இன்னும் ஒரு சில நாள்களில் 89 வயது துவங்கு கிறது என்று எனது தோழர்கள் நினைவூட்டுவது போல பல நிகழ்வுகளை அவர்கள் ஏற்பாடு செய்யும் நிலையில், முதுமையால் யான் தாக்குண்டேன் என்று ஒப்புக் கொள்ளுவதிலிருந்து மாறுபட்டு, முதிர்ச்சியால் நான் மீட்புருவாக்கம் கொண்டேன் என்று திடசித்தம் கொண்டு மேலும் நாளும் வலிமை குன்றாமல் உழைப்பது எப்படி என்று எண்ணிக் கொண்டி ருந்தபோது, ஜப்பானில் வெளிவந்து, தமிழில் அருமை எழுத்தாளர் நண்பர், மும்பை PSV குமாரசாமி அவர்களால் சிறப்பான தமிழில் தரப்பட்டுள்ள 'இச்சிகோ, இச்சியே'
ஒவ்வொரு கணத்தையும் முழுமையாக அனுபவிப்பதற்கு உதவும் ஜப்பானியக் கலைபற்றி ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ் மிராயியஸ் ஆகியவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலினை தமிழில் தந்துள்ளதை மீண்டும் எடுத்துப் படித்தேன்.
அதில்...
"முதிய வயதில் இருக்கும் ஒருவரால்கூட முற்றிலும் புதிய வடிவத்தில் தன்னைப் புதுப்பித் துக் கொள்ள முடியும். ஏனெனில், அவர்களுக்கு முன்னாலும் வாழ்க்கை காத்திருக்கிறது.
இன்னும் எவ்வளவு காலத்துக்கு வாழப் போகிறோம் என்பது முக்கியமல்ல; மீதமிருக்கும் காலத்தில் நாம் எதைச் செய்யப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.
நீங்கள் நேசிக்கின்ற ஒன்றைப் பின் தொடர்ந்து செல்லக் கூடிய துணிவு, உங்களிடமிருந்தால், ஒவ்வொரு நாளும் சிறப்பான நாளாக மிளிரும் என்பதை "இக்கிகய்" புத்தகத்தின் ஆய்வுக்காக நாங்கள் ஒக்கினாவோ சென்றபோது, அங்கு நூறு ஆண்டுகளைக் கடந்தும் குதூகலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொண்டோம்.
"அறிவு நாம் இளமையாக இருக்கும்போது வளர்ந்து, நம்முடைய மத்திய வயதில் உச்சத்தை அடைந்து, அதற்குப் பின் கீழ்முகமாக இறங்கு கிறது" என்ற ஒரு பொதுக் கருத்து நிலவுகிறது. ஆனால் ஒரு சிலர் தங்களுக்கு எத்தனை வயதாகி இருந்தாலும் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டும் தங்களைப் புதுப்பித்துக் கொண்டும், இருக்கின்றனர். தாங்கள் ஏற்கெனவே கைவசப் படுத்திக் கொண்டுள்ள அறிவைப் பயன்படுத்தி புதிய சவால்களை எதிர் கொள்ள அவர்கள் துணிகின்றனர்.
சாதனைக்கு வயது ஒரு தடையல்ல - என்பதற்கான இரண்டு எடுத்துக்காட்டுகளை நாம் இப்போது பார்ப்போம்.
முதலாவது, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மெல்ச்சோரா அக்கினோடி & ராமோஸ் என்ற பெண்மணி அவருக்கு எண்பத்து நான்கு வயது ஆகியிருந்தபோது, அந்நாட்டில் போராட்டம் வெடித்து, அந்நாட்டின் சுதந்திரத்திற்கு வழி வகுத்தது. அப்போராட்ட காலத்தின்போது அவர் தன்னுடைய சிறிய கடையை, போராட்ட காலத்தில் காயமடைந்தவர்களுக்கும், போராளி களுக்கும் தங்குமிடமாக ஆக்கினார். புரட்சி யாளர்கள் அங்கு ரகசியக் கூட்டங்களை நடத்திக் கொள்வதற்கும் அவர் அனுமதித்தார்.
"அரசுக்கு எதிரான அவருடைய நடவடிக் கைகள் பிலிப்பைன்ஸை அப்போது ஆக்கிரமித் திருந்த காலனி அரசின் கவனத்திற்கு வந்தன. அந்த அரசு அந்த முதிய பெண்மணியைச் சிறை பிடித்து, சித்திரவதை செய்தது. புரட்சி யாளர்களின் பெயர்களைத் தெரிவிக்குமாறு அவரை வற்புறுத் தியது. அவர்களுடைய பெயர்களைக் கூற அவர் மறுத்துவிட்டதால் அவர் மரியானா தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டார்.
பின்னர் அமெரிக்கா பிலிப்பைன்ஸைத் தன் னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது, தேசியக் கதாநாயகியாக அவர் நாடு திரும்பினார். 'புரட்சிப் பாட்டி' என்று அவர் அழைக்கப்பட்டார். அதற்குப் பிறகு தன்னுடைய நாட்டுக்காக மேலும் இருபது ஆண்டுகள் அயராது உழைத்துவிட்டுத் தன்னுடைய 107 வயதில் மெல்சோரா காலமானார்.
காலம் கடந்து மலர்கின்ற நபர்களுக்குக் கலைத் துறை ஒரு செழிப்பான பூமியாக இருக் கிறது. ஆங்கிலேய எழுத்தாளரான ஹாரி பெர்ன்ஸ்டைன் தன்னுடைய இருபத்து நான் காவது வயதில் தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியபோதிலும், அவர் தொண்ணூற்று மூன்று வயதை எட்டும்வரை 'இன்விசிபிள் வால்' என்ற தன்னுடைய முதல் புதினத்தை எழுதத் தொடங்க வில்லை. அதை அவர் எழுதி முடித்து 2007ல் இங்கிலாந்தில் அது பிரசுரமானபோது அவருக்கு வயது தொண்ணூற்று ஆறு.
அவர் ஏன் இவ்வளவு முதிய வயதில் தன் னுடைய புதினத்தை எழுதினார் என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அறுபத்தேழு ஆண்டுகாலம் தன்னுடன் வாழ்ந்த தன் மனைவி இறந்த பிறகு, தன்னுடைய தனிமையைப் போக்கிக் கொள்வதற் காகத் தான் எழுதத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.
அவருடைய புதினத்திற்கு வாசகர்கள் ஏகோபித்த வரவேற்பை அளித்ததால், அவர் தன்னுடைய 101வது வயதில் இறப்பதற்கு முன்பு மேலும் மூன்று புதினங்களை எழுதினார். அவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்தப் பேட்டி ஒன்றில், “மக்கள் நூறு ஆண்டுகள்வரை உயிரோடு இருக்கும்படி பார்த்துக் கொள்ளப் பட்டால், அவர்களிடம் எத்தகைய திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன என்பது வெளிச்சத்திற்கு வரும்,” என்று கூறியிருந்தார்."
எனவே முதுமையை வென்ற முதிர்ச்சியைப் பெறுவோம் - நிற்காமல் ஓடிக் கொண்டே இருப்போம்!
அதே துடிப்போடு! - இலக்கை நோக்கி...!!