2500 ஆண்டுகளுக்குமுன் பகுத்தறிவைப் பயன்படுத்தி, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சி னைகளையும் எதிர்பாராத நிகழ்வுகளையும் எப்படி எதிர் கொள்ளுவது என்பதை புத்தர் கூறியதை (ஜப்பானின்) 'இச்சிகோ இச்சியே' நூலில் குறிப்பிடும் பகுதி நமது வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ள என்றென்றும் வழிகாட்டும்; துணை நிற்கும் என்பதால் அப் படியே தருகிறோம் - 'கற்க அதன்பின் நிற்க அதற்குத் தக' -
"புத்த மார்க்கத்தில் கூறப்படுகின்ற துக்கம் என்ற வார்த்தை, வேதனை என்று தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. நாம் எல்லோரும் எப்போதும் நமக்குள் உணர்கின்ற பதற்றமான மற்றும் அதிருப்தியான உணர்வுதான் துக்கம் என்று அதை அர்த்தப்படுத்துவதுதான் பொருத்த மானதாக இருக்கும். ஏனெனில், மாற்றம் தவிர்க்கப்பட முடியாதது என்பதை எல்லோரும் அறிவர்.
இதை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக இதிலிருந்து தப்பிப்பதற்கு நம்முடைய வாழ்க்கை முழுவதும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். மது, போதை மருந்துகள் போன்ற ஏதாவது ஒன்றுக்கு அடிமையாதல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
நவீனச் சமுதாயம் யதார்த்தத்திலிருந்து தப்பிக்கப் பல வழிகளை முன்மொழிகிறது. நம்மை முழுமையாகத் தொலைத்துக் கொள்வ தற்கு வழி வகுக்கின்ற கணினி விளையாட்டுகள், இணையத்தளப் பொழுதுபோக்குகள், போதை மருந்துகள், மது வகைகள் மற்றும் இன்னும் பிற குறிப்பாக, நாம் ஒரு நெருக்கடியைச் சந்திக்கும் போதோ அல்லது இழப்பை எதிர்கொள்ளும் போதோ, வாழ்க்கையின் நிலையாமையிலிருந்து விலகியிருப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க நாம் விழைகிறோம்.
எதுவுமே நீடித்து நிற்பதில்லை , அது நல்லதாக இருந்தாலும் சரி, மோசமானதாக இருந்தாலும் சரி! இந்த உண்மையை ஏற்றுக் கொள்வதுதான், வாழ்க்கை நமக்கு வழங்குகின்ற மேலான கணங்களை முழுமையாக அரவணைத்துக் கொள்வதற்கும், நெருக்கடியான நிலைகளை எதிர்கொள்ளும்போது நம்பிக்கை இழக்காதி ருப்பதற்குமான சிறந்த வழி.
இரண்டாம் அம்பு
நம்முடைய வாழ்க்கையில் கண்டிப்பாகத் தலைதூக்குகின்ற துக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு புத்தர் தன் சீடர் ஒருவருக்கு ஒரு வழியைக் கற்றுக் கொடுத்தார். அக்கதை இப்படிச் செல்கிறது: -
புத்தர் தன் சீடனிடம், ஒரு மனிதன் காட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அவனை ஓர் அம்பு தாக்குகிறது. அது அவனுக்கு வலி ஏற்படுத்துமா? என்று கேட்டார்.
இதிலென்ன சந்தேகம்? கண்டிப்பாக வலி ஏற்படுத்தும், என்று அவன் பதிலளித்தான்.
அதற்கடுத்து அவன் இரண்டாவது அம்பு ஒன்றால் தாக்கப்பட்டால் அவனுடைய வலி அதிகரிக்குமா? என்று புத்தர் கேட்டார்.
"கண்டிப்பாக. முதலாவது அம்பு ஏற்படுத்தி யிருந்ததைவிட அது அதிகமாக வலிக்கும். முதலாவது அம்பு நமக்கு நடக்கும் மோசமான விஷயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆனால் அவற்றை நம்மால் தவிர்க்க முடியாது. அவற்றின்மீது நமக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் இரண்டாவது அம்பை விடுவது நாம்தான். அப்படிச் செய்வதன் மூலம் நமக்கு நாமே தேவையற்ற பாதிப்பை உண்டாக்கிக் கொள்கிறோம்," என்று புத்தர் கூறி முடித்தார்.
நாம் என்ன உணர்ந்தோம் என்பது குறித்து நாம் உணர்வதுதான் அந்த இரண்டாவது அம்பு.
நமக்கு மோசமான விஷயங்கள் நிகழும்போது நாம் வலியை உணர்கிறோம். ஆனால் கெட்டவாய்ப்பான அத்தாக்கத்திற்குப் பிறகு, நமக்கு என்ன நிகழ்ந்தது என்பது குறித்து நாம் மருகுகிறோம். அது குறித்து நாம் அதிகமாகச் சிந்திக்கச் சிந்திக்க நம்முடைய வலி அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதுதான் அந்த இரண்டாவது அம்பு.
நம்மால் முதல் அம்பைக் கண்டிப்பாகத் தவிர்க்க முடியாது. ஏனெனில், வாழ்க்கை என்பது ஆபத்துகளை உள்ளடக்கிய ஒரு சாகசப் பயணம். ஆனால் நம்மை நோக்கி இரண்டாவது அம்பு ஒன்றை எய்வதை நம்மால் தவிர்க்க முடியும். முதலாவது நிகழ்வு குறித்து நாம் கொண்டிருக்கும் பதற்றமும் அது குறித்து நாம் கொள்கின்ற கவலையும்தான் அது.
இதை புத்தர் தன்னுடைய மிகப் பிரபலமான கூற்றின் மூலம் சிறப்பாகத் தொகுத்தளிக்கிறார்: "வலி தவிர்க்கப்பட முடியாதது. ஆனால் வேதனை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற ஒன்று."
இரண்டாவது அம்பால் விளையக்கூடிய வேதனையைத் தவிர்ப்பதற்கான உத்திகள் சிலவற்றை இப்போது நாம் பார்க்கலாம்.
* வாழ்க்கை என்பது இன்னல்கள், திருப்தி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்று என்பதை புரிந்து வைத்திருத்தல்
முதலாவது இல்லாமல் இரண்டாவதை நம்மால் அனுபவிக்க முடியாது. ஏனெனில், மாற்று என்ற ஒன்று இருந்தால்தான் வாழ்க்கையை அனுபவிக்க முடியும். தாகத்திற்குப் பிறகு கிடைக்கும் நீர்தான் அதிகச் சுவையானதாக இருக்கிறது. வருத்தமாகவும் தனிமையாகவும் இருந்த பிறகு கிடைக்கின்ற அன்பு கொண்டாடப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது.
* வலி என்பது ஒரு தற்காலிகமான உணர்ச்சிதான் என்பதை அறிந்து வைத்திருத்தல்
நம்மைக் காயப்படுத்தும் எதுவும் என்றென்றும் நிலைத்திருக்கப் போவதில்லை - அவற்றின் எதி ரொலியை நீட்டிக்க நாம் பிடிவாதமாக இருந்தா லொழிய! வலியில் உழன்று கொண்டிருக்காமல், அதை வெறுமனே அனுபவித்துவிட்டுக் கடந்து செல்ல நாம் முடிவு செய்தால், அந்த வலி மெது வாக மறைந்துவிடும், நாமும் ஓர் அருமையான படிப்பினையைச் சம்பாதித்திருப்போம்.
* கெட்ட வாய்ப்புகளை ஈடு கட்டுவதற்காக இச்சிகோ இச்சியே கணங்களைக் கொண்டாடுதல்
நாம் தனியாக இருந்தாலும் சரி, நாம் நேசிக்கும் நபர்கள் சூழ இருந்தாலும் சரி, இன்னல்களிலிருந்து மீள்வதற்கான சிறந்த வழி வாழ்க்கையின் ஒளிமயமான பக்கத்தைக் காட்டுகின்ற ஓர் அழகான அனுபவத்தை நமக்கு நாமே பரிசளித்துக் கொள்வதுதான். இது குறித்து மேலும் பல எடுத்துக்காட்டுகளை பின்னர் நாம் பார்க்கலாம்.
இதைச் சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், வலியெனும் முதலாவது அம்பை ஏற்றுக் கொண்டு, அது குறித்த நம்முடைய உணர்வு களிலேயே மூழ்கிக் கிடப்பதால் உருவாகின்ற வேதனையெனும் இரண்டாவது அம்பால் நம்மை நாமே வதைத்துக் கொள்ளாமல் இருந்தால், நமக்கு நாமே சுயதண்டனை கொடுத்துக் கொள்வதை நம்மால் தவிர்க்க முடியும், வாழ்க்கை நமக்கு அளிக்கின்ற அனைத்து நல்ல விஷயங்களையும் நம்மால் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்.
ஒரு தேநீர் விருந்துக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுதல், நாம் ஆழமாக நேசிக்கின்ற ஒரு விளையாட்டை விளையாடுதல், நமக்குப் பிடித்த இசையைக் கேட்டல், ஒரு நல்ல பொழுதுபோக்கை உருவாக்கிக் கொள்ளுதல், நெருங்கிய நண்பர்களுடன் நேரத்தை இனிமை யாகச் செலவழித்தல் போன்றவற்றில் நூறு சதவீத இச்சிகோ இச்சியே மனப்போக்குடன் ஈடுபட்டால், நாம் நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு சோத னைகளையும் ஏமாற்றங்களையும் எதிர்கொண் டாலும், வாழ்க்கையோடு ஒரு செம்மையான பிணைப்பை நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
எனவே, பிரச்சினைகளைக் கண்டு அஞ்சாதீர்! தவிர்க்க இயலாததை ஏற்கத் தயாராகி "வலியைக் குறைத்து, வேதனையை விரட்டியடியுங்கள் - மகிழ்ச்சியை அரவணையுங்கள் - எல்லாம் நம் மனதில்தான் முடிவில்தான் உள்ளது" - புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே!