பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

மகிழ்ச்சியை விலை போட்டு வாங்கவா முடியும்

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
மகிழ்ச்சி
மகிழ்ச்சி என்பதும் நிரந்தரமல்ல; துயரம், துன்பம் என்பதும் நிரந்தர மல்ல. நிரந்தரமாக அவை இருந்திடின், இரண்டின் தனித் தன்மை நமக்குத் தரும் அனுபவங்கள் காணாமற் போய்விடும்.
மகிழ்ச்சியின்மை - ஒவ்வொரு வரது வாழ்விலும் ஏற்படுவது இயற் கையே - தவிர்க்க முடியாததும்கூட.
சில நேரங்களில் மகிழ்ச்சிக்கு விலை கிடைக்காமலே அது நமக்குக் கிடைக்கிறது.
பல நேரங்களில் அதிக விலை கொடுத்துத்தான் அதைப் பெற்றாக வேண்டும்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மேல் முறையீட்டு வழக்கில் அவர்கள் விடுதலை என்று ஒரு தீர்ப்பு வந்து அவர்களது சிறைக் கதவுகள் திறக்கும்போதும், 10 மாதம்  சுமந்து பெற்று, தனக்காக இல்லா விடினும் தனது கருவினுள் உள்ள குழந்தைகளுக்காக எல்லாவித பத் தியங்களையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, பிரசவ வேதனை - அறுவை சிகிச்சை வரை சென்றும், குழந்தையின் நலன் காக்கும்  தியாகம் - துன்பத்தைத் துடைத் தெறிந்து, மகிழ்ச்சியை, பிறந்த குழந்தையின் உச்சி மோந்து முத்தம் தருகின்ற போது, விலை கொடுத் தாலும் நல்லதைப் பெற்றோம் என்ற தாயின் மகிழ்ச்சியையும் அளவிட அளவுகோல்தான் உண்டா?
மகிழ்ச்சி ஏற்பட்டாலும், துன்பம் துயரம் நம்மைத் தாக்கினாலும்கூட, அதை நம்மில் சிலர் மறைத்து வைத்துக் கொள்ள முயலுகிறார்கள்; அது தேவையற்ற ஒரு தவறான அணுகு முறையாகும். எதையும் வெளிப்படையாக்கிக் கொண்டால் தான் கனத்த இதயம் லேசாகி நமக்கு நிம் மதியைத் தரும்! விரைந்து அது அகல வாய்ப்பு ஏற்படும்.
மகிழ்ச்சியைக் கண்டபோது சிலர் அளவு கடந்த துள்ளல், ஆட்டம், பாட்டம் போட்டு ஊரையே துவம்சம் செய்து விடுவார்கள். அதுபோலவே ஒரு சிறு அளவுக்குத் துன்பமோ, துயரமோ வந்தால் அதைத் தாங்கும் மன வலிமை இல்லாது மனந்தளர்ந்து, மூலையில் ஒடுங்கிக் கிடப்பர்.
இரண்டு எல்லை தாண்டிய நிலைப் பாடும் மகிழ்ச்சியான சராசரி பக்குவம் கொண்ட மனிதருக்குத் தேவையில்லை.
மகிழ்ச்சியை, எப்படிப் பெறுவது என்று ஏராளமான ஹிதோபதேசங்களும் - அறிவுரைகளும் - ஒலி நாடாக்களும், புத்தகங்களும் வியாபாரப் பொருள்களாகி சந்தையில் மலிந்து கிடக்கின்றன.
விற்றவருக்கு மகிழ்ச்சி - அது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு. மகிழ்ச்சி என்பது கடையில் விற்கும் சரக்கல்ல. நம் மனதில் நமக்குள்ள பக்குவத்தின் முதிர்ச்சி,  முனைப்பு. அவ்வளவுதான்.
மகிழ்ச்சி என்பது தொட்டனைத் தூறும் மணற்கேணி போன்றதாக அமைய வேண்டும். அதை நாமே நமது ஏகபோகச் சொத்தாக்கி மகிழ்வதில் உண்மை இன்பம் இல்லை. மகிழ்ச்சியை நாம் மற்றவர் களுக்கு - அது  தேவைப்படும் நிலையில் நமது உற்றார், நண்பர்களுக்கு வாரி வாரி வழங்கும்போதுதான் நமக்கு அது ஊற்றாக சுரக்கிறது! வற்றாத ஜீவ நதியாக என்றும் ஓடிக் கொண்டே இருக்கிறது.
அடுத்தவருக்குப் பயன்படாது அணை கட்டிக் கொண்டு இயற்கையைப் பங்கு போடும் ஈன புத்தியாளர்களைப் போல, பலர் மகிழ்ச்சியைக்கூட அணை கட்டித் தேக்கினால், அது அதன் இயல்பை இழந்து விடுவது உறுதி. மகிழ்ச்சிக்கும் நம் உடல் நலத்திற்கும் மிகவும் நெருங்கிய உறவு உண்டு. மறந்து விடாதீர்!
எதற்காகவும் கவலைப்படாமல், ஏற்பட்ட பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணுவது என்பதை, விருப்பு, வெறுப்பற்ற முழுப் பகுத்தறிவுக் கண் கொண்டு ஆராயும்போது விடையும் கிடைக் கும், தடையும் நீங்கும். தீர்வு காண முடியாத பிரச்சினைகளே இல்லை. அறிவால், அனுபவத்தால் - பிறரின் உதவியால் தீர்க்கப்படலாம். துணி வுடன் அணுகுங்கள் - மீறி தோல்வி ஏற்பட்டாலும் அதையும் ஏற்று சுவைத்து அனுப விக்கப் பழகுங்கள் - பரங்கிக் காய் இனிப்புடன் உள்ள  கறி ; எனவே இனிக்கிறது.
பாகற்காய் கசப்புடன் உள்ளது. பலருக்கு உட்கொள்ளவே தயக்கம் - ஆனால் அது தரும் சுக கசப்பு  போல் பரங்கியின் இனிப்பு தருவ தில்லையே!
இனிப்பின் பெருமை - அருமை கூட கசப்பு என்று ஒன்று ஒன்பான் சுவையில் ஒன்றாக இருப்பதால் தானே! எண்ணுவீர்!
எனவே மகிழ்ச்சியை நாமே உருவாக்கிக் கொள்ளலாம் - நமது மூச்சை நாமே (சுவாசித்து) உள்ளே இழுத்து வெளியே தள்ளுகிறோமே அதுபோல; மகிழ்ச்சியை உள்ளே இழுத்து, துன்பத்தை வெளியே தள்ளுங்கள். இரண்டும் வாழ்வின் இரு இன்றியமையாக் கூறுகள் - தேவைகள் - மறவாதீர்!
-விடுதலை,11.12.14

நெல்சன் மண்டேலா மறையவில்லை - நிறைந்து விட்டார்!



இன்று (5.12.2014) மாபெரும் மனிதகுலப் போராளி நெல்சன் மண்டேலாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்!
அண்மையில் பாலி - (இந்தோ னேஷியாவின் பகுதி) - சென்று சிங்கப் பூருக்குத் திரும்பினோம். விமான நிலையப் புத்தகக் கடையில், நெல்சன் மண்டேலா பற்றிய  அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் அரிய மாயா ஆங்கேலூ (Maya Angelou) என்ற பிரபலமான பெண் கவிஞர் - எழுத் தாளர் இயக்குநர், ஆசிரியர், செயல் வீராங்கனை என்ற பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட அம்மையார் இவர் - எழுதிய அமெரிக்க அரசின் வேண்டு கோளுக்கிணங்க எழுதி அஞ்சலி வீர வணக்கம் செலுத்திய ஆங்கிலக் கவிதை நூல் ஒன்று வாங் கினேன்.
விமான நிலையத்திலேயே - நேரம் இருந்ததால் படித்து முடித்தேன். சுவைத்தேன்.
நெல்சன் மண்டேலாவின் அரிய கருத்தாக அவ்வெளியீட்டில் முன்னுரிமை கொடுத்து வெளியிடப்பட்ட கருத்து - அறிவுரை இதுதான்.
“Education is the most powerful weapon you can use to change the World”
-  Nelson Mandela
உலகை  நீங்கள் மாற்றிடுவதற்கு கல்வி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை விட வேறு சிறந்தது எதுவுமில்லை - நெல்சன் மண்டேலா  என்பதே அதன் கருத்து.
இதே கருத்தைத்தான் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் ஆன தந்தை பெரியார் சமுதாய மாற்றத்திற்கு கல்விதான் சிறந்த ஆயுதம் ஆகும் என்றார்.
பெரிய சிந்தனையாளர்கள் எப்படி ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா!
நெல்சன் மண்டேலா (1918-2013) ஒரு யுகப் புரட்சியாளர்.
உறுதிகொண்ட நெஞ்சத்தவர். 27 ஆண்டுகள் ரோபன் தனிமைத் தீவு அறை சிறை - அவரது உறுதியை மேலும் பலமாக்கியதே தவிர, தன் விடுதலைபற்றி எண்ணாது, தன் சமுதாய மக்களின் அடிமை வாழ்வுக்கு எப்போது விடுதலை என்றே ஏங்கினார்; சிந்தித்தார்; செயல் பட்டார்! வென்றார்!
அடக்குமுறைகள் அவரை மேலும் மேலும் தலை நிமிரச் செய்தனவே தவிர கூனிக்குறுகி, மண்டியிடும் மனோ நிலைக்குத் தள்ளவே இல்லை.
தணலில் இட்ட தங்கம் கரைந்தா விடும்?
தகத்தகாய ஒளியுடன் அல்லவா பிரகாசிக்கும்!
உணர்ச்சியூட்டும் அவரை
வழியனுப்பி இறுதி மரியாதை
செய்தஅவ் வீரமும்
உணர்வும் கொப்பளித்த
ஆங்கிலக் கவிதை வரிகளில் சில.
(முழுவதும்கூட பிறகு வெளிவரும்)
“We will not forget you
We will not dishonor you
We will remember and be glad
That you lived among us.’’
உங்களை ஒரு போதும் மறக்க மாட்டோம்
உங்களை என்றும் நினைவில் நிறுத்தி மகிழ்வோம் (மறவோம்)
நீங்கள் எங்களுடன் வாழ்ந்தவர்!
“That you  taught us
And
That you loved us
All!”
நீங்கள் எங்களின் ஆசானாக இருந்து போதித்தீர்!
மேலும்
நீங்கள் எங்களை எல்லாம் நேசித்தீர்!
நமது உணர்வுகள்:
(எங்களுக்காகவே நீங்கள் வாழ்ந்தீர் - விடுதலை துறந்தீர்) என்பதே அவர்தம் உள்ள விழைவு அல்லவா!
நெல்சன் மண்டேலா மறைய வில்லை! மறையவில்லை!!
நிறைந்து விட்டீர், நிறைந்து விட்டீர்! உலக மக்களின் உரிமைப் போராட்ட உணர்வில் உறைந்து கிடக்கிறீர்! என்றும் நின் பணி தொடர்வோம்.  - நம் உணர்வு இது.
-விடுதலை,5.12.14

மரண பயம் - தேவையற்றது! பயனற்றது!


மரணம்  - சாவு என்பதுகூட கொடுமை அல்ல. பற்பல நேரங்களில் கூட்டு வாழ்க்கையின் காரணமாக ஏற்படுத்தும் துயரத்தின், துக்கத்தின் கர்த்தா - அந்த துயரம் ஆறறிவு படைத்த மனித குலத்திற்கு இருப்பது போலவே, அய்ந்தறிவுள்ள மிருகங் களுக்கும்கூட உள்ளது; நாம் பற்பல நேரங்களில் கண்கூடாகவே அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் மரணத்தை விட மிகவும் கொடுமையானது மரண பயம்; யாரும் எளிதில் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்ப தில்லை.
தனது லட்சியங்களாக மரணத்தை யாசித்துப் பெற்று மகிழும் கொள் கையாளர்களான சாக்ரட்டீஸ், பாஞ் சாலச் சிங்கம் பகத்சிங் போன்றவர் களுக்கு மரண பயம் இருந்ததில்லை.
மரணம் இவர்களைக் கண்டு வேண்டுமானால் ஒரு வேளை பயந்திருக்கக்கூடும்!
இராணுவத்தில் சேர்ந்து, நாட்டைப் பாதுகாப்பது நமது கடமை என்ற உணர்வோடு தொண்டு செய்யும் நமது இராணுவ வீரர் - வீராங்கனைகளுக்கு மரண பயம் எளிதில் ஏற்படுவதில்லை.
கடமையாற்றுவதில் உள்ள மகிழ்ச் சியும் பெருமையும் அவர்களிடமிருந்து அந்த பயத்தை ஓட ஓட விரட்டியடிக் கிறது! மனிதர்களில் தீரா நோயின் கொடுமையால் அவதிப்படுகிறவர்கள் - வாழுவதை விட நாம் மரணமடைவது மேலல்லவா என்று நினைக்கும் நிலைக் குத் தள்ளப்படும்போதும் மரண பயம் அவர்களைவிட்டு விடை பெற்றுக் கொள்ளுகிறது! கருணைக் கொலை செய்து விடுங்களேன்; எனது இந்த கொடுமையான நோய்த் துன்ப வலியி லிருந்து விடுதலை பெற மாட்டோமா? என்று எண்ணம் அவர்களுக்கு ஏற்படுவதும் உண்டு.
காதல் போயின் சாதல் சாதல் நன்று என்று பாடும்  இளஞ்சிட்டுகள் காதலர்கள் ஜாதியால் - மதத்தால் ஏற்பட்ட தொல்லை களை வென்றெடுத்து மீண்டு வாழுவோம் என்ற தன்னம்பிக்கையைப் பெற முடியாத பலவீனத்தால் தாக்கப்படும்போது, அவர் களுக்குக்கூட மரண பயம் அகன்று விடுகிறது!
மரணத்திற்குப் பிறகு ஜீவன் உண்டு, ஆத்மா உண்டு. மோட்சம் - நரகம் என்ற நம்பிக்கை உண்டு, மறுபிறப்பு என்பதில் நம்பிக்கை உள்ளவர்களுக்குத்தான் மரண பயம் வாட்டி வதைக்கும் அவதி உண்டு.
குறிக்கோள் இன்றி - குறுக்கு வழி களானாலும் பரவாயில்லை என்று பணம் சேர்த்து ஊரடித்து உலையில் கொட்டி எதற்குச் சேர்க்கிறோம் - என்பது அறி யாது தானும் அதை சரியாக துய்க்காமலும், பொது நலப் பணிகளுக்குக் கொடுத்து அதன் மூலமாவது செத்த பிறகும் வாழும் நிலைக்குத் தன்னை உயர்த்திடத் தெரி யாமலும் - தன் பெண்டு தன் பிள்ளை தன் குடும்பம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தவர்களுக்கும் மரண பயம் மிகவும் அதிகம்!
தான் சேர்த்து வைத்த சொத்தை விட்டு விட்டுப் போகிறேனே என்று புலம்பும் புல்லர்களான சின்ன மனிதர்களையும் நிச்சயம் மரணபயம் வாட்டி வதைக்கும்.
சீரிய பகுத்தறிவாளர்கள், சுயமரியா தைக்காரர்களுக்கு மரண பயம் என்பதே ஏற்பட தத்துவ ரீதியாகவே இடமில்லை. காரணம் அவர்களுக்கு மரணத்திற்குப் பிறகு போவது ஒன்றுமில்லை; நாம் விட்டுச் செல்ல ஏதாவது இருக்கிறது என்றால் அது நம் கொள்கை வாழ்க் கையின் நன்மைகளாக மட்டுமே இருக்க முடியும். நமது அனுபவங் களை, சந்தித்த சங்கடங்களை, எதிர்ப்புகளைப் பதிவு செய்து விட்டு விட்டுச் சென்றால், அது வரும் தலைமுறைக்குப் பயன்படும்.
மரண பயம் அவர்களை என்றும் ஒன்றும் செய்யாது! சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு என்பதன் பொருள் இதுதான்! - இல்லையா?  10.3.1933 பிறந்து 81 ஆண்டுகள் வாழ்ந்து அண்மையில் (19.12.2014) மறைந்த சுயமரியாதை வீராங்கனை மானமிகு ஏ.பி.ஜெ. மனோரஞ்சிதம் அம்மையாரின் சில ஆண்டுகள் முன்கூட்டியே எழுதி வைத்திருந்த மரண சாசனம் எவ்வளவு அற்புத மான துணிச்சலின் வெளிப்பாடு! மரணத்தை வென்ற மகத்தான வீராங் கனை.
கவலையால் எப்படி பிரச்சனை களைத் தீர்க்க முடியாதோ, அது போலத்தான் மரண பயத்தால் மரணத்தைத் தள்ளிப்போடவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது; பின் எதற்காக வீண் கவலை? சிந்திப் பார்களாக!
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி


விடுதலை,30.12.14

இந்தக் கவிஞரைத் தெரிந்து கொள்வோம்!


ஒரே நேரத்தில் இலக்கியத்திலும் அரசியலிலும், கவிஞராகக் கலை களிலும் புரட்சியாளராகவும், புதுமை படைத்த ஆற்றலாளராகவும் ஒரு சிலரே உலக வரலாற்றில் சாதனை படைத்து, சரித்திரப் புகழ் பெற்றவர் களாக, சாகாத மா மனிதர்களாக வாழுகிறார்கள் - இன்றளவும்!
அவர்களில் மிகவும் நினைவுக் குரிய பாராட்டப்பட வேண்டிய சிந்தனையாளர், கவிஞர் கலீல் ஜிப்ரான் அவர்களாவார்.
பன்முக ஆற்றல் அறிஞரான அவர் தம் பிறந்த நாள் இன்று - ஜனவரி 6.
லெபனான் நாட்டில் (பஷ்ரி என்ற நகரில்) பிறந்த இவர் தம் 12ஆம் வயதிலேயே குடும்பம் அமெரிக் காவுக்கு புலம் பெயர்ந்தது.
அரேபிய மொழி, ஆங்கிலம், பாரசீக மொழிகளில் அறிவுள்ள இவர் சிறந்த ஓவிய நிபுணர்.
அதனால்தான் அவர் பாஸ்டனில் உள்ள ஓவியப் பள்ளியில் சேர்க்கப் பட்டாராம்!
15 வயதில் பெய்ரூத் சென்று உயர்கல்வியை அங்கே பயின்று, தமது தோழர்களுடன் இணைந்து கல்லூரி இலக்கியப் ஏட்டை வெளியிட்டார்!
மீண்டும் பாஸ்டனுக்கு திரும்பிய இவரின் கட்டுரை வடிவிலான கவி தைகள் அடங்கிய.
தி பிராஃபெட் (The Prophet) என்ற நூல் பல நாடுகளில் புகழை இவருக்கு அள்ளித் தந்தது!
முதலில் கல்லூரிக் கவிஞர் - பிறகு இவர் எழுதிய அந்த புத்தகம் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.
20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நூல் என்ற முறையில்
(இன்றைய தமிழ் இந்து நாளேடு நிறைய தகவல்களை இரண்டு இடங் களில் தந்துள்ளது.)
இவரது படைப்பு இலக்கியங்களைத் தொகுத்து மக்கள் மன்றத்தில் சேர்த்து பரப்பியதற்கு முழுமுதற் காரணமான அவரது செயலாளரான பார்பராவையே சாரும்.
இதில் இவரது துணிவான, தெளிவான முற்போக்குக் கருத்துகள் - எழுத்துகள் - சிந்தனைகளால் மத குருமார்கள், அதிகாரிகள் கோபத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானவர்.
யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்ற தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் சிந்தனையையொட்டி, உலகம் ஒரு குலம் அனைவரும் உறவினர் என்று கூறியவர் இவர்!
வாழ்க்கையை தத்துவ ரீதியாக வரைந்து காட்டிய ஓவியக் கவிஞர் இவர்!
அதற்கு ஒரு எடுத்துக்காட்டு கீழே:
கலீல் ஜிப்ரான்  (இவர் ஒரு மேரோனைட் கிறித்துவர்) - மிகவும் வசதி படைத்தவர்கள் - இயேசுபற்றி தனித்த கருத்தும் அவர் அமெரிக்காவுக்கு சொந்த மானவர் என்பது போன்ற கருத்தும் உடைய கிறித்துவப் பிரிவினர் - சால்ட் லேக்சிட்டி என்பது தலை நகரமாக கொண்ட அயோவா மாநிலத்தில் பெரிய தங்கத்தாலான கோபுரம் - வாஷிங்டனில் உள்ள சர்ச்சில் தங்கக் கோபுரம் உள்ளது) அப்பிரிவைச் சேர்ந்தவர் 1883-ல் பிறந்தவர் -
இந்த காப்புரிமை வருமானத்தை தனது பிறந்த மண்ணான பஷ்ரியின் வளர்ச் சிக்கே உயிலாக எழுதி வைத்தவர் இவர்.
இவரது ஒரு அருமையான கவிதை வரிகளைப் படியுங்கள்: என்னே உண்மைத் தத்துவ மிளிர்வு!
உங்கள் குழந்தைகள் உங்களுடையவை அல்ல. அவை, வாழ்வு தன்னையே தான் அடையக் கொள்ளும் ஏக்கத்தின் மகனும் மகளுமாக ஜனித்தவை.
உங்கள் குழந்தைகள் உங்களூடே தோன்றியவர்கள், உங்களிடமிருந்து அல்ல.
உங்களுடன் இருப்பினும் அவர்கள் உங்கள் உடமைகளல்லர்.
அவர்களுக்கு உங்களுடைய அன்பை நீங்கள் தரலாம், உங்கள் எண்ணங்களை அல்ல.
ஏனெனில், சுயமாக அவர்களிடத்தே எண்ணங்கள் பிறக்கின்றன.
அவர்கள் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம், உயிருக்கு அல்ல.
ஏனெனில், உங்கள் கனவில்கூட நீங்கள் அடைய முடியாத எதிர் காலம்தான் அவர் களது உயிர் உறையும் வீடு.
நீங்கள் அவர்களைப் போல ஆவதற் காக கடின முயற்சி செய்யலாம்.
ஆனால், உங்களைப் போல அவர் களையும் ஆக்கிவிடக் கூடாது.
ஏனெனில், வாழ்வு பின்னடித்துச் செல்வ தில்லை. நேற்றைய நாட்களில் சுணங்குவது மில்லை.
உயிருள்ள அம்புகளாக உங்களிட மிருந்தே எய்யப்படும் குழந்தைகளுக்கு நீங்கள் வில்லுகள்.
வில்லாளி, காலாதீதத்தின் மார்க்கத்தில் குறிவைத்து, தனது அம்புகள் அதிவேகத் துடன் தொலை தூரம் செல்லும்படி, உங் களைத் தனது மகாசக்தியால் வளைக்கிறான்.
வில்லாளியின் கரத்தில் உங்கள் வளைவு ஆனந்திக்கட்டும்.
ஏனெனில், பறக்கும் அம்புகளை அவன் விரும்புகிற அளவுக்கு அசைவற்ற வில்லின் உறுதியையும் விரும்புகிறான்.
(கலீல் ஜிப்ரானின் தீர்க்கதரிசி புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி. தமிழில்: பிரமிள்)
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
-விடுதலை,6.1.15

மகிழ்ச்சிபற்றி ஒரு புதுக்கண்ணோட்டம்


அண்மையில் சிங்கப்பூருக்குச் சென்ற குறுகிய கால நான்கு நாள் பயணத்தில், வழக்கமாகச் சென்று புத்தங்களைப் பார்க்கும்  கினோ குனியா (kinokuniya) புத்தகக் கடைக்குச் சென்று சில புத்த கங்களை வாங்கிப் படித்தேன்; மகிழ்ந் தேன்.
அதில் ஒரு புத்தகம் மகிழ்ச்சி (Happiness) என்பதாகும்.
நம்மைப் பொறுத்தவரையில் புதிய புத்தகங்களை வாங்குவதும், படிப்பதும், படித்ததை மற்ற நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதுமே மகிழ்ச்சிதான்.
அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை
என்ற புரட்சிக்கவிஞரின் அறிவுரைக் கேற்ப இந்த நூல்கள் நமது மனச் சுமையைக் குறைத்து அல்லது அகற்றி ஒரு புத்துணர்ச்சியை, புத்தாக்கத்தைத் தருவதாக அமைந்துள்ளது என்பது உண்மை.
பயணச் சுமையைக் குறைத்து, துணைவனாக இருப்பது - தனிமையில் பயணிக்கும்போது - இத்தகைய புத்தகங்களே!
ஆஸ்திரேலியாவிலும், அமெரிக் காவிலும், இங்கிலாந்திலும் வெளியிடப் பட்டு, மகிழ்ச்சிபற்றி பல்வேறு தத்துவ அறிஞர்கள் வெளியிட்ட பலதரப்பட்ட கருத்துக்களையும் ஒரு புதிய கோணத் தில் தொகுத்தளித்து ஆய்வு செய்துள்ள இந்நூல், ஒரு நல்ல தொகுப்புக் களஞ்சியம் - சிறு கைப் புத்தகம் ஆகும்.
வில் பக்கிங்காம்  என்ற தத்துவ கர்த்தாவும், புதின எழுத்தாளருமான இவர் இந்த அருமையான நூலை எழுதியுள்ளார்.
உலகின் ஆதிகால கிரேக்கத் தத்துவ மேதைகள் தொடங்கி, இந்தியாவின் புத்தர், சீனத்துக் கன்ஃபூஷியஸ், ஸுவாங் சீன, மெனிக்யூயஸ் போன்ற அறிஞர் கள் கருத்தையெல்லாம் வாழ்க்கையில் பரிசோதனைக்குட்படுத்தி, வாழ்வில் மகிழ்ச்சியை வெறும் தத்துவமாகப் பார்க்காமல், படிக்காமல், நடைமுறைக்கு உகந்ததாக்குவதுதான் முக்கியம் என் பதை நன்கு விளக்கியுள்ளார் - இந் நூலாசிரியர் வில் பக்கிங்காம் என்ற தத்துவ சிந்தனையாளர்.
இரு வேறு அணுகுமுறைகள்பற்றிய சிறந்த ஆய்வும் சிந்தனைக்கு விருந் தாக அமைந்துள்ளன.
1. வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தான் பொது விதி. துன்பம் என்பது இடையில் ஏற்படுவது, அதை ஏற்கும் பக்குவம் இன்றியமையாதது - அது விதிவிலக்கு.
மற்றொன்று 2. துன்பம்தான் நம் வாழ்க்கையில் பொது விதி. எப்போதாவது ஏற்படு வதால், மகிழ்ச்சி என்பதுதான் விதிவிலக்கு.
இப்படி இரு மாறுபட்ட அணுகு முறைகளும் அலசி, வாதப் பிரதிவாதங் களோடு ஜெர்மானியத் தத்துவ அறிஞர் களின் கருத்துகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தக்க தரவு களாக மேற்கோள்கள் காட்டப்பட்டுள் ளன.
இன்பம் விழைதல், உயிர்களின் பொது வியற்கை; மனித குலத்தின் ஆறாவது அறிவு அவ்வின்பத்திற்கு அவ்வப்போது புதுப்புது பொருள் கண்டு, கொண்டு, சமூகத்திற்கு வழங்குவதற்குத் தயங்குவதில்லை.
உடல் இன்பத்தால் விளையும் மகிழ்ச்சியை உருவாக்கும் காரண மானதை காமம் என்று வர்ணிக் கின்றனர். சொல்லாடலில் பயன்படுத்து கின்றனர்.
வள்ளுவரின் காமத்துப் பால் என்று முப்பாலில் ஒரு முக்கிய பகுதி அது பற்றித்தானே என்று வாதாடுகின்றனர்.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதில் உள்ள காமுறுவர் எதைக் குறிக்கிறது?
குறுகிய பொருள் அல்ல காமத்திற்கு.
கைவிடப்படாத, விட முடியாத, நினைத்து நினைத்து மகிழ்ச்சியைப் பெருக்கத்தான் காமுறுதல் என்பதற்கு முழுப் பொருள் என்று கொள்ளலாமே!
உடலுக்கும், உள்ளத்திற்கும் இரண்டுக்கும் மகிழ்ச்சி - உள்ளத்தில் ஊறிய உணர்ச்சிக்கு உடலின் வடிவம் ஏற்படுவதுதானே காமம்?
இப்படி மகிழ்ச்சியை 2500 ஆண்டு களுக்குமுன்பே தோன்றிய தத்துவ ஞானிகளின் பட்டியலில் திரு வள்ளுவரையும் இணைக்கவேண்டும்.
மேலைநாட்டுத் தத்துவ அறிஞர் களில் ஆல்பர்ட் ஷைவட்சர்தான் இதில் பெரும் சாதனை செய்தவர். ஜி.யூ.போப் அவர்களுக்குப் பிறகு.
நம்மில் பலரும் வாய் வீச்சு, எழுத்து வியாபாரத்துடன் நிறுத்திக் கொண் டோம்.
உலக மயமாக்கியிருந்தால் வள்ளு வரும் அந்நூலில் இடம்பெற்றிருப்பாரே என்ற கவலை என்னைத் தாக்கியது!
மற்றவை நாளை!
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

மகிழ்ச்சி என்பது இன்ப உணர்வின் வெளிப்பாடு;
துயரம், துக்கம் என்பது துன்பத்தின், துயரத்தின் வெளிப்பாடு.
வாழ்க்கையில் வெறும் இன்பமோ, வெறும் துன்பமோ எப்போதும் இருந்த தில்லை - எவர்க்கும்.
மாறி மாறி மகிழ்ச்சியும், துயரமும் வெளிப்படும் நிகழ்வுகளும், நிலை களும் சகஜம்.
உலக வரலாற்றில் எப்போதும் எல்லா பக்கங்களும் தொடர் துன்பத் தாலோ அல்லது அறுபடாத தொடர் இன்பத்தாலோ நிரப்பப்பட்டதல்ல; சில பக்கங்கள் இரண்டுமில்லாத காலி பக்கங்களாகவே இருக்கின்றன என்றார் ஜெர்மன் தத்துவ அறிஞர் ஜார்ஜ் வில் லியம் பிரஃடெரிக் ஹெகல் (1770-1831).
(இவர் வரலாற்றுக்கும், தத்துவத் திற்கும் உள்ள இணைப்பைப்பற்றி நன்கு அறிந்து ஆராய்ந்த மேதையாவார். காரல் மார்க்ஸ்க்கு இவரது தத்துவம், தர்க்க முறையின் தாக்கம் அதிகம் உண்டு).
தத்துவ அறிஞர்களில்கூட நம்பிக் கைக் குறைந்த சலிப்பும், விரக்தியும் மேலோங்கும் அணி (Pessimistic Philosophers);  மற்றொரு வகை எப்போதும் நம்பிக்கை தளராத விரிந்த மனப்போக்கு உடைய தத்துவ ஞானிகள் (Optimistic Philosophers).
முன்னவர்களை Weeping philosophers - எப்போதும் அழுது புலம்பும் அழுகுணிச் சித்தர்கள் என்றும், பின்ன வர்களை எப்போதும் சிரித்து மகிழும் சிரிப்புத் தத்துவ அறிஞர்கள் Laughing Philosophers  என்றும் கூறி மகிழ்வது.
சிற்சில நேரங்கள் ஒருவர் மகிழ்ச்சி மற்றவருக்குத் துன்பம் என்ற நிலையே உலகின் நடைமுறையாக உள்ளது! எல்லோருக்கும் எல்லா நிலைகளிலும் மகிழ்ச்சியும், துயரமும் - இன்பமும், துன்பமும் - எல்லா நேரங்களிலும் ஏற்பட்டுவிடுமா?
இயலுமா? என்றால், பதில் இல்லை. கடினம்; எளிதில் இவை இணையாது என்பதே யதார்த்தம் - நடைமுறை.
பசியால் மானை வேட்டையாடி சிங்கம் தன் பசியைத் தீர்த்து மகிழ்கிறது.
மான், சிங்கத்திடமிருந்து தப்பியோட முயன்று அதில் தோல்வி அடைந்து, சிக்கிக் கொள்கிறது. இரையாகி அது சிங்கத்திற்கு தன்னை இழந்து சிங்கம் மகிழ்ச்சி அடைகிறது.
அதுபோலத்தான் ஏழைகளும், பாட்டாளிகளும் தங்கள் இரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி உழைத்து, தனக்குரிய பலன் கிட்டாவிட்டாலும், பணக்காரர்களின் குதிர் நிரம்பி வழிய உதவுகின்றனர்!
ஏழை பாட்டாளிகளின் கண்ணீர், செந்நீர், ஏகபோக முதலாளிகள் - பணக்காரர்களின் பன்னீராக மாற்றப் படுகிறது!
ஒரு பக்கம் வலி மிகுந்த துன்பம்; மறுபுறம், குதூகலம், கொள்ளை லாபத் தினை குன்றெனக் குவித்து மகிழும் குவலயச் சுரண்டல்காரர்களின் மகிழ்ச்சி - என்று நியாயமான துன்பம், நியாயம், நீதியற்ற இன்பம் - இவைதான் இன் றைய உலகின் சமூக அமைப்பாகி உள்ளது!
பொத்தல் இலைக் கலமானார் ஏழை மக்கள்
புனல் நிறைந்த தொட்டியானார் செல்வர்
என்றார் புரட்சிக்கவிஞர்.
மகிழ்ச்சியை இன்பத்தால் மட்டுமே அனுபவிப்பதைவிட, துன்பம் துவட்டி எடுக்கும்போதும் அனுபவிக்கப் பழகு வது மிகவும் இன்றியமையாத தேவை யாகும் தொண்டறத்தில்.
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை   (குறள் 669)
இதில் துன்பத்தை ஏற்று துக்கம் வராமல் (கொண்ட லட்சியத்திற்கான விலை என்கிறபோது, மகிழ்ச்சியோடு அதை ஏற்கும் வைர நெஞ்சங்களுக்கு, வையகத்தில் பஞ்சமா? வரலாற்றில் கொஞ்சமா?
நச்சுக்கோப்பையை ஏற்று குடித்து மகிழ்வுடன் தனது வாழ்வை முடித்து, வரலாறாக வாழுகிறார் சாக்ரட்டீஸ்!
தூக்குமேடையை முத்தமிட்ட கொள்கை நாத்திக நன்னெறியார் தீரன் பகத்சிங்,
வசதி, வழக்குரைஞர் செல்வ வாழ்வு துறந்து, சிறையில் செக்கிழுத்து, அறி வையும், மானத்தையும் தவிர, மற்ற எல்லாவற்றையும் துறந்த ஒப்பற்ற தியாக மாணிக்கம் - வைர நெஞ்சம் படைத்த வ.உ.சிதம்பரனார், எதிர் நீச்சல், இழிவுகளைச் சுமந்தும் தன் இலட்சியப் பயணத்தை, ஒரு கையில் மூத்திரச் சட்டி, மறுகையில் அணையாத அறிவுச்சுடர் தாங்கி 95 வயது வரை பட்டிதொட்டியெங்கும் பரப்புரை செய்து வாழ்வதில் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்ட ஈரோட்டு ஏந்தல் தந்தை பெரியார் - இப்படி எத்தனை எத்தனையோ பேர் துன்பத்தால் துவளாது, இன்பத்தை நெருப்பிலும் கண்டு தூய்மையாலே தொண்டறச் செம்மல்கள் ஏராளம் உண்டே!
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

-விடுதலை,17,18.2.15

மருந்து வேண்டாம் - எப்போது?


இன்று இளைய சமுதாயத்தினரான நமது இளை ஞர்கள் பலரும் நன்கு படிக்கின்றனர்.
உலகைத் தங்களின் விரல் நுனியில் வைத் துள்ளதில் பெருமிதம் கொள்ளுகிறார்கள்!
சூரியனின் கீழ் உள்ள அத்துணை செய்திகளையும் தமது இணையத்தின் மூலம், கைத்தொலைபேசி என்ற தகவல் களஞ்சியத்தின் குதிர்களிலிருந்து எப்போது வேண்டுமானாலும் அள்ளி நொடிப்பொழுதில் தரு கின்ற ஆற்றல் உடைய திருவினராக உள்ளனர்!
வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு புறம் இருந் தாலும், மறுபுறம் வேலைக்குச் சென்றவர்கள் கைநிறைய சம்பாதித்து, ஆடம்பர வாழ்வும் வாழுகின்றனர்!
இவ்வளவு சிறப்புகள் ஒருபுறம் இருந்தாலும், இளைஞர்கள் தங்களது உடல் நலத்தில் மிகுந்த கவலையும், அக்கறையும் செலுத்தாமல் வயிறு முட்ட - கண்ட தீனிகளையும், விரைவு உணவுகள் என்ற பெயரால் வெளிநாட்டு உணவுக் கடைகளில் உள்ள வைகளையும், உள்நாட்டுப் பரோட்டா போன்றவை களையும், குளிர்பானங்களாகிய பல கேட்டினை அழைத்து உடலுக்குள் தங்க வைக்கும் சுவை நீர் களையும் அருந்தி, நோயுற்ற (நோயற்ற வாழ்வுக்கு விடை கொடுத்து)  வாழ்வினை வர வழைத்து, கொழுப்பினால் அவதியுறு கிறார்கள்!
பலர் வாய்க் கொழுப்பினால் கெட்டுப் போவ தைப்போலவே, உடற்கொழுப்புப் பெருக்கத்தால் இளம் வயதில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பலவித நோய்களால் தாக்குண்டு தனது வாழ்நாளைச் சுருக்கிக் கொள் ளும் கொடுமை நாளும் அதிகரித்தே வருகிறது!
வேதனைப்பட வேண்டிய செய்தி இது!
மருத்துவம் பார்க்கச் சென்றாலே கொள்ளைச் செலவு.
பக்க விளைவுகளையும் சேர்த்து ஏற்படுத்தும் பல மருந்துகளை வாங்கி உட்கொள்ளவேண்டிய கட்டா யத்திற்கு ஆளாக்கப்படும் கொடுமை மறுபுறம்!
சிற்சில நேரங்களில் மருந்துகளே கூட நோய்க் கொல்லியாக இராமல், ஆட்கொல்லியாக மாறிடும் வேதனையும் நிகழவே செய்கிறது!
இதற்கு மாற்று வழி என்னவென்பது இப்போது சமூக ஆர்வலர்கள், தொண்டறப் பணிபுரிவோர் ஆராய்ந்து பல கருத்துகளைக் கூறுகின்றனர்!
அத்தகையோர் ஆய்வதற்கு வள்ளுவர் தரும் மருந்து என்னவென்பதைப் படித்தால், திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் உள்ள அரிய, எளிய, எவரும் பின்பற்ற இலகுவான கருத்துகளை அறிந்து கொள்ள முடியும்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே நம் தமிழ் அறிஞர் பெருந்தகை இவ்வளவு தெளிவான சிந்தனையை உலகுக்கு அறவுரையாக - அறிவுரை யாக அளித்துள்ளார் என்பது எத்தகைய சிறப்பும், பெருமையும் தமிழ் உலகிற்குக் கிடைத்துள்ளது!
முதல் விதி:
1. மருந்தே உங்களுக்குத் தேவையில்லை - எப்போது?
நீங்கள் உண்ட உணவு, சரியானபடி செரிமானம் ஆயிற்றா என்று அறிந்து, பின் மறுபடி உணவை உட்கொள்ளும் பழக்கம் நமக்கு ஏற்பட்டால், நோய் வராது - மருந்து தேவைப்படாதே!
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு  அருந்தியது அற்றது போற்றி யுணின்    (குறள் 942)
தான் முன்னர் உண்ட உணவானது நன்கு செரித்துப் போய்விட்ட தன்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு, ஒருவன் தக்க அளவு உணவு உட்கொள்வானேயானால், அவனுடைய உடம்புக்கு மருந்து என்ற ஒன்று வேண்டியதில்லை.
அதுபோலவே, அடுத்து ஒரு குறள்:
அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு  (குறள் 943)
இதன் கருத்து
ஒருவன், தான் முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, செரிக்கக் கூடிய அளவினை ஒருவன் அறிந்து கொண்டு உண்ணவேண்டும். நல்ல உடம்பினைப் பெற்றுள்ள ஒருவன், நீண்ட காலம் அவ்வுடம்பினைக் காப்பாற்றி வாழக்கூடிய வழியும் அதுவேயாகும்.
எனவே, பசித்து உண்ணுங்கள் - ருசிக்காக உண்ணாதீர்கள். எனவே, நாகாக்க என்பது வெறும் பேச்சுக்கு மட்டும் தடையல்ல நண்பர்களே, உணவுக்கும், உடல்நலப் பாதுகாப்புக்கும் சேர்த்தே என்றும் புரிந்து கொள்ளுங்கள்.

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும், எப்படிப் பட்ட துன்பமும் தொல்லையும் நோயும் மனிதர்களை வருத்தும் என்பதை அறிந்து, ஆராய்ந்து, அவற்றை நீக்கத் தேவையான அறிவுரைகளை அறவுரைகளாக வழங்கும் வள்ளுவரின் மருந்து, மருத்துவம் பற்றிய நுண்மாணுழைபுலம் மிகவும் வியக்கத்தக்கது அல்லவா?
மருத்துவ முறையையே நான்கு வகைப்படுத்தி வள்ளுவர் தனது குறளில் கூறும் கருத்துக்கள் அவர் எத்தகைய தலைசிறந்த பகுத்தறிவுக் கண்ணோட்ட முடையவர் என்பதை நன்கு விளக்கக் கூடியதாக இருக்கிறது என்பதற்கு இக்குறள் ஒரு அருமையான சான்று அல்லவா?
உற்றவன் தீர்ப்பான், மருந்துழைச் செல்வான் என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து               (குறள் (950)
இதன் பொருள்: 1.  நோயாளி, 2. நோய் தீர்க்கும் மருத்துவன், 3. மருந்து, 4. நோயாளிக்கு அருகில் இருந்து உதவி புரிபவன் என்று நான்கு வகைப் பாடுகளை உடையதே மருத்துவ முறையாகும்.
என்னே அருமையான ஆய்வு! மருத்துவத்தையே அறுத்து நான்கு கூறுகள் முக்கியம் என்கிறாரே!
இன்று நமது மருத்துவர்கள் கண்டறிந்துள்ள நோய்க்கு மூலமான ஒன்று ஒவ்வாமை (Allergy) என்பதாகும்.
வெளிப்புறத் தூசியினால், மருந்தினால், உணவி னால் இத்தகைய ஒவ்வாமை பலருக்கு ஏற்படுகிறது!
ஆனால், அதன் காரணம் இதுதான் என்று புரிந்து கொள்ளாமல், வேறு எந்தெந்த மருந்துகள் - மருத் துவப் பரிசோதனைகள் - மருத்துவ சிகிச்சைகளை நாம் மேற்கொண்டு அவதியுறுகிறோம் பற்பல நேரங்களில் (எனக்குக்கூட பல ஆண்டுகளுக்குமுன்பு இத்தகைய கசப்பான, வேதனையான அனுபவம் ஏற்பட்டு, இறுதியில்தான் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங் களில் இடம் பெற்ற தலை சிறந்த தொண்டற டாக்டர் தம்பையா அவர்கள் கண்டுபிடித்து, எளிய மருத்துவத் தைக் கூறி என்னை உபாதையிலிருந்து விடுவித்தார்!)
திருவள்ளுவர் இந்த ஒவ்வாமை நோயை அறிந்து, புரிந்து, மிகவும் துல்லியமாக இரண்டு குறள்களில் கூறுவது நம்மை வியப்புக் கடலில் தள்ளுகிறது!
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து                     (குறள் 944)
இக்குறளின் பொருள் இதோ: ஒருவன், தான் முன்பு உண்ட உணவு செரித்து உள்ளதை அறிந்து கொண்டு, உடம்பிற்கு மாறுபாட் டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு, மிக நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்.
உணவு உடம்பில் மாறுபாட்டினை உண்டாக்குவது தான். ஒவ்வாமை - அதனை அவாமையே நம்மைக் காப்பாற்றும் இல்லையா?
சில உணவுகள் சிலருக்கு ஒவ்வாதனவாக இருக்கக் கூடும். இதை அறியாமல் அதை உண்டு, உயிர்க்கு இறுதியாகி விடும் பேராபத்தும்கூட அதனால் ஏற்படுவது உண்டு.
காய்கறிகளை விரும்பிச் சாப்பிடும் ஒருவர், முருங்கைக் காயை உணவில் எடுத்துக் கொண்ட பிறகு மிகப் பெரும் போராட்டத்திற்குப் பிறகே மீண்ட நிகழ்வுகள் அறிவேன்.
அதுபோலவே, மீன், இறைச்சி, இறால் உணவு களை உண்ணுவோரில் சிலருக்கு இறால் வகை, அல்லது குறிப்பிட்ட இறைச்சி வகை உண்ட சில மணித்துளிகளுக்குப் பிறகு - உடம்பெல்லாம் தடித்து, முகம் வீங்கி - மூச்சு விடுவதற்கேகூட ஆபத்து என்று ஆகும் நிலையும் ஏற்படுவது உண்டு.
இதைத்தான் வள்ளுவர் - உடம்பிற்கு மாறுபாட் டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு - உண்ணுக - அதுவும் நன்கு பசி வந்த பிறகே உண்ணுக என்று அறிவுறுத்துகின்றார்!
இன்னும் தெளிவாக, அடுத்த குறளில் ஒவ்வாமை பற்றி விளக்குகிறார்!
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.             (குறள் 945)
கருத்து:
உடம்பிற்கு மாறுபாடு ஏற்படுத்தாமல், ஒத்துப் போகக் கூடிய உணவாக இருந்த போதிலும் அது அளவுக்கு மீறிப் போகாமல் தடுத்து நிறுத்தி, செரிக்கும் அளவிற்கு மட்டுமே ஒருவன் உண்டால், அவனுடைய உயிர் வாழ்க்கை நோய்களினால் துன்பம் ஏற்படுவது இல்லை.
எனவே, செரித்தபின் உண்ணுங்கள்.
நமது உடல் அமைப்பில் முக்கிய பணிகள் - செரிமானக் கருவிகளால் தத்தம் கடமையைத் தவறாது செய்து நம்மை வாழ வைக்க உதவுகையில், நாம் அவற்றின் பணிக்கு உதவிட வேண்டாமா?
அதுதான் அளவறிந்து உண்ணுதல்,
செரித்தபின் உண்ணுதல்
ஒவ்வாதனவற்றை நீக்கி உண்ணுதல்
இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற ஆசை உங்களைத் தூண்டும்போது, அந்த ஆசைக்குப் பலியாகாமல் உடனே இலையை விட்டு எழுந்து விடுங்கள். அந்த கொஞ்ச நேரம் - வாழ்க்கையில் நீங்கள் பிறருடன் நீண்ட காலம் கொஞ்சி வாழ வகை செய்யுமே! புரிந்து செயல்படுக!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
விடுதலை,,29,30,1.15

திருமண ஆடம்பரம் தேவையா?


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன - என்பது விவிலியத்தின் (பைபிளில்) பழமொழி, ஆனால், நடைமுறை உண்மை என்ன வெனில் திருமணங்கள் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!
அது மட்டுமா?
நகர்ப்புறங்களில் நடைபெறும் திருமணங்களின் அருவருக்கத்தக்க ஆடம்பரங்கள்; கருப்புப் பணத்தைத் தேடிக் கண்டுபிடிக்க சுவிஸ் வங்கி களைத் தேடி நமது மத்திய அரசு ஓடிக் கொண்டிருக்கிறதே - இந்த ஆடம்பரத் திருமணங்களை நடத்துவோர் பட்டியலைத் தேடினால் கறுப்புப் பணம் எங்கே புதைந்துள்ளது என்பது புரியுமே! (திருப்பதி உண்டியல் முதல் பல இடங்களிலும் ரொக்கத்திற்குப் பதிலாக காசோலையாக (செக்)  மட்டுமே போட வேண்டும் என்ற ஒரு சிறு திருத்த அறிவிப்பை வெளியிட்டுப் பார்க்கலாமே - உடனே ஏழுமலை யானின் உண்டியல் வசூல் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறைந்து விடுமே!)
திருமண அழைப்பிதழ்களே பற்பல திருமணங்களில் 100, 200 ரூபாய் (ஒரு அழைப்பிதழ்) ஆகும் அளவுக்கு புதுப்புது முறையில்...! சற்று நிதானமாக எண்ணிப் பாருங்கள். அந்த திருமண அழைப்பை - அந்த வீட்டாரைத் தவிர - வேறு யாராவது பாதுகாத்து வைக்கப் போகிறார்களா? இல்லையே! - குப்பைக் கூடைக்குத்தானே போகிறது? - இதன் பயன் என்ன? காதொடிந்த ஊசியளவுகூடக் கிடையாதே!
சில மண்டபங்களின் வாடகை மட்டும் 8 லட்ச ரூபாய் ஒரு நாள்  - இரு நாளுக்கு.
ஒவ்வொரு மண்டபத்திலும் ஒவ் வொரு வகையான நிபந்தனைகள் வேறு!
அந்த மண்டபத்தை வாடகைக்கு எடுக்கும் திருமணம் நடத்துவோர் - உணவு தயாரித்தல், புரோகிதரை அமர்த் தல், மண்டப அலங்காரக்காரர், நாதசுர (நாயனம்) வாசிப்போர் அனைத்துமே மண்டபக்காரர் மூலமே ஏற்பாடு செய்யப் பட வேண்டுமாம்!
என்னே நெருங்கிய பாச உறவு பார்த்தீர்களா? அதன் ரகசியம் விளக்க வேண்டியதே இல்லை.
விருந்துகளின் ஆடம்பரங்களில் காலைச் சிற்றுண்டி - எத்தனை இனிப்பு வகைகள்! எவ்வளவு உணவு வகை யறாக்கள்!  சிற்றுண்டிக்கென அவ்வளவும் அணி வகுத்து இலையில் வந்து குந்திக் கொள்ளுகின்றன!
பாதி பாதியாக இலைகளில் மிச்சம்! அப்படியே எடுத்து குப்பையில் கொட்டும் அழகுதான் என்னே!
உடனே ஒரு சில மணித்துளிகளில் மதிய தடபுடல் விருந்து - சுமார் 29 காய்கறி வகையறா!
இதற்கிடையில் சில்லறைக் கடைகள் போல் தனித்தனி வகைகள் பீடா வரையில்.
மாலையில் வரவேற்பு என்ற பெய ரால் மற்றொரு ஆடம்பர வெளிச்சம்! பிரபல பாடகர் பாடிடுவார்;  ஒரு சிலர் உட்கார்ந்து கேட்பவர்கள் தவிர, மற்றவர் வருவார் - போவார்! பாட்டு பாடுபவர் இயந்திரம்போல் பாடி, கடைசியில் பேசிய தொகையை வாங்குவதற்குப் பதிலாக முன்கூட்டியே மொத்த தொகையை வாங்கிய பின்னரே குழுவினரோடு வருவார்!
பழைய பஜனை மடங்களில் பாடு வோர் தேங்காய் மூடிக் கச்சேரிக் காரர்கள் என்று கேலி செய்வோர் உண்டு, இப்போது பணம் அதிகம்  - வருவாய் பெருகிடும். ஆனால், சுவைத்தோர் வெகு குறைவு - இதிலும் சலிக்காமல் பாடும் அவரது சகிப்புத் தன்மைக்காகத்தான் அவ்வளவு பணம் - பொறுமையின் சின்னமாயிற்றே! மாலை 6 மணி முதல் வரவேற்பு மண்டபத்தில் என்று அழைப்பிதழில் போட்டதை வைத்து உடனடியாக மணமக்கள் வரவேற்பில் கலந்து வாழ்த்தி விட்டு விடை பெறலாம் என்று திட்ட மிட்டு வந்த வருகையாளர்களுக்கு,  மிஞ்சுவது ஏமாற்றமே!
காரணம் பெண் பியூட்டி பார்லரி லிருந்து (Beauty Parlour) அழகு நிலையம் என்று நம்ம மொழியில் சொன்னால் அவ்வளவு அழகாக இருக் காது என்பதால் அப்படி  அழைக் கின்றனர் போலும்! மணமக்கள் சிங்காரித்து அலங்கார பொம்மையாக வருவதற்கு ஒரு மணி நேர கால தாமதம் ஆகும்! (இயற்கை அழகைக் கெடுத்து ஒப்பனை அலங்காரம்  என்ற அலங்கோலம்)
அழைப்பாளர்களில் அவசர கதியில் விடை பெறுவோர்- பெற்றோர் களையே வாழ்த்தி விட்டு திரும்பும் சந்தர்ப்பங்களும் பற்பல நேரங்களில் தவிர்க்க முடியாதவையே!
பசியேப்பக்காரர்களைக் காணாது; புளியேப்பக்காரர்கள் கூட்டத்தையே பார்க்கும் வண்ணம் அந்நாள் முழு வதும் அமையும்!
இது தேவையா?
வரதட்சணை என்ற பெயரால் மணமகனை விலைக்கு வாங்கும் விலை உயர்ந்த நிலை வேறு! - அந்த கணக்கு இதில் வராது.
ஒரு நாள் சில மணி நேரத்திற்கு இப்படியா? இந்த ஆடம்பரத் திருமணங்களைத் தடை செய்தால் அது ஒரு வகையான சமூக நீதிதான்!
இதற்காகவே மற்றொரு முறை இந்திரா காந்தியின் நெருக்கடி கால நிலை திரும்பவேண்டும் போலிருக்கிறது! எங்கள் நாட்டுக்கெந்தநாடு ஈடு?  - பாடுவோம்.
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
-விடுதலை,2.1.15