பொதுவாழ்வில் உள்ள தலைவர்கள், பொது நலத்துக்கான போராளிகள் தங்களது மண வாழ்க் கைக்குப் பின், அவர்களது வாழ்விணையர்களோடு இணைந்து வாழும் தியாகம், அத்தகைய ஆண்களை விட பெண்களுக்கு மிக மிக அதிகம்.
முழுக் குடும்பப்பொறுப்பு என்ற தாங்கொணாத சுமை - பாரமாக அவர்களை நாளும் அழுத்துகிறது.
தனது 'தலைவனான' வாழ்விணையரின் லட்சியப் பயணத்தின் சோதனைகளை, எதிர் நீச்சல்களை, அவர்களது வறுமை, வெளியே சொல்ல முடியாத சங்கடமான கடமைக்கான பயணத்தில் சந்தித்த நெருக்கடிகள் இவை ஏராளம்! ஏராளம்!!
ஆண்களுக்கு - பலரிடம் பேச, சந்திக்க வாய்ப்பு- போராட்ட சிந்தனைகள் - இவை 'குடும்பத்தின்' கவலைகளை, சுமைகளை மறக்கச் செய்து அவர் களைக் காப்பாற்றி விடுகின்றன! இந்த வாய்ப்பு கூட அவர்களது குடும்பத் தலைவிகளுக்கு கிட்டுவது இல்லை!
மன அழுத்தமும், சோகமும் சொல்ல முடியாதவை களாக தொடரும் அவலம்!
டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் தனி வாழ்க்கை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காதல் மனைவி அம்மா ரமாபாய் அவர்களின் கணவராக இருந்த டாக்டர் அம்பேத்கர் எப்படிப்பட்ட சுமையை அவருக்குத் தந்தும், எத்தகைய ஆறுதலும், அன்பும் வழங்கிய மனிதம் 'பூத்த மாமனிதர்' ஆகவும் விளங்கினார் என்பதை நாமெல்லாம் தெரிந்துகொள்ள 'தலித் முரசு' ஆசிரியர், 'புரட்சிப் பூ' புனிதப் பாண்டியன் அவர்கள் சில நாட்களுக்கு முன் பெரியார் திடலில் என்னைச் சந்தித்து, சில அருமையான நூல்களையும், டாக்டர் அம்பேத்கர் ஆண்டு நாட் காட்டியையும் தந்து உரையாடிச் சென்றார். தமிழ்நாடு அரசு தக்க வகை யில் அவரை அடையாளம் கண்டி ருக்கிறது! மகிழ்ச்சி அவர் தந்தது.
16 பக்கங்களைக் கொண்ட மிகச் சிறிய அந்த நூலின் தலைப்பு 'டாக்டர் அம்பேத்கர் எழுதிய காதல் கடிதம்' - 'உன் இன்மையை நினைத்து ஏங்கு கிறேன்' என்று துணைத் தலைப்பு -
அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார் 1933 மே 10ஆம் தேதி ஈரோட்டில் மறைந்த துயரத்தில் 'குடிஅரசு' ஏட்டில் அந்த வாரத்தில் எழுதிய இரங்கல் தலையங்கம், ஓர் இணையற்ற இலக்கியக் கருவூலம்!
வாழும் நிலையில் வறுமைத் தேள்கடியைப் பொருட்படுத்தாது, இங்கிலாந்தில் இரவு, பகல் பாராது படிப்பில் மூழ்கிய கல்விக் கடல் அம்பேத்கர் தனது துணைவியருக்கு உணர்ச்சிக் கொப்பளிக்க, அன்பு அருவிபோல் கொட்டிக் கொண்டே இருக்கும் நிலையில் எழுதிய அந்த 16 பக்க சிறு வெளியீடு நம்மை - கண் களை கண்ணீர் ஊற்றாக்கி விட்டது!
பசி, வறுமை, அவமானம் இதற் கிடையே உறுதி குலையாத லட்சிய இலக்கு நோக்கிய பயணம் - இவைகள் ஒரு மனிதனின் தனி வாழ்க்கையை எப்படிப்பட்ட துயர மேகங்கள் சூழ்ந்து, துன்ப நிகழ்வு களாக்கி விடுகின்றன என்பது உணர்ந்த அவரது பாசம் பொழிந்த அவரது துணைவியாரின் கடமை உணர்ச்சி தான் எவ்வளவு மகத் தானது!
அம்பேத்கர் போன்று பெரியள வில் படித்தவர் அல்ல; அவரைக் கைப்பிடித்தவர்; ஆனால் கடமை யால் கடைசி வரை கட்டுண்ட கரங்கள், கண்ணியமும், கடமையும், அவர்களிரு வருக்கும் கேடயங்களாக்கி உணர்வுகளுக்கு இல்லை தடை ஏதுவும் என்பது போல், அன்பும் வாஞ்சையும் மடை திறந்த வெள்ளமாகி ஓடும் காட்சியை, உயிரோட்டத்தை உண்மை எழுத்தாளர் காட்டு வதைப் படித்து நாம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டோம்!
மேலும் உங்கள் ஆவலை சோதிக்க விரும்ப வில்லை.
இப்படியே இப்பகுதியில் வெளியிடுகிறேன். ஊன்றிப் படிப்பீர்!
உண்மையான பொது நலம் எப்படி சோதனைக் களங்களாகின்றன என்பதைப் புரிந்து கொள்ள அது பாட நூல் போலப் பயன்படும். (அது மராத்தியில் எழுதப்பட்டதின் மொழியாக்கம்).
"ரமா!
எப்படி இருக்கிறாய் நீ?
இன்று உன்னையும் யஷ்வந்தையும் அடிக்கடி நினைத்துக் கொண்டே இருக்கிறேன். அதிலும் ரமா, உன்னை நினைக்கும் பொழுது நான் நிறையவே சோர்ந்து விடுகிறேன்.. கடந்த சில நாட்களாக இங்கே நான் ஆற்றிய உரைகள் பலவும் மிகப் பெரிய விவாதங்களை எழுப்பி இருக்கிறது. வட்ட மேசை மாநாட்டில் பேசப்பட்ட உரைகளில் என்னுடையது ஆகச் சிறந்ததாகவும் உத்வேக மூட்டக்கூடியதாகவும் இருந்ததாக இங்கு வெளிவரும் நாளேடுகளில் எழுதி இருக்கிறார்கள்.
ஆனால் மாநாட்டில் என்னுடைய செயல்பாடுகள் அனைத்திலும் வெளிப்படுவது கண்களின் முன்வந்து நிழலாடும் நம் தேசத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுடைய முகங்கள்தான்! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வலியிலும் வேதனையிலும் அவர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள். தாங்கள் படும் வேதனை களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு வழியோ தீர்வோ கிடைக்கப் போவதில்லை என்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதில் நான் சற்று அதிர்ந்துதான் போகிறேன் ரமா. இருந்தாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். அதற்கான மாபெரும் அறிவுசார் வலிமையை எனக்குள் நான் உணர்கிறேன். அது, உணர்ச்சிகளால் நிரம்பிய என் இதயமும் சிந்தனைகளால் நிரம்பிய என் உள்ளமும் எனக்கு வழங்கிய வலிமையாக இருக்கலாம்.
(தொடரும்)