சில நாட்களுக்கு முன், Tim Radford - டிம். ராட்போர்ட் என்பவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பேராசிரியர் ராபர்ட்சன் என்பவர் கூறிய கருத்து - அதன் தலைப்பு!
"Old age now begins at 80"
"முதுமை என்பது 80 வயதிலிருந்துதான் தொடங்குகிறது" என்பதுதான்!
80க்கும் உட்பட்டவர்களுக்கு இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறு இருக்க முடியுமா?
எனவே நமது வாசகப் பெரு மக்களில் எவரெல்லாம் 79 வயது வரை உள்ளவர்களோ, அவர்கள் எல்லாம் 'நான் இளைஞன், வாலிபன்' என்று மகிழ்ந்து கூத்தாடலாமே!
தந்தை பெரியார் பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார்:
"நான் ஒருவரை முதியவர் - வாலிபர் என்று மதிப்பீடு செய்வது அவர்கள் வயதை வைத்து அல்ல; மாறாக அவர்களது செயலையும், உணர்வுகளையும், துடிப்போடு கூடிய சுறுசுறுப்பையும் வைத்துதான்" என்று வரக் கூடிய மாதிரி கருத்து கூறியுள்ளார்கள்.
டப்ளினில் உள்ள நரம்பியல் விஞ்ஞான அமைப்பான, டிரினிட்டி கல்லூரிப் பேராசிரியர் மேற்சொன்ன கருத்தின் மூலம் - '80களிலிருந்தே முதுமை' என்ற அறிவிப்பின் மூலம் 50 முதல் 79 வரை வயதுள்ள 30 ஆண்டுகள் மேலும் வாலிபப் பருவமாக "போனஸாக" கிடைத்துள்ளதல்லவா?
பிரிட்டிஷ் அசோசியேஷனின் அறிவியல் திருவிழாவிலே இப்படிக் கூறியுள்ளார் டிம்! "ஸ்ட்ரோக்" (Stroke) என்ற பக்கவாதம் தாக்கும் சராசரி வயது 72 என்று ஒரு குறிப்பும் உள்ளது.
"ஆனால் 1999-இல், எனது நோயாளிகளின் வயது 82; ஆனால் இந்த 15 ஆண்டு சுற்றுக்குள் திடீரென்று 10 வயது குறைந்து இளமைத் துடிப்போடு செயல்படுகிறார்கள்.
சிலர் - நானே என் கண்களை நம்ப முடியாத அளவுக்கு எனது நோயாளிகள் பலர் 10 வயது குறைந்து "இளைஞர்களாகி" விட்டதை நேரிலும் கண்டு மகிழ்ந்தேன்"
மனித மூளை ஒருவகையில் நெகிழ்வு நிறைந்தது; அனுபவத்தினாலும், கற்றல், பயிற்சி இவைகள் மூலமாகவும் அதுமேலும் உருவாக்கத் திற்கு ஆளாகிறது.
பழைய ரோமானியர்களுக்கு (Ancient Roman's) சராசரி வயது 22தான்! அதுவரைதான் வாழ்ந்த நிலை அப்போது!
20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் அய்ரோப்பியர்கள் சராசரி 50 வயது வரை வாழும் வாய்ப்பைப் பெற்று வளர்ந்தனர்!
முன்பு 60 வயதுவரை வாழ்ந்த பிரிட்டிஷ் பெண்மணிகள் இப்போது (சராசரியாக) 83 வயதுவரை வாழ்வார்கள் என்பது இவர்கள் ஆய்வு மூலம் கண்டறிந்த உண்மை!
50 வயதுக்கு மேல் எப்படி ஒருவர் நடந்து கொள்ளுகிறார் என்பதைப் பொறுத்தே அவரது "இளமை" நிர்ணயிக்கப்படுகிறது!
1) மூச்சுப் பயிற்சி (Aerobic fitness) தகுதி மிக முக்கியம். மூளையின் வடிவமைப்பும், வேலையும் செயல்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன!
2) மனதினைத் தூண்டிக் கொண்டே இருத்தல் (Mental Stimulation) மிக முக்கியம்.
மனப்பயிற்சியை (உடற் பயிற்சிபோல) ஒழுங்கு படுத்தி செய்து கொண்டே இருந்தால் நமது நினைவாற்றல் முதலியனவற்றைத் தாழாது தடுக்கலாம்.
3) புதிது புதிதாக கற்றுக் கொள்ளல் மிகவும் முக்கியம்; கற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் முக்கியம் என்று உணர்ந்த 'முடியும்' என்ற தன்னம்பிக்கையையும் அதுதானாகவே ஏற்படுத்தும். மனித மூளையின் வளர்ச்சிக்கு அது பெரிதும் துணை புரியும்.
4) தொடர்ந்த மன அழுத்தம் (High-Prolonged Stress) எதிர்மறை விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். குறிப்பாக நமது நினைவாற்றலை அது வெகுவாக பாதிக்கவும் செய்யும்.
5) பலருடன் கலகலப்புடன் பழகி வாழும் சமூக வாழ்வு பெரிதும் இளமைக்குப் பால் வார்க்கும். அடிக்கடி கலந்துரையாடல் நமது மூளையின் வளத்தை - வலிமையைத் தீட்டிக் கொடுக்கும்!
6) ஆரோக்கியமான உணவு முறை முக்கியம். பழங்கள், காய்கறிகள், மீன் வகைகளும் நிச்சயம் நமது சிந்தனை குன்றாமல் இருக்கப் பெரிதும் உதவிடும் என்பதும் நிச்சயம்!
7) இறுதியாக இளமையான சிந்தனை தேவை (Think Young). இளைய வயதினராக உங்களை எண்ணி, ஒரு வகை தாழ்வு மனப்பான்மையை விரட்டித் துடிப்புள்ளவராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
"நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது
வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்"
என்று துணிந்து செயலில் இறங்குங்கள்.
வெற்றி உமதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக