மருத்துவத்துறையின் அறிவியல் - தொழில் நுட்ப வளர்ச்சி 'ராக்கெட்' வேகத்தில் வளர்ந்து, மனிதகுலத்தை மறுவாழ்வு கொண்ட மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்லுகிறது!
மனிதர்களின் பகுத்தறிவின் ஆற்றல் பெற்றெடுத்த அற்புத சாதனைக் குழந்தை இந்த சாதனை!
இன்று நாளேடுகளில் ஒரு செய்தி:
"மதுரையிலிருந்து சென்னைக்கு 76 நிமிடங்களில் - முன்பு விபத்துக்குள்ளாகி மூளைச் சாவு அடைந்தவரின் நுரையீரல் (Lungs) - 29 வயதுள்ள இளைஞனுடையது - அது பிறருக்குப் பயன்பட்டு மற்றவர் புதுவாழ்வு பெறுவதன் மூலம், 'மறைந்தவர் சாகவில்லை; வாழ்கிறார்' என்ற மகிழ்ச்சி ஊற்றைப் பெறும் வகையில் மானுடநேயத்தில் - அதை சென் னையில் தேவைப்பட்ட ஒருவருக்கு விபத்தினால் ஏற்பட்ட பெரும் இழப்பு, துக்கம் - துயரம் - இவற்றைத் தாண்டி மற்றவருக்குக் கொடை யளித்து ஈத்துவக்கும் இன்பத்தைப் பெறுகிறது அந்த இளைஞரின் குடும்பம். புதிய நுரையீரல் பொருத்தப்பட்டு புதுவாழ்வு பெறும் மற்றொரு குடும்பம். எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகிறது!
'ஒருவர் பொறை; இருவர் நட்பு' என்று ஒரு வழக்கமான சொலவடை உண்டு.
இப்போது அதையே சற்று மாற்றி, இப்படி
'ஒருவர் கொடை; இரு குடும்பத்தவரின் இணையற்ற 'மகிழ்ச்சி' என்றுதான் சொல்ல வேண்டும் போலிருக்கிறது!
நுரையீரலை கொடை யாகத் தந்தவர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்; (இவரது துணை வியார் கருவுற்று இருப்பவர்) இவரது குடும்பம் மிகுந்த மனிதநேயத்துடன் இப்படி உறுப்புக் கொடை தந்து உயர்ந் துள்ளது! மூளைச் சாவு அடைந்த இளைஞனின் சிறு நீரகங்கள், இருதயம், கண்கள், நுரையீரல் எல்லாம் எடுக்கப் பட்டு பலருக்கும் பொருத்தப் பட்டு புதுவாழ்வு அவர்களுக் குத் தருவதில் அணியமாகி நிற்கின்றன!
சென்னை 'ஃபோர்ட்டீஸ்' மருத்துவமனையில் டாக்டர் கோவினி பால சுப்பிரமணி இந்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளார்!
கொடுத்தவரும், பெற்றவரும் வெவ்வேறு ஊர்க்காரர்கள் மட்டுமல்ல, வெவ்வேறு ஜாதி, மதத்தவராகக்கூட இருக்கலாம்!
ஜாதி - மதம் போன்ற வேற்றுமைப்படுத்தும் - மனிதகுலத்தைப் பிரித்து பாழ்படுத்துபவைபற்றி கவலைப்படாது இந்த உறுப்புக் கொடை. அந்த செயற்கைப் பிரிவினை களைப் பொய்யாய் ஆக்கி விட்டதல்லவா?
'ஜாதியாவது ஏதடா? மதங்களாவது ஏதடா?' - இவை மனிதகுல ஒற்று மைக்கு உலை வைப்பவை;
மானுடநேயம், அறி வியல் - வெளிச்சம் மட்டுமே மக்கள் சமூகத்தை இணைப்பன; பிரிப்பன அல்ல.
பெரியாரின் சுயமரி யாதை - சமத்துவம் வென் றது - இந்த சாதனை மூலம்!
'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற திராவிடத்தின் சமத்துவ சங்கநாதம் எங்கும் கேட்கிறது!
உறுப்புக் கொடை தந்த உயர்ந்த உள்ளத்துக்கு சொந்தக்காரர்களை நாம் பாராட்டி மகிழ்கிறோம்.