணொலி காட்சி யாக வந்துள்ளதை டாக்டர் எம்.எஸ்.இராமச் சந்திரன் அவர்கள் எனக்கு அனுப்பினார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதில் மிக்க மகிழ்ச்சி.

முதலாவது,

"குறிப்பிட்ட நேரத்திற்குப் படுக்கைக்குச் சென்று உறங்கத்துவங்கும் பழக்கத்தைப் ஏற் படுத்திக் கொள்ளுங்கள். சில நாட்களுக்கு அப்படிப் பழகி விட்டால் தானே நமது உடம்பின் கடிகார முள்ளே உங்களை அதற்குச் சரியாக பழக்கி விடும்.

இரவு 10.30 மணி அல்லது 11 மணி  தூக்கத்திற்குச் செல்லும் நேரம் என்று ஒழுங்குப் படுத்திக் கொள்ளுங்கள்.

அதே போல் விழித்தெழும் நேரமும் குறிப்பிட்ட நேரமாகவே அமைதலும் மிகவும் அவசியம் ஆகும். காலை 5.30 மணி, 6 மணி அல்லது 7 மணி என்றால் அந்த முறையைத் தவறாது கடைப்பிடிக்கும் பழக்கம் வரவேண்டும்.

இரவு நேரம் எவ்வளவு தள்ளிக்கூட படுக் கைக்குப் போய் தூங்கினாலும் கூட குறிப்பிட்ட நேரத்தில் எழுவது என்ற முறையை நாம் எப்போதும் உருவாக்கி கொள்ளுதல் நல்லது.

மூளைக்குப் பயன்படும் "மெலட்டானின்" (melatonin) என்ற அந்த சத்து பாதிப்பின்றி கிடைத்திட அது வெகுவாக வழிவகுக்கும்" என்கிறார் அந்தப் பேராசிரியர்!

இதில் சமரசமே செய்து கொள்வது கூடாது. அது வார நாட்களானாலும் சரி, அல்லது விடு முறை நாளாக இருந்தாலும் சரி ஒரே சீரான நேர முறைதான் உறங்கப்போவதிலும், விழித்தெழுவ திலும் கூட கடைப்பிடிக்கப்படல் வேண்டும். 8 மணி நேர தூக்கமும், சீர்மையும் முக்கியம்.

இரண்டாவது,

"உங்களின் படுக்கை அறையின் தட்ப வெட்பச்சூழல் மிகவும் சரியானதாக இருப்பது நல்ல தூக்கத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும்!. இருட்டு மிகவும் தேவை - இருட்டில் தூங்குவது தான் "மெலட்டானின்" சத்து மூளையை அடைந்து சுறுசுறுப்பாக்கி களைப்பு நீங்க உதவிடக்கூடும்.

எனவே சரியான அறையின் வெப்பம் என்பதும் நல்லத்தூக்கத்தைக் கொடுக்கும் சரியான வாய்ப்பாகும். வெளிச்சத்தில் தூங்கா தீர்கள்! விளக்குகளை மங்கலாக்குங்கள் - நிறைய வெளிச்சம் நமக்குக் கிடைக்க வேண்டிய "மெலட்டானை" பறித்து விடும்.

மிகவும் சூடான - மிதச் சூடான (Warm) தட்பவெட்பமும் கூடாது; மிகவும் குளிர்ந்த அறையிலும் உறங்கக்கூடாது."- நடுநிலை விரும்பத்தக்கது.

பல நண்பர்கள் தங்கள் படுக்கை அறையின் ஏசியை (A/C) மேலே திருகி விட்டு பிறகு கம்பளிப் போர்வையைத் தேடுகிறார்கள்!

எனக்கே முதல் வகுப்பு ஏ.சி. "பெரும் தண்டனை" போல பலநேரங்களில் தூக்கத்தை விரட்டுவதற்கே பயன்படுகிறது.

மூன்றாவதாக,

படுக்கப் போகுமுன் தொலைக்காட்சிப் பார்ப்பதை, திரைப்படங்கள் பார்ப்பது (Home Theatre - என்ற வீட்டுத்திரையரங்குகள் கூட வீடுகளில் உள்ளது,  ஒரு மணிநேரம் முன்பே-  படுப்பதற்கு முன்பே அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்.

ஏதாவது ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து விட்டு பிறகு தூங்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். அரசியல் ஏடுகளைத் தவிர்ப்பது நல்லது.

(தொடரும்)

-  விடுதலை நாளேடு 13 11 19

பில்கேட்சின் கூற்று மெய்யா? பொய்யா?

இந்திய நாட்டு மக்களாகிய நம் மக்களைப் பற்றிய பிரபல தொழிலதிபரும் முதன்மைப் பணக்காரர்களில் ஒருவரும், சிறந்த கொடையாளி யுமாகிய மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ் அவர்கள் என்ன அபிப்பிராயம் வைத்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? தயவு செய்து இதைப் படியுங்கள் - கற்க முடிந்தால் கற்று அதன்படி நிற்க முயலுங்கள்.

"உலகிலேயே இந்தியா மிகப் பெரிய பணக்கார நாடு (ஏழை நாடல்ல..!)

இந்தியாவில் உள்ள கோவில்கள், தேவால யங்கள், மசூதிகள் இவைகளில் உள்ள செல் வங்களை விற்றால் அது உலகின் மிகப் பெரிய (பொருளாதார) வல்லரசாக Super Power ஆகி விட முடியும்!"

இதில் மிகவும் சிரிப்புக்கிடமான ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்திய மக்கள் தாங்கள் வேலைக்காரர்களைப் போல இருக் கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள மறுப்பதே யாகும்.

அதன் காரணமாகவே அங்கே (இந்தியாவில்) ஏராளமான விவசாயிகள் தங்கள் வறுமைக்கும் துரஷ்டி நிலைக்குமான நிலைக்காக கடவுளைச் சாடி தற்கொலை செய்து  கொள்கிறார்கள்.

நாட்டில் வாழும் ஏழைகள் - ஏழ்மைக்கு உண்மையான காரணமான குற்றவாளிகள் யார் என்பதை சரி வர அடையாளம் காணத் தவறு கின்றனர்!

தங்களுக்கு வேலை கிட்டாமைக்கு உண் மையான காரணஸ்தர்கள், மக்கள், யார் எவர் என்பதை இளைஞர்கள் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை!

கடவுளுக்கு உங்களது தலைமுடி காணிக்கை தருவதன் மூலமோ, பணத்தை உண்டியலில் போடுவதாலேயோ "புண்ணியத்தைத் தேடிக் கொள்ளலாம்" என்று கூற முடியுமா?

தேங்காய் உடைத்தும், முடி, பணம் இவை களை கடவுள், கடவுளச்சிகளுக்கு காணிக்கை யாகத் தருவதால் சுபிட்சம் வந்து விடும் உங்கள் நாட்டுக்கு என்று நம்புகிறீர்களா?

உண்மையில் (மயிர்) முடி காணிக்கையும், பணமும் தருவது ஒரு தொழிலாகவே மாறி விட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா?

தங்கம், வெள்ளி....?? இவைகளைக் காணிக் கையாகக் கொடுப்பதனால் ஏற்பட்ட பலன் தான் என்ன?

அவைகள் ஏலம் விடப்படுகின்றன.

இதனால் எந்த தர்ம - அறப்பணியாகி, எந்த ஏழைகள் - வறுமையாளர்கள் பயன் பெறு கிறார்கள்?

இத்தகைய "தர்மங்களால்" யாருக்கு என்ன பயன்?

ஆக்க ரீதியாகச் சிந்தித்தோமானால் உருப் படியாக எதைச் செய்ய வேண்டும்?

(1) விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குங்கள்.

(2) ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க முயலுங்கள். அவர்களது திருமணத்திற்கு நிதி உதவி செய்யுங்கள்.

(3) "அனாதைக் குழந்தைகளை" தத்து எடுத்து வளர்த்து ஆளாக்குங்கள்.

(4) பசித்த வாய்க்கு - வயிற்றுக்கு சோறிடுங்கள்.

(5) மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிட முன் வாருங்கள்.

(6) கிராமத்துப் பள்ளிக் கூடங்களுக்கு நூலக உதவி செய்யுங்கள் - நூலகங்கள் அமைப்பது, ஏற்கெனவே உள்ள நூலகங்களுக்கு நூல்களை  தாருங்கள்.

(7) முதியோர் இல்லங்களுக்கு உதவுங்கள்.

(8) கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு மேற்கூரை இல்லை; ஆனால், கோயில்களுக்கு மார்பிள் தரைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன!

(9) 200 ரூபாய் கொடுப்பதற்கு ஆயிரம் கேள்விகளை (கிராமப்பள்ளி நன்கொடைக்காக) கேட்கும் நபர்கள், கோயில்களுக்கு எவ்வித மறுப்பும் இன்றி வாரிவாரி வழங்குகிறார்கள்!

இப்படிப்பட்ட நாடு எப்படி, 'சூப்பர் பவர்' உண்மைப் பொருளில் வல்லரசு நாடாக ஆகிட முடியுமா?

(10) 'விவசாய நாடு' என்று அழைத்துக் கொள்ளும் நாட்டில் விவசாயிகள்தற்கொலைகள் நடக்கலாமா?

எல்லா மாநிலங்களிலும் விவசாயிகள் தற்கொலைகள் மலிந்து வருவது நல்லதா?

இதைப் படிப்பதோடு நிறுத்தி விடாதீர்! பரப்பி சிந்தித்து செயலாற்றி நாட்டையும், சமுதாயத் தையும் மாற்றிட உங்கள் பங்களிப்பைச் செய் யுங்கள்.

படித்தேன் - கண்களில் நீர் கசிந்தோடியது.  இதைத் தானே தந்தை பெரியார் ஒரு வாக்கியத்தில் சொன்னார்.

"கடவுளை மற

மனிதனை நினை"

புரிகிறதா? பெரியாரின் தேவை!

(இது இணையத்தில் ஒரு முக்கிய நண்பரால் அனுப்பப்பட்ட தகவலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது).

-  விடுதலை நாளேடு 12 11 19

வியாழன், 14 நவம்பர், 2019

நமது உண்மையான "குடியிருப்பு" - எது?

நம்மில் பலரும் ஓய்வறியாமல் உழைக் கிறோம்... உழைக்கிறோம்.. உழைத்துக் கொண்டே இருக்கிறோம்.

பல படித்தவர்களும், பல்வேறு பட்டறி வாளர்களும் 'பரதேசிகளாக' - பல தேசங் களுக் கும் சென்று - "திரை கடலோடியும் திரவியம் தேடுகிறோம்!"

இங்கே, இங்கே இப்போது நம் நாட்டில் 'அரசியல்' ஒரு நல்ல செழிப்பான செல்வத் தொழிலாகி வளர்ந்தோங்கி வருகின்றது.

ஊழல்கள் என்பவை, லஞ்சலாவண்யங்கள் என்பவைகளின் தார்மீக மீறல்கள் பற்றி எவரும் கண்டு கொள்வதில்லை.

குறுக்கு வழியில் கொள்ளையடித்து, வஞ்சித்து, பொய் சொல்லி, மோசடி மன்னராகியுமே - பணத்தைச் சேர்த்து விடு; பிறகு உன்னைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம்  - முகமன் கூறுவதற்கும் சரி - முந்தானை விரிப்பதற்கும் சரி எல்லாவற் றிற்கும் தயாராக இருக்கும் - (பிறகு அற்ற குளம் தேடும்) "அறுநீர்ப் பறவைகள்" கூட்டம், "காக்காய் - கரடிகள்" கூட்டத்திற்குப் பஞ்சமே இருக்காது!

கொள்ளையால் குவித்த 'குபேர' செல்வத்தை பாதுகாப்பாய் வைக்கத் தெரியாததால், பலருக்கும் "தான தர்மம், கோவில் கும்பாபிஷேகம்" பல செய்து "தர்மப் பிரபு கனவான்" பட்டத்தைச் சுமக்கும் சுகபோகிகள் பலரும் நம்  சமூகத்தில் மலிவாகக் காணப்படும் காட்சிகள்!

இந்த அறவிலை வணிகர்களின் நன் கொடைகள் நானிலம் முழுக்க விளம்பரப் படுத்திய வெளிச்சத்தில் பிறர் கண்கள் கூசு கின்றனவே தவிர  அவர்கள் கண்களோ கூசுவ தில்லை - காரணம் அவர்கள் பார்வை பாழ் பட்டுப் பல நாள் ஆகிறது என்ற உண்மை அருகில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த அதிசயம் ஆகும்!

இப்படி மாய்ந்து மாய்ந்து, 'ஊரடித்து உலையில்,  கொட்டும் உத்தமப் பிரபுக்கள் - பிரபுணிகள்' எதைத்தான் அனுபவிக்கின்றனர்  உண்மையில் என்ற கேள்விக்கு விடை கிடைப்பது அரிது! அரிது!!

தந்தை பெரியார் என்ற மானிட நேயர் தான் கவலையோடு சேர்த்த ஓட்டைக் காலணா முதல் ஏலம் விட்ட பொருள் எல்லாம் பெற்ற மக்களுக்கோ - சொந்த பந்தங்களுக்கு அல்ல - விட்டு விட்டு -  மாமனிதராய் எவரும் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்துக்கு உயர்ந்தாரே அவரேகூட 'நுகர்வு' பற்றி சொல்லும்போது ஒரு முறை "இப்படி குப்பை - செத்தை பொறுக்கு வதுபோல் பொறுக்கிச் சேர்த்து வைக்கும் நானா இதில் குளிர் காயப் போகிறேன்? மக்களாகிய மற்றவர்களும் தானே பயன்படப் போகிறார்கள்" என்றார்!

எவ்வளவு பெரிய மாளிகை அது! அம்பானி பங்களாவாக இருந்தாலும், பில்கேட்சின் பற்பல வசதிகளுடன் கூடிய வளமனை இல்லம் ஆனாலும் படுத்துறங்குவதற்குப் பயன்படுத்து வதற்குமான சரியான அளவுள்ள இருப்பிடம் அவரது மனம் தானே! அதுதான் நம் அனைவரது நிரந்தரக் குடியிருப்பு - அந்தக் குடியிருப்பிலிருந்து நாம் மரணத்தின்போதுதானே வெளியேறு கிறோம் - இல்லையா?

பின் இதற்கேன் இத்தனை ஆடம்பரம்! பகட்டான டம்பாச்சாரித்தன வெளிச்சங்கள்? விளைச்சல்கள்?

மனம் - அதற்கு நாம் வாடகை தருவதில்லை. முனிசிபல் வரி கட்டுவதில்லை. அது எல்லையற்ற பரந்துபட்ட..  விசால இடம். நாமே விரும்பினால் அதை எவ்வளவானாலும் சுருக்கிச் சுருக்கி சுருண்டுவிடச் செய்ய முடியுமே? அப்படியும் வாழ்ந்து அல்லது வாழ்ந்ததாகச் சொல்லி நினைத்து மறையலாம்! இல்லையா?

எவ்வளவு அழகுபடிந்த அறைகள் - அலங்கரிக்கப்பட்ட சிங்கார வரவேற்பறைகள் எல்லாவற்றையும்விட, மனதை தூய்மையாக வைத்திருக்கப் பழகுங்கள். அதில் குப்பைக் கூளத்தைக் கொட்டாதீர்கள்;

விஷத்தை வீணே தெளிக்காதீர்!

மனிதநேய மகத்தான ஜீவநதியை வற்றாது ஓடவிடுங்கள்! ஒத்தறிவு  'Empathy'க்கு முன் னுரிமை தாருங்கள்.!!

கவலைகளைக் குப்பை கூடை அங்கே; அதில் அடைத்துப் போட்டு மூடுங்கள்!

எதிர்பார்ப்புக்களை அகலப்படுத்திக் கொள்ளாது வாய்ப்பிற்கேற்ப, வசதிக்கேற்ப, தொண்டூழியத்திற்குரிய இடமே நமது நல்ல தொண்டிற் சிறந்ததொரு தூய்மைச் சூழல் அந்த குடியிருப்பின் மனமாக மட்டுமில்லாமல் -  மணமாக நறுமணமாக அமையட்டும்.

நல்ல மனங்களே நமது உயர்ந்த சிறந்த, நிரந்தர குடியிருப்பு. அடுத்தவர்களுக்கு அன்பால், பாசத்தால் அதற்குள் அழைத்து உலவ விடுங்கள்.

மகிழ்ச்சி ஊற்றுக்கள் உங்களை எப்போதும் உல்லாசப்படுத்தும் என்பது உறுதி! உறுதி!! உறுதி!!!

பள்ளங்கள் ஏற்படாத வகையில் பழுது பார்ப்பதற்கும் தவறாதீர்கள்!

- விடுதலை நாளேடு 11 11 19

செவ்வாய், 12 நவம்பர், 2019

நெல்சன் மண்டேலாவின் சிறைக்கடித இலக்கியம் (2)

தென்னாப்பிரிக்க கறுப்பு இன மக்களின் சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும் போராடிய African National Congress (ANC) என்ற மிகப் பெரிய அரசியல் கட்சிக்குத் தலைமை தாங்கியும், போராட்ட களத்தில் இறுதி வரை உறுதியோடு நின்று, வெஞ்சிறைக் கொடுமை களை வென்றெடுத்த வெற்றி வீரர் நெல்சன் மண்டேலா அவர்கள், தென்னாப்பிரிக்க நிறவெறியை, அதன் முடியைக் கழற்றி அதுவே செய்யும் அளவுக்குசக்தி வாய்ந்த மனித உரிமைப் போராட்டத்தையும் நடத்தி, அதன்பிறகு கறுப்பின உழைப்பாளர்களான மண்ணின் மைந்தர்களுக்குத் தனி உரிமை படைத்த சுதந்திர ஆட்சியையும், அதற்கென ஒரு தனி அரச மைப்புச் சட்டத்தையும் உருவாக்கி தன் வாழ்நாளில் வெற்றி இலக்கை அடைந்த உலகம் பாராட்டி வியக்கும் வண்ணம் சாதனை புரிந்த சரித்திரம் படைத்தவர்.

'Long Walk to Freedom' என்ற அவரது சுயசரிதை இளைஞர்கள் - மாணவர்கள் கற்க வேண்டிய அருமையான இலட்சிய நூலாகும்!

பொதுவாக பல ஆண்டுகள் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் வதிந்த சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் பலரும் சிறையில் இருந்து தத்தம் உறவுகளுக்கோ, மிக நெருங்கிய நண்பர்களுக்கோ எழுதும் கடிதம் வரலாற்றுக் கருவூலங்களாகும்.

தனது பொது வாழ்வில் ஏறத்தாழ 8-10 ஆண்டுகள் சிறையில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் செலவழித்த பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் தனது மகள் - பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவியான இந்திரா பிரியதர்சினி அவர்களுக்கு எழுதிய கடிதங்கள் பிரபலமானவை. அவை 'Letters of a Father to his Daughter' என்ற தலைப்பில்  ஓர் ஆங்கில நூலாகவே வந்துள்ளது. பல பதிப்புகள் - பல மொழிகளிலும் மொழி பெயர்க் கப்பட்டு வெளியே வந்துள்ளன!

எளிய ஆங்கிலத்தில், ஒரு மாணவிக்கு உலக வரலாற்றை - நாட்டு வரலாற்றைக் கற்றுக் கொடுக்கும் ஒரு ஆசிரியராகவும், அதே நேரத்தில் பாசமுள்ள தந்தையாகவும் தன்னை நிலை நிறுத்தி எழுதியுள்ள அக்கடிதங்கள் அவர் மகளுக்கு மட்டுமல்ல; நாட்டு மக்களில் இளையர் களாக உள்ள பலருக்கும் பாடம் போல் பயன் தரும் அரிய இலக்கியம் ஆகும்!

அதுபோலவே மாவீரன் பகத்சிங் சிறைச் சாலையிலிருந்து புனைப்பெயரில் எழுதி அது வங்கத்திலிருந்து ஆங்கில நாளேட்டிலும், ஹிந்தி, வங்காள ஏடுகளிலும் வெளிவந்து அண்மையில் 'புரட்சி' - 'Ingulab' என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளது!

27வயதிலேயே புரட்சிக்காரராகி தூக்கு மேடையை முத்தமிட்ட ஒப்பற்ற மாவீரன் பகத்சிங் "நான் ஏன் நாத்திகன் ஆனேன்?" என்ற அரிய நூலை சிறையிலிருந்து, துணிவையும், தியாக சுவாசத்தையும் பெற அதுவே ஒரே வழி - உண்மை வழி என்பதை வலியுறுத்தி எழுதினார்! "புரட்சி என்பது (இன்குலாப்)  வெடி குண்டு கலாச்சாரம் அல்ல; துப்பாக்கி (Pistol) கலாச்சாரமும் அல்ல. புரட்சியின் பொருள் என்ன தெரியுமா? உள்ள நிலைமைகளை - அவைகள் அப்பட்டமான அநீதியின் வெளிப் பாடான நிலைமைகளாக இருப்பதால் - மாற்றி அமைப்பது என்பதேயாகும்!

தந்தை பெரியார் ஒரு முறை அழகான விளக்கம் சொன்னார்:

"புரட்டிப் போடுதல் புரட்சியின் வேலையும், விளைவும்" என்று!

எனவே புரட்சி என்றால் வன்முறையாகத் தான் இருக்க வேண்டும் என்பதோ, ரத்த ஆறு ஓட வேண்டும் என்பதோ அல்ல; அல்லவே அல்ல. அறிவுப் புரட்சி - ஆயுதம் ஏந்தாமல்கூட அறிவுப் புரட்சி - அது அந்த சந்தர்ப்பங்களின் அவசியத்தைப் பொறுத்தது!

"ஆறறிவுள்ள மனிதர்களுடன் போராடும் போது - அதை அவன் பயன்படுத்திட ஆயத்தப் படுத்துவோம்; பக்குவப்படுத்துவோம்" என்று தந்தைபெரியார் கருதியதுபோல, செய்தது போல "மனப்போர்" (Battle was fought in minds of the people) மக்கள் மனங்களுடன் போர் செய்து, அறிவுப் புரட்சி அறிவாயுதம் கொண்டே செய்யலாம்.

ஆனால் 'மிருகங்களுடன்' போராடும் போது ஆயுதம் ஏந்தித்தானே மனிதர்கள் வேட்டை யிடச் செல்ல வேண்டியுள்ளது. வேறு வழி இல்லை.

ஆயுதம் ஏந்தி நெல்சன் மண்டேலா கட்சியினர் தென்னாப்பிரிக்க  வெள்ளை (நிறத்திமிர்) அரசைக் கவிழ்க்கச் சதி செய்தனர் என்று குற்றம் சாற்றப்பட்ட நெல்சன் மண்டேலா ரோபின் தீவு என்ற ஒரு 'ஆள் அரவம்' அற்ற ஒரு தீவுக்குக் கடத்தப்பட்ட நிலையில்தான் இந்தக் கடிதங்கள் அவருக்கு ஒரு கொதி நிலை உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைந்தன.

அதில் காதல், வீரம், அன்பு, பாசம், உரிமை, உறுதி, லட்சியத்தில் அயராமை எல்லாம் பளிச்சிடுகின்றன!

வானவெளியில் தோன்றும் வான வில்லின் நிறம்போல பலவகை உள்ளன.

அடுத்துக் காண்போம்.

- விடுதலை நாளேடு 5 11 19

நெல்சன் மண்டேலாவின் சிறைக்கடித இலக்கியம்

அண்மையில் மேற்கொண்ட அமெரிக்கச் சுற்றுப் பயணத்தின்போது, பாஸ்டன் (Boston) நகரில் பெரியார் விழாவை நிறைவு செய்து அடுத்த நாள் சிகாகோவுக்குப் பயணமானோம். அப்போது 'லோகன்' பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைகளை யெல்லாம் முடித்து நானும் வாழ்விணையர் மோகனா, மகன் அசோக்ராஜ் ஆகியோர், விமானத்திற்குள் செல்ல வேண்டிய 'கேட்' அருகே சென்று அமர்ந்து கொண்டிருந்தோம்.

நான் அவர்களிடம் "வரும் வழியில் (விமான நிலைய தளத்தில்) ஒரு சிறு புத்தகக் கடை இருந்ததைப் பார்த்தேன்; அதைப் பார்த்துவிட்டு திரும்பி வருகிறேன்" என்று கூறியபோது, "பாருங்கள், புத்தகம், எதையும் வாங்காதீர்கள். பெயரை மட்டும் குறித்து வந்தால், நம்மூரிலேயே வாங்கலாம், மூட்டை பாரம் அதிகமாகி விடும்" என்று வழக்கம் போல எச்சரித்து அனுப்பினர்.

நானும் அந்த 20 மணித்துளிகள் அந்த புத்தகக் கடையை ஒரு அலசு அலசி விட்டேன். பெரிதும் புதினங்கள் - சி.டி, DVD இவைதான். நீண்ட நேரம் துருவித் துருவிப் பார்த்த நிலையில் மூலையில் ஒரு நூலைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை!

தென்னாப்பிரிக்க விடுதலை மாவீரர் நெல்சன் மண்டேலா அவர்கள் 27 ஆண்டுகள் தனித் தீவில், தனிச் சிறையில் தனியே இருந்த போது எழுதிய பல வகை கடிதங்களில் முக்கிய மானவை களின் அரிய தொகுப்பு அந்நூல்.

இது எனக்குக் கிடைத்த ஓர் அற்புதப் புதையல் - விடுவேனா? ஏற்கெனவே நெல்சன் மண்டேலாவின் அனைத்து நூல்களையும் வாங்கி, படித்து, சேகரித்து வைத்துள்ள  எனக்கு இது ஒரு புதிய வரவு அல்லவா அது?

உடனே 18 யு.எஸ். டாலர் விலைக்கு  வாங்கி விட்டேன். ஒரே ஒரு பிரதிதான், அங்கே எங்கோ ஒரு மூலையில் இருந்தது.

2 மணி நேர பயணத்தின் களைப்பைப் போக்க அருமையான இளைப்பாறுதல் அல்லவா?

அமெரிக்க விமானங்களில் உள்நாட்டில் எத்தனை மணி ஆனாலும் எதுவும் இலவசம் கிடையாது! காசு கொடுத்துதான் வாங்க வேண்டும். குடிக்க தண்ணீர் தருவார்கள். ஒரு பழரசம் சில விமானங்களில் மட்டும். தேவை யானவை காசு கொடுத்தே வாங்கித்தான் உண்ணவோ, குடிக்கவோ வேண்டும்!

எனது வாழ்விணையரின் வாய் முணு முணுத்தது. 'புத்தகம் வாங்காமல் உங்கள் அப்பா வர மாட்டார் என்று நான் சொன்னது சரியாகப் போய் விட்டது பார்த்தாயா?' என்றார். அசோக்ராஜ் சிரித்துக் கொண்டார்!

அங்கே பிரித்து படிக்கத் துவங்கினேன். சிகாகோ O'Hare என்ற பிரபல சுறுசுறுப்புக்குப் பெயர் போன பன்னாட்டு விமான நிலையம் அருகே வந்தபோது, தொடர் வண்டிகள் போல வரிசையாக விமானங்கள் புறப்பாடு ஆனதால் க்யூவில் இருந்தன! அதனால் எனக்கு உடனே இறங்கிட வாய்ப்பில்லை. விமானம் இணைப்புக்கு வரவே மேலும் 30 மணித் துளிகள்ஆயின. நானும் விடாமல் இந்த Prison Letters 'Heart Breaking and Inspiring' என்று நியூயார்க் டைம்ஸ் ஏட்டினால் விமர்சிக்கப்பட்ட இந்நூல் மிக அருமையான பொது வாழ்க்கையில் உள்ளோர் எப்படி மனோ திடத்தை வளர்த்து, நம்பிக்கை இழக்காமல் இலட்சியப் பயணத்தை தொடர்ந்து - தொல்லைகள் ஆயிரம் வரினும் - செய்வதில் தயக்கமோ, பின் வாங்குதலோ கூடாது என்பதை உணர்த்தும் ஒரு அரிய கருவூல மா மருந்துகள் போன்றவை இந்தப் பாடங்கள்.

மேலும்   விரிவாக விளக்குவோம். அடுத்து - ஆயத்தமாகுங்கள்!

பயணக் களைப்பைப் போக்க, பயண தூரத்தை சுருக்க காலத்தின் அளவை எளி தாக்கிப் பறக்க வைக்க புத்தக நண்பன் ஒரு அற்புத வழிமுறை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

- விடுதலை நாளேடு நாலு 11 19

வெள்ளி, 8 நவம்பர், 2019

ஆப்பிள் - உண்ணலும் எண்ணலும்! (2)

அமெரிக்காவில் - 18ஆம் நூற்றாண்டில், 19ஆம் நூற்றாண்டில் விளைந்த ஆப்பிள்கள் பெரிதும் பழங்களாக உண்ணுவதற்குப் பதிலாக குறிப்பாக கிராமப் பகுதிகளில் அதன் தோல் - எப்படி ஒயினும், காபியும், டீயும், பழரசமும், தண்ணீரும் வைக்கப்பட்டு உணவு மேசையில் பயன்படுகிறதோ அதுபோல இதுவும் சுவையான ஒரு அயிட்டமாகவும் பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை மைக்கேல் போலன் என்பவர்  'The Botany of Desire' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்!

அமெரிக்காவில் ஒவ்வொரு பெரிய நகரத்திற்கும் ஒரு புனைப்பெயர் - Nickname (செல்லப் பெயர்) உண்டு.

அதன்படி நியூயார்க் நகரத்தை 'Big Apple' - 'பெரிய ஆப்பிள்' என்று அழைப்பது உண்டு. தனிச் சிறப்பு வாய்ந்த பழம் ஆப்பிள் என்பதால் 'பெரிய ஆப்பிள்'  - ('Big Apple')  என்று அமெரிக்கர்கள் அப்படி அதனை அழைக்கிறார்கள் போலும்! இத்தகவலை நியூயார்க் நகரத்தின் பெரிய பொது நூலகமானது தனது இணையத்தில் கூறுகிறது!

19ஆம் நூற்றாண்டில் ஆப்பிள்களில் 14,000 சிறப்பு வகைகள் (Distinct Apple Varieties) இருந் துள்ளன! ஆனால் இப்போது ரகங்கள் குறைந்து 100 அளவில்  வந்து விட்டனவாம்!

ஒரு ஆப்பிளை ஒரு நாளைக்கு நாம் சாப்பிடும் போது 115 கலோரிகள் நம் உடலுக்குக் கிடைக்கின்றன. 5 கிராம் நார்ச்சத்து (Fiber) ஒவ்வொரு Serving கிடைக்கிறது. அதன் விதைகளைத் தவிர்க்க வேண்டும்.

ஆப்பிள் மேல் தோல் இருக்கிறதல்லவா? அதனை கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்த ஏதுவாக தனியே ஒரு வகை குளிகைகளாக ஆக்கி பல இயற்கை மாற்று மருந்துக் கடைகளில் 'GNC' ஸ்டோர்களில் கிடைகிறது. இதன் தலைப்பு 'Apple Peefuri' என்பதாகும்!

பிரபல இசைக் குழுமமான (Beatles) - ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனியும் இணைந்து 2003-இல் இசையையும் பதிவு செய்து (GT Tunes)  உலகெங்கும் பிரபலப்படுத்தி விட்டனர்!

புதுப்புது சிந்தனைகள்! புதிய புதிய உத்திகள்!! அண்மையில் கலிபோர்னியா மாநிலம் சான்பிரான் சிஸ்கோ நகரத்திற்கும், சுற்று வட்டாரங்களுக்கும் சென்றிருந்தோம்.

அப்பொழுது, Face Book, Google நிறுவனங்களை எங்கள் செல்வங்கள் கவின் அவர்களும், பார்வதி அவர்களும் முறையே சுற்றிக் காட்டினார்கள்.

உணவும் உண்டோம்; பல புதிய அரிய செய்தி களைக் கற்றோம்; தெரிந்துகொண்டு திரும்பினோம்.

Apple நிறுவனத்தில், பணிபுரிவோரைத் தவிர, பார்வையாளர்கள் எவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. இது அவர்களது கட்டுப்பாடு!

ஆனால் ஆயிரம் ஏக்கருக்குப் பக்கமாக பெரிய  அமைப்பு  - நிறுவனங்கள் கூகுள்,  முகநூல்  (Face Book)  போன்ற அமைப்புகளையும் சுற்றிப் பார்க்க வாய்ப்பும், உணவு உண்ணும் வாய்ப்பும்கூட கிடைத்தன.

ஆப்பிள் நிறுவனத்திற்குச் சற்று தொலைவில் நுழைவுப் பகுதியின் ஒருபுறத்தில் நீண்ட சதுர வடிவக் கட்டடம் கட்டி அதில் அகலமாக மேசை கண்ணாடியால் பரப்பி உள்ளே ஒரு ஆப்பிள் அலுவலக 'மாடல்' தயாரித்து வைத்துள்ளனர்!

வருகையாளர்கள், பார்வையாளர்களை அங் குள்ள வரவேற்பாளர்கள்- பணிபுரிவோர் - அன்புடன் அழைத்து ஒவ்வொருவர் கையிலும் ஒரு அய்பேட் (I - Pad) கொடுத்து விடுகின்றனர். அதை நாம் பயன்படுத்தினால் 'Virtual' ஆக எத்தனைத் தளங்கள் - கீழே மேலே எப்படிப்பட்ட அமைப்புகள்  - எதிர்கால வளர்ச்சிக் கண்ணோட்ட திட்டங்களை அமைத்தல் ஆகியனவற்றை அதுவே நன்றாக விளக்குகிறது.

அதிசயிக்கத்தக்க படைப்பாற்றல் (Creative) - கற்பனை வளமைத் திறன் நடைமுறைக்கு உகந்து, கால மாற்றத்தில் போட்டி உலகினைச் சமாளிக்கும் அளவுக்கு வருங்காலத்தை, வளர்ச்சியுகத்தை நோக்கிப் பாய்ச்சலாகச் செல்கிறது.  ஸ்டீவ் ஜாப்ஸ், அதனைத் தொடர்ந்து Tim Cook, மற்றவர்களின் கூட்டுச் சிந்தனை, கூட்டு முயற்சிகள் வெற்றி வாகை சூடியிருப்பதைப் பார்த்து வியந்தோம்!

அடுத்த பகுதியில் ஆப்பிள் பொருள்கள் (Apple Products - Sales Counter) விற்பனையகம் காட்சிப்படுத் தப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான Apple 11 மாடல் வரை I - Pad Raters எழுதியவுடன் போய்ச் சேரும் வேகத்தோடு செய்துள்ளனர்   2 அடியான கைக் கடிகாரம் உட்பட பலவும் பார்த்தோம்.

உண்ணவும், எண்ணவும், கற்கவும், உடல் நலம் பேணவும், ஊர் நலம் அறியவும் இரண்டு வகை ஆப்பிள்களும் பயன்படுகின்றன. மதப் பிரச்சாரத் திற்கும்கூட இப்போது அறிவியல் தானே துணைக் கழைக்கப்படுகிறது - இல்லையா?

(நிறைவு)

- விடுதலை நாளேடு, 2 .11 .19

ஆப்பிள் - உண்ணலும் எண்ணலும்! (1)

"ஒவ்வொரு நாளும் ஆப்பிளைச் சாப்பிட்டால், நாம் நோய் தீர்க்க மருத்துவரை தனியே அழைக்க வேண்டிய அவசிய மில்லை" என்ற பழமொழி (An Apple a day - Keeps the Doctor away)  பலரும் அறிந்த ஒன்றுதான்.

அண்மையில் ஒரு பிரபல ஆங்கில இதழில் ஆப்பிள் பற்றிய ஒரு கட்டுரையைப் படிக்கப் படிக்க மிகவும் சுவையாக ருசித்தது. கட்டுரை அவ்வளவு சுருக்கமானது, அழகானது!

பைபிள் காலத்து பழைய ஏற்பாட்டின்படி ஆதாம் -ஏவாள் கதையில் ஒரு பழத்தைத் தின்னக் கூடாது என்று ஏவாள் பணிக்கப்படுகிறாள். அது என்ன பழம்? ஆப்பிள்தானா என்ற கேள்வியை இப்போது ஆய்வாளர்கள் பலரும் எழுப்புகிறார்கள். (அது நடந்திருக்க முடியுமா? அதன்படி ஆணின் விலா எலும்புவிடத்துதான் பெண் தோற்றுவிக்கப்பட்டாள் என்ற இனிய கதையும் கற்பனையாகத்தான் இருக்க முடியும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்)

பைபிளில் - அப்படிச் சாப்பிடக் கூடாது என்று தடுக்கப்பட்ட பழம் எது? Genesis  என்ற நூல் அந்தப் பழத்தைத் தன்னோடு பகிர்ந்து கொள் ளுமாறு ஏவாள் கேட்டது (ஈடன் தோட்டத்தில்) எந்தப் பழம் என்ற கேள்வி ஆய்வு - Hebrew  பைபிளில் - யூத பைபிளில் மாதுளை என்று சிலரும், பெரி என்று வேறு சிலரும், அத்தி பழமாக இருக்கும் என்று மற்ற சிலரும், ஆப்ரிகாட் (Apricot)  அல்லது திராட்சை அல்லது கோதுமை யாகக்கூட இருக்கலாம் என்று பலரும் பல விதக் கருத்துக்களைக் கூறுகின்றனர்!

கற்பனைக் குதிரை கண நேரத் தில் - கண வேகத்தில் பறக்கிறது! - இல்லையா?

அது எப்படியோ போகட்டும்; இந்த ஆப்பிளுக்கு பகுத்தறிவு வாதிகள், அறிவியல் தருகிற மரியாதை (மருத்துவர்கள் வேறு ஒரு கோணத்தில் என்றாலும் - உடல் நலப் பார்வையிலும் என் றாலும்) மிகவும் வரவேற்கத்தக்கது!

17ஆம் நூற்றாண்டில் சர் அய்சக் நியூட்டன் என்ற இங்கிலீஷ் இளைஞன், ஆப்பிள் தோட்டத்தில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்த போது, மரத்திலிருந்து விழுந்த ஆப்பிள் பழத்தை எடுத்து கழுவியோ, கழுவாமலோ கடித்துச் சாப்பிடும் வழமையான இளமைத் துடிப்பைத் "தியாகம்" செய்து விட்டு, முற்றிலும் தனித்தன்மையான வகையில் சிந்தனைக் குதிரையில் ஏறி அமர்ந்தான்; அது பறக்க ஆரம்பித்தது. "மரத்தின் மேலே இருந்து ஆப்பிள் ஏன் கீழ்நோக்கி விழ வேண்டும்" என்று மனதுக்குள் கேள்வி மேல் கேள்வி கேட்டு மனதைக் குடைந்தான். அச்சிந்தனை பெற்றெடுத்த குழந்தைதான் புவியீர்ப்பு தத்துவ விதி (Law of Gravitation) என்ற அறிவியல் அடிப்படை விதி, பிறகு வந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாய் அமைந்தது!

உண்ணாத ஆப்பிள்பற்றி இதுவரை எவரும் எண்ணாத கருத்துக்களை வெளியிட்டு விஞ்ஞான உலகின் முன்னோடிகளில் ஒருவராய் சர் அய்சக் நியூட்டன் உலகப் புகழ் பெற்றார்.

நியூட்டனின் விதிகள் விஞ்ஞான உலகில் நிலைத்து நின்று விட்ட விதிகளாகி விட்டன!

இதுபோலவே எல்லாரும் ஆப்பிளை வாங்கி  உடலுக்கு ஊட்டச் சத்துத் தேடிக் கொண்டிருக்கை யில் அமெரிக்காவில் ஒரு சுதந்திர சிந்தனையாளர் - அவரின் செய்கைகள் பலவும் அவர் ஏதோ ஒரு விசித்திர மனிதர் - விநோத பிராணி போல  என்று அவரை (Freak)  நினைத்தனர்!

ஸ்டீவ் ஊசானியாக் (Steve Wozniak)  என்ற ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs)  அவர்களை வைத்து தனது கணினி கம்பெனி கார்ப்பரேஷனுக்கு பெயர் வைக்க கருத்துக் கேட்டார் - வால்ட்டர் அய்ச்க்ஸன் (Walter Isaacson) எழுதிய ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாற்றுப்படி 1970ஆம் ஆண்டுகால நடுவில் பெயர் சூட்டும் படி - கேட்டார். கடித்த அல்லது ஒரு பகுதி அரிந்த ஆப்பிள் படம் போட்டு ஆப்பிள் கணினியை கண்டுபிடித்து இன்று உலகத்தையே ஆக்கிரமித்து விட்டார்கள்!

ஆப்பிள் கைப்பேசி (Cell Phone) வாங்கி விட் டீர்களா? அடேடே 11ஆம் வகையா? லேட் டஸ்ட்டா என்று வியக்கும் வகையில் உலகத்தைத் தனது படையெடுப்பால் வென்று விட்டது!

தின்று தெவிட்டாத ஆப்பிள் ஒருபுறம்; மறுபுறம் வென்று தெவிட்டாமல் ஆண்டுக்கு ஆண்டு பல புதுமைகளைத் தன்னுள்ளே   பதுக்கி ஒரு அறிவுப் புரட்சியை அல்லவா தெறிக்கச் செய்தது!

அறிவு விளைச்சல் என்றதொரு  புதிய திருப்பம் ஏற்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது அல்லவா?

(நாளை மற்ற தகவல்கள்)

- விடுதலை நாளேடு, 1.11. 19

தூங்குங்கள் தோழர்களே, தூங்குங்கள்!

உடல் நலம் சீராக இருப்பதற்கு தூக்கம் என்பது மிக மிக அவசியம்.

தூக்கமின்மை - போதிய தூக்கமின்மை - பல்வகை நோய்களுக்கு மூலவித்தாக அமையும் அபாயத்தின் துவக்கம் என்பதை நம்மில் பலர் ஏனோ உணர மறுக்கிறோம் அல்லது மறக்கிறோம்!

குறைந்தது எட்டு மணி நேரத் தூக்கம் இன்றியமையாதது. குறித்த நேரத்தில் தூங்கச் செல்ல படுக்கைக்குப் போவதையும், விடியற் காலை எழுதலையும் தொடர்ந்து ஒருவாரம் தவ றாமல் செய்து பாருங்கள். பிறகு உங்களது உடலே கடிகாரமாக மாறி அதே நேரத்திற்குத் தூக்கத்தை வரவழைக்கும்; விடியற்காலை அதே நேரத்தில் உங்களை "அலாரம்"  அலறல் இல்லாமலேயே அது உங்களை எழுப்பி விடும் என்பது உறுதி!

உடலைப் படியுங்கள், பின்பற்றுங்கள்!

எதையும் குறிப்பிட்ட காலத்தில் செய்து பழகுதலுக்கு உடல் பெரிதும் ஒத்துழைப்பதோடு, எதிர்பார்க்கவும் கூடச் செய்கிறது!

காலை உணவு, பகல் உணவு, மாலைத் தேநீர், இரவு உணவு என்று இப்படி பகுத்துப் பார்த்து உண்ணும் பழக்கம் ஆரோக்கிய வாழ்வுக்குப் பெரிதும் உதவுகிறது என்பது உடல்கூறு அறிந்து கூறும் மருத்துவ மாமணிகளது முக்கிய கருத்து ஆகும்!

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் (D.C.) மனோ தத்துவ ஆய்வு ஏடு ஒன்று அறிவியல் அமைப்பால் வெளியிடப்படுகிறது.

அதன் பெயர் 'PLOS ONE'

NSU's College of  Psychology  யின் பேராசிரியர் ஜெய்யம் எல் டார்ட்டர்  (Jaime L Tartar) ஓர் கூட்டு ஆராய்ச்சியாளர்.

சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் இருக்கும் பகுதி நமது செரிமானத்திற்கு உதவும் முக்கிய பகுதி. அதற்கு உதவிட முடியாமல் போதிய தூக்கமின்மையால் அந்த குடற்பகுதி (Gut Microbiome) உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் புதிய பிரச்சினைகளைக் கிளப்பி விடக் கூடும்!

இந்த ஆய்வாளர்கள் தந்துள்ள ஆய்வறிக் கைப்படி, தூக்கம் குறைவு ஏற்படுத்தும் பிரச் சினையானது பெரிதும் குடற்பகுதி செரிமானப் பகுதியையே வெகுவாகப் பாதிக்கிறது என்றே கூறுகின்றனர்!

அதே நேரத்தில் போதிய அளவு தூங்கி எழுப வர்களின் குடற்பகுதி நலம் நன்றாக அமைந்து, அவதியுடன் மலங்கழிக்கவோ, அஜீரணக் கோளாறுக்கோ இடம் அளிப்பதே இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜெர்மனிய இளம் பெண், "மருத்துவர்கள் பலரும் இதயம், மூளை, சிறுநீரகம்  - இவைகளைப் பற்றியே ஆய்வுகள் செய்து புத்தகங்களை எழுதிக் குவிக் கிறார்களே, இந்த Gut  என்ற குடல் பகுதியைப் பற்றி ஏன் அலட்சியப்படுத்துகின்றனர்?  நாம் ஏன் அப்படி ஒரு புத்தகம் எழுதக் கூடாது?" என்பதை ஒரு சவாலாகக் கருதி, தன் ஆற்றல், அனுபவத் தினைக் கொண்டு எழுதி முடித்தார்!

மலச்சிக்கல் வந்தால் பல உடல் உபாதைகள், தலைவலி, பசியின்மை  வாந்தி, செரிமானமின்மை எல்லாம் ஏற்படுதல் மாறி மாறி வரும்.

இதற்கு மூலகாரணம் போதிய தூக்கமின் மையே; எனவே இளைஞர்களே, கணினி முன்னால் பல மணி நேரத்தை செலவழித்து தூக்கத்தைக் குறைப்பதன் பார தூர விளைவு வயது வளர வளர மேலும் சிக்கலாகக் கூடும் என்பதால் 'இளமையில் கல்' என்பதுடன் இதனை யும் இணைத்துக் கொள்ளல் நல்லது!

என்ன.........! நேரம் ஆகிவிட்டதே!

தூங்குங்கள் தோழர்களே!

போதிய அளவு தூங்குங்கள்!

- விடுதலை நாளேடு 31 10 19

வெள்ளி, 1 நவம்பர், 2019

சேர்த்திடும் செல்வமும் 7 விதிமுறைகளும்! (4)

செல்வத்தை நேரிய வழியில் சம்பாதித்து, உயரிய வழியில் செலவிட்டு, காரிய வகையில் கண்ணுங் கருத்துமாய் பெருக்கி, அதனை தனக்கு மட்டும் பயன்படுத்தாமல், சமுதாய நலனுக்கும் அறப்பணிகள் மூலம் கொடுத்து, அதன் மூலம் உண்மையான "ஊருணிகளாக", "பயன் தரு மரம் பழுத்துப்" பலரின் பசி போக்குதல் போல், ஈத்துவக்கும் இன்பத்தைப் பெறுதலே மிகவும் சரியான வழி.

இது 6 விதிகளையும் தாண்டிய ஏழாவது விதியாகும்!

பணம் முடக்கப்படக் கூடாது. "ஓரிடந் தனிலே நில்லாதுலகினிலே. உருண்டோடிடும் உலகைச் சுற்றிடும்" என்பதாக உடுமலையாரின் பாட்டு ஒன்று அறிஞர் அண்ணாவின் 'வேலைக்காரி' திரைப்படத்தில் வரும்.

பணம் என்பது புழக்கத்தில் இருந்தால்தான் அதன் பயன் முழுப் பயனாகப் பரிமளிக்கும். Velocity of Money - Circulation என்பது பொருளாதாரத்தில் ஒரு முக்கிய விதியும் பாடமும் ஆகும்.

ஜான்மேனாட் JohnMaynard Keynes என்ற பிரிட்டிஷ் பொருளாதார வல்லுநர் ஒரு அருமை யான விளக்கத்தின் மூலம் பணப் பரிவர்த்தனை எப்படி சமூக வளர்ச்சியின் அடி நீரோட்டமாக அமைந்துள்ளது என்பதை அதன் மூலம் கூறினார்.

ஒரு மனிதரின் செலவு

மறு மனிதரின் வரவு ஆகும் என்றார்.

பொருளாதார வளர்ச்சியில் இது ஒரு முக்கிய அங்கமாகும். (பல்கலைக் கழகத்தில் பொருளாதார எம்.ஏ. வகுப்பில் இது எங்களுக்கு பாடம். அது மட்டு மல்ல தேர்வுக்குரியதும்கூட; இப்போதும் அந்த மலரும் நினைவுகள்தான்!)

பணம் முடங்கிப் போனால் என்னவாகும்? கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் - கலைஞர் எழுதிய 'மணமகள்' திரைப்படத்தில் ஒரு பாட்டு - மிக அருமையான கருத்துக்கோவை, பொருளாதார வகுப்புகளில் போதிக்கப் பட்டவைகளை எளிதில் புரிய வைக்கும் பாட்டு.

"எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?

பணத்தை எங்கே தேடுவேன்?

உலகம் செழிக்க உதவும் பணத்தை

எங்கே தேடுவேன்?

அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை

எங்கே தேடுவேன்?

கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?

கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?

கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?

அண்டின பேர்களை ரெண்டகம் செய்யும் பணத்தை

எங்கே தேடுவேன் பணத்தை

எங்கே தேடுவேன்?

பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?

பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?

சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?

சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ?

எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?

திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?

திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?

இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?

இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணந்தனை

எங்கே தேடுவேன் பணத்தை?

தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?

தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?

சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?

சூடஞ் சாம்பிராணியாய்ப் புகைந்து போனாயோ?

எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?

பணத்தை எங்கே தேடுவேன்?

உலகம் செழிக்க உதவும் பணமே பணமே பணமே..,

எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?

பணத்தை எங்கே தேடுவேன்?"

என்பார். (முழுப் பாடலைக் கேட்டுச் சுவையுங்கள்)

என்றாலும் சேமிப்பிலும்கூட வங்கிகளிலோ, தனியார் நிதி நிறுவனங்களிலோ முதலீடு செய்யும் போது, அவர்கள் வட்டி தருகின்றனர். அது முதலீடு செய்பவர்களுக்கு வருவாய் பெருக்கத்திற்கு அல்லது, வழக்கமான மாதாந்திர, வருடாந்திர செல வுக்கு உதவுகிறது. மூலதனம் செலவுகளில் கரையாத விதை நெல்போல் இருக்கிறது.

அந்த வகையில் சேமிப்பு மிகவும் இன்றியமை யாதது. தந்தை பெரியார்  அவர்கள் 89,90,95 ரூபாய் நோட்டுகள் சேர்ந்தால் அதை உடனே ஒரு 5 ரூபாயோ, 10 ரூபாயோ தற்காலிகமாக அம்மாவிடமோ, அருகிலுள்ள நெருக்கமான வர்களிடமோ பெற்று 100 ரூபாய் நோட்டாக மாற்றி வைத்துக் கொள்வார்!

சில்லறை நோட்டுகளாக இருக்கும் போது செலவழிக்கத் தோன்றும்; 100 ரூபாய் நோட்டு என்றால் செலவழிக்க மனம் வராதல்லவா! (அந்தக் காலத்தில் ஒரு பச்சை நோட்டு என்று மக்கள் மத்தியில் இந்த பழைய ரூபாய் நோட்டுக்குப் பெயர், மரியாதை உண்டு. அக்காலத்தில் பிரிட்டிஷ் அரசு - பச்சை வண்ணத்தில் அந்த நோட்டு இருக்கும்)

பிறகு பணம் வரும்போது, தோழர்களின் அன் பளிப்பு, வழிச் செலவு முன் பணம், இத்தியாதி மூலம்  வந்தவுடன் உடனடியாக வாங்கிய, "தற்காலிக கடனைத் திருப்பித் தந்து பைசல்" செய்து விடுவார்!

அப்படிச் சேமித்த செல்வத்தை இறுதியில் யாருக்கு விட்டு விட்டுப் போனார். மக்களுக்கு! மக்களுக்கு!! மக்களுக்கு!!!

தன் பெண்டு, தன் பிள்ளை, தானுண்டு, தன் சம் பாத்தியம் உண்டு என்ற சின்னதோர் 'கடுகு உள்ளம்' அய்யா அவர்களிடத்தில் என்றுமே இருந்ததில்லை.

வள்ளுவர் செல்வம் பற்றி பொது நலக் கண் ணோட்டத்தோடு, பிறருக்கும் சமுதாயத்திற்கும் அச் செல்வம் பயன்பட்டால் அது சரியான முறை. இன்றேல் அதனால் எந்தப் பலனும் சேர்த்து வைத்தவர் உட்பட யாருக்கும் இல்லை என்கிறார்!

தலைப்பே "நன்றியில்செல்வம்" பார்த்தீர்களா?

"வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்"

(குறள் 1001)

"தனது வீடு நிறையப் பெருஞ் செல்வத்தைச் சேமித்த ஒருவன், அதனைக் கொண்டு வயிறார உண்டு. அவனும் பிறரும் அதனை நுகரவில்லை என்றால் அவன் உருப்படியாகச் செய்யத்தக்கது என்று வேறொன்றும் இல்லையாதலால் அவன் உயிரோடு இருந்தும் செத்த ஒருவனாகவே கருதப்படுவான்"

செல்வம் சேர்ப்பவர்கள் எல்லாம் திருவள்ளுவர் கணக்கில் - பார்வையில் - வாழுபவர்கள் அல்ல - பலர் "செத்த மனிதர்களே!"

வாழும் மனிதர்களாக காட்சியளிக்க தானும் துய்த்து பிறரையும் துய்க்க வாய்ப்பளித்து வள்ளற்றன் மையின் வடிவமாக அல்லவா வாழ வேண்டும். இந்த ஏழாம் விதியை மறவாதீர் செல்வத்தினை சேர்ப்பவரே!

மறவாதீர் என்றும்.

- விடுதலை நாளேடு 29 10 19

சேர்த்திடும் செல்வமும் 6 விதிமுறைகளும்! (3)

5. அய்ந்தாவது விதி:

இது மிகவும் முக்கியமானது. செல்வத்தைச் சேர்க்கும் அதே நேரத்தில், பலரும் அறிவை, படிப்ப றிவை, பட்டறிவை, பகுத்தறிவை, நுண்ணறிவை, ஒத்தறிவைப் பெருக்கிக் கொள்ள எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

குவியும் செல்வம் அவர்கள் கண்ணையும், கருத்தையும் ஏன் பற்பல நேரங்களில் மறைத்து விடுகிறது?

கொள்ளையடிக்கிறவர்கள் அந்நேர அனுப விப்பு, மகிழ்ச்சியை மட்டுமே பெறுகிறார்கள். எப்படியும் 'பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்' என்ற பொது  உண்மையையோ, அனுபவப் பழமொழியையோ   சற்றும் எண்ணாமல், அந்தக் கண நேர இன்பத்திற்காக வாழ் நாள் முழுவதும் அனுபவிக்கும் துன்பத்தை ஏனோ எண்ணிப் பார்ப்பதில்லை.

எனவே, அறிவை விரிவு செய்தல், கற்றறிதல், பெற்ற செல்வத்தை விடவும் முக்கியமானது. தங்கள் அறிவை, ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சியை நாளும் பெருக்கிக் கொள்ளுவதில் அவர்கள் கண்ணும் கருத்துமாய் இருந்து தீர வேண்டும். திறமைகளை வளர்த்துக் கொள்ள மேலும் மேலும் அறிவு 'சாணை' தீட்டப்பட, அதற்குரியவைகளை  அன்றாடம் தேடி, அதைப் பெருக்க, மேலும் சேர்க்கும் செல்வத்தையும் சரி, அல்லது ஏற்கெனவே சேர்த்த செல்வத்தையும் பாதுகாப்பாகவும் வைக்க உதவும்.

செல்வத்தைச் சேர்ப்பதைவிட அதை முறை யானவற்றுக்கே செலவழிப்பது அதைவிட முக்கியம்.

தவறான செயல்களிலோ, ஆடம்பர வெளிச் சத்திலோ நனைவதுதான் செல்வச் செருக்கின் அடையாளம் என்று கருதினால் "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்பது போன்ற பழமொழிக்குச் சரியான எடுத்துக்காட்டாக அமைவர்!

சரியான அறிவு என்பது தன்னைச் சுற்றியுள்ள வர்களும், தனக்கு நண்பர்களாக உள்ளவர்களும், உள்ளபடியே உற்ற நண்பர்களாக இருப்பார்களா? என்று 'எக்ஸ்ரே கண்ணால்' எடை போடவும் அறிந்து, அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து, எந்த அளவு நெருங்கவிட வேண்டுமோ அந்த அளவுக்கு வைத்தால்தான் சரிப்பட்டு வரும். சம்பாதித்த செல்வம் நிலைக்கும். இல்லையானால் - வள்ளுவர் கூறுவதுபோல் -

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று

(குறள் 332)

அதாவது நாடகத்தின்போது கூடிடும் பல நூற்றுக்கணக்கானவர்கள் கூத்து, நாடகம் முடிந்த வுடன் கலைந்து செல்வது போல தானே கலைந்து சென்று விடும்!

மாஜி பணக்காரர்கள் மஞ்சள் கடிதாசி மறைவு டமையாளர் களாகி விடும் பரிதாப நிலையே ஏற்படும்.

பழைய தஞ்சை மாவட்டத்திலே ஒரு பிரபலமான பேருந்து கம்பெனி ஓட்டுநராக இருந்து பிறகு பல பேருந்துகளைக் கொண்ட முதலாளி என்றாகி, இரண்டாம் உலகப் போரின்போதும்கூட, பெட்ரோலுக்குப் பதில் கரி வண்டி என்ற ('கேஸ் பிளான்ட்') போட்டுக் கூட வெற்றிகரமாக நடத்தி யவர்; எளிமையின் சின்னமாக என்றும் திகழ்ந்தவர், பெரிய மனிதர், அவரது மகனை இங்கிலாந்து அனுப்பி, போக்குவரத்துத்துறையில் பெரிய பட்டப்படிப்பு படிக்க வைத்து, அழைத்து வந்து பொறுப்புகளை ஒப்படைத்தார். அவருக்குப்பின், பல தகாத உயர் ஜாதி ஆலோசகர்களுடன் இணைந்து, தேவையற்ற பழக்கங்களையும் உருவாக்க வைத்து, அஸ்திரங்களையும், அவதாரங்களையும் அனுப்பி அவரை வீழ்த்தினர். சாம்ராஜ்யம் சரிந்தது. அகலமாக விரிவு செய்ய நினைத்து, இறுதியில் மன உளைச்சலுக்கு ஆளாகி, செல்வம் சுருங்கியது. அவரோ சறுக்கிவிட்டார்.

வந்த வேகத்தைவிட செல்வம் இது போன்ற நேரங்களில் அதிக வேகத்துடன் தேயும், மாயும், பிறகு ஓயும்! கடனில் மூழ்கிவிடவும் செய்யும்! எனவே எச்சரிக்கையுடன் காக்க வேண்டும். தொண்டறப் பணிகளை செய்வதால் எந்தச் செல்வமும் தேயாது; ஓயாது! மாறாக மக்கள் மனதில் 'ஊருணி'யாக நிலைத்து நிற்கவே செய்யும்.

6. இறுதியாக ஆறாவது விதி:

ஒரே இடத்தில் முதலீடு என்று செய்யாமல், நன்றாக ஆராய்ந்து பல இடங்களில், அவற்றின் வரலாறு, பாதுகாப்பு அறிந்து முதலீடு செய்வது அவசியம்.

துவக்கத்தில் சொன்னதுபோல அதிக வட்டி என்பது; அதிகமான நம்பிக்கை சில நபர்கள் மீதும், நண்பர்கள் மீதும், "இவரா நம்மை ஏமாற்றிவிடப் போகிறார்" என்ற அலட்சியமான அனாவசிய மதிப்பீடுகள் காரணமாகவும் இழப்புகள் ஏற்படும்!

அறவழியில் சேர்ப்பதே நிலைக்கும். புறவழியில் - புழக்கடை வழியில் சேர்ப்பது தங்காது - மூடநம்பிக்கை அல்ல. அதன் பெருமையறியாது, அது எங்கெங்கோ ஓடும், தீயவற்றைத் தேடும், எனவே எச்சரிக்கை தேவை  - பொருள் சேரும் போது!

(அடுத்து எழுதப்படாத ஏழாவது விதியை வள்ளுவர் - பெரியார் மூலம் நாளை காண்போம்)

- விடுதலை நாளேடு 28 10 19