"உவமைக் கவிஞர்" என்று இலக்கிய உலகத்தில் பெயர் பெற்ற கவிதைச் சிங்கம் சுரதாவின் 101ஆவது பிறந்த நாள் இன்று! (23.11.2021)
புரட்சிக் கவிஞரின் "பாரதி தாசன் பரம்பரை"யில் முளைத்துக் கிளம்பி, அவரது கவிதை உலகின் தனிப் பெரும் வாரிசாக விளங்கி வரலாறு படைத்தவர். "சுப்புரத் தின தாசன்" என்ற புனைபெயர் கொண்டு அதைச் சுருக்கியே 'சுரதா' ஆனவர்!
நாத்திகக் கவிஞன் என்று எங்கும் எப்போதும் அறிமுகப்படுத்திடத் தயங்காத, முழங்கிய கவிஞர் அவர்!
எந்நிலையிலும் தன் நிலைதாழா - தலை தாழாச் சிங்கமென சிலிர்த்துக் கிளம்பத் தயங் காதவர் உண்மையை உரைக்கத் தயங்காத நம் உவமைக் கவிஞர் சுரதா!
அவர் திரையுலகிலும் சிறப்பான முத்திரை பதித்தார், தான் எழுதிய பாடல்கள் மூலம்! உயிரோட்டமும், உணர்ச்சிப் பெருக்கும் அந்த ஊற்றின் சுரப்பில் சுரந்து கொண்டே இருக்கும்!
'ஒரு முழு ஜிப்பா, தோளை அலங்கரித்த நீண்ட சால்வை.
பளிச்சென்று வந்து விழும் 'பதில்கள்' என்னும் சொடுக்கு.
இளங்கவிஞர்களை ஊக்குவித்து எழுச்சி பெற வைத்து, வெளிச்சத்தைப் பாய்ச்சி, அவர்களை ஊர் மெச்ச உயர்த்தத் தவறாத தாராள உள்ளத்தின் தனிப் பெரும் வள்ளல்! தானே 'ஒரு குருகுலம்' 'கண்டதுபோல ஏராளமான கவிதைத் தோழர் களை விதைத்து, அறு வடைக்கு ஆயுத்தமாக்கி அழகு பார்த்த பெரு உள்ளத் தின் பெருஉரு உவமைக் கவிஞர்.
சுயமரியாதை - தன்மானம் என்றால் தன்னை உயர்த்திக் கொள்ளுவது, அல்லது தன் நிலை தாழாது மட்டுமல்ல; பிறர் நிலையையும் தாழ்த்தாது, பிஞ்சுக் கவிஞர்களை யும் பெற்றோர் குழந்தைகளைதம் தோளில் தூக்கி வைத்து மகிழ்ச்சியடையச் செய்வதுபோல் வேறு எத்துணைக் கவிஞர்கள் செய்தார்கள்?
கவியரங்கத்தின் கைதட்டல்களையே எண்ணிக் கொண்டிருக்கும் கவிஞர் உலகத்தில் சுரதா அதுபற்றி சிறிதும் எண்ணாமல் மின்னலாக மின்னி, இடியாக இடித்து, மழையாகப் பொழிந்து வான் சிறப்பை மிஞ்சும் தேன் சுரப்பு இவர்தம் கவிதைகள்!
காதலானால் ஒரு குளிர்ச்சி தண்மதி போல!
வீரமானால் ஒரு வெடிப்பு. அதிரச் செய்யும், ஆத்திரம் கொப்பளித்து களத்துமேட்டு கடமை வீரனின் கண்துஞ்சா போர் வீரனின் வேட்டு முழக்கம்போல!
சென்றவிடங்களில் எல்லாம் கவிதை எழுதும் தோழர்களை ஊக்கப்படுத்தியதோடு, மண்ணின் மைந்தன் அவர் என்பதை உணர்த்தி மண்ணை ஒரு பிடி எடுத்து வந்து சேர்த்து அதற்கு அவர் சொன்ன விளக்கம் ஒப்பற்ற உயரத்திற்குரியது!
கவிஞர்கள் மறைவதில்லை. அதிலும் புரட்சிக் கவிஞர், சுரதா, பட்டுக்கோட்டையார், தமிழ் ஒளி போன்ற பகுத்தறிவு கவிஞர்கள் நம்மில் வாழ்ந்து கொண்டே இருப்பவர்கள். 'தமிழுக்குத் தொண்டு செய்வோர் மறைவதில்லை' என்ற புரட்சிக் கவிஞர் வாக்கு - இதோ ஒன்று சான்று.
உவமைக் கவிஞர் சுரதா வாழுகிறார் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்; இருப்பார் ஒவ்வொரு கவிஞன் சுயமரியாதை சூட்டுக்கோல் போன்ற அவர்களின் எழுதுகோல் கவிதை வரிகளை எழுதி சூடுபோடும் வரிகள் மூலம் என்றும் வாழ்வார்!
இவர் போன்றோர் என்றும் தாழ மாட்டார்கள், மறையமாட்டார்கள். நிறைந்தவர்களாகி உள்ளத் தில் உறைந்தவர்களாகி விடுவர்!
இலக்கிய உலகில் தன்மான முழக்கம் கேட்கும் பொழுதெல்லாம் கவிஞர் சுரதாவின் கவிதை மணியோசை வெண்கல ஒலியாக ஒலித்து உறக்கத்தில் வாழ்வோரை எழுப்பவே செய்யும்.
வாழ்க சுரதா, வருக அவர் காண விரும்பும் ஜாதி மதமற்ற புதுஉலகு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக