பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

முதுமையே போ...! போ...! முதிர்ச்சியே வா...! வா...!


முதுமை என்பது வயதின் வளர்ச்சி என்றாலும், நமக்கு உழைக்கச் சக்தி அளிக்கும் உடல் உறுப்புகளின் தளர்ச்சி யல்லவா!
வாழ்க்கை நீளவேண்டுமென்று விரும்புவோரும் சரி,
வாழ்க நீங்கள் பல்லாண்டு என்று வாழ்த்துவோரும் சரி,
ஒரு முக்கிய கருத்தை மறந்து விடக்கூடாது.
ஆயுள் நீளுவது நல்லது; மிகப் பெரும்பாலோர் விரும்புவது, வேண்டு வது, அதற்காகவே!
ஆனால், உடல்நலம் - உடற்கட்டு - செயல்படும் வகையில் அமைவது அதைவிட முக்கியமானது - அடிப் படையானது!
அறிஞர் அண்ணா கூறினார்: தமிழின் முதுபெரும் வரலாறு மட்டும் பெருமைப்படத்தக்கது அல்ல; அதன் சீரிளமை மிகவும் முக்கியம். அதில் படிந்த பழைமை ஒட்டடைகளையும், பாசிக் குப்பைகளையும் நீக்கி, புதிய இளமைப் பொலிவுடன் தமிழ் என்றும் திகழவேண்டும்; பகுத்தறிவு அடிப்படை யில் பட்டதாரி இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா வில் ஆற்றிய ஆங்கிலப் பேருரையில் குறிப்பிட்டார். அதற்குப் பழைய கிரேக்கத்து மாஜி கடவுள்களின் கதை களையும் ஒப்பிட்டிருந்தார்!
கிரேக்கக் காதல் கடவுளான பெண் கடவுள், தன் காதலனான மற்றொரு கடவுளின் வாழ்வு எப்போதும் அழி யாததாக - மறையாததான வாழ்வாக இருக்க வரம் கேட்டு வாங்கியதாம்!
Immortality  எப்போதும் இருப்பது - சாவு அண்டாத வாழ்க்கையைக் கேட்டுப் பெற்றார், மகிழ்ந்தார்.
ஆனால், காலம் ஏற ஏற, முதுமை அவரைத் தாக்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது.
இளமையைத் துறந்து, முதுமையை அடைந்து, வாழும் தொல்லை அப்போதுதான் புரிந்தது! முதுமை அண்டா இளமையை அல்லவா நாம் யாசகமாய் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும் என்று  தவறுக்காக மிகவும் வருந்தினாளாம்!
இப்படி ஒரு கதை கிரேக்கப் புராணங்களில்!
மேலும் மேலும் ஆயுள் நீள வேண்டும் என்று விரும்பும் நாம், பலருக்குப் பயன்படும் இளமைத் துடிப் புடன் அந்த வாழ்க்கை அமைந்தால் தானே அது விரும்பத்தக்கது?
இன்றேல் உறவுக்கும், ஊருக்கும், உலகத்திற்கும் கூடுதல் சுமைதானே!
முதுமை ஒருபுறம் இருந்தாலும், முதிர்ச்சி - வயது, பல்வேறு கசப்பான - இனிப்பான - துவர்ப்பான - பல்சுவை அனுபவங்கள் காரணமாக கற்ற பாடங்களால் நாம் பெறுகிறோம்.
அதனை பாடப் புத்தகமாக்கி, ஒரு நல்லாசிரியனாகி போதிக்கவேண்டும்; அதன்மூலம் கொடுத்தலின் காரண மாகப் பெறும் மகிழ்ச்சியை பெரு ஊதியமாகக் கருதிப் பெருமிதம் கொள்ளவேண்டும் என்று நினைக் கிறோம்!
தமிழ்ப் பெரியார் திரு.வி.க. பார்வை இழந்த நிலையிலும், முதிர்ச்சி தந்த பாடங்களை டாக்டர் மு.வ. என்று அழைக்கப் பெற்ற மு.வரதராசனார் அவர்களிடம் கூறி, அவர் கேட்டு எழுதிட, இரண்டு நூல்கள் கவிதை வடிவத்தில் வந்தன.
முதுமை உளறல்
படுக்கைப் பிதற்றல்
சிறந்த அறவுரைகள் அவை.
மிகுந்த தன்னடக்கத்தினால் திரு.வி.க. அத்தகைய தலைக்கனமில் லாத் தலைப்புகளை தந்து உயர்ந்தார் - சிந்தனை வள்ளலாக!
அவை,  உளறலும் அல்ல; பிதற்றலும் அல்ல!
தந்தை பெரியார் அவர்கள் 95 ஆண்டுவரை - கடுமையாக உழைத்தார் - பயணித்தார் - பல மணிநேரம் சிங்கமென கர்ஜித்தார்!
சிந்தனை, உரையில், எழுத்தில் எவ்வித தடுமாற்றமும் இன்றி - மறதி நோயே தாக்காமல் - கணினிபோல் செய லாற்றி அதிசய சாதனை படைத்தார்!
அவரது ஆரம்ப கால சிந்தனைகள் அறிவியல் சாதனைகளாகிய செய்தி களை நாங்கள் மேலைநாட்டு ஏடுகளி லிருந்து படித்துக் காட்டியபோது - 1973, டிசம்பர் 19 (இறுதிப் பேருரை ஆற்றிடப் போகுமுன்) வேனில் பயணித்த நிலை யில் என்ன சொல்லி வருந்தினார் தெரியுமா?
நாளை எழுதுகிறேன்.

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
முதுமையே போ...! போ...!   முதிர்ச்சியே வா...! வா...!   (2)
19 டிசம்பர் 1973 அன்று தியாகராயர் நகரில் தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவாற்றப் புறப்படுகிறார் தனது வேனில்!
புலவர் கோ.இமயவரம்பனும், நானும் வேனில் உடன் செல்லுகிறோம்;
அந்த வாரத்தில் வெளிவந்த பிரபல இங்கிலீஷ் வார ஏடான தி இல்லஸ்ட் டிரேடட் வீக்லி ஆஃப் இண்டியா (The Illustrated Weekly of India) இதழில், ஆணின் விந்து வங்கி (Semen Bank) என்ற ஒன்றை, ரத்த வங்கி போல - சேமித்து வைக்க ஆய்வாளர்கள் ஆய் வில் வெற்றி கண்டுவிட்டனர்; இதன்படி ஒரு மனிதனுக்குப் பிள்ளை பேறு, அவன் திடீர் விபத்தினாலோ அல்லது எப்படி மறைந்துபோன பின்புகூட அவ் விந்தைச் செலுத்தி, பிள்ளைப் பேறுக்கு வழிவகை செய்யலாம் (அவனது மகள் அல்லது மகன்) என்று இருந்த அறிவி யல் - மருத்துவவியல் முன்னேற்றம் வளர்ச்சிபற்றிப் படித்துக் காட்டினேன்!
அதுபோலவே, mprint என்ற ஆங் கில மாத இதழ் ஒன்றில், வழக்கமான ஆண் - பெண் சேர்க்கையில்லாம லேயே, பரிசோதனைக் குழாய் (Test Tube Baby) குழந்தை முயற்சி வெற்றி பெற்றது என்பதையெல்லாம் அக் கட்டுரையில் (இத்தாலியில் முதல் குழந்தை பிறந்தது) குறிப்பிட்டிருந் ததைக் கேட்டு, மிகவும் பூரிப்புடன் கைதட்டி, மகிழ்ச்சி பொங்க, நம் சிந்தனைகளின் செயலாக்கத்தை நாமே பார்க்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்தோங்கி விட்டதே! இன்னமும் எங்கெங்கே, என்னவென்னமோ வெல் லாம்கூட நடக்கும்!
இப்போது நான் யோசிக்கிறேன் - நமக்கு வயதாகிவிட்டதே - ஒரு 10, 20 ஆண்டு கம்மியாக இருந்தால், எவ் வளவு அதிகமாக இன்னமும் பிரச்சாரம் செய்து பகுத்தறிவின் வெற்றிபற்றி மக்களிடம் எடுத்துக் கூறலாமே! வீணாக இந்த முதுமை நமக்கு குறுக்கே வந்து விட்டதே என்று உளப்பூர்வமாக வருந்தினார்!
90 வயதில் உடல்நலம் தளர்ந்து, கழிக்கும் சிறுநீரை ஒரு போத்தலில் பிடித்து, (இணைக்கப்பட்ட இரப்பர் குழாய் வழிவந்த நிலையில்) அந்த கண்ணாடி போத்தலை, ஒரு பிளாஸ்டிக் வாளியில் வைத்து, தன் கையிலே தூக்கிக்கொண்டு, இருபுறமும் இரண்டு பேர்களின் தோள்களைப் பிடித்து எழுந்து நிற்கவும் ஆன நிலையிலும்கூட பயணம் செய்து மணிக்கணக்கில் பேசி அறிவுறுத்திடவும்  அய்யா தவறவில் லையே!
முதுமை வாட்டியும், முதிர்ச்சி பீறிட்டுக் கிளம்பிய வண்ணம் இருந்தது!
அப்படி 19.12.1973 அன்று மாலை பயணம் சென்ற வாகனத்தில் குறிப் பிட்டபோது, அய்யா தந்தை பெரியாரின் உணர்வுகள் எப்படி என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால், இயற்கையின் கோணல் புத்தி அந்த உரைதான் அவரது இறுதிப் பேருரையாக - மரண சாசனமாக ஆகிவிட்டது!
மேலே எழுதிய பல அறிவியல் கண்டுபிடிப்புகளைப்பற்றி சிலாகித்துப் பேசியது அவ்வுரையில் இடம்பெற்றுள் ளதை அய்யாவின் குரலிலேயே எவரும் ஒலிநாடாவில் இன்றும் கேட்கலாம்!
வயது ஏற ஏற, முதிர்ச்சி நமக்கு ஏற்படவே செய்கிறது. இளமைத் துடிப் புடன் எவரும் எடுத்தேன் - கவிழ்த் தேன் என்று  பேசுவது தவிர்க்கப்படக் கூடும்!
முதுமை முத்திரை - தெரிந்தோ தெரியாமலோ முதிர்ச்சி முத்திரையைப் பதிப்பிக்கவே செய்கிறது.
என்னைப் பொறுத்தவரை எனக்கு ஏற்பட்ட அனுபவம்கூட, பல்வேறு சோதனைகள் வந்தபோது முன்பு இருந்த பதற்றம் - துடிதுடிப்பு இப்போது இருப்ப தில்லையே!
இமயமே இடிந்து நம்மீது விழுந்து விடுவதுபோல பிரச்சினைகள் வந்து விழுந்தாலும், அதை உணர்ச்சிவயப் படாமல், அறிவுப்பூர்வமாக, அணுகி சிந்திக்கவேண்டியவற்றைச் சிந்தித்தும், அறிவுரை கேட்கவேண்டியவர்களிடம் கேட்டும், எதையும் வெல்லும் பகுத் தறிவு அணுகுமுறையை முதிர்ச்சி - முதுமையின் தொடர்ச்சியாக வருகிறது என்பதை (பெரியார் தந்த புத்தி கார ணமாக) உணர்ந்து வருவதால், முதுமை கண்டு அஞ்சாதீர்! முதிர்ச்சியை வர வேற்க ஆயத்தமாயிருங்கள்!
எனவே,
முதுமையே போ! போ!
முதிர்ச்சியே வா! வா! என்று கூவிக் கூத்தாடி குதுகலமாகி வாழ்க்கையை அணுகுங்கள்!
(தொடருகிறது)

முதுமையை முற்றாக முறியடிக்க முடியா விட்டாலும்கூட, முதுமைக்கு ஆளாவோர் பலரும் அதனைத் தள்ளி வைக்க, அதன் தாக்கத்தைக் குறைத்து, தலை நிமிர்ந்து வாழ பல வழிகள் உள்ளன!
நரைமுடியை கறுப்புச் சாயம் அல்லது வேறு ஒரு வகை சாயம் அடித்துக் கொள்வது மட்டுமே வயதைக் குறைப்பதற்கு உள்ள ஒரே வழியென்று கருதி ஓய்ந்து விடக் கூடாது.
(மிகப் பெரிய தொழிலாகவும், வருவாய் வரும் லாபகரமான தொழிலாகவும் இது (சாயம் அடிப்பது) இப்போது அழகுக் கலை நிபுணர் களாலும், நிபுணிகளாலும் நாடெங்கும் - கிராமங்களில்கூட பரவியுள்ளது. நாம் அதைக் குறை கூற விரும்பவில்லை; அதுவும் அவர்களை உள ரீதியாக - டை அடிப்பவர்களுக்கு இளமைப் புத்தாக்கத்தைத் தருமேயானால், அது வரவேற்கத்தக்கதேயாகும்) பல்வேறு வழிமுறைகளும், முதுமையை விரட் டிட உண்டு என்பதை வாஷிங்டனில் உள்ள எனது அருமை நண்பர் சபாபதி தில்லை ராஜா அவர்கள் (அடிக்கடி பல்வேறு அரிய தகவல்களை எனக்குப் பரிமாறிடும் அரிய நண்பர் அவர்) ஒரு கட்டுரை அனுப்பியுள்ளார்!
அதில் பல பயனுறு அறிவுரைகள் உள்ளன.
1. வயது ஆன நிலை என்ற மன நிலையைப் பலர் உடனடியாக வர வழைத்து மனமுடைந்து உட்கார்ந்து விடுகிறார்கள். இந்த உளப்பாங்கு (Mindset) மாறிட வேண்டும்.
சிலர் ரிட்டயர் ஆவதற்கு முன்பே அதைக் கண்டு அஞ்சி அஞ்சி, அய்யோ வந்து விட்டதே என்று நெருப்புப் பரவி நம்மை அணைப்பது போன்ற ஒரு பயத்திற்கு ஆளாவதினால், ஒரு சில வாரங்களில் முதுமை அவர்கள்மீது ஏறி அமர்ந்து சவாரி செய்யத் துவங்குகிறது. அதைத் தவிர்க்க வேண்டும். வயது ஏறினால், வாலிபம் குறைந்தாக வேண்டும் என்பது கட்டாய விதி அல்ல. வாலிபம் என்பது மனோ நிலை. செயல் செய்ய நமது முனைப்பின் துடிப்பு. அது பிறரிடம் இல்லை. நம்முடன் தான் உள்ளது என்பதை முதுகுடிமக்கள் ஏனோ பலர் மறந்து விடுகின்றனர்? 2. வயது  என்பது ஆண்டுக் கணக்கைப் பொறுத்த ஒன்று;
(Functional Age) என்ற - செயல் தன்மையை பொறுத்த வயது என்பது மற்றொன்றும்; 25 வயதுக்காரர் 45 வயது முதியவர்போல சலிப்பு சங்கடம், செயலில் ஆர்வமின்மை உடையவர்கள் உண்டு.
95 வயதானவர் தந்தை பெரியார் போல்,
94 வயதிலும் செயல்படும் பேராசிரியர் போல
91 வயதிலும் கடும் உழைப்பின் உருவமான கலைஞரைப் போல் உள்ள வர்களுக்கு வாலிபம் என்பது வயதல் லவே. உழைப்பின் சலிப்பின்மை தானே!
எனவே, ‘Chronological Age’ என்று ஆண்டு கணக்கு வயதைப் பொருட்படுத் தாது உழைக்க, மகிழ்ச்சியுடன் மற்றவர் களோடு பழக, பழகிக் கொள்ளுங்கள்.
பொதுத் தொண்டு, பொது அமைப் புகளில் உங்களை உறுப்பினராக்கிக் கொள்வது பெரிதும் கை கொடுக்குமே!
3. உடல் நலத்தைப் பேணுதல், உங்கள் முதுமையை விரட்டி, இளமையின் புத்தாக்கத்தை நம்மீது பொழியும்.
நமக்கு ஒரு முறை வந்து விட்டால் நம்மை விட்டுப் பிரியாத நோய் சர்க் கரை நோய் என்பது மருத்துவர் கூற்று.
அதற்காக மனம் உடைந்தால் முதுமை தானே வந்து ஆக்கிரமித்துக் கொள்ளும்.
அதனைக் கட்டுக்குள் வைக்க, நவீன மருத்துவ வசதிகள் ஏராளம் வந்து விட்டனவே! கட்டுப்பாடான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி வயதுக்கேற்ற முறையில், புகை பிடிக் காமை, மது அருந்தாமை, மீதூண் தவிர்த்தல் - இவை கை கொடுக்குமே!
தொலைக்காட்சிமுன் இடித்த புளிகளாக அமர்ந்து சதா காலமும் அதில் வருவதைப் பார்த்தால் - கண் பார்வை பாதிப்புக் கூடி, பிறகு - உடல் பருமன் ஊளைச்சதை கூடி கொலஸ்ட் ரால் - கொழுப்பு கூடி இதய நோய் உட்பட வருமே!
இதைத் தவிர்க்கலாமே!
இளமைதானே அந்நிலை; இல்லையா?
(தொடரும்)



(நேற்றும் இன்றும் வந்த கட்டுரைக் கருத்துக்கள் திருமதி கரோலின் ஹான்சன் என்பவரின் கட்டுரை ஒன்றினையொட்டி இணைத்து நமது கருத்துக்கள் எழுதப்படுபவை ஆகும்)
நவீன மருத்துவத்துறையின் கண்டு பிடிப்புகள் நமது ஆயுள் நீடிப்பி னையும், ஆரோக்கியமான நலவாழ்வு வாழ உதவிடும் வகையிலும் பல மருத்துவ மின்னணுவியல் - டிஜிட்டல் யுகத்தில் வெளிவந்து விட்டன!
நமது உடலின் இதயத் துடிப்பு சீராக இல்லாமல், வேறு வகையாக இருப்பின் அதனைக் காட்டிட ஒரு வகையான (Chips)  சிப்ஸ் ஒன்றினை காலில் அணியும் ஷூக்களிலோ, அல்லது நெஞ்சுப் பட்டையாக அணியும் டையின் ஒரு கிளிப் போலவே இணைத்து விட்டால், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் (Blood Pressure) முதலியவற்றைக் காட்டி, நமது மருத் துவரின் கணினிக்கு இது தகவல் கொடுத்து விடுமாம்! அவரும் உடனே விரைவார்; அல்லது நாம் அவரிடம் விரைவோம்!
இப்போது அதைவிட ஒருபடி மேலே சென்ற ஒரு செய்தி ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் சார்பில் Tim அவர்கள் Apple Watch விரைவில் சந்தைக்கு வருகிறது.
அதுவே ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு போன்றவை களை மணி பார்த்து கடியாரத்தில் தெரிந்து கொள்வதுபோல் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த வசதிகள் - மருத்துவத்தில் தொழில் நுட்பம்  Technology புகுந்ததி னால் ஏற்பட்ட மகத்தான மாறுதல்கள் ஆகும்!
இவைகள் நமது ஆயுளை நீட்டு கின்றன!
4. திட்டமிட்ட அடுத்த கட்ட வாழ்க் கைக்கு நிதி, நேரம், மகிழ்ச்சி, குடும்பத்த வருடன் செலவழிக்க முன்பு தவறிய மைக்கு இப்போது ஈடுகட்டல், பொது அமைப்புகளில் உறுப்பினர் பொதுத் தொண்டராக (Public Volunteer) பணி புரியும் திட்டம் போன்ற பல நிலைகளைத் திட்டமிட்டு வாழ்ந்தால், நாம் நிச்சயம் 100 வயதை எளிதில் எட்டலாம்! அது வித்தையோ விரோதமோ அல்ல!
1950இல் உலக வரலாறு நூறாண்டு கண்ட பெரு மக்கள் 2300 (Centenarians)  கொண்டிருந்தது!
இன்று (2015இல்) 40,000 பேர் (நாற்பதாயிரம்) பேர்கள் நூறாண்டு கண்ட பெரு மக்கள் எண்ணிக்கை.
2050 இது ஒரு 10 லட்சத்தைத் தாண்டும் (இன்னும் 35 ஆண்டு கால வளர்ச்சியில் மருத்துவம் எங்கோ போய் நிற்கும் எட்டிப் பிடிக்க முடியாத வளர்ச்சியை நோக்கி!)
எனவே, முதுமை வந்து விட்டதே என்று அலுத்து சலித்துக் கொள்ளாதீர்கள்!
முதிர்ச்சியைப் பெறுகிறோம் என்று துள்ளிக் குதியுங்கள்!
5. சமூக நோய்களிலேயே மிக மோசமான ஒரு நோய்  எது என்றால் இந்த ரிட்டயர்மெண்ட் நோய் தான் என்கிறார் கரோலினா ஹென்ஸ்மென்.
ஓய்வு பெறுவதைக் கண்டு ஏன் அஞ்சி நடுங்க வேண்டும்?
சாவைக் கண்டே பகுத்தறிவு உள்ள வர்கள் அஞ்சுவதில்லை. அத்தகையவர் களில் சிலர்கூட இந்த ஓய்வு காலம் - பதவியிலிருந்து விடுபடும் காலம் கண்டு ஏனோ அஞ்சி அஞ்சிச் சாக வேண்டும்?
திட்டமிட்டால், அது நமது சுதந்தரம் மீண்டும் நமக்கு கிடைத்த நாள் என்று பெருமித உணர்வுடன் கூடிய மகிழ்ச்சிப் பெருக்கத்தைப் பெற்று கூத்தாட வேண்டாமா?
மில்டன் எழுதிய இரண்டு நூல்களின் தலைப்பு
Paradise Lost (இழந்த சொர்க்கம்)
Paradise Regained (மீண்ட சொர்க்கம்) சொர்க்கம் இருக்கிறதா, இல்லையா, அது வேறு பிரச்சினை அது வெறும் நம்பிக்கையைப் பொறுத்தது.
அது ஒரு உதாரணத்திற்கு அதைச் சுட்டுகிறேன்; அது மாதிரி, இழந்த சுதந்திரம், மீண்ட சுதந்திரம் என்று ஓய்வு பெறுவோர் எண்ணி மகிழ வேண்டும்.
- சரியான பார்வையோடு பார்த்தால் இந்த ரிட்டயர்மெண்ட் மனோபாவம், பலரை லாயக்கற்ற, ஒதுக்கப்பட்ட குப்பை, கூளம், அருதப்பழசு போன்று தேவையின்றி - ஆக்கி விடுவதால் தான் இந்நிலை - இதைத் தவிர்க்க மேலே (4)ல் சொன்னபடி, பொது சேவை செய்ய திட்டமிடுங்கள் புது உற்சாகம் பிறக்கும்!
6) நமது முதுமையின் அடை யாளமாக முன்னே சுட்டிக் காட்டிய படி, முடியில் சாயம் அடித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், உருவத்தைக் கூட எவ்வளவு பார்க்க சுறுசுறுப்பும், தோற்றப் பொலிவும் கூட்ட முடி யுமோ அவ்வளவு செய்யலாம் (அதற்காக ஒப்பனை நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செல வழிக்க வேண்டும் என்று தவறாக எண்ணி விடாதீர்!
நீண்ட நாளாக தள்ளிப் போட்ட உடல் ரிப்பேர்களை சரி செய்தல், உடல் அறுவை சிகிச்சைகள் அல்லது சில இளமை ததும்பும் திட்டங்களை செய்தல், எல்லாவற்றையும் விட இளையர்களிடம் அதிகம் வாஞ்சை யோடு பழகி, அவர்களது அனுபவங் களையும் கேட்டுச் சுவைத்த, முது மையைக் கீழே தள்ளுதல் எல்லாம் முக்கியம்தான் - இவற்றால் முதுமை போகும்! முதிர்ச்சி தானே வரும்.
(நிறைவு)
-விடுதலை,14.3.15

புதன், 19 ஆகஸ்ட், 2015

தூங்குங்கள், அளவு குறையாமல் தூங்குங்கள்!

தூக்கம் என்பது மனிதர்களின் நல வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதது!
தூங்காமல் நான் உழைக்கிறேன்; நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம்தான் தூங் குகிறேன் என்று தம்பட்டம் அடிப்பது சரியான வாழ்க்கை முறை அல்ல; உணவு, ஓய்வு, உடற்பயிற்சி என்பதெல் லாம் நம் உடல்நலத்திற்கு எப்படி முக்கியமானவைகளோ அதே அளவுக் குத் தூக்கமும் அவசியம்!
எதுவுமே அளவுக்கு மிஞ்சிப் போவ தினால்தான் ஆபத்து ஏற்படுகிறது!
அது உணவாகட்டும், உடற்பயிற்சி யாகட்டும், உறக்கமாகட்டும் எல்லாம் குறிப்பிட்ட வரையறைக்குள் அமைந் தால் நமது உடல்நலம் சிறப்பாக என்றும் அமையும்.
முதுமையை வெல்லுவதுபற்றி மிகப் பெரிய ஆய்வு செய்தி. அமெரிக்காவில் சுசேனி சோமர்ஸ் (Suzanne Somers) என்ற ஒரு அம்மையார் வயதற்றவர் கள் (Ageless) என்ற தலைப்பில் ஓர் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும் பல்வேறு அம்சங் களில் தூக்கத்தின் முக்கியத்துவத் தையும், மிகவும் வற்புறுத்துகின்றார்.
சரியான தூக்கமின்மை தொடர்ந் தால் அது இதயநோய் - மாரடைப்பு, கேன்சர் என்ற புற்றுநோயில்கூட கொண்டுவந்து விடக்கூடும். இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
தூக்கமின்மை காரணமாக ஹார் மோன்கள் சரிவர இயங்காமல், பசி, கருத்தரித்தல், மனநலம், இதய நலம் எல்லாவற்றையும் பாதிக்கச் செய்யும்.
நம் உடலில் நோய் தடுப்பு சக்தி வளரவும், நிலையாக இருக்கவும், 6 மணிநேரம் தூக்கம்  Prolactin Production என்ற ஒருவித ஹார்மோன் சக்தியை - அதுவும் நல்ல இருட்டில் தூங்குவதன்மூலம் தருகிறது என்று நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (National Institute of Health)  என்ற அமெரிக்காவின் பிரபல நல வாழ்வு மய்யம் கூறுகிறது.
நடுநிசிக்கு (12 மணிக்கு), இரண்டு அல்லது 3 மணிநேரம் முன்பு நீங்கள் உறங்கப் போகாவிட்டால், ஹார்மோன் கள்மூலம் உடல் பாதுகாப்புக்குரிய சக்தி போதிய அளவு கிடைக்கவே கிடைக் காது! எடை குறையும்; போதிய தூக்க மில்லாவிட்டால் நமது உடலில் உள்ள கார்ட்டிசால் (Cortisol) குறைந்து கொண்டே போகும்!
நாம் உறங்கும்போதுதான் நமது சிகிச்சையாளர்களான ஹார்மோன்கள் (healing hormones)
அவற்றின் பணி யைத் தொடங்குகின்றன.
கார்ட்டிசால் அளவு குறைந்தால் இன்சுலின் அளவும் குறைவே செய்யும். பிறகு பொழுது விடிந்தும்கூட நாம் தூங்கவேண்டியுள்ளது. வெளிச்சத்தில் தூங்கும்போது கார்ட்டிசால், இன்சுலின் அளவு கூடுதலாகும்!
எனவே, போதிய தூக்கம் நமக்குப் போதிய சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் உடையது ஆகும். இயற்கை யின் ஏற்பாடு, அற்புதம் அற்புதம். இரவில் குறைந்த இன்சுலின் தான் நமது உடல் எடையையும் ஒரு விரும் பத்தக்க அளவில் இருக்க  (optimum level)
உதவக்கூடும்.
எனவே, சரியான சாப்பாடு, போதிய அளவான உடற்பயிற்சி முடித்த நாம், இரவு 9 மணி, 10 மணிக்கெல்லாம் தூங்கப் போய்விடுதல் மிகவும் நல்லது.
அப்படித் தூங்கும்போது, நல்ல இருட்டில் தூங்குவது (Complete Darkness)
மிகவும் அவசியமாகும். சின்ன விளக்கின் வெளிச்சம்கூட கார்ட் டிசால் என்ற அதனைக் குறைக்கவே செய்யும். எனவே, கணினியின் விளக் கில்கூட, டேப்பைப் போட்டு ஒட்டி மறையுங்கள்!
கார்ட்டிசால் (Cortisol) வெளிச்சத்தில் தூங்கினால், அதிகமாகுமே தவிர (கெடுதல்) குறையாது.
இதுபற்றி ஆய்வு ஒன்று நடத்தப் பட்டது - மேலே கூறியது அதில் நிரூபிக் கப்பட்டது!
மெலட்டோன் என்பது முக்கியம் antioxident - தூக்கம் (நினைவு சக்தி) முதலில் அவசியம். அதை ஹார்மோன் கள்மூலம் கிடைப்பது - இதனால் வெளிச்சத்தில் தூங்குவதால் கெடுதி ஏற்படுகிறது.
பல வீடுகளில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டே இருக்கும். அணைப் பதே இல்லை. விளக்கையும் நிறுத்து வதே இல்லை.
இவைகளால் நமது உடலுக்கு மிகப்பெரிய கெடுதி என்று அமெரிக்க சுகாதார ஆய்வு நிறுவனம் கண்டறிந் துள்ளது!
எனவே, தூக்கம் என்பதை அலட் சியம் செய்யாதீர்கள்!
முதியவர்களுக்குத் தூக்கம் கட் டாயம் 8 மணிநேரம் தேவை என்கி றார்கள் சிறந்த அனுபவம் உள்ள மருத்துவர்கள் - மறவாதீர்!
மதியம் - பிற்பகல் சிறுதூக்கம் மிக நல்லது.

- கி.வீரமணி
-விடுதலை,19.8.15

சனி, 15 ஆகஸ்ட், 2015

மரணம் தோற்றோடிய மாமனிதர் இதோ!


மரணங்கள் - இன்றைய உலகில் மனிதன் - பிராணி எல்லோருக்கும் இறுதி நிலை.
மனித மரணம் மட்டுமே - மரணத்திற்குப் பின்பும் பாராட்டப்படுகிறது - அவர்கள் செய்த நல்லவைகளுக்காக! தூற்றப்படுகிறது - அவர்களால் சமூகத்திற்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட தீய விளைவுகளுக்காக.
மிருகங்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்பு உண்டா?
பெரிய உருவம் யானை - செத்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்லப்பட்டாலும், ஒரு வாழ்க்கைக் குறிப்பேட்டின் வரவு - செலவுகள் அதற்கு உண்டா?
சிங்கம் காட்டு ராஜா என்றாலும் செத்த பிறகு....?
அது மண்ணில் தானே புதையுண்டு மக்கி அழிகிறது! ஆனால் மனிதர்களில் எவர் உண்மையாகவே மனிதம் பொங்கிய மனிதராக வாழ்ந்து காட்டினாரோ, எவர் பிறர் துன்பம் கண்டு வாடி, அதை நாடி, அதற்குப் பரிகாரமும் தேறுதலும் பாதிக்கப் பட்டோருக்குத் தந்தார்களோ, எவர் சுயநலத்தைப் பின்னுக்குத் தள்ளி, பொது நலத்தை முன்னே நிறுத்தி, தொண்டறம் புரிந்தார்களோ அவர்கள்தான் உண்மை யில் மரணத்திற்குப் பின்பும் வாழும் மனிதர்கள்.
மரணம் அவர்களிடம் தோற்றுப் போகிறது! ஆம்;  அவர்கள் என்றும் வாழுபவர்களாகவே அவர் கொள்கை - லட்சியங்கள் - செய்த தொண்டறப் பணிகள் - சாதனைகள் மூலம் காலத்தை வென்ற கலாம்களைப் போல வாழ்கிறார்கள். வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்!
மாமனிதர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர் களுக்காக இந்தியத் துணைக்கண்டமே அழுதது; ஆறுதல் பெற முடியவில்லையே என்று ஏங்கியது! இராமேசு வரத்தில் கடந்த இரு நாட்களில் முக்கடல் சந்திப் பாகவே அந்தத் தீவை ஆக்கியது!
ஆம் குமரிமுனையைத் தானே முக்கடல் சங்கமம் என்று கூறுவார்கள்; இவர் என்ன தவறாக எழுது கிறாரே என்று கூட சிலர் கருதலாம் அல்ல, அல்ல முக்கடல் சங்கமம் அங்கே இருந்தது!
ஒன்று, மக்கள் கடல்
இரண்டு, கண்ணீர்க் கடல்,
மூன்று, முன்பிருந்தே இருக்கும் கடல்.
உள்ளத்தாற் பொய்யாது ஒழுகினால் அவர் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பார் என்பதற்கு  நமக்குத் தெரிந்த எடுத்துக்காட்டு மாமனிதர் - மற்றவர்களை மதித்து, பதவிப் பெருமையில் உயர்ந்ததைவிட, தொண்டறத்தால் மாமலையாய் உயர்ந்த மனிதருக்கு - எல்லா தரப்பு ஜாதி, மதம், இனம், மொழி, வடக்கு - தெற்கு- கிழக்கு - மேற்கு என்றெல்லாம் இல்லாமல் எட்டு திசை அல்ல; புரட்சிக் கவிஞர் கூறியதுபோன்று அய் இரண்டு திசைமுகத்தும் தன் புகழை வைத்தோன் என்றார்.
எட்டுதிசை - எல்லோருக்கும் தெரியும்
மீதி இரண்டு? என்ன - கேட்கிறீர்
மேலே விண்வெளி
கீழே மண் வளம்
எல்லாவற்றையும் அன்பு  - பண்பு எனும் பிடிக்குள் கொண்டு வந்த ஆற்றலாளர்,  அடக்கத்தின் திருஉருவம் நம் கலாம் அய்யா அவர்கள்!
தென் திசை தந்த எங்கள் தசை அவர்
காலத்தை வென்றதைப் போலவே
அவர் தலைமுறை இடைவெளியையும்
(மாணவர்- இளைஞர் - முதியோர் என்ற)
வென்ற மனிதம் பொங்கிய மாமேதை!
கடலுக்கும் மாமலைக்கும் மரணமில்லை
ஊற்றுக்கும் நாற்றுக்கும் முடிவு இல்லை
அறிவுக்கு எப்போதும் எல்லை இல்லை
அடக்கத்திற்கு தனி இலக்கணம் ஏதும் இல்லை
எல்லாம் இதோ அவர் என்று வரலாற்றின் வைர வரிகள்  அவர் மீட்டிய வீணையின் இசையாய் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்!
அவர் ஒரு எடுத்துக்காட்டு; எனவே வரலாற் றினை உருவாக்கிய அறிவியல் - சரித்திரம் - படைத்த விசித்திர மேதை!
மணம் முடிக்காத அவரின் குடும்பம் - இராமேசு வரத்தில் மட்டுமில்லை - அகிலம் முழுவதும் உண்டு. இதைவிடப் பெரும் பெருமை வேறு என்னதான் உண்டு?  இலட்சியங்களையும் இலக்குகளையும் அவர் கனவு - விழித்தெழுந்து வீறு கொண்டு செயல் பட விதைத்தவர்!
நாம் அறுவடை செய்து அவர் பணி தொடருவோம்!

- கி.வீரமணி
வாழ்வியல் சிந்தனைகள்
-விடுதலை,31.7.15

சீனாவின் சிக்கன நடவடிக்கை: சுயமரியாதை சுகவாழ்வு


8.8.2015 அன்றைய தமிழ்நாளேடு ஒன்றில் சீனாவில் நடப்பதுபற்றி வந்துள்ள செய்தி இதோ: 
70 வயதுக்கு உட்பட்டவர்கள் பிறந்தநாள் விருந்தளிக்கக் கூடாது: சீன மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு
70 வயதுக்கு உட்பட்டவர்கள் பிறந்தநாள் விருந்தளிக்கக் கூடாது என்று சீனாவின் டோங்ஜியாங் மாவட்ட நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தங்கள் பிறந்த நாள் கொண் டாடட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவில் பிறந்தநாளின்போது உறவினர்களுக்கும், நண்பர்களுக் கும் விருந்தளிக்க வேண்டும் என்ப தும், அதற்குப் பதிலாக அவர்கள் பரிசுப் பொருட்களை அளிக்க வேண்டும் என்பதும் கட்டாயம் என்பது போன்ற கலாச்சாரம் பரவி யுள்ளது. இது மக்களுக்கு தேவையற்ற செலவுகளை ஏற்படுத்துகிறது. பணக்காரர் களுக்கு இது பெரிய பிரச்சினை இல்லை என்றாலும், நடுத்தர மக்கள் பலர் இதற்காக கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.
மேலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பதை பலர் தங்கள் செல்வாக்கை காட்டும் வகையில் ஆடம்பர நிகழ்ச்சி யாக நடத்தி வருகின்றனர். மது விருந்து, அதிரடி இசை நிகழ்ச்சி போன்றவற்றால் நிம்மதி கெட்டு சமூகத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே பிறந்தநாள் விருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பும், வரவேற்பும் ஒரு சேர கிடைத்துள்ளது. பிறந்த நாளின் போது ஒருவரை வாழ்த்தி பரிசளிப்பதும், அதற்கு பதிலாக அவர் விருந்தளிப்பதும் பல ஆண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே இதற்கு தடை விதிப்பது தவறானது என்று எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.
‘தி இந்து’ - 8.8.2015 பக்கம் 13
மக்களில் பலரும் பிறந்த நாள் விழாக்கள் என்ற பெயரில் ஆடம்பர விருந்துகள், அலங்காரங்கள் - கேளிக்கைக் கூத்துக் கொண்டாட்டம் நடத்துவது இப்படிக் கண்காணிக்கப்படுவது. சமூக வளர்ச்சிக்கும், பொது ஒழுக்கச் சிதைவைத் தடுப்பதற்கும் பெரிதும் பயன்படுவதாகும்!
தந்தை பெரியார் திருமணங்களில் நடைபெறும் வீண் ஆடம்பரச் செலவு  (Lavish Expenditure)  தடுக்கப்படல் வேண்டும் என்பதை  1929-லேயே தீர்மானமாக முதலாவது செங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாட்டில் போட்டார்!
“பல நாள் திருமண ஆடம்பரங் களைத் தவிர்த்து, ஒரு நாள் திருமணமாக நடைபெறுதல் வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றினார்!
இப்போதைய தலைமுறையினருக்கு இது வேடிக்கையாகக் கூட இருக்கும்.
முன்பெல்லாம் ஏழைகள்கூட 3 நாள் திருமணம் - “இஷ்டமித்ர பந்துக்களுடன்’’ முன்னதாகவே வந்து ‘டேரா போடுதல்’ முறை இருந்தது. இப்போது மாறி விட்டது; ஒரு நாள் என்று சுருங்கி விட்டது என்றாலும், தேவையற்ற வீண் ‘டம்பாச்சாரித்’தனம் - பல நாள் செய்த திருமணச் செலவு ஒரே நாளில் பல கோடிகள் - செலவு உட்பட ‘கூச்ச நாச்சமின்றி’ நடைபெறும் ‘அருவருப்பு’ அன்றாட நிகழ்வுகளாகின்றன!
நெருக்கடி காலத்தில் 50 பேர் களுக்கு மேல் விருந்து அளிக்கக் கூடாது என்று தாக்கீது - ஆணை போடப்பட்டு, கண்காணிக்கப்பட்டது.
திருமணச் செலவேகூட ஒருவரின் 10 நாள் வருமான அளவுக்கு மேல் போகக் கூடாது என்று தந்தை பெரியார் கூறினார்.
பிறந்த நாள் மற்றும் பல்வகை ஆடம்பர விருந்துகள் மிகவும் கட்டுப்படுத்தப்படுதல் அவசியம், அவசரமுங்கூட!
சீனாவின் சிக்கன நடவடிக் கையை சீரான சுயமரியாதை சுக வாழ்வின் புதிய வடிவமேயாகும்.
-விடுதலை,10.8.15

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.பற்றிய நினைவலைகள்


நடிப்பிசைப் புலவர் என்று நாடு அறிந்தவர், நல்லோரால் பாராட்டப் பெற்ற நண்பர் கே.ஆர்.இராமசாமி அவர்கள் ஆவார். அவர்களது நினைவு நாளான இன்று (5.8.2015) அவர் பற்றிய நினைவலைகளில் நீந்தினேன்.
குடந்தை அருகில் உள்ள அம்மாசத் திரம் என்ற சிற்றூரில் எளிய குடும் பத்தில் பிறந்து, கலை ஆர்வம் காரண மாக இளம் வயதிலேயே நாடகத் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டி, நாடகக் கம்பெனிகளில் நடிகராக நடித்து உயர்ந்தார். நடிப்பு மட்டுமல்ல; வெண் கல நாதக் குரல் ஒலி கொண்ட இவர், நன்றாகப் பாடும் ஆற்றலாளர்.
நடிப்பு + இசை  இத்துறைகளில் புலமை பெற்றவரான இவருக்குப் பொருத்தமானதுதான் அப்பட்டம்! (நாவலர் இரா.நெடுஞ்செழியன் இந்தப் பட்டத்தை அளித்தார்).
சென்னையில் நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் பொய்யாக ஒரு கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சென்னை சிறையில் இருந்த காலத்தில், சென்னை யில் என்.எஸ்.கே. நாடக மன்றம் என்ற பெயரில் டி.ஏ.மதுரம் அம்மையார், என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களது கார் ஓட்டுநர் - நடிகர்  எஸ்.வி.சகஸ்வர நாமம் ஆகியோர் தொடர்ந்து நடத்தி வந்தனர்.
அதில் நடிப்பிசைப் புலவர்  கே.ஆர்.ஆர். அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார், பின்னர் கருத்து மாறுபாடு காரணமாக தஞ்சையில் தனியே என்.எஸ்.கிருஷ்ணன் நாடக சபா என்ற தனி கம்பெனி ஒன்றைத் தொடங்கினார்.
திராவிட இயக்கத்தில் குறிப்பாக அறிஞர் அண்ணா அவர்களிடம் தனிப் பற்று - பாசம் - நட்பு கொண்ட கே.ஆர்.ஆர். அவர்கள், கேட்டுக் கொண்டதற்கிணங்க, அண்ணா அவர்கள் ஓர் இரவு என்ற ஒரு அற்புத நாடகம் ஒன்றை  இவரைப் பிரதான நடிகராகக் கொண்டு நடித்திட எழுதித் தந்தார்.
தஞ்சை இராமநாதன் செட்டியார் நாடக மன்றத்தில், அந்நாடகம் மிகச் சிறப்புடன் நடைபெற்று மிகப்பெரும் வசூலை வாரிக் கொடுத்தது! வெளியூர் களிலிருந்தெல்லாம் அந்நாடகத்தைப் பார்க்கவே திரளாக வந்து பார்த்துத் திரும்பிச் சென்றனர்.
(கடலூரிலிருந்து நாங்கள்கூட சென்று, நாடகத்தினைக் கண்டு சுவைத்துத் திரும்பிய மகாஜனங்களின் பட்டியலில் இருந்தோம்).
பண்ருட்டியைச் சார்ந்தவரும், தந்தை பெரியாரிடத்திலும், திராவிடர் கழகத் திடமும் நீங்காப்பற்று கொண்டவருமான எம்.எஸ்.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் மிக அரிய நாடக உத்திகளை - வியக் கத்தக்க அளவில் செய்யும் தனி ஆற்றல் படைத்தவர். அருமையான காட்சி, புதுடெக்னிக்கை  (அக்காலம் கணினி யுகம் அல்லவே) கையாண்டு வியக்கத் தக்க அளவில் செய்தார்.
உடுமலை நாராயணகவியின் பார் முழுதும் ஏர் முனையிலே என்று உழவர்கள் வயலிலிருந்து வீடு திரும்பும் காட்சியுடன், மாலை நேரம் காட்டப் படுகின்றது.
ஓர் இரவு நாடகம் தொடங்கும்;  அதற்கு முன்பாக, ஒன்று நன்றி காணிக்கை சீன் போல, அந்தி சாய்ந்து விட்டவுடன் உழவர்கள் வீடு திரும்பும் காட்சிக்கு முன்னரே - கலைவாணர், எம்.கே.தியாகராஜ பாகவதர் என்ற இரண்டு சிறைக் கைதிகளை மாலை சிறைவார்டர்கள் லாக்-அப் அறைக் குள் அடைத்துப் பூட்டுவது போன்ற நெஞ்சை நெக்குருக்கும் காட்சியும் உண்டு.
இந்த ஓர் இரவு நாடகத்திற்குப் பற்பல தலைவர்கள் தலைமை தாங்கி பாராட்டினார்கள். அதில், கல்கி ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். அவர் பேசியபோது, அறிஞர் அண்ணாவை தமிழ்நாட்டுப் பெர் னாட்ஷா என்று குறிப்பிட்டதோடு, சுயமரியாதை இயக்கத்தின் சொடுக்கு சாட்டை எழுத்தாளர் - எவரும் எளிதில் காப்பியடித்துவிட முடியாத பாணியில் - முறுக்குடன் எதையும் எழுதித் தாக்கும் நகர தூதன் ஆசிரியர் மணவை ரெ.திருமலைசாமியின் பேனா நர்த்தனம் பகுதியில் கேசரி என்ற புனைப் பெயரில் எழுதிய எழுத்துக் களையும் குறிப்பிட்டு, மோதிரக் கையால் குட்டு வாங்கினேன் என்ற பழமொழி போல், தாக்கப்பட்டாலும் திருமலைசாமியின் பேனாவினால் - எழுத்தினால் - தாக்கப்பட்டால் அதை விட தாக்கப்பட்டவர்களுக்கு ஏது பெருமை என்று உண்மையை ஒப்பனை யின்றி எழுதினார் கல்கி கிருஷ்ண மூர்த்தி அவர்கள்.
ஓர் ஆண்டுக்கும்மேலாக இந்த ஓர் இரவு பிறகு வேலைக்காரி (அறிஞர் அண்ணா எழுதியதுதான் அதுவும் இவருக்காகவே) நடிப்பிசைப் புலவர் பிறகு தமிழக சட்ட மேலவை உறுப்பி னராகவும் ஆனவர்.
அண்ணாவின் நிழல்போல் தொடர்ந் தவர் எப்போதும்; பற்பல திரைப்படங் களிலும் நடித்தவர். அவரது பாடல்கள் வேலைக்காரி, ஓர் இரவு, சொர்க்க வாசல், பூம்பாவை, எதையும் தாங்கும் இதயம் போன்ற பல திரைப்படங்களில் மிகவும் பிரமாதமாக இருக்கும் (இன்னும் பட்டியல் நீளும்).
எங்கே சொர்க்கம்? எங்கே சொர்க் கம்? என்று ஆரம்பித்துப் பாடுவதும்,
ஆத்திகம் எது; நாத்திகம் எது என்று தொடங்கி பாடும் பாடலும் மறக்க முடியாதவை. (திரைப்படத் தணிக்கை இதனை ஆட்சேபித்தபோது, அறிஞர் அண்ணா இரண்டு சொற்களை மட்டும் மாற்றிப் பதிவு செய்யச் சொல்லி - பிரச்சினையைத் தீர்த்தார். ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? என்று முறையே, நாத்திகம் ஆகும் நெறி - ஆத்திகம் ஆகா நெறி என்றும் பாட வைத்தார்).
இசைத் தட்டு மூலப் பாட்டு ஆத் திகம் - நாத்திகம் என்ற தொடக்கச் சொற்களோடுதான் வெளிவந்தது.
இப்படிப் பல பெருமைகளை, சிறப்புகளைக் கொண்ட நடிப்பிசைப் புலவரின் ஆற்றல், திறமை, கொள்கை உணர்வுகள் எல்லாம் உறுதியான திராவிடர் இயக்கச் செல்வம் - அவரது செல்வத்தின் பெரும்பகுதி, திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிக்குப் பயன்பட்டது.
இவை தாண்டிய அவரது மனிதம் எப்படிப்பட்டது!
நாளை பார்ப்போம்!!
நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.பற்றிய நினைவலைகள்-2
நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி அவர்கள் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகும்கூட அவ ருடன் எப்போதும் இருக்கும் ஆஸ் தான நண்பர்களில் ஒருவர். மற்றொரு வர் காஞ்சி சி.வி. இராஜகோபால் என்ற சுயமரியாதைக்காரர் - நகைச் சுவைக்கு அண்ணா அவர்கள் அவரைத்தான் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தி இளைப்பாறுவார்!
எப்போதும் நடிப்பிசைப் புலவர் அண்ணாவுடன் இருப்பார்; தலைமைச் செயலகம் செல்லும்போது தனியே வேறு ஓர் இடத்தில் அமர்ந்து கொள் வார்.
நிகழ்ச்சிகளிலும் காரில் பெரிதும் பயணம் செய்யும் வழக்கம் உடையவர்.
(வேலூர்) திருப்பத்தூரில் நகரசபை 80 ஆண்டு நிறைவு விழா 13.12.1967 அன்று நடைபெறுகிறது.  அதற்குத் தலைமை தாங்கிய நகராட்சி தலைவர் சி.கே. சின்னராசு அவர்கள் (அவரது தந்தையார் குள்ளப்பக் கவுண்டரும் நகராட்சியில் இருந்தவர்)அறிஞர் அண்ணாவை  முதல் அமைச்சர் என்ற முறையிலும், தந்தை பெரி யாரையும் அழைத்து விழா மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்து நடத்தினார்.
தனது வேனில் இரவில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார் தந்தை பெரியார் அவர்கள் தம் குழுவினரோடு. இடையில் ஆம்பூர் அருகில் வேன் பழுதாகி, ஓட்டுநர் அதைச் சரிப்படுத்த இரவு 11.30 மணிக்கு - முயன்று கொண்டிருந்தார். பின்னால் நிகழ்ச்சி முடிந்து அண்ணாவை அனுப்பி விட்டு, சென்னைக்குச் செல்ல வந்த நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ஆர். அவர்கள் தனது காரை நிறுத்தச் சொல்லி இறங்கி வந்து, வேனில் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் இருக்கக் கண்டு, மிகவும் சங்கடப்பட்டு, அய்யா நடு ரோட்டில் இப்படி இரவு நேரத்தில் இருக்கலாமா? இதோ எனது கார்; இதில் சென்னைக்கு  சென்று விடுங்கள் என்று பிடிவாதம் பிடித்தார். தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவோ மறுத்தும் அவர் விடவில்லை.
அய்யா பெரியார் தாட்சண்யத்திற்கு மிகவும் கட்டுப்பட்டவராயிற்றே. உடன் ஏறி வந்தார். அப்போதெல்லாம் சென்னை வந்தால் (அடையாறு  கஸ்தூரிபாய் நகர்) எனது இல்லத்தில் தான் தங்கும் பழக்கமுடையவர் தந்தை பெரியார். இரவு வந்து தங்கினார்கள். காலை அய்யா எழுந்தவுடன் எங்களிடம் இந்த சம்ப வத்தைச் சொல்லி விட்டு, கே.ஆர்.ஆர். அவர்களை நான் நேரில் பார்த்து நன்றிசொல்ல வேண்டும். உடனே அவர் வீடு எங்கே என்று விசாரித்துச் சொல் என்றார். அதுவரை எனக்கும் அவர் வசிக்கும் வீடு தெரியாது. எதிரில் உள்ள காந்தி நகரில் மூன்றாவது  தெருவில் அவர் இருந்த முகவரி அறிந்து, சொல்லியதும் உடனே புறப்படு என்றார். அய்யா, அம்மா, புலவர் இமயவரம்பன், நான் - புறப்பட்டுச் சென்றோம். கே.ஆர். இராமசாமி அவர்களுக்கு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சி!  காலும் ஓடவில்லை; கையும் ஓடவில்லை (இது அவரே எங்களிடம் கூறிய சொற்கள்) கே.ஆர்.ஆர். அவர்களது வாழ்விணையர் திருமதி கல்யாணி இராமசாமி அவர்களும் (அவர் நாடகத்தில் நடித்தவர். காதல் கலப்பு மணம் நிகழ்ந்தது) மிகுந்த அன்பு டனும் பாசத்துடனும் அய்யா, அம்மா அவர்களுடன் எங்களை உபசரித்தனர்.
எதற்காக எனக்கு என்ன நன்றி அய்யா? நீங்கள் இல்லாவிட்டால் எங்களுக்கு ஏதய்யா இந்த வாழ்வு? இதற்குமேல் நாங்கள் உங்கள் பிள் ளைகள் எங்களுக்கு நன்றி சொல்ல லாமா? என்றார்!
அவரது வாழ்விணையர் திருமதி கல்யாணி அம்மாள் முன்னிலையில், எனது தலைமையில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராசேந்திரன் அவர்களும் பங்கேற்ற அம்மா சத்திரத்தில் அவரது உருவச் சிலை திறப்பு விழாவிலும் இதனை நினைவு கூர்ந்து உரையாற்றி னேன். இயக்கத் தந்தை - தனயர்கள் பாசமும், பண்பும் எப்படிப் பட்டது பார்த்தீர்களா? நமக்கும் அவை பாடம் அல்லவா!
-விடுதலை,5,6.8.15

சனி, 8 ஆகஸ்ட், 2015

“எதிலும் அளவறிந்து” செயல்படல் எவ்வாறு?


எதிலும் வாழ்வில் நிதானம் - ஒரு குறிப்பிட்ட நிறை அளவு தேவை. மீறுதல் தொல்லையில் முடியலாம்.
அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் - குறள் (479)
இதன் பொருள்: தனக்குள்ள பொருளின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கையானது. முதலில் வசதி உள்ளது போலத் தோற்றமளித்துப் பின்னர் அந்தத் தோற்றமும் இல்லாமல், கெட்டுப் போய் விடும்.
இந்தக் குறள் எந்த தலைப்பில் உள்ளது தெரியுமா? “வலியறிதல்” என்பதில் உள்ளது.
எனவே இதற்கு - அதாவது அளவு அறிந்து வாழ்தல் என்பதற்கு ஒரு குறுகிய அர்த்தம் கூறி செல்வம் - பணம் - சொத்து - செலவு என்பதற்குள் ளேயே நமது உரையாசிரியர்கள் அடக்கி விடலாமா?
பேசும்போதுகூட சற்று ஆர்வம் மிகுதியாகப் (Over-enthusiastically பேசிச் சிலவற்றில் மாட்டிக் கொள்ளுவதுண்டு நாம் - பல நேரங்களில்.
‘மீதூண்’விரும்பி - அளவுடன் நிறுத்திக் கொள் ளாமல் நன்றாக உள்ளது என்று மேலும் மேலும் வயிற்றில் திணித்து, செரிமானக் கோளாறு காரண மாகப் பின்னர் அவதியுறுகிறோம் - அதுவும் தானே அளவறிந்து வாழாத நிலைதானே! - இல்லையா?
உடற்பயிற்சி நமது உடலுக்குத் தேவை என்று கூறும் மருத்துவர்களேகூட, (வயதுக்கு ஏற்பவும்கூட) 20 மணித்துளிகள் முதல் 30 மணித்துளிகள் நடைப் பயிற்சி சிறந்தது. வாரத்திற்கு குறைந்தபட்சம் 5 நாள்கள் நடந்தால் போதும். ஒவ்வொரு நாளும்கூட நடக்கலாம் என்கின்றனர், சரிதான்.
அதற்காக நாமே ஒரு மணி, ஒன்றரை மணி ஏதோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஈடுபட ஆயத்தமாகும்  வீரன் போலவோ, வீராங்கனை போலவோ கடும் பயிற்சி செய்தால் அது அளவுக்கு மீறியதல்லவா?
பலரும் கலந்து பேசும் மேடைகளில்கூட சிலர் தாங்கள் அறிந்த அனைத்தையும் கொட்டித் தீர்க்க இதுவே அரியதொரு வாய்ப்பு என்று கருதி, “பிடித்த ஒலி பெருக்கியை விட”மறுத்துப் பேசிக் கொண்டே இருப்பதும் ‘அளவறிந்து வாழாத - வாழத் தெரியாத நிலைதான்! மறவாதீர்!!
“கெடுப்பது” லஞ்ச லாவண்யம் கையூட்டு இவைகளை ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் மூலம் குறிப்பிடுகின்றனர்:
‘Corruption, Bribery’ என்பவை அவை. ஒருவரது பலவீனம் அறிந்து, அதனைப் பயன்படுத்தி அவரைக் “கெடுத்துத்” தாங்கள் லாபம் அடைய முற்படுவதற்கு அதிகாரம்(Power) மிகவும் பயன்படும் ஓர்
கருவி - அதற்குரிய வாய்ப்பு லஞ்சம் என்பது.
இதைப் பற்றிக் குறிப்பிடுகையில்கூட அளவுடன் உள்ள அதிகாரம் ஓரளவு “கெடுக்கிறது.”
அளவுக்கு மீறிய முழு அதிகாரம் (Absolute Power) முழுமையாகக் “கெடுக்கிறது.”
‘Power Corrupts’
‘Absolute power Corrpts Absolutely’
என்று சொல்வதும்,
ஆட்சி அதிகாரம் என்பதை அடைகின்றவர் ‘அளவறிந்து’ வரம்புக்குள் செயல்படாமல் மீறி, போதை தலைக்கேறியவனுக்கும் எதுவும் தெரியாமல் ஏதோ எல்லையில்லாத ராஜ்யம் அவனுடையது என்று கருதி, கெடுவதுபோல அதிகாரப் போதையும் ஆட்சிகளுக்கும் அதனை நடத்துவோருக்கும்கூட அளவு மீறியதாகும் போதுதானே ஆபத்து முளைக்கின்றது!
‘அளவறிந்து’ அதிகாரத்தைப் பயன்படுத்தினால் வீழ்ச்சி விரைவில் ஏற்படாது. அளவுமீறி நடந்ததின் விளைவு - அளவறிந்து ஆட்சி செலுத்தாதவர் ஆட் சியும்கூட, நாளை இல்லாதுபோகும் என்பதுதானே!
‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்’ என்ற எளிய அனுபவ மொழி எவ்வளவு ஆழமானது, பொருள் பொதிந்தது பார்த்தீர்களா?
எனவே, எல்லாவற்றிலும்கூட, நாம் எவ்வளவு அறிவு, ஆற்றல், திறமை, செல்வம், பதவி, அதிகாரம், பெற்றவர்கள் ஆனாலும், அளவறிந்து - எல்லை மீறாமல் அடக்கத்துடன் நடப்பதன் மூலமே நம் நிலை, தலை தாழா நிலையாக என்றைக்கும் ஓர் நிலையில் இருக்கும் என்பதை ‘வலி அறிதல்’ தலைப்பில் உணர்த்தும் குறளை வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக் கும் பொருத்திப் பாடம் பெறுவோம்; பயன் பெற உழைப்போம்! பாடம் கற்போம்!!
-விடுதலை,8.8.15

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

முதுமை தோற்றோடிய முதிர்வுக் காட்சிகள்!


முதுமை என்பது வயதின் வெளிப்பாடு மட்டும்தானா? மன உணர்வும் கூடத்தான்! வியப்பாக இருக்கிறதா? சில முதியவர்கள் இளைஞர்களைப் போல உழைக்கிறார்கள். சுறு சுறுப்புடன் இயங்குகிறார்கள் - அதிகம் நடமாட முடியாத வயது மிகுந்த நிலையிலும்.
பல இளைஞர்கள் - வயதில் குறைந்தவர்கள் - மிகவும் தளர்வு, சோர்வுடன், எப்போதும் ஏதோ ஒன்றைப் பறி கொடுத்தவர்கள் போலவே காட்சியளிப்பார்கள்!
தந்தை பெரியார் அவர்கள் 95 வயதிலும்கூட தமது சுற்றுப் பயணத்தை இறுதிவரை அதாவது 1973 டிசம்பர் 19ஆம் தேதி வரை தொடர்ந்த வண்ணமே உழைத் தார்கள். பொதுக் கூட்டங்களில் சிங்கமென கர்ஜித்தார்கள்.
இவர்களைவிட பத்து, பதினைந்து வயது குறைவானவர்கள் மறதி நோயால் பாதிக் கப்பட்டு, சுருண்டு படுத்து விடுகிறார்கள்.
ஆனால் அய்யா தந்தை பெரியார் கடைசி வரை நினைவு குன்றாமல் தன் சக தோழர்களிடம்கூட வேலை வாங்கினார்; போராட்டக் களத்தில் 95 வயதிலும் நிற்க ஆயத்தமானார்!
நினைவுடன் எதையும் கேட்பார்கள். சிலருக்கு முதுமையில் பழைய சம்பவங்கள் நன்றாக நினைவில் இருக்கும்; ஆனால் நிகழ்காலத்தில் உள்ளவர்கள் - நடைபெறுவது அடிக்கடி மறந்து போகும். சந்தித்தவர் களிடம் பேசும்போதும்கூட ஒரே கேள்வியை விட்டு விட்டு இடைவெளியில் திரும்பவும் கேட்பார்கள். பழைய நிகழ்வுகள் அவர்கள் மனத்திரையில் அழிபடாமல் எப்போதும் இருக்கும்.
இன்னொரு வகையான தீவிர மறதி நோய் alzheimer’s என்பது யாரையுமே அடையாளம் தெரியாமல் குழந்தைப் பருவத்திற்கே திருப்பி விட்டதைப் போல் அவர்கள் செயல் அவர்களுக்கே தெரியாது எல்லாம் பிறர் தான் செய்து உதவ வேண்டும்.
தந்தை பெரியார் தன் குருகுலவாசத்தின் அருமை மாணவர்களாகத் திகழ்ந்து இன்று 93ஆம் வயதில் நடைபோடும் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் அண்மைக் காலம் வரை மேடைகளில் நின்று கொண்டுதான் சொற்பொழிவாற்றினார்! பிறகுதான் அண்மைக் காலத்தில் உட்கார்ந்து பேசும் பழக்கத்தை தயக்கத்தோடு பின்பற்றி வருகிறார்.
பேசினால் கருத்துவளமும், சொற்கள் சரளமாக வருவதும் நேற்று (2.8.2015) பெரியார் திடலில்கூட நீர்வீழ்ச்சியெனக் கொட்டியது.
மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் நிகழ்ச்சிக்குப் பெரியார் திடலுக்கு  6 மணிக்கு வந்திறங்கினார். நான் எனது  கடிகாரத்தைக் காட்டி அவரது கடமை உணர்வுக்கும், காலந் தவறாமைக்கும் நன்றி தெரிவிப்பதாக உணர்த்தினேன்.
அவரோ மாலை 4 மணி முதலே நான் புறப்படத் தயாராக இருந்தேன் என்று தனது போர் முழக்கப் போராட்ட வெள்ளப் பிரவாக, உரையில் குறிப்பிட்டு கேட்டோரை வியக்க செய்தார்!
கடும் உழைப்பு, இடையறாத உழைப்பு, தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்பு, (Light  travels fast than sound)
என்று கூறுவர் - அதாவது - ஒளி - ஓசையை விட மிக வேகத்தில் பயணம் செய்கிறது என்பது அறிவியல், இதைப் புரிந்துகொள்ள மின்னல் மின்னும்போது அது முதலில் தெரியும்; அடுத்துதான் இடியோசை கேட்கும்.
அதுபோல அவரது வேகத்திற்கு ஈடு கொடுப்பது என்பது சாதாரணமான தல்ல; சண்முகநாதன் போன்ற அவரது  தனிச் செயலாளரால்தான் முடியும் போலும்!
அதனால் 91 வயது தாண்டும் நிலையிலும் கலைஞரின் எழுத்து, பேச்சு, மக்கள் சந்திப்பு, இடையறாத சிந்தனை - எதிரிகளை, ஈடு இணையற்ற தன் நினைவாற்றலுடன் இணைந்த வாதத் திறமை எல்லாவற்றையும் தாண்டி உயர்ந்து நிற்கும் அவரது நகைச்சுவை உணர்வு அவரை சீரிளமைத் திறத்தோடு செயல்பட வைக்கிறது.
முதுமை இவர்களிடம் தோற்றுவிட்டது!
தந்தை பெரியார்
பேராசிரியர்
கலைஞர்
ஆனால், உழைப்பில் அளந்தால் என்றும் இளைஞர்கள் - காரணம் செழுமையான சிந்தனை முழுமையான செயல் திறன் - பெரியார் திடலில் நேற்று  நடைபெற்ற இன மானப் பேராசிரியர் வாழ்வும் - தொண்டும் என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர்களது உழைப்பின் பெருமையை - கூடிய நாம் பாடமாகப் பெற்றோம்.
இளைஞர்களே - காலத்தை வீணடிக்காதீர்!
என்றும் போதிக்கும் வகுப்பு நேற்று நடந்தது!
-விடுதலை,3.8.15