நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் எம்.ஏ. தேர்வு முடித்து, தேர்வு முடிவுக்குக் காத்திருப்பான விடுமுறையில் இருந்தேன். ஈரோட்டில் பெரியார் மன்றத்தில் தங்கி; பல கட்டட புதுப்பிப்புப் பணிகளைப் பார்த்திருந்த வேளையில் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியாரிடமிருந்து அழைப்பு வந்தது. குறிப்பிட்ட பணிஏதும் தராமலேயே அவ்வப்போது பல நிகழ்வுகள் - இயக்கப் பணிகளைச் செய்யச் சொல்வார். புலவர் கோ. இமயவரம்பனும், நானும் அவைகளைச் செய்வதோடு, அதில் புத்தக வெளியீடு - 'குடிஅரசு' அச்சகத்தின் பொறுப் பாளர் இராமானுஜம் உள்பட இணைந்து பல பணிகளைச் செய்வோம்.
பெரியார் மன்றத்தில் ஒரு சிறிய அறையில் அய்யா பழைய கட்டிலில் - தரையில் ஓலைப் பாயில் அம்மா (அன்னையார்) அய்யா அருகில் (அய்யா விழுந்துவிடாமல் பாதுகாக்கும் நிலையில்) படுத்திருப்பார்.
கட்டிலேகூட அதிக உயரம் கிடையாது; பக்கத்தில் ஒரு சிறு சமையல் அடுப்பங்கரை - அம்மா சமையல், மன்றத்தில் சாப்பாடு. எங்களது படுக்கை, குளியல் எல்லாம் ஒரு பகுதியில் - பாய், தலையணை சகிதம். அய்யாவைச் சந்திக்க வரும் உறவுக்காரர்கள், ஊர்க்காரர்கள் வரை எப்படிப் பேசி விடயம் விசாரித்து மகிழ்கிறார்கள் என்பதைக் கண்டு அனுபவம் பெறும் வகுப்பு போல அந்த அன்றாட நிகழ்வுகள்!
ஈரோடு ப. சண்முகவேலாயுதம், பழம்பெரும் கொள்கை வீரர் - 'ஈரோட்டு பாதை' ஆசிரியர் - நகைச்சுவை ததும்ப பேசுபவர் - அறிஞர் அண்ணா 'விடுதலை' ஆசிரியராக ஈரோட்டில் தங்கிப் பணிபுரிந்த காலம் முதற்கொண்டு அய்யாவின் அருந்தொண்டர். - அவரது தொழில் பத்திரம் எழுதுதல். எனவே ஈரோட்டில் சொத்து விற்பனை - யார் யார் வீடு எங்கே எதற்காக எவருக்கு விற்கிறார்கள், யார் வாங்குகிறார்கள் என்பது இவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
ஆண்டுக்கு ஒரு முறை ஈரோட்டுக்கு வந்து சில நாள்கள் தங்குவார் அய்யா!
ஓராண்டு ஈரோட்டுக் குடும்பங்கள் பலரது கதைகளை விசாரித்து, ப. சண்முகவேலாயுதம் மற்றும் பெரு வணிகர்கள் அங்கப்பச் செட்டியார், அண்ணாமலை கவுண்டர் (அடையாளத்திற்காக ஜாதிப் பட்டத்தை விடாமல் எழுதுகிறேன்) முதலாளி சாயபு, பெரிய அக்கிரகாரத்தின் இஸ்லா மியத் தோழர்கள் - இஸ்மாயில் குடும்பத்தினரிடம் உரையாடுவார் (பெரிய அக்கிரகாரம் என்ற ஊர்த் தெரு. அங்கே பெரிதும் இஸ்லாமியர்களே வாழும் ஊராட்சி, அய்யாவிடமும் கழகத்திடமும் மிக்க அன்பு கொண்டவர்கள்).
விரல் விட்டு எண்ணிடக் கூடிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் ஒவ்வொரு வரையும் தனித்தனியே நேரில் அழைத்து, நலம் - குடும்ப வரவு - செலவுகள் உள்பட விசாரித்து உரையாடுவார் - இல்லை இல்லை உறவாடுவார் - பார்த்தும் கேட்டும் பரவசமாவோம்!
கருங்கல்பாளையம் பழனிவேலு, வாத்தியார் பெருமாள், பொடிக்கடை அரங்கசாமி, அய்யா வின் ஏஜண்ட் உதவியாளர் ஆர்.டி. முத்து, வீரப்பன் சத்திரம் தோழர்கள் - இப்படிப் பலர். பெரியாரின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள் அம்மாவும், அய்யாவும் உரையாடும் போது - அது மிக மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தரும்!
அன்னையார், எஸ்.ஆர். கண்ணம்மாள் அம்மாவுக்கு "இந்தாங்க என்று இரண்டுப் புதுப் புடவைகள் தருவாங்க", "கண்ணு, (இப்படித்தான் தன் தங்கையை அய்யா வாஞ்சையோடு அழைப் பார். நேரில் கண்ட காட்சி) என்ன வாங்கிட்டுப் போறே, வாகிட்டே" இப்படி வம்பிழுப்பார் அய்யா!
"ஆமா நீ மகராசன் ஊருக்கு, உங்க ஆளுங்க நாள் தவறாமல் ஏதாவது பணம் காசி கொடுத்துக்கிட்டே இருக்கிறாங்க - எனக்கு என்னப்பா - இது மாதிரி கொடுத்தா அதுவும் உனக்குப் பொறுக்கலையா" என்று இடித்துச் சிரித்துப் பேசுவார்!
அய்யா, "உனக்குக் கொடுக்கிறார்களே அதுவும் ஏங்காசிதான்! சரிசரி அனுபவிச்சுட்டுப் போ!" என்று பதில் கிண்டல் அடிப்பார்.
இரண்டு பேரும் பட்டிமன்றத்தில் இடம் பேசினால் கண்ணம்மாள் அம்மாதான் வெற்றி பெறுவார். அய்யா கண்ணம்மாள் அம்மாளிடம் பேசி ஜெயிக்க முடியாது!
என்ன வக்கணை, என்ன அண்ணன் - தங்கை பாசம் அந்த முதுமையில் என்று நாங்கள் வியந்து, மகிழ்ந்து, உணர்ந்து பார்ப்போம்!
எஸ்.ஆர். சாமி, அவரது அண்ணன் எஸ்.ஆர். சந்தானம் இருவரும் மவுனமாக சிரித்துக் கொண்டே நின்று எங்களுடன் சேர்ந்து வேடிக்கை மட்டும்தான் பார்ப்பார்கள்!
சண்முகவேலாயுதம் இருந்தால் கொஞ்சம் 'அன்பு கலகத்தை' சற்று முடுக்கி விட்டு அண் ணனையும், தங்கையையும் விவாதிக்க வைப்பார்.
இல்லையென்றால் விரைந்து ஈரோடு கச்சேரி வீதி இல்லத்திற்கு சாப்பாட்டுக்கு அய்யாவை அழைத்து விட்டு, சென்று விடுவார்.
ப.சண்முகவேலாயுதம் மாதிரி அய்யாவின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் சொன்னவர் எவரும் இல்லை. அவ்வளவு துல்லியமான கணிப்புடன் எங்களுக்கு அய்யாவைப்பற்றிச் சொல்வார். எங்களை அழைத்து நடைபயிற்சியில் பல சுவையான தகவல்களைச் சொல்வார்!
நினைத்து நினைத்துச் சிரித்து மகிழத்தக்க பல செய்திகள்.
(திங்கள் நீளும்)
ஈரோடு ப. சண்முகவேலாயுதம் அவர்களிடம் ஊர்க் கதைகளை, தன்னுடன் பழகிய பழம் பெரும் வியாபாரிகள், நண்பர்கள் அவர்கள் வாழ்வு, முன்னேற்றம், வளர்ச்சி - தளர்ச்சி பற்றியெல்லாம் கேட்டு அறிந்து கொள்வார்.
அய்யாவின் பழக்க வழக்கங்களைப் பற்றி எங்களுக்கும் 'பாடம் எடுப்பது போல' சுவைப் படச் சொல்லி வைப்பார்.
அய்யாவுக்கு யாராவது அவரை வெகுவாகப் புகழ்ந்தால் நேருக்கு நேர் - அது பெரிதும் அவரால் விரும்பப்பட மாட்டாது - ஆனால் அதை ஏற்க மறுக்கும் அவர், "'உம்' அப்புறங்க - வேறு என்ன செய்தி? முன்பு நான் ஒரு முறை உங்கள் வீட்டிற்கு வந்தபோது ரொம்ப முதுமை யோடு உங்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந் திருந்தாரே உங்கள் பாட்டி, அவர் எப்படி இருக் கிறார்? அவரது பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் எல்லாம் எங்கு எப்படி இருக்கிறார்கள்?" என்று எதிர்க் கேள்விகளை அடுக்கி, அவர்களது முகமன் கூறுபடலத்தை 'முடிவுக்கு'க் கொண்டு வருவார்!
சிலர் - தொணதொண வென்று பேசுப வர்களை நிறுத்த அவர் உரையாடலில் கலந்து கொள்ளாமல், அங்கே உள்ள பத்திரிகைகளை எடுத்து மிக ஆழமாக கவனம் செலுத்திப் படிக்க ஆரம்பித்துவிடுவார்!
எங்களிடம் நகைச்சுவை உணர்வு பொங்க தோழர் சண்முகவேலாயுதம் கூறுவார்.
"அய்யா பத்திரிகைகளில் எந்தப் பகுதியை அவ்வளவு 'டீப்பாக' (Deep) படிப்பார் தெரியுமா? நாளேட்டின் கடைசிப் பக்கத்தின் அடியில் கடைசியாக அச்சிடப்பட்டிருக்கும் 'Imprint' "இம்பிரிண்ட்" பகுதியை (அதாவது Edited, Printed, Published) என்று ஆசிரியர் அச்சிடுவோர், வெளியிடுவோர் எனப் போடப்பட்டிருக்கும் சிறிய எழுத்துக்கள்மீது அவர் கண்கள் பாய்ந்து கொண்டிருக்கும் என்றே தெரிகிறது" என்பார், மகிழ்ச்சி பொங்க!
"எவ்வளவு 'பெரிய கண்டத்திலிருந்து' தப்ப எவ்வளவு சாதாரண வழிமுறை பார்த்தீர்களா?" என்று நம்மிடம் வியந்து சிரித்துக் கொண்டே கூறுவார்!
ஒரு சம்பவத்தையும்கூடச் சொன்னார். நாம் அய்யாவைப் புரிந்து நடந்து கொள்பவர்களாக இருப்பின், அவர் பேப்பரை கையில் - நாம் அருகில் இருக்கும்போது, எடுத்து விட்டார் என்றால் விடை பெறுவதே சரியானது என்ப தாகும்" என்று சொல்லிவிட்டு ஒரு நிகழ்வைச் சுட்டிக் காட்டினார்.
ஒரு நாள் காலை அய்யா இருக்கும் பெரியார் மன்றத்திற்குச் சென்று ஏதோ முக்கிய தகவல் பற்றி அய்யாவிடம் கூறிக் கொண்டே இருந்த போது திடீரென்று அய்யா அன்று வந்த செய்தித் தாள்களை கையில் எடுத்துள்ளார்; உடனே ப. சண்முகவேலாயுதம் "சரிங்க அய்யா நான் கிளம் புறேன்" என்று சொன்னவுடன், "அய்யா, குறுக் கிட்டு என்ன சண்முகவேலாயுதம் இவ்வளவு சீக்கிரம் கிளம்புறீங்க -ஏதாவது அவசர வேலையா" என்றாராம்.
அதற்கு சண்முகவேலாயுதம் சிரித்துக் கொண்டே "அதெல்லாம் ஒன்றும் அவசரம் இல்லீங்கோ, அய்யாதான் கையிலே பேப்பரை எடுத்துட்டீங்களே! பின்னர் அப்புறம் நான் நிற்கலாமா?" என்றவுடன் அய்யாவும் சேர்ந்து சிரித்துவிட்டு, "அதெல்லாம் ஒண்ணுமில்லிங்கோ, இப்பத்தான் காலை பேப்பர் வந்தது படிக்கலே, படிச்சா ஏதாவது எழுதலாமே என்பதால் இயல்பாக நான் அப்படிச் செய்திருப்பேன்" என்றதோடு, சண்முகவேலாயுதம் வரும் போதெல்லாம் தனது படுக்கை அருகில் உள்ள நாளேடுகளை பேப்பர்களை அய்யா மிகக் கவனமாக வேறுபகுதிக்குத் தள்ளி வைத்து விடுவார்!
அண்ணா 'விடுதலை' ஆசிரியராக இருந்த போது, அவரும், எஸ்.ஆர். சந்தானமும், ப. சண்முகவேலா யுதமும் - கடற்கரைக்கு காற்று வாங்கச் செல்லுவது போல், ஈரோட்டில் உள்ள பிராட்கேஜ் ரயில் ஜங்ஷன் நிலையத்திற்குச் சென்று (நடைபயிற்சியும் செய்து) அங்கே நடைமேடையில் உள்ள கடைகளில் ஹிக்கின் பாதம்ஸ் புத்தக கடை தாண்டி, "ரஹ்மானியா கேட்டரிங் சர்வீஸ்" என்ற மாமிச உணவு Non vegetarian restaurants - அது பெரிதும் மாப்பிளா முஸ்லிம் நிர்வாகத்தில் பல ரயில் நிலையங்களில் உள்ள உணவு விடுதி! அதில் அண்ணா, எஸ்.ஆர். சந்தானம், சண்முகலோயுதம் ஆகியோர் தேநீர், சமோசா முதலியன சாப்பிட்டு விட்டு பேசிக் கொண்டிருப்பார்கள். ஹிக்கின் பாதம்ஸ் ரயில்வே புக் ஸ்டாலில் உள்ள நிர்வாகி அண் ணாவிடம் பற்று, பாசம் உள்ளவர். புதிதாக வந்துள்ள ஆங்கில புத்தகங்களை அண்ணா விடம் எடுத்துக் கொடுப்பார்; அண்ணாவுக்கு ஒரு 'ஸ்டூல்' போட்டுத் தருவார். அண்ணா அமர்ந்து பாதி புத்தகத்தை ஒரு நாளும், மீதிப் புத்தகத்தை இரண்டாவது நாளிலும் படித்து விடுவார். பயிற்சி எடுப்பதோடு மனதிலும் பதிய வைத்துக் கொள்வார்.
சண்முகவேலாயுதமும், எஸ்.ஆர். சந்தானமும் திரும்பும்போது அண்ணா அந்த நூல் பற்றிக் கூறிக் கொண்டே வருவார். அது 50 ரூபாய் விலை என்பதால் அண்ணா, விலைக்கு வாங்க முடியாதல்லவா அந்தகால கட்டத்தில். எனவே படித்ததைச் சொன்னதை அய்யாவிடம், அண் ணாவோ, சண்முக வேலாயுதமோ, சொல்லி தகவல் சொல்வதுபோல சுவைப்பட வர்ணிப்பார்.
அப்போது அய்யா எப்படி புரிந்து என்ன செய்தார்?
(நாளை பார்ப்போம்)