சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்களில் ஒன்று 'சக்ரவர்த்தி திருமகள்' என்ற எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த திரைப்படம்.
அதில் ஒரு காட்சி.
'புரட்சி நடிகராக' அப்போது அழைக்கப்பட்ட வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களும், நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களும் லாவணி என்ற டேப்பிசை கச்சேரியில் ஒருவரை ஒருவர் வெல்லுவதற்குப் பாடும் போட்டிக் காட்சி ஒன்று வரும். பகுத்தறிவுக் கவிஞர் உடுமலை நாராயணகவி அவர்களால் எழுதப்பட்ட அப்பாட்டினை எம்.ஜி.ஆரும், என்.எஸ்.கே.வும் மாறி மாறிக் கேள்வியாக கேட்டுப் பாட்டுப் பாடுவார்கள். கேட்கக் கேட்க இன்பமாக இருக்கும்.
"உலகத்திலேயே பயங்கரமான (ஆபத்தான) ஆயுதம் எது? என்று எம்.ஜி.ஆர். கேட்டுப் பாடுவார்.
அதற்கு என்.எஸ்.கே. 'கத்தி', என பதிலாக கூற, 'இல்லே' என எம்.ஜி.ஆர். மறுத்திட, என்.எஸ்.கே. மற்ற வெவ்வேறு ஆயுதங்களைக் கூறிய போதும் எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டு, நிலை கெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது!" என்ற பதிலை டேப் அடித்துக் கொண்டே பாடுவார்!
பகுத்தறிவு மணம் வீசும் அப்பாடலை அப்படியே தருகிறேன். படித்து மகிழுங்கள்.
என்.எஸ்.கே.: சீர்மேவு குருபதம் சிந்தையொடு வாக்கினும்
சிரமீது வைத்துப் போற்றி
ஜெகமெலாம் மெச்ச ஜெயக்கொடிபறக்கவிடும்
தீரப் பிரதாபன் நானே
சங்கத்துப் புலவர் பல தங்கத் தோழா பொற்பதக்கம்
வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்
எனக்கிங்கில்லை ஈடெனச்சொல்லிக் களித்தார்
இந்த சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்ட பாரா தீரர்
சீரெடுத்துப் பாடி வாரேன் பேரே அதற்கு
ஓரேழுத்துப் பதில் சொல்லிப் பாரேன்.
எம்.ஜி.ஆர்.: யானையைப் பிடித்து,
யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப்படுபவர் போல அல்லவா
யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைத்துவைக்க
ஆத்திரப்படுபவர் போல அல்லவா
உமது ஆரம்பக் கவி சொல்லுதே புலவா
வீட்டுப்பூனைக்குட்டி காட்டிலோடி புலியைப் பிடித்துத் தின்ன
புறப்பட்ட கதைபோல அல்லவா தற்புகழ்ச்சிப் பாடுகிறாயே புலவா
என்.எஸ்.கே.: அப்புறம் ஓ ஒ சரிதான்
பூதானம், கன்னிகாதானம், சொர்ணதானம், அன்னதானம்,
கோதானம் உண்டு பற்பல தானங்கள்
இதற்கு மேலான தானமிருந்தா சொல்லுங்கள்
ஏய் கேள்விக்கு பதிலைக் கொண்டா, டேப்பை ஒடைச்சி எறிவேன் ரெண்டா
உன்ன ஜெயிச்சுக் கட்டுவேன் முண்டா, அப்புறம் பறக்க விடுவேன் ஜெண்டா
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி
எம்.ஜி.ஆர்.: எந்தனை தானம் தந்தாலும் எந்தலோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானம் தான்.. நிதானம் தான்
எத்தனை தானம் தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானம் தான்
நிதானத்தை இழந்தவனுக்கு ஈனந்தான்,
நிதானத்தை இழந்தவனுக்கு ஈனந்தான்
என்.எஸ்.கே.: சொல்லிட்டன், கோயிலைக்கட்டி வைப்ப தெதனாலே?
இதற்கு பதில் சொல்ல முடியாது தம்பி...
கோவிலை கட்டி வைப்பது எதனாலே?
எம்.ஜி.ஆர்.: சிற்ப வேலைக்கு பெருமை உண்டு அதனாலே
அன்னசத்திரம் இருப்பதெதனாலே?
என்.எஸ்.கே.: அன்னசத்திரம், என்ன சொன்ன?
எம்.ஜி.ஆர்.: அன்னசத்திரம் இருப்பதெதனாலே?
என்.எஸ்.கே.: பல திண்ணை தூங்கிப் பசங்க இருப்பதாலே, எப்படி?
எம்.ஜி.ஆர்.: பரதேசியாய்த் திரிவதெதனாலே?
பரதேசியாய் திரிவதெதனாலே?
என்.எஸ்.கே.: அவன் பத்துவீட்டு, அவன் பத்துவீட்டு சோறுருசி கண்டதாலே...
தம்பி இங்க கவனி, காரிருள் சூழுவது எவ்விடத்திலே?
தம்பி இங்க கவனி, காரிருள் சூழுவது எவ்விடத்திலே?
எம்.ஜி.ஆர்.: கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகதிலே
அண்ணே,கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
என்.எஸ்.கே.: சொல்லிப்புட்டையே,
எம்.ஜி.ஆர்.: புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
என்.எஸ்.கே.: புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
எம்.ஜி.ஆர்.: நான் சொல்லட்டுமா?
என்.எஸ்.கே.: சொல்லு
எம்.ஜி.ஆர்.: புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
என்.எஸ்.கே.: சரிதான் சரிதான்
எம்.ஜி.ஆர்.: உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
என்.எஸ்.கே.: கத்தி
எம்.ஜி.ஆர்.: இல்ல
என்.எஸ்.கே.: கோடாலி
எம்.ஜி.ஆர்.: இல்ல
என்.எஸ்.கே.: ஈட்டி
எம்.ஜி.ஆர்.: இல்ல
என்.எஸ்.கே.: கடப்பாரை
எம்.ஜி.ஆர்.: இல்ல
என்.எஸ்.கே.: அதுவும் இல்லையா, அப்புறம் பயங்கர மான ஆயுதம், அக்கினி திராவகமா இருக்குமோ
அது ஆயுதமில்லையே
அடே நீயே சொல்லுப்பா
எம்.ஜி.ஆர்.: உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைக்கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது
என்.எஸ்.கே.: ஆஹா
எம்.ஜி.ஆர்.: நிலைக்கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது!
ஆனால், மனிதர்களாகிய நமக்கு மிகவும் பாதுகாப்பாகவும், வழி தவறாமலும் முறையான வாழ்க்கை வாழுவதற்கு என்றும் நம் வாழ்வில் நமக்குப் பயன்படக் கூடிய ஆயுதம் அல்லது ஆயுதங்கள் எவை தெரியுமா?
கத்தி அல்ல; ஏ.கே.47 துப்பாக்கி அல்ல; பின் எவை என்று கேட்கிறீர்களா?
அதுபோல மொத்தம் ஆறு.
அவை வெறும் ஆயுதங்கள் அல்ல....!
அறிவாயுதங்கள்!
கூர்முனை மழுங்காத - எந்நாளும் அறிவுப் போர் முனையில், வாழ்க்கைத் தளத்தில் நம்மை பாதை நழுவாமல் பாதுகாப்புடன் நடத்திச் செல்லுபவை.
அதைச் சரியாகப் பயன்படுத்தினால் எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் அவற்றைச் சாதனைகளாக்கி சரித்திரம் படைக்கலாம்.
நம்பிக்கையோடு வெற்றி பெறலாம்!
புத்தரும், வள்ளுவரும், தந்தை பெரியாரும் தந்த ஆயுதங்கள்:
(1) ஏன்? எதற்கு? Why?
(2) என்ன? What?
(3) எப்போது? When?
(4) யார்? Who?
(5) எங்கே? Where?
இந்த 'ய'களும் 'ஏ'க்களையும் தாண்டி ஆறாவதாக எப்படி? How?- என்ற கேள்விகளை அடுக்கடுக்காகக் கேட்டு பிரச்சினைகளை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து பார்த்து, முடிவு எடுத்தால் வெற்றிக்கனி நம் மடியில் தானே வந்து விழுவது உறுதி! - ஒரே சொல் அதற்கு என்ன பொருள்? பகுத்தறிவு.
சில நேரங்களில் தோல்விகள் ஏற்படும்போதுகூட இதே கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்டு சிந்தித்தால் மறுமுறை வெற்றிக்கான விடைதானே வந்து கதவுகளைத் தட்டுவது உறுதி! உறுதி!!