மக்கள் குடிஅரசுத் தலைவராக நம் நாட்டில் ஆட்சி புரிந்த மேதகு ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களது பிறந்த நாள் இன்று!
இன்னும் பல ஆண்டு காலம் வாழ்ந்து வையத்தை வாழ வைக்க உழைத்து நம்மை உயர்த்தவிருந்த உத்தமரை, இயற்கையின் கோணல் புத்தி காரணமாக நாம் இழந்தோம். இதற்குமுன் ஆட்சித் தலைவர்கள் பலர் வெறும் காட்சித் தலைவர்களாக மட்டுமே இருந்தவர்கள்.
பதவிச் சிம்மாசனம் மட்டுமே அவர்களுக்கு உரியது.
ஆனால் நம் அய்யா கலாம் அவர்களது மனிதநேயத்தாலும், களங்கமற்ற கடமை உணர்வாலும் மக்களின் இதயச் சிம்மாசனத்தில் இடம் பெற்ற தொண்டறத்தின் தூய உருவம் அவர்!
ஏழ்மையும், வறுமையும் அவரை அவரது இலக்கிலிருந்து ஒதுக்கிடவில்லை; அவர்தம் கடும் உழைப்பும், போதிய தன்னம்பிக்கையும் அவரை நாளும் உயர்த்தியது!
"இராமேசுவரத்தில் செய்தித்தாள் விநியோகப் பையனாக" உழைத்து அதில் கிடைத்த சொற்ப வருவாயைக் கொண்டு தனது படிப்பை என்ஜினியரிங் வரை முடித்தார். இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி என்று பெயர் பெறும் அளவுக்கு அவரது நுண்மா நுழைபுலம், அவரது அயராத உழைப்பு, தளராத தன்னம்பிக்கை அவருக்குக் கை கொடுத்தது!
இந்தியாவிற்கு அணுக்குண்டு தயாரிக்கும் ஆற்றல் உண்டு என்று உலகுக்குக் காட்ட காரணமான தொழில் நுட்ப மேதையாக அவர் வளர்ந்தார்! உயர்ந்தார்!!
எங்கே உழைப்பும், உளப்பூர்வ உறுதிப்பாடும், பங்கேற்பும் இருந்தாலும் அவர்களை ஊக்கப் படுத்தி, மேலும் உழைத்து வரலாறு படைக்க அவர் ஒரு மகத்தான செயலூக்கியாகவே இறுதிவரை திகழ்ந்தார்.
வறுமையை உலகின் 300 கோடி மக்களிடையே எப்படி ஒழிப்பது என்பதுபற்றி அவரது வாழ்வின் இறுதிப் பகுதியில் 'Target 3 Billion' - என்ற நூலில் எழுதியதில் அவர் உலகெங்கும் உள்ள கிராம - நகர பேதத்தை ஒழித்தலே - அதற்கான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி, ஒரு புதுஉலகம் காண வழி வகை செய்யும் என்று உணர்த்தினார்!
உலகமே தன் குடும்பம்; அனைத்து மக்களே தன் உறவுக்காரர்கள் என்று கருதி அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க ஆவன செய்தலே சிறந்த ஆட்சிக்குரிய இலக்கணம் என்று கூறத் தவறாதவர்.
தஞ்சையில் உள்ள நமது பெரியார் - மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழகத்திற்கு குடிஅரசுத் தலைவராகவும், அப்பொறுப்பிலிருந்து விடுபட்ட நிலைமையிலும்கூட ஆறுமுறை வந்து நம்மை இடையறாது ஊக்கப்படுத்திய உயர்தனிச் செம்மல் அவர்.
'புரா' 'Pura - Providing Urban Amenities for Rural Areas என்ற வறுமை ஒழிப்புத் திட்டத்தில் நமது வல்லம் பல்கலைக் கழகம் 69 கிராமங்களைத் தத்து எடுத்து அவர்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம், மின்னணு வளர்ச்சி, பொருளா தார தேவைகள் பற்றி 4 தொடர்பு அம்சங்கள் என நாம் பெரியாரின் சிந்தனைகளை செயலாக்க அவர் கூறும் முன்பே, 1946இல் பெரியார் கூறியது கண்டு அதிசயப் பட்டதோடு, 'பெரியார் புரா' என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்!
உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அங்கே நமது பல்கலைக் கழகத்தின் 'பெரியார் புரா' 'Periyar Pura' திட்டத்தை பற்றி எடுத்துக் கூறினார் - பல நாட்டு பாராளுமன்ற உரைகளில்!
'Sir I am Your International Marketing Agent'
"அய்யா, நான் உங்களது சர்வதேச சரக்கு 'கல்வி' விற்பனை முகவர்" என்று சிரித்துக் கொண்டே கூறி நம்மை மேலும் மேலும் ஊக்கப்படுத்திய உத்தமர்! உழைப்பின் உச்சம்!!
"பிறப்பது ஒரு சம்பவம்தான் என்றாலும் இறப்பதுதான் சரித்திரமாக அமைய வேண்டும் என்ற அளவுக்கு வாழ்ந்து காட்டுங்கள்" என்ற அவரது கூற்றே அவருக்கு நாம் காணிக்கையாக்கும் பாராட்டு ஆகும்!
கலாம் ஒவ்வொரு இளைஞனின் ஊக்கத்திலும் வாழ்கிறார்! வாழ்கிறார்!!