பேராசானுடன்....! சில நினைவுகள்; நிகழ்வுகள்! (5)
அறிஞர் அண்ணா தந்தை பெரியார் அவர்களை, 1967இல் பதவியேற்பதற்கு முன், திருச்சிக்குச் சென்று நாவலர் இரா. நெடுஞ்செழியன், கலைஞர் மு. கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம் ஆகியவர்களுடன் பெரியார் மாளிகையில் சந்தித்து - அவரது வாழ்த்துக்கள் "ஆசிகளை"ப் பெற்ற போது 'எங்களை வழி நடத்துங்கள் அய்யா' என்று அறிஞர் அண்ணா அவர்கள் அவருக்கே உரிய தன்னடக்கத்துடனும், எல்லையற்ற நன்றி உணர்வோடும் கூறிய நிலையில், சற்று நேரம் அமைதியாகவும், அதே நேரத்தில் அடையாத மகிழ்ச்சியை அடைந்த நிலையிலும் அய்யா இருந்தார்!
அம்மாவை அழைப்பதற்கு முன்பே அவர் எல்லோருக்கும் காப்பி தயாரித்து வைத்து, அவர்கள் முன்னால் வந்து, நின்று தட்டில் வைத்து வழங்க வந்தார்கள்.
அப்போது சுமார் இரவு 9 மணி இருக்கலாம்.
அறிஞர் அண்ணா சற்றே கம்மிய குரலில், தயங்கிய நிலையில் எழுந்து அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரிடம்; "எப்படி இருக்கீங்க.... இடையில் எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்டன. அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம்" என்பதுபோன்ற சொற்களை மிகவும் மெல்லிய குரலில் சொன்னபோது அம்மா ஒன்றும் பதில் சொல்லாமல், மறுமொழியாக 'காப்பி எடுத்துக்குங்க..' என்று அமைதியும், சாந்தமும் தவழும் முகத்தோடும், உள்ளத்தோடும் கூறியது வரலாற்றுத் திருப்பங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்!
தந்தை பெரியார் அவர்கள் அண்ணா தம்மை வந்து சந்தித்ததைப்பற்றி "அவர் வெற்றி பெற்று வந்து சந்திக்கிறபோது, அவர் ஒரு மணமகன் போல (கம்பீரமாக) வந்தார். நானோ வெட்கப்பட்ட ஒரு மணப்பெண் போல அமர்ந்து அவர்களை வரவேற்றேன்" என்று பேசியதை பலமுறை தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்ற பெரிய வர்களே மேடைப் பேச்சுகளில் குறிப்பிட்டிருக் கின்றனர்.
ஆனால் அந்தச் சந்திப்பில் மிகவும் குறிப் பிடத்தக்க சம்பவமாக நான் கருதுவது அன் னையார் நடந்துகொண்ட பெருந்தன்மை ஒப் புவமை இல்லாத ஒன்று. தப்பக் கூடாத பதிவுக் குரிய ஒன்றாகும்.
அய்யா 1973இல் மறைந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அய்யாவுக்கு அரசு மரியாதையுடன் அடக்க நிகழ்வு நடத்திய அவரது கடமை உணர்வு, துணிவுடைமை - பதவியைத் துச்சமாகக் கருதிய நிகழ்வை பலரும் அறிவார்கள்.
இதில் அறியப்படாத - அறியப்பட வேண்டிய மற்றொரு நிகழ்வும் உண்டு.
ஈரோட்டில் அய்யா தந்தை பெரியார் அவர்கள் பிறந்த இல்லத்தை, அய்யாவின் நினைவு இல்லமாக அரசு சார்பில் முதலமைச்சர் கலைஞர் அறிவித்தார்.
அது, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ஆகிய பெரியார் அறக்கட்டளையின் சொத்து; அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அதனைப் பெரிதும் வரவேற்று, முதலமைச்சருக்கு தனது இசைவுக் கடிதத்தினை அளித்தார்கள்.
முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அன்னை யாருக்கு மகிழ்ச்சி, நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில் "அரசுடமையாக்கப்படுவதால் அதற் குரிய மதிப்பீட்டு இழப்புக் கொடையை தமிழ்நாடு அரசு தரத் தயாராக உள்ளது" என்பதையும் குறிப்பிட்டு, கேட்புத் தொகையை அறிவிக்க வாய்மொழி வழியாக என்மூலம் கேட்கச் சொன்னார்கள்.
அதற்கு சற்றும் யோசியாமல், "கணினியைத் தட்டியவுடன் கிடைக்கும் விடைபோல அன் னையார் அவர்கள், "அய்யாவுக்கு நினைவிடம் அவர் பிறந்த மண்ணிலே தமிழ்நாடு அரசே முன் வந்து அமைப்பது சாலச் சிறந்தது; எந்த இழப்பீட்டுக் கொடையும் வேண்டாம்; நன்றி!" என்று கூறி அதனை தெரிவிக்கச் சொன்னார்.
அதை நான் முதலமைச்சர் கலைஞருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்து அன்னையார் கூறியதை அப்படியே கூறினேன்.
"இல்லீங்க வீரமணி, காஞ்சியில் அண்ணா வாழ்ந்த இல்லத்தை அரசு உடைமையாக தமிழ்நாடு அரசு - நாங்கள் எடுத்து நினைவு இல்லம் அமைத்தபோதுகூட, உரிய இழப்பீடு உதவித் தொகையை அளித்தோம். அதுபோல அறக்கட்டளைக்கு அளிக்கிறோம்" என்றார்கள். அறக்கட்டளை உறுப்பினர்கள் அத்துணை பேரும் அன்னையாரின் கருத்தையே பிரதி பலித்து பணம் பெறுவதற்கில்லை என்று கூறினர். எனவே முடிவில் மாற்றம் இல்லை என்று அன்னையார் சார்பில் நான் உறுதியாகத் தெரிவித்து விட்டேன்.
அதற்கடுத்து நன்றி தெரிவிக்க பெரியார் திடலுக்கே முதல் அமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் வந்து அம்மாவைச் சந்தித்து நன்றியை, மகிழ்ச்சியை அன்னையார், அறக்கட்டளை உறுப்பினர்களின் தாராள நிலையை வெகுவாகப் பாராட்டியபோது -
அப்போது அன்னையார் விடுத்த வேண்டு கோள் கேட்டு முதலமைச்சர் கலைஞர் இன்ப அதிர்ச்சியால் தாக்குண்டார்! அது என்ன?
(அடுத்து வரும் நாளில்)