பி.ஏ. ஆனர்ஸ் (பொருளாதாரம்) தேர்வினை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எழுதி முடித்து பிறகு ஓராண்டு அப்பல்கலைக் கழகத்தில் எனது பொருளாதார பேராசிரியர் எஸ்.வி. அய்யர் தலைமையில், ஒரு பொருளாதார ஆய்வுக் குழு போர்டு பவுண்டேஷனின் உதவியோடு நடை பெற்ற ஆய்வுக்கு என்னை ஒரு முக்கிய ஆய் வாளர் பணிக்கு (Economic Investigator) எனது பேராசிரியர் நியமனம் செய்தார். விரிவுரையாளர் தகுதி - அதே சம்பளம் தான் (அப்போது ரூபாய் 150 தான்) ஓராண்டு எனது ஆசிரியர்களுடன் சக தோழனாக இருந்து பணி புரிந்தேன்.
அதை முடித்து சட்டக் கல்லூரியில் சேர்ந்த நிலையில்தான் ஈரோட்டுக்கு கோடை விடுமுறையில் அய்யா வரச் சொல்லி 'காமராசர் ஆட்சியின் சாதனைகள்' நூல் உருவானது பற்றி முந்தைய கட்டுரைகளில் எழுதினேன்.
அப்போது திருச்சியில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் நடைபெறவிருந்தது. அய்யாவுடன் ஈரோட்டிலிருந்து நானும் - அய்யா அழைத்தார் - உடன் சென்றேன். சில நாள்கள் ஈரோட்டில் தங்கியிருந்தது பற்றி முன்பே எழுதியுள்ளேன்.
கமிட்டியின்போது அய்யாவுக்கு மனச் சங்கடத்தை ஏற்படுத்திய நிகழ்வு . திருச்சி வழக்கில் அய்யா தி.பொ. வேதாச்சலம் அவர்கள் தனது மத்திய கமிட்டித் தலைவர் பதவியை இராஜினாமா செய்து தந்தை பெரியாருக்கு விலகல் கடிதம் அனுப்பியதை, அய்யா கமிட்டியில் படித்ததோடு, அவரது பதவி விலகலை ஏற்று, கமிட்டியில் அறிவித்தும், அந்த இடத்திற்கு மத்திய கமிட்டிச் செயலாளராக இருந்த 'விடுதலை' ஆசிரியர் 'குத்தூசி' சா. குருசாமி அவர்களை நியமித்தார்!
அக்கமிட்டியில், அதற்குமுன் சென்னை சிறைச் சாலையில் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கைதாகிய சென்னைத் தோழர்களிடையே குழு மனப்பான்மையை ஏற்படுத்தி விட்டார் மேனாள் 'விடுதலை' ஆசிரியர் அவர்கள் என்று சில மத்திய கமிட்டி உறுப்பினர்கள் அய்யா முன்னி லையில் பகிரங்கமாக கமிட்டியில் புகார் கூறி குற்றம் சுமத்தினார்கள். வெளியில் வந்தும் அதை மேலும் தொடர்ந்து 'விடுதலை'யின் தலையங்கத் தில் ஜாடைமாடையாக தங்களைக் குத்திக் காட்டித் தாக்கி எழுதுகிறார் ஆசிரியர். அதற்கு அய்யா தான் தக்க பரிகாரம் காண வேண்டும் என்று சிலர் (சென்னைத் தோழர்கள்) கூறியது கேட்டு தந்தை பெரியார் 'விடுதலை' ஆசிரியர் குத்தூசியாரைக் கமிட்டியில், 'என்னங்க இது மாதிரி தோழர்கள் கூறுகிறார்களே இது உண்மை தானா?' என்பது போன்று மென்மையாகவே கேட்டார்; அதற்கு குத்தூசியாரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், 'என்னிடம் 'விடுதலை'யில் எழுதிடும் பொறுப்பைக் கொடுத்தீர்கள்; நான் எழுதினேன்' என்று கூறியது கேட்டு கமிட்டியினர் சங்கடப்பட்டனர்.
அப்போதுதான் அய்யாவின் கோபம் பார்த்தோம். "மிஸ்டர் குருசாமி, நீங்கள் ஆசிரியர் தான். நீங்கள் சுதந்திரமாக எழுத உங்களுக்கு முழு உரிமை உண்டு. அது உங்கள் பத்திரிகையாக இருந்தால்; பத்திரிகை என்னுடையது அதனை மறந்து, இயக்கத்தைப் பாதிக்கும்படி அதில் எழுத உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது" என்று பதில் அளித்தார் தந்தை பெரியார்.
ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தார்.
இயக்கக் கட்டுப்பாட்டினை ஒரு தலைவர் எப்படி,. தயவு தாட்சண்யமின்றி - யார் எவர் என்று பார்க்காமல், அவரது நடத்தையை மட்டுமே பார்த்து இயக்கத்தினை நடத்தி வளர்க்க வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு அனுபவ பாடம் அல்லவா?
அதே நேரத்தில் சற்று நேரத்திற்குப் பிறகு, இப்படி நடந்து வந்தாலும்கூட, அவர்களுக்கும் திருந்திட மற்றொரு வாய்ப்பு தர வேண்டும் என்பதுபோல் தலைவர் தந்தை பெரியார் தி.பொ. வேதாச்சலனார் அவர்களின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டு, மத்திய நிர்வாகக் குழுவின் தலைவராக - அவரது இடத்திற்கு 'விடுதலை' ஆசிரியர் சா. குருசாமி அவர்களை நியமித்தார்!
அத்துடன் மத்தியக் கமிட்டியின் செயலாளர் களாக (பொதுச் செயலாளர் என்ற சொல்லாக்கத் தினை அந்த கால கட்டத்தில் திராவிடர் கழகம் பயன்படுத்து வதில்லை). ஆனைமலை, ஏ.என். நரசிம்மன் பி.ஏ. அவர்களையும், என்னையும் (கி.வீரமணி) நியமித்து ஒரு அறிவிப்பையும் அறிவித்து என்னை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டார்!
அந்த அறிவிப்புபற்றி கிளப்பப்பட்ட ஒரு அய்யத்திற்கு அய்யா அளித்த விளக்கம் என்ன?
(அடுத்து பார்ப்போம்)