என்ன வியப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறதா?
இன்று 'உலக சிக்கன நாள்!'
இந்நாளில் இப்படி ஓர் அபசுரக் குரலா? எதிர்மறைக் கருத்தா?
தனது வாழ்நாள் முழுவதும் சிக்கனத்தைத் தானும் கடைப்பிடித்து, பிறரையும் அந்த நல்வழிப் படுத்திட்ட தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனாகிய இவரா இப்படி எழுதுவது என்ற கேள்விகள் எழலாம்.
சற்றுப் பொறுமையுடன் படியுங்கள். சிக்கனம் எக்கணமும் தேவைதான்; ஆனால் சிலவற்றில் சிக்கனம் வேண்டவே வேண்டாமே!
எவ்வெவற்றில் என்றால், பாராட்ட வேண்டிய மாமனிதர்களை, அருஞ்சாதனையாளர்களை, பெருமைப்படுத்தி, ஊக்கமும், உற்சாகமும் தந்து நாம் 'ஏணியாக' இருந்து உயர்த்த வேண்டிய வர்களை, குறிப்பாக இளைய தலைமுறையினரைப் பாராட்டிடும் போது, பாராட்டுகளை அள்ளி அள்ளித் தெளியுங்கள்; தயங்கித் தயங்கி, அரைகுறை மனதோடு பாராட்டுகளை கிள்ளி கிள்ளித் தராதீர்கள்; அள்ளி அள்ளி வாரி வழங்குங்கள்.
இதில் நீங்கள் "பாரி"யாய் "ஓரி"யாய் வள்ள லாகத் திகழுங்கள் - இதில் சிக்கனம் வேண்டாம்!
'ஈத்துவக்கும் இன்பம்' என்பதற்கொப்ப, பிறருக்கு உதவிடும்போது, தாராளமனதோடு, தயக்கமின்றி, பஞ்சமில்லாமல் எவ்வளவு வழங்க முடியுமோ அதனை கொஞ்சங்கூடத் தயங்காது, 'தெங்கு தான் உண்ட தண்ணீரை தலையாலே தான் தருதல்போல' நீங்கள் சம்பாதித்தப் பொருளை - உங்கள் தேவைபோக எஞ்சிய வற்றை பிறர் துன்பம், பிறர் வறுமையைப் போக்கிட, கைம்மாறு கருதா மாரிபோல் வாரி, பொழியுங்கள்!
"ஒருவன் வீடு அவன் வீடாகவே என்றும் இருக்க வேண்டுமானால் அது பொதுவுக்கு - அதாவது பொது மக்களுக்குப் பயன்படும் அளவுக்குப் பயன்பட வேண்டுமானால், பொதுச் சொத்தாக்கி, நூலகம், கல்வியகம், படிப்பகம் ஆக்கினால் அது நிலைத்த புகழோடு என்றும் நீடிக்கும் - எக்காலத்திற்கும்!" என்றார் தந்தை பெரியார்.
ஆடம்பரத்தினைத் தவிர்த்து எளிமையோடு வாழ்ந்து வெற்றி பெற சிக்கனமே சிறந்த வழிமுறையாகும்.
சுயமரியாதையோடு மனிதர்கள் வாழவும், காலங்காலமாகத் தொடர்ந்த தூய நட்புகள்கூட கடன் வாங்கி திருப்பிக் கொடுக்க முடியாதபோது கெட்டுப் போகிறது; இதிலிருந்து உங்களைக் காப்பாற்ற ஒரு பெரும் மருந்து சிக்கனம் - சேமிப்பே!
வருவாய் பெருக இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, கூடுதல் வருவாய் ஈட்டுதல் - மற்றொன்று வருமானத்தை, வரவைப் பெருக்க ஒரேவழி செலவைச் சுருக்குதல் என்றார் அருமையாக வள்ளுவர்!
எனவே செலவைச் சுருக்குங்கள் சிக்கனமாக வாழுங்கள்.
பாராட்டைச் சிக்கனப் படுத்தாதீர்கள்.
பெற்றோர்களிடம், கற்றோர்களிடம், நீங்கள் பயனடைந்து வளரக் காரணமானவர்களிடம், உங்களின் வாழ்விணையர்களிடம், உங்களோடு நாளும் பணிபுரிந்து உங்களை உயர்த்தும் கூட்டுப் பணித் தோழர்களிடம் பாராட்டுவதில், பெருமைப் படுத்துவதில், நன்றி கூறுவதில், மகிழ்ச்சி தெரிவிப்பதில் சிக்கனமோ, கருமித்தனமோ காட்டா தீர்கள்! காட்டவே காட்டாதீர்கள்!
புன் சிரிப்பிலும், இடுக்கண்வரும்போது எதிர் கொள்ளும் துணிச்சலிலும் சிக்கனம் தேவையில்லை.
துணிவுடன் தாராளமாக, எதிர் கொள்ள பரந்தமனம்,திறந்த அணுகுமுறை தேவை!
துயரத்தை பிறரிடம் - நம்பிக்கை உள்ள நண்பர்களிடம் பகிர்ந்து, நெஞ்சத்தை கனமற்ற தாக்கிக் கொள்ளுவதிலும் சிக்கனம் வேண்டாம்! தாராளமாக எதிர் கொள்ளுங்கள்.
வெற்றி உமதே! பாடம் நமதே!
- இது இன்றைய உலக சிக்கன நாள் சிந்தனை. சரி தானே?